search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலைநிறுத்தம்"

    • நெல்லை மண்டல போக்குவரத்து கழகமானது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.
    • நெல்லை மாவட்டத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு தினமும் 236 பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்றும் வழக்கம்போல் அவை ஓடியது.

    நெல்லை:

    போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த சில தொழிற்சங்கத்தினர் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இதனால் பஸ்கள் இயங்காது எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

    அதேநேரத்தில் அனைத்து பஸ்களும் வழக்கம்போல் இயங்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் போக்குவரத்து துறை சார்பில் முன்கூட்டியே தற்காலிகமாக டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்ளிட்டவர்களை தேர்வு செய்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கிய நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வண்ணம் வழக்கம்போல் பஸ்கள் இயங்கின.

    நெல்லை மண்டல போக்குவரத்து கழகமானது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். இந்த மண்டலத்தில் மொத்தம் 1,660 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் நெல்லை மாவட்டத்தில் 7 பணிமனைகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 7 பணிமனைகளும், தென்காசியில் 4 பணிமனைகளும் உள்ளன. மொத்தம் உள்ள 18 பணிமனைகளின் மூலமாக இந்த 3 மாவட்டங்களிலும் 898 பஸ்களும் இன்று அதிகாலை முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.

    அனைத்து பஸ்களும் பணிமனைகளில் இருந்து வழக்கம்போல் அதிகாலை முதலே புறப்பட்டன.

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, கன்னியாகுமரி, தென்காசி , தூத்துக்குடி, திருச்செந்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம் ஆகிய பகுதிகளுக்கு வழக்கம்போல் பஸ்கள் இயங்கின. இதனால் வெளியூர்களுக்கு பணிக்கு செல்வோர், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் எவ்வித பாதிப்பும் இன்றி பஸ் நிலையங்களில் இருந்து வழக்கமான நேரப்படி பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு தினமும் 236 பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்றும் வழக்கம்போல் அவை ஓடியது. அதேபோல் தென்காசி மாவட்டத்தின் வழித்தடங்களில் 157 பஸ்கள் வழக்கமாக இயங்கும். ஆனால் இன்று வழக்கத்தை விட 3 பஸ்கள் கூடுதலாக, அதாவது 160 பஸ்கள் இயங்கின. தென்காசி பணிமனையில் இருந்து 67 பஸ்களும். செங்கோட்டை பணிமனையில் இருந்து 40 பஸ்களும் முழுவதுமாக இயக்கப்பட்டு வருவதாக பணிமனை மேலாளர்கள் தெரிவித்தனர். இதேபோல் குமரி மாவட்டத்தில் வழக்கம்போல் 488 பஸ்கள் ஓடின.

    தூத்துக்குடி மாவட்ட வழித்தடத்தில் ஓட வேண்டிய 226 பஸ்களில் 3 பஸ்கள் மட்டுமே ஓடவில்லை. அதிகாலையில் மாநகரில் 50 பஸ்களில் 49 பஸ்கள் ஓடின. புறநகர்களில் 34 பஸ்களில் 31 பஸ்கள் ஓடின. தொடர்ந்து கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் உள்ளிட்ட 7 பணிமனைகளில் இருந்தும் பஸ்கள் இயக்கம் அதிகரித்தது. 3 மாவட்டங்களிலும் சராசரியாக 90 சதவீதம் வரை பஸ்கள் ஓடின.

    நெல்லை மாநகர பகுதியில் வண்ணார்பேட்டை புறவழிச்சாலை பணிமனையில் இருந்து 67 பஸ்களும், தாமிரபரணி பணிமனை மூலமாக 55 பஸ்களும் என மொத்தம் 122 பஸ்கள் வழக்கமாக இயக்கப்படும். இன்று வண்ணார்பேட்டை புற வழிச்சாலை பணிமனையில் இருந்து 60 பஸ்களும், தாமிரபரணி பணிமனையில் இருந்து 45 பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து வழித்தடங்களிலும் பஸ்கள் வழக்கம்போல் இயங்கியதால் மாணவ-மாணவிகள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் எவ்வித சிரமமும் இன்றி பயணித்தனர்.

    • தொழிற்சங்கங்கள் அனைத்தும் பெரும்பாலும் அரசியல் கட்சிகளை சார்ந்தே இயங்குகின்றன.
    • இன்று காலை தி.மு.க.வின் தொ.மு.ச., காங்கிரசின் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சுமார் 70 தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. இந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும் பெரும்பாலும் அரசியல் கட்சிகளை சார்ந்தே இயங்குகின்றன.

    தமிழக பேருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுக்கு 15-வது ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துவது, வாரிசுகளுக்கு வேலை, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைதொகை உள்பட 6 அம்ச கோரிக்கைகளை கடந்த பல மாதங்களாக தீவிரமாக வலியுறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கைகளில் 70 தொழிற்சங்கத்துக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

    ஆனால் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு 9-ந்தேதி (இன்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்ற அறிவிப்பில் பேருந்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இடையே மாறுபட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன. வேலைநிறுத்த அறிவிப்பில் அரசியல் வரக்கூடாது என்று தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.

    ஆனால் பிரதான தொழிற்சங்கங்களில் ஒன்றான கம்யூனிஸ்டு ஆதரவு பெற்ற சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அதை ஏற்கவில்லை. அ.தி.மு.க. தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்க பேரவையுடன் இணைந்து வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

    அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்க பேரவை, கம்யூனிஸ்டின் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் மேலும் பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பாட்டாளி தொழிற்சங்கம் (பா.ம.க.), தே.மு.தி.க. தொழிற்சங்கம், தமிழ் மாநில தொழிற்சங்க காங்கிரஸ் பேரவை, பாரதிய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்.), புதிய தமிழகம் தொழிற்சங்கம், நாம் தமிழர் தொழிற்சங்கம், மனித உரிமை கழகம், திரு.வி.க. தொழிற்சங்கம் ஆகியவை வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக உள்ளன.

    மேலும் அகில இந்திய தொழிற்சங்க பேரமைப்பு (ஏ.ஐ.டி.யு.சி.), இந்து மஸ்தூர் சபா (எச்.எம்.எஸ்.), மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி (எம்.எல்.எஸ்.) ஆகிய முக்கிய சங்கங்களும் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் இன்றைய போராட்டத்தில் பங்கேற்று பணிக்கு செல்லவில்லை.

    முக்கிய தொழிற்சங்கங்கள் அ.தி.மு.க. தொழிற்சங்கத்துடன் கைகோர்த்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரதான தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கம் பேருந்து வேலைநிறுத்தத்தில் பங்கேற்க போவதில்லை என்று நேற்று அறிவித்தது. அ.தி.மு.க. தொழிற்சங்கம் இந்த போராட்டத்தை அரசியல் ஆக்குவதால் வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு செல்வதாக அறிவித்தது.

    இதன் காரணமாக இன்று காலை தி.மு.க.வின் தொ.மு.ச., காங்கிரசின் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டனர். இதன் காரணமாகவே தமிழகம் முழுவதும் பஸ்கள் பெரும்பாலும் இயக்கப்பட்டன.

    சில மாவட்டங்களில் அந்தந்த பகுதி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருந்தன. மாவட்ட தொழிற்சங்கங்களால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை.

    • அதிமுக ஆட்சியில் நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.
    • இந்தியாவிலேயே எந்தவொரு போக்குவரத்து கழகத்திலும் இங்குள்ளது போன்ற கட்டமைப்பு இல்லை.

    சென்னை:

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

    போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:

    * தமிழகம் முழுவதும் பஸ்களை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

    * கூடுதலாக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான அகவிலைப்படியை, நிதி நெருக்கடியால் வழங்க முடியாத நிலை உள்ளது.

    * அதிமுக ஆட்சியில் நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.

    * கருணை அடிப்படையில் வேலை, புதிய பணியிடங்கள் நிரப்புதல் ஆகிய 2 கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    * கோரிக்கைகள் வைக்கப்படாமலேயே தீபாவளிக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டது.

    * அண்ணா தொழிற்சங்கத்தோடு மற்ற தொழிற்சங்கங்கள் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது.

    * திமுக எப்போதும் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய இயக்கம்.

    * முன்வைக்கப்பட்ட 6 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையை நிறைவேற்ற தான் அரசு சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.

    * தொழிற்சங்கம் என்பது மக்களுக்காக தான். கோரிக்கைளை முன்வைத்து போராட்டம் நடத்தலாம். ஆனால் அது மக்களை பாதிக்கக்கூடாது.

    * இந்தியாவிலேயே எந்தவொரு போக்குவரத்து கழகத்திலும் இங்குள்ளது போன்ற கட்டமைப்பு இல்லை.

    * 95 சதவீதத்திற்கும் மேல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பஸ்கள் ஓடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • சென்னை பாரிமுனையில் இருந்து வழக்கமான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    சென்னையில் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்ததால் இன்று முதல் வேலைநிறுத்தத்தை தொடங்குவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இருந்தாலும் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பஸ்கள் ஓடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில் சென்னையில் 32 பணிமனைகளில் இருந்து 2,749 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 3092 மாநகர பஸ்கள் இயக்கப்பட வேண்டிய நிலையில், 2749 பஸ்கள் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை பாரிமுனையில் இருந்து வழக்கமான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னையில் மாநகர பஸ்கள் வழக்கத்தை விட கூடுதலாக 103 சதவீதம் இயக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் அரசு விரைவு போக்குவரத்துகழக பஸ்கள் 100 சதவீதம் இயக்கப்படுகின்றன.

    • ஓய்வு பெறும்போது கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் என்று மாற்ற வேண்டும்.
    • மக்களுக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும்.

    சென்னை:

    தென்னக ரெயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில், பொது மகா சபைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச் செயலாளராக என்.கண்ணையா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    தலைவராக சி.ஏ.ராஜா ஸ்ரீதர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதுதவிர, கோட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.கண்ணையா கூறியதாவது:-

    ரெயில்களில் பாமர மக்கள் பயணிக்கும் பொது பெட்டிகளை ஏ.சி. பெட்டிகளாக மாற்ற திட்டமிட்டு உள்ளனர். இதனால் பாமர, ஏழைமக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை எதிர்க்கிறோம்.

    மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டம் கடந்த 2001-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தேசிய பென்சன் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும் பயனற்றதாக உள்ளது. புதிய பென்சன் திட்டத்தை மாற்றி, முன்பு இருந்ததுபோல், ஓய்வு பெறும்போது கடைசிமாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் என்று மாற்ற வேண்டும்.

    தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள அரசு, தாங்கள் பதவிக்கு வந்தால், ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பை தருவோம் என்று உறுதி கூறினர். ஆனால், இன்றோ ஆட்குறைப்பு, தனியார் மயமாக்கம் ஆகியவற்றின் மூலமாக தற்போது இருக்கும் பணியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. தற்போது, ரெயில்வேயில் காலியாக உள்ள 90,000 இடங்களுக்கு 2.80 கோடி பேர் விண்ணப்பிக்கின்றனர். வேலை இல்லாத நிலை எந்த அளவுக்கு உள்ளதை இதன்மூலம் புரிந்து கொள்ள வேண்டும். ஐ.சி.எப்.யில் ஒரு வந்தே பாரத் ரெயில் தயாரிக்க ரூ.98 கோடி செலவிடப்பட்டது. தற்போது, ரஷியா கம்பெனிக்கும், மற்ற கம்பெனிகளுக்கு ரூ.139 கோடியில் ஒரு வந்தே பாரத் ரெயில் தயாரித்து கொடுக்க உள்ளார்கள். இதனால், வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை உள்ளது. மக்களுக்கு இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும்.

    பொது பெட்டிகளை ஏ.சி. பெட்டியாக மாற்றக்கூடாது. நல்ல நிலையில் இயங்கும் கம்பெனிகளை வெளிநபர்களுக்கு கொடுக்கக்கூடாது. இவற்றை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்வது தொடர்பாக அகில இந்திய அளவில் வருகிற 21, 22-ந் தேதி மத்திய அரசு ஊழியர்கள், ரெயில்வே ஊழியர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உள்ளோம்.

    இதன் பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரையில் இன்று 4,200 லாரிகள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.
    • ரூ.250 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

    மதுரை

    நாடு முழுவதும் இயக்கப்படும் லாரிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை விதிக்கப்படும் காலாண்டு வரி 40 சதவீதம் அதிகரிக்கப்பட்டதை கண்டித்தும், லாரிகள் இயக்கத்தின் போது சாலைகளில் போலீசார் எவ்வித விசாரணையும் இன்றி ஆன்லைன் மூலம் வழக்குப்பதிவு செய்வதை யும், அபராதம் விதிப்பதை யும் கைவிட வலியுறுத்தியும் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதன் காரணமாக லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

    மதுரையில் இன்று காலை 6 மணி முதல் லாரிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மதுரையை பொறுத்த வரை தினமும் 4,200 லாரிகள் அண்டை மாவட்டத்திற்கும், வெளி மாநிலங்களுக்கும் சரக்கு களை எடுத்துச் சென்று வருகின்றன.

    இதற்காக மதுரை நெல் பேட்டை, வடக்குவெளி வீதி, சிம்மக்கல், கீழ மாரட்டு வீதி உள்ளிட்ட இடங்களில் 230 புக்கிங் அலுவல கங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக அலுவல கங்களும் மூடப்பட்டுள்ளன.

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இந்த வேலை நிறுத்தம் காரணமாக அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் அனுப்பப்படாமல் புக்கிங் அலுவல கங்களில் தேங்கியுள்ளன.

    இதன் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு 5 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சரக்குகளை ஏற்றி இறக்க முடியாதால் சுமார் ரூ. 250 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    லாரி உரிமையாளர்கள் தங்களது உணர்வுகளை வெளிப் படுத்துவதற்காக தீபாவளி பண்டிகை நாட்களில் ஒரு நாள் மட்டும் அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்துள் ளோம். எனவே எங்களது நியாயமான கோரிக்கைக்கு உடனடியாக அரசு செவி சாய்த்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று மதுரை மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் சாத்தையா தெரிவித்துள்ளார்.

    • மின்சாரத்திற்கு 1 யூனிட்டிற்கு 1 ரூ.53பைசா என மின் கட்டணம் நிர்ணயித்துள்ளது.
    • காட்டன் வேஸ்ட் விலை கிலோவுக்கு ரூ.20 அதிகமாக இருப்பதால் ஓ.இ.மில்கள் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

    மங்கலம்:

    ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில் அசோசியேசன் சங்கமானது மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி நேற்று முதல் வருகிற 30-ந்தேதி வரை நூல் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தது.

    அதன்படி திருப்பூர் மாவட்டம் மங்கலம் சுற்று வட்டார பகுதிகளான சாமளாபுரம், மங்கலம்,சோமனூர், பள்ளிபாளையம், பூமலூர், 63 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஓ.இ.,மில்கள் உற்பத்தி நிறுத்தத்தை துவங்கியுள்ளன.

    இது குறித்து ஓ.இ., மில் உரிமையாளர்கள் கூறுகையில், தமிழக அரசு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் நிலைக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், பீக் ஹவர்ஸ் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஒவ்வொரு ஓ.இ., மில் தொழிற்சாலை களின் மேற்கூரையில் அமைக்கப்பட்ட சோலார் பேனல்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு 1 யூனிட்டிற்கு 1 ரூ.53பைசா என மின் கட்டணம் நிர்ணயித்துள்ளது. இந்த மின்கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

    மின் கட்டண உயர்வினால் ஓ.இ., மில் தொழிற்சாலை நடத்த முடியாத நிலையில் உள்ளது. தீபாவளி பண்டிகை காலங்களில் ஓ.இ.மில்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் மற்றும் போனஸ் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் நோக்கி செல்ல ஆயத்தமாகி கொண்டுள்ளனர்.ஆகவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மின்கட்டண உயர்வை ரத்து செய்து ஓ.இ.மில்.தொழிற்சாலைகளை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு ஓ.இ.மில் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில் அசோசியேசன் ( ஓஸ்மா) சங்கத்தலைவர் அருள்மொழி கூறுகையில், மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஓ.இ.மில்கள் இயங்காததால் நாளொன்றுக்கு ரூ.10 கோடி மதிப்பில் நூல் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு உடனடியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் காட்டன் வேஸ்ட் விலை கிலோவுக்கு ரூ.20 அதிகமாக இருப்பதால் ஓ.இ.மில்கள் தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

    காட்டன் வேஸ்ட் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்தால் மட்டுமே ஓ.இ.மில்கள் நஷ்டமின்றி தொழில் செய்ய முடியும்.மேலும் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்தம் செய்வதால் மார்க்கெட்டில் நூல் கொள்முதல் ஆவதில்லை. ஆகவே நிலைமை சீராகும் வரை வருகிற 30-ந்தேதி வரை ஓ.இ.மில்கள் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படும் என்றார்.

    • கடந்த ஒரு ஆண்டு காலமாக விசைத்தறி காடா துணி ஏற்றுமதி தேக்கம் அடைந்ததால் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு துணிக்கு விலை கிடைக்கவில்லை.
    • தமிழ்நாடு அரசு உயர்த்திய மின் கட்டணத்தை உடனடியாக குறைத்து பழைய மின் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட கழிவுபஞ்சு பஞ்சாலை(ஓ.இ.) மில்கள் இயங்கி வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 25 லட்சம் கிலோ நூல்கள் கழிவு பஞ்சில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு நேரடியாகவும், ஒரு லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    கழிவு பஞ்சு விலை ஏற்றம் மற்றும் குறைந்த நூல் விலை போன்ற காரணங்களால் ஓ.இ., மில்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை உற்பத்தி நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். அதன்படி இன்று முதல் சில ஆலைகள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் ஓ.இ. மில்கள் இயங்கி வருகின்றன. இதில் ஒரு சில மில்களில் நூல் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது. மற்ற மில்களில் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து ஓ.இ. மில்கள் சங்கமான ஒஸ்மா தலைவர் அருள்மொழி கூறுகையில், மூலப்பொருள் வரலாறு காணாத விலையில் விற்பதினால் 20 வருட காலமாக இருந்த காட்டன் விலை 60 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இனிவரும் காலங்களில் பஞ்சு விலை குறைந்தால் மட்டுமே ஓ.இ., மில்களை தொடர்ந்து இயக்க முடியும். தமிழ்நாடு அரசு கடந்த வருடம் மின்சார கட்டணம் உயர்த்தியதால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டு காலமாக விசைத்தறி காடா துணி ஏற்றுமதி தேக்கம் அடைந்ததால் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு துணிக்கு விலை கிடைக்கவில்லை. இதனால் ஓ.இ., மில்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

    எனவே தமிழ்நாடு அரசு உயர்த்திய மின் கட்டணத்தை உடனடியாக குறைத்து பழைய மின் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும். காட்டன் வேஸ்ட் மூலப்பொருள் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு கழிவு பஞ்சு ஏற்றுமதியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றார்.

    • மூலப் பொருட்கள் விலைஉயர்வு, மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு
    • 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்

    கோவை,

    தமிழகத்தில் கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் 600-க்கும் மேற்பட்ட ஒபன் எண்ட் நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. மேலும் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 400 ஆலைகள் உள்ளன.

    ஒபன் எண்ட் நூற்பாலைகளில் இருந்து தினமும் 25 லட்சம் கிரே நூல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் பிளாஸ்டிக் பாட்டில், பனியன் கம்பெனி கழிவுகளில் இருந்து தினமும் சுமார் 15 லட்சம் கலர் நூல்கள் உற்பத்தியாகி வருகின்றன. இதற்காக அங்கு சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்தநிலையில் மூலப் பொருட்கள் விலைஉயர்வு, மின்கட்டண அதிகரிப்பு ஆகியவற்றை கண்டித்து ஒபன் எண்ட் நூற்பாலைகள் தற்போது வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளன. இது நாளை மறுநாள் (7-ந்தேதி) தொடங்குகிறது.

    இதுதொடர்பாக ஒபன் எண்ட் நூற்பாலைகள் சங்க தலைவர் அருள்மொழி கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாங்கள் கழிவுப்பஞ்சில் இருந்து நூல்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் இருந்து தினமும் சுமார் 25 லட்சம் கழிவு நூல்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் பிளாஸ்டிக் மற்றும் பனியன் கழிவுகளில் இருந்து தினமும் சுமார் 15 லட்சம் கலர் நூல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன்மூலம் தினமும் ரூ. 60 கோடி மதிப்பில் வர்த்தகம் நடக்கிறது. எங்கள் நிறுவனங்களில் சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். மேலும் பல லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைத்து வருகிறது.

    இந்த நிலையில் ஒபன் எண்ட் நூற்பாலைகளுக்கான மூலப்பொருட்களின் விலை கடந்த சில ஆண்டுகளாக வரலாறு காணாத அளவில் உயர்ந்து உள்ளது. அதாவது ஒரு கிலோ ரூ.97 என்ற நிலையில் இருந்த கழிவு பஞ்சின் விலை தற்போது ரூ.117 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தமிழக அரசு மின்கட்டணத்தை கிடுகிடுவென உயர்த்தி உள்ளது.

    இதனால் நாங்கள் தொடர்ந்து தொழிலை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே மூலப்பொருட்களின் விலையை குறைக்க வேண்டும், மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், கழிவுப்பஞ்சு ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டும், இறக்கு மதியாகும் பஞ்சுக்கான 11 சதவீதம் வரியை நீக்க வேண்டும்,

    தமிழகஅரசு மின்கட்டணம் மற்றும் நிலைக்கட்டண உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும். சூரியஒளி மின்சாரத்துக்கு கட்டணம் விதிக்கக்கூடாது என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்வதென முடிவெடுத்து உள்ளோம்.

    ஒபன் எண்ட் நூற்பாலைகளின் தொடர் வேலைநிறுத்த போராட்டம் வருகிற 7-ந்தேதி தொடங்கு கிறது. இது வருகிற 30-ந்தேதி வரை நீடிக்கும். மேலும் சந்தை நிலவரம் சீராகும்வரை உற்பத்தி நிறுத்தத்தை தொடருவது என திட்டமிடப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட ஆலைகள் தொழில் நஷ்டம் காரணமாக மூடப்பட்டு உள்ளன. மற்ற மில்களிலும் 50 சதவீத அளவில் மட்டுமே உற்பத்தி நடக்கிறது. ஒபன் எண்ட் நூற்பாலைகள் வேலைநிறுத்தம் காரணமாக தினமும் 40 லட்சம் கிலோ நூல்உற்பத்தி பாதிக்கப்படும். இதனால் நாள்தோறும் ரூ.60 கோடி வர்த்தகம் பாதிக்கும்.

    மேலும் எங்கள் நிறுவனத்தில் 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மறைமுக வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். ஒபன் எண்ட் நூற்பாலைகள் வேலைநிறுத்தம் காரணமாக 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலையி ழக்கு அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    குஜராத், பஞ்சாப், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் ஒபன் எண்ட் நூற்பாலைகளுக்கு மானியவிலையில் மின்சாரம் தரப்படுகிறது. மேலும் தொழில் வாய்ப்பு மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கவும் திட்டம் வகுத்து செயல்பட்டு வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் ஒபன் எண்ட் நூற்பாலைகளின் நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது. எனவே மத்திய-மாநில அரசுகள் ஜவுளி தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது சங்க துணைத்தலைவர் செந்தில்குமார், இணை செயலாளர்கள் சுரேஷ்குமார், பாரதி மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • ஒவ்வொரு முறையும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது இந்த பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது.
    • சிறிய படகுகள் மட்டும் கடந்த சனிக்கிழமை மீண்டும் கடலுக்கு சென்று வருகிறது

    ராமேசுவரம்:

    இந்தியாவின் 2-வது நீண்ட கடற்கரையை கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் மீன்பிடி தொழில் பிரதானமாக உள்ளது.

    இங்கிருந்து விலையுயர்ந்த மீன்கள், இறால், நண்டு உள்ளிட்டவை வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மீன்பிடி தொழிலால் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மீனவர்களும் மற்றும் பலர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    தென் தமிழகத்தில் உள் கடற்கரை மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி, தங்கச்சி மடம் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர்.

    மற்ற கடற்கரை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுக்கு இல்லாத சிக்கலை ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் அடிக்கடி எதிர்கொண்டு வருகின்றனர். ராமேசுவரத்தில் இருந்து அண்டை நாடான இலங்கை சில நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சில மணி நேரங்கள் கடலில் பயணித்தாலே சர்வதேச கடல் எல்லையை அடைந்துவிட முடியும்.

    சர்வதேச கடற்பகுதி என்பதால் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை மற்றும் இந்திய-இலங்கை கடல் எல்லையில் இருநாட்டு கடற்படை வீரர்கள் ரோந்து சுற்றி வருவார்கள். இந்த சூழலில் மீன்பிடிக்க செல்லும் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படுவதும் அல்லது அவர்களை தாக்கி விரட்டியடிப்பதும் தொடர்கதையாக உள்ளது. இதனால் ராமேசுவரம் மீனவர்கள் முழுமையாக மீன்பிடி தொழிலை மேற்கொள்ள முடிவதில்லை.

    ஒவ்வொரு முறையும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது இந்த பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. கடந்த 14-ந்தேதி கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம, மண்டபம் பகுதிகளை சேர்ந்த 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இலங்கை கடற்படையின் நடவடிக்கை ராமேசுவரம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மீனவர் சங்கங்களின் அவசர கூட்டம் நடந்தது. இதில் சிறையில் வாடும் மீனவர்களை உடனே விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 16-ந்தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் சிறிய படகுகள் மட்டும் கடந்த சனிக்கிழமை மீண்டும் கடலுக்கு சென்று வருகிறது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்து தவிக்கின்றனர். ரூ.10 கோடிக்கும் மேல் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மீனவர்கள் ராஜா, எடிசன் ஆகியோர் கூறியதாவது:-

    ஆண்டுதோறும் மீன்பிடிக்க ஏற்ற ஒரே இடமாக ராமேசுவரம் இருந்து வருகிறது. ஆனால் இலங்கை கடற்படையினரின் தொந்தரவால் பாரம்பரிய இடத்தில் கூட மீன்பிடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மீன்பிடிக்க ஏற்ற சூழல் இல்லாத நிலையில் நாள்தோறும் அவதிப்பட்டு வருகிறோம்.

    மீன்பிடிக்க முடியாமலும், படகை இயக்க முடியாமலும் முடங்கிப்போய் உள்ளோம். ஒருமுறை கடலுக்கு சென்றால் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை வருமானம் கிடைக்கும். அதுதான் எங்களுடைய வாழ்வாதாரம். தற்போது நடந்துவரும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தால் குடும்பம் நடத்த கடன் வாங்கும் சூழலில் இருக்கிறோம்.

    மேலும் மீன்பிடி தொழிலின் சார்பு தொழில்கள் அனைத்தும் முடங்கி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுமே கடலுக்கு செல்லும் எங்களுக்குரூ.5 வரை கிடைத்தது. தற்போது அந்த வருவாய் இன்றி தவிக்கிறோம். மறுபுறம் கடலுக்கு சென்றாலும் இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகி இழப்புடன் தான் கரை திரும்பும் நிலை உள்ளது.

    எனவே மத்திய, மாநில அரசுகள் மீன்பிடி தொழிலை பாதுகாப்புடன் மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். வெளிமாநிலங்களை போன்று குத்தகை அடிப்படையில் பாரம்பரிய இடத்தில் சிரமமின்றி மீன்பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மீன்பிடி தொழிலை முறைப்படுத்தும் வகையில் படகுகளின் நீளம், அகலம் உள்ளிட்டவைகளை மீன்வளத்துறையினர் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சிறைபிடிப்பு தொடர்பாக இன்று ராமேசுவரத்தில் மீனவர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • வருகிற 18-ந் தேதி பாம்பனில் சாலை மறியல் நடத்தப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 27 மீனவர்களுடன் 5 படகுகளை இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி சிறைபிடித்து சென்றனர். இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் சிறைபிடிப்பு தொடர்பாக இன்று ராமேசுவரத்தில் மீனவர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை உடனே விடுவிக்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி இன்று முதல் ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. மேலும் வருகிற 18-ந் தேதி பாம்பனில் சாலை மறியல் நடத்தப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    • மத்திய மற்றும் மகாராஷ்டிர அரசுகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வெங்காய வியாபாரிகள் போராட்டத்தை தள்ளிவைத்தனர்.
    • விவசாயிகள் ஏலத்திற்காக கொண்டு வந்த வெங்காய மூட்டைகள் சந்தைகளில் தேங்கி கிடந்தன.

    மும்பை:

    நாட்டில் வெங்காய பற்றாக்குறையை சமாளிக்க, அதன் ஏற்றுமதிக்கு 40 சதவீத வரியை மத்திய அரசு கடந்த மாதம் விதித்தது. இதற்கு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள வெங்காய சந்தைகளில் ஏலம் நிறுத்தப்பட்டது. இந்த மாவட்டத்தில் உள்ள லசல்காவ் சந்தை இந்திய அளவில் பெரிய வெங்காய சந்தையாகும்.

    மத்திய மற்றும் மகாராஷ்டிர அரசுகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வெங்காய வியாபாரிகள் போராட்டத்தை தள்ளிவைத்தனர். இந்த நிலையில் இதுவரை தங்களது கோரிக்கை நிறைவேறாததை கண்டித்து நாசிக் மாவட்ட சந்தைகளில் வெங்காய ஏலம் நேற்று முன்தினம் மீண்டும் நிறுத்தப்பட்டது. இந்த போராட்டம் 2-வது நாளாக நேற்றும் நீடித்தது. இதனால் விவசாயிகள் ஏலத்திற்காக கொண்டு வந்த வெங்காய மூட்டைகள் சந்தைகளில் தேங்கி கிடந்தன.

    வியாபாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக வெங்காய வினியோகம் பாதிக்கப்பட்டு சில்லறை கடைகளில் விலை உயர்வு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நாசிக் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், அனைத்து விவசாய விளைபொருள் சந்தை குழுக்களுக்கு (ஏ.பி.எம்.சி) உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் வியாபாரிகளின் லைசென்ஸ் ரத்து அல்லது இடைநீக்கம் செய்யப்படும் என்று எச்சரித்து உள்ளார்.

    இதுபற்றி நாசிக் மாவட்ட பொறுப்பு மந்திரி அப்துல் சத்தார் கூறுகையில், "20-ந் தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் வியாபாரிகள் மற்றும் தரகர்கள் பிடிவாதமாக இருந்தனர். இதன் காரணமாக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

    ×