முருகன் பாடல் அவமதிப்பு... விஜய்மீது பா.ஜ.க.வினர் புகார்!
- 'மருதமலை மாமணியே முருகையா' பாடலை மாற்றி விஜயை புகழ்வதுபோல் பாடியதற்கு எதிர்ப்பு
- நெல்லை மற்றும் சேலம் காவல் நிலையங்களில் புகார்
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா நேற்று பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாடகர் வேல்முருகன், முருகன் பாடல் ஒன்றில் விஜய்யை உருவகப்படுத்தி பாடியிருந்தார். இந்த பாடலின்போது விஜய்யும் நடனமாடி இருந்தார்.
விஜய்யின் இந்த நடனத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் முருகன் பாடலை இழிவுபடுத்தும் விதமாக பாடியதாகவும், அதற்கு விஜய் சைகை செய்து முருக கடவுளை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொண்டதாகவும் விஜய் மீதும், அக்கட்சி நிர்வாகி ராஜ்மோகன் மீதும், பாடகர் வேல்முருகன் மீதும் பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் வழக்கறிஞர் குற்றாலநாதன் என்பவரும் நெல்லை போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில், முருகன் பக்தர்களால் போற்றப்படும் புனித பாடல் அரசியல் நோக்கத்திற்காக மாற்றிப் பாடப்பட்டதாகவும், இதனால் இந்து மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக திருநெல்வேலி மாநகர போலீசார் மனுவை பெற்றுக் கொண்டு, உரிய விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.