search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஜெயலலிதாவை சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்து செல்ல அப்பல்லோ நிர்வாகம் மறுப்பு- ஓ.பன்னீர்செல்வம்

    ஜெயலலிதாவை மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்ல அப்பல்லோ நிர்வாகம் மறுத்து விட்டது என்று தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். #Jayalalithaa #ApolloHospital
    தேனி:

    ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடந்த போரில் சிங்கள ராணுவத்துக்கு உதவிய தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசினார்.

    இலங்கையில் நடந்த போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த நிலைக்கு தி.மு.க.வும் காங்கிரசும்தான் காரணம். தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது இலங்கையில் மிகப்பெரிய போர் நடக்கும் சூழல் உருவாகி இருந்தது.

    அப்போது இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்குமாறு ஜெயலலிதா பல முறை வலியுறுத்தினார். ஆனால் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தபோது ஜெயலலிதா சட்டமன்றத்தில் இதற்காக தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் அதற்கும் பயனில்லை.

    அதன் பிறகு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் இலங்கையில் போர் மும்முரமாகி விட்டது. அதனை மறைக்க மனித சங்கிலி போராட்டத்தை கருணாநிதி அறிவித்தார். மேலும் அரைமணி நேர உண்ணாவிரத போராட்டம் நடத்தி விட்டு இலங்கையில் போர் நிறுத்தம் வந்து விட்டதாக கருணாநிதி கூறினார்.

    இதனை நம்பி பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்த அப்பாவி மக்கள் இலங்கை ராணுவத்தின் குண்டு மழைக்கு பலியாகினர். 1 லட்சத்து 60 ஆயிரம் பேரை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. இதில் குழந்தைகள் மட்டும் 40 ஆயிரம் பேர் ஆவார்கள்.


    போர்களத்தில் இருந்த பிரபாகரனை வைகோ சந்தித்த போது அவரிடம் கருணாநிதியிடம் கொடுக்குமாறு ஒரு கடிதத்தை அளித்துள்ளார். ஆனால் இதனை வைகோ எடுத்து கூறியும் கருணாநிதி கண்டுகொள்ளவே இல்லை.

    இலங்கையில் நடந்த இந்த இனப்படுகொலைக்கு தி.மு.க.வும் காங்கிரசும்தான் காரணம் என்று ஜெயலலிதா பல முறை குற்றம்சாட்டியுள்ளார். அப்போது பேசிய வைகோ தான் உயிரோடு இருக்கும் வரை மீண்டும் கருணாநிதியையோ, மு.க.ஸ்டாலினையோ முதல்வராக வர விடமாட்டேன் என்றார். ஆனால் தற்போது மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக ஆக்கியே தீருவேன் என்று கூறுகிறார். மக்கள் மன்றத்தில் வைகோ தொடர்ந்து தோல்வியை சந்தித்துக் கொண்டு வருகிறார். அவர் அப்போதும் பேசியதை மறந்து விடுவார். வேறு எதையாவது பேசி மாட்டிக் கொள்வார். நல்ல அரசியல்வாதியாக இருந்த அவர் தற்போது கெட்டுப்போய் விட்டார்.

    இலங்கை தமிழர்களுக்கு இத்தனை பெரிய துரோகத்தைச் செய்த தி.மு.க. மற்றும் காங்கிரஸ் ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது. எப்போதும் மக்கள் மன்றத்தை சந்திக்கவும் முடியாது. இனப்படுகொலையில் ஆயுதங்கள் கொடுத்து உதவிய தி.மு.க. - காங்கிரசை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.

    காங்கிரசையும், தி.மு.க.வையும் ராஜபக்சேயுடன் சேர்த்து போர் குற்றவாளி கூண்டில் ஏற்றி சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

    அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் வெளிநாடு கொண்டு செல்ல வேண்டும் என்று அங்கிருந்த டாக்டர்களிடம் வலியுறுத்தினோம். ஆனால் அதனை யாரும் கேட்கவில்லை.

    ஜெயலலிதாவுக்கு ஏதேனும் நிகழ்ந்து விட்டால் மக்கள் எங்களை ரோட்டில் நடமாட விடமாட்டார்கள். எனவே நாங்கள் ஜெயலலிதாவை அமெரிக்கா கொண்டு செல்கிறோம் என்று அப்பல்லோ நிர்வாகத்திடம் கெஞ்சினோம். அதற்கு அங்கிருந்த டாக்டர்கள் எங்கள் மீது நம்பிக்கை இல்லையா? என்று கூறி வெளிநாடு கொண்டு செல்வதை தடுத்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுவரை ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவையும், டி.டி.வி. தினகரனையும் குற்றம்சாட்டி வந்த ஓ.பன்னீர்செலவம் முதல் முறையாக அப்பல்லோ நிர்வாகம் மீது குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Jayalalithaa #ApolloHospital #OPanneerSelvam
    Next Story
    ×