search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சி அமைக்கும்- தமிழிசை சவுந்தரராஜன்
    X

    300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சி அமைக்கும்- தமிழிசை சவுந்தரராஜன்

    பாராளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #LokSabhaElections2019 #BJP #Tamilisaisoundararajan
    தூத்துக்குடி:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் 3 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    நாளை காரைக்குடியில் இருந்து சிவகங்கை, பூவந்தி, மதுரை ரிங் ரோடு வழியாக தூத்துக்குடி வரும் எடப்பாடி பழனிசாமி ஜோதிபுரம் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவும் கலந்து கொள்கிறார்.

    இதற்காக அமித்ஷா விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தூத்துக்குடி வந்து பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார். இதுதொடர்பாக தூத்துக்குடி தொகுதி வேட்பாளரும், பா.ஜனதா மாநில தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-



    தூத்துக்குடியில் அமித்ஷா மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நாளை தேர்தல் பிரசாரம் மேற்கொள்கின்றனர். எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி. வெற்றி முகத்துடன் இருக்கிறோம். தமிழகம் முழுவதும் எங்களுக்கு சாதகமாக உள்ளது.

    தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும். எங்கள் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  துரை முருகன் வீட்டில் தற்போது நடந்து வரும் வருமான வரி சோதனை குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள்.

    8 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத நிலையிலேயே வருமானவரி சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆட்சியில் இல்லாத போதே இப்படி என்றால், ஆட்சிக்கு வந்தால் எப்படி இருப்பார்கள். நான் நேர்மையான வேட்பாளர். ராகுல் காந்தி வடக்கே தோற்று விடுவோம் என்ற பயத்தில் தான் கேரளாவில் போட்டியிடுகிறார்.

    தி.மு.க. கூட்டணியினருக்கே அவர்கள் வெற்றி பெறுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வட மாநில கருத்து கணிப்புகளில் பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. எங்களை பொறுத்த வரை 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம். மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும்.

    தூத்துக்குடி தொகுதியில் நிறைவேற்ற முடியாத திட்டங்களை நான் கூறுவதாக கனிமொழி சொல்கிறார். நாங்கள் நிறைவேற்றக்கூடிய நல்ல திட்டங்களை தான் சொல்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #BJP #Tamilisaisoundararajan
    Next Story
    ×