உள்ளூர் செய்திகள்

குண்டேரிப்பள்ளம் அணைக்கு சேறு கலங்கிய மழைவெள்ள நீர் வந்துள்ளதை படத்தில் காணலாம்.

குண்டேரிப்பள்ளம் அணை ஒரே நாளில் 13.88 அடி உயர்ந்தது

Published On 2024-05-23 05:51 GMT   |   Update On 2024-05-23 05:51 GMT
  • அணையை ஒட்டிய வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தால் எந்நேரமும் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
  • அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வினோபா நகர் பகுதியில் அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை.

42 அடி கொண்ட இந்த அணைக்கு அடர்ந்த வனப்பகுதியில் பெய்யும் மழை நீரே நீர்வரத்து ஆகும்.

இந்த நிலையில் குண்டேரிப்பள்ளம் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் குண்டேரிப்பள்ளம் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இந்த அணையின் நீர்மட்டம் நேற்று வரை 22.22 அடியாக இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. பெய்த கனமழையால் குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியில் 124.4 மி.மீ அளவு மழை பொழிவு இருந்து உள்ளது.

இந்த நிலையில் கடம்பூர், குன்றி, மல்லியம்மன் துர்க்கம், விளாங்கோம்பை, கம்பனூர், கல்லூத்து மற்றும் குண்டேரிப்பள்ளம் சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதியில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை கொட்டி தீர்த்தது.

இந்த கனமழை காரணமாக அடர்ந்த வனப்பகுதி வழியாக உள்ள சில பள்ளங்கள் வழியாக மழை வெள்ள நீரானது சேறு மண் கலங்கியவாறே குண்டேரிப்பள்ளம் அணைக்கு 563.66 கன அடி நீர் வந்துள்ளது.

இதனால் தற்போது இன்று அணையின் நீர்மட்டம் 36.10 அடியாக உள்ளது. இதனால் ஒரே நாளில் சுமார் 13 அடிக்கும் மேல் நீர்மட்டம் உயர்ந்தது. இன்னும் 4 அல்லது 5 அடி தண்ணீர் வந்தால் அணை நிரம்பும் நிலை உள்ளது. அணையை ஒட்டிய வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தால் எந்நேரமும் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

நேற்று இரவு வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஒரே நாளில் அணைக்கு நீர்வரத்து 13.88 அடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் அணை கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது. மேலும் தொடர் மழையால் பசுமையாக காணப்பட்டு வருகிறது. அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News