தமிழ்நாடு செய்திகள்

கடலூர் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த காகங்கள்: பறவை காய்ச்சல் காரணமா?- பொதுமக்கள் பீதி

Published On 2026-02-26 13:43 IST   |   Update On 2026-02-26 13:43:00 IST
  • சின்ன கங்கணாங்குப்பம் பகுதியில் காகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சாலையில் இறந்து கிடந்தன.
  • இதனை உணவாக சாப்பிட்ட கோழிகளும் இறந்து காணப்பட்டது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பறவை காய்ச்சல் காரணமாக காகங்கள் இறந்ததா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது கடலூர் அடுத்த சின்ன கங்கணாங்குப்பம் பகுதியில் காகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சாலையில் இறந்து கிடந்தன.

இதனை உணவாக சாப்பிட்ட கோழிகளும் இறந்து காணப்பட்டது. இந்த தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி மட்டுமின்றி தற்போது பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் காகங்கள் காரணம் இன்றி இறந்து காணப்பட்டு வருகிறது. பறவை காய்ச்சல் காரணமாக காகங்கள் இறந்து உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது புரியாமல் பொதுமக்கள் கடும் குழப்பத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.

ஆகையால் மாவட்ட நிர்வாகத்தினர் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக காகங்கள் மற்றும் கோழிகளை உடற்கூறாய்வு செய்து பறவைகள் இறப்பது ஏன்? என விளக்கம் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News