சினிமா

மெர்சல் படத்திற்கு ஆதரவாக களமிறங்கிய தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம்

Published On 2017-10-21 12:47 GMT   |   Update On 2017-10-21 12:47 GMT
மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,

சமீபத்தில் வெளிவந்துள்ள 'மெர்சல்' திரைப்படம் தொடர்பாக பல விமர்சனங்கள் சமூகவலைத் தளங்களிலும், தேசிய அளவிலும் வந்திருப்பது அனைவரும் அறிந்ததே. ஒரு திரைப்படம் கற்பனை கதையாக வரும் போதே, அக்கதைச் சார்ந்த DISCLAIMER போடப்படுகிறது. அதுமட்டுமன்றி, மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தணிக்கை குழுவால் யாருக்கும் எவ்வித பாதிப்புமில்லாத ஒரு படம் என்று சான்றிதழ் கொடுக்கிறார்கள்.

அந்த சான்றிதழ் முன்வைத்து மட்டுமே ஒரு திரைப்படத்தை வெளியிடுகிறோம். அச்சான்றிதழ் வாங்கும் பணிகள் எவ்வளவு கடினமானது என்பதை அதே படத்தின் மூலமாகவே மக்களுக்கு தெரியவந்ததுள்ளது. இவ்வளவு விஷயங்களைத் தாண்டி, பல கோடி ரூபாய் முதலீடு, நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரின் கடின உழைப்போடு ஒரு படத்தை தயாரித்து வெளியிடுகிறோம்.



அப்படத்தின் தணிக்கை முடிந்த பிறகும், காட்சியை நீக்க வேண்டும் என்பது ஜனநாயக முறைப்படி தவறான விஷயமாகும். இதனை தயாரிப்பாளர் சங்கம் ஒரு போதும் ஆதரிக்காது.

ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் எழலாம். அக்கருத்துக்களை பகிர்வதோடு இருக்கலாமே தவிர, தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தின் தயாரிப்பாளரை அக்காட்சிகளை நீக்கச் சொல்வது தவறு. தணிக்கை சான்றிதழ் செய்யப்பட்ட படத்தை, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் வற்புறுத்தலுக்காக  மீண்டும் தணிக்கை செய்வது ஒரு தவறான முன்னுதரானமாக அமைந்து விடும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.   

தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
தற்போது”மெர்சல்” திரைப்படத்தில் வரும் கருத்துக்கள் வசனங்கள் அனைத்தும் சில அரசியல் அமைப்புகள் பத்திரிகைகள் ஊடகங்கள், இணைய தளங்கள், சமூக வலைதளங்கள் மூலமாகவும் விமர்சித்து வருபவை தான். ஒரே நாட்டில் அவர்களுக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் சினிமா ஊடகத்திற்கும் கலைஞர்களுக்கும் கிடையாதா?



மத்திய அரசால் நிர்வாகிக்கப்படும் தணிக்கைக்குழு அதற்கான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு  அனுமதியளித்த பின் வெளியிடப்படும் திரைப்படங்களை தனி நபர்களின் விமர்சனங்களுக்காக மாற்றியமைப்பதோ அல்லது திரையிடாமல் தடுப்பதோ கருத்து சுதந்திரத்தை கேள்விக்குறியாக்குகிறது.

தணிக்கை செய்யப்பட்டு வெளி வந்த மெர்சல் திரைப்படத்தில் உள்ளவைகளை யாருக்காகவும் நீக்க கூடாது என்பதும் இது போன்ற செயல்கள் பிற்காலத்தில் பல பெரிய பிரச்சனைகள் உருவாக காரணமாகும் என்று கூறியுள்ளது.

Tags:    

Similar News