தமிழக அரசின் வருவாயை பெருக்கி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் - இ.பி.எஸ். உறுதி
- தி.மு.க. ஆட்சியில் மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து வாழ முடியாத நிலையில் உள்ளனர்.
- அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகளை தொடங்குவோம்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
கேள்வி:- ஏற்கனவே தமிழக அரசின் நிதி சுமை அதிகமாகி உள்ள நிலையில் ரூ.10 ஆயிரம் கருணை தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளீர்களே? நிதி சுமையை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?
பதில்:- அ.தி.மு.க. ஆட்சியில் அமைந்ததும் வருவாயை பெருக்கி நாங்கள் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்வோம். கொரோனா காலத்திலேயே பல்வேறு சிரமங்களுக்கு இடையில் திட்டங்களை செயல்படுத்தி வரி, வருவாயை பெருக்கினோம்.
எனவே நாங்கள் அளித்த வாக்குறுதிபடி நிச்சயம் தி.மு.க. ஆட்சி போன்று இல்லாமல் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
கேள்வி:- இலவச அறிவிப்புகளை கண்டிக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளதே?
பதில்:- தி.மு.க. ஆட்சியில் மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து வாழ முடியாத நிலையில் உள்ளனர். அவர்களை கை தூக்கி விடும் நிலையில்தான் இந்த கருணை தொகையை அறிவித்துள்ளோம். ஆட்சிக்கு வந்ததும் அனைவருக்கும் ஒருமுறை ரூ.10 ஆயிரம் கருணை தொகையை வழங்குவோம்.
மக்கள் மீதான கருணையின் அடிப்படையில்தான் இதனை அறிவித்து இருக்கிறோம்.
கேள்வி:- வருவாயை பெருக்குவதற்காக வரிகள் உயர்த்தப்படுமா?
பதில்:- அதையெல்லாம் இப்போதே எப்படி சொல்ல முடியும். வருமானத்தை பெருக்கி மக்களுக்கு தேவையானதை செய்வோம்.
கேள்வி:- வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவி தொகையை கொடுப்பதை விட வேலைவாய்ப்பை அதிகரிக்கலாமே?
பதில்:- அ.தி.மு.க. ஆட்சியில்தான் தமிழகத்தில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா ஆட்சியின்போது தொழில் முதலீட்டாளர்களின் மாநாட்டை நடத்தி பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கினார்.
அடுத்து அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகளை தொடங்குவோம். அப்போது மக்கள் உயிருக்கு போராடும் நிலையில் இருக்கிறார்கள். அதை கருத்தில் கொண்டு தான் கருணை தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேள்வி:- தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை வேகமாக நடந்து வருகிறது. நீங்கள் எப்போது அதனை தொடங்கப் போகிறீர்கள்?
பதில்:- அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படும். அப்போது யார்-யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது பற்றிய விவரங்களையும் வெளியிடுவோம்.
கேள்வி:- தமிழகத்தில் கூட்டணிக்கு அ.தி.மு.க. தலைமை தாங்கும் நிலையில் டி.டி.வி.தினகரன் பா.ஜ.க. கட்சியுடன்தான் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறி இருக்கிறாரே?
பதில்:- தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க.தான் தலைமை தாங்குகிறது என்பது அனைவருக்குமே தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.