தமிழ்நாடு

சேலத்தில் மழைக்கு வீடு இடிந்து தொழிலாளி பலி

Published On 2024-05-23 05:54 GMT   |   Update On 2024-05-23 05:54 GMT
  • வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த செந்தமிழ் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டார்.
  • தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

சேலம்:

சேலம் அன்னதானப்பட்டி கண்ணகி தெருவை சேர்ந்தவர் செந்தமிழ் (50). இவர் பிளாஸ்டிக் கம்பெனியில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு ஹாலோ பிளாக் கல்லால் கட்டப்பட்டு சிமெண்ட் அட்டை போடப்பட்ட தனது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். கடந்த சில நாட்களாக சேலத்தில் பெய்து வரும் மழையின் காரமணாக இந்த ஹாலோ பிளாக்கால் கட்டப்பட்ட சுவர்கள் ஈரப்பதத்துடன் இருந்தது. நேற்று இரவும் மழை பெய்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் செந்தமிழ் வீடு மழையால் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த செந்தமிழ் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்து கட்டிட இடிபாடுகளை அகற்ற தொடங்கினர். மேலும் இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கும், அன்னதானப்பட்டி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கட்டிட இடிபாடுகளுக்குள் செந்தமிழ் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News