search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளைகாப்பு"

    • ஆடி மாதமானது பூமாதேவி அவதரித்த மாதமாகும்.
    • ஆடிப்பூரத்தில் தேவியார் பக்குவமடைந்ததாகப் புராணம் கூறுகிறது.

    சூரிய பகவான் தை மாதத்திலும் ஆடி மாதத்திலும் தன் ரதத்தை திசை மாற்றிச் செலுத்துகிறான். சூரியன் தை மாதத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் போது உத்தராயண புண்ணிய காலம் ஆரம்பமாகிறது. ஆடி மாதம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் போது தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்குகிறது. இந்த ஆடி மாதப் புண்ணிய காலத்தில் புனித தீர்த்தங்களில் நீராடினால் பாவங்கள் விலகும் என்பர். எனினும் ஆடி மாத முதல் மூன்று நாட்கள் நீராடக்கூடாது என்றும் கூறியுள்ளனர். அந்த முதல் மூன்று நாட்கள் 'நதி ரசஜ்வாலா'' எனப்படும். இந்த மூன்று நாட்கள் நதிகளுக்குரிய தீட்டு நாட்களாகும்.

    ஜீவநதியான கங்கையில் எப்பொழுதும் நீர் ஓடிக் கொண்டிருப்பதால் ஆடி மாதம் புதிதாக நீர் வரும் வாய்ப்பு இல்லை. மற்ற ஆறுகளில் பழங்காலத்தில் ஆடி மாதத்தில் புது நீர் வரும். அந்த நீர் பெரும்பாலும் கலங்கலாகவும் அழுக்காகவும் இருக்கும். எனவே ஆடி முதல் தேதியை ஒட்டி வரும் புதிய நீர் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதால், அந்தச் சமயத்தில் நதிகளில் குளிக்கக் கூடாது என்று சொல்லப்பட்டது. ஆனால், கடல், கோவில்களில் உள்ள புனிதக் குளங்களில் நீராடலாம்.

    ஆடி மாதமானது பூமாதேவி அவதரித்த மாதமாகும். மேலும், ஆடி மாதத்தில்தான் பார்வதிதேவி ஒரு கல்பத்தில் அவதாரம் செய்தாள் என்று புராணம் கூறுகிறது. ஆடிப்பூர நட்சத்திரத்தில்தான், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் துளசி வனத்தில் கோதை ஆண்டாள் அவதரித்தாள். ஒவ்வொரு ஆடி மாத வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமை பெண்களுக்கு மிகச் சிறப்பான நாள். இந்த நாளில் அம்மனை வழிபடுவது குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்தும். ஆடிப்பூரத்தில் தேவியார் பக்குவமடைந்ததாகப் புராணம் கூறுகிறது. அதனால் அன்று அம்மன் கோவில்களில் வளைக்காப்பு வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறும்.

    இந்நாளில் அம்பாளுக்கு கண்ணாடி வளையல்களை சமர்ப்பித்து வழிபட்டால் சுமங்கலி பாக்கியம் நீடிக்கும்; கன்னிப் பெண்களுக்கு விரைவில் நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. இந்த ஆடி மாதத்தின் சிகரமாகத் திகழ்வது ஆடித்தபசு விழா. நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆடித்தபசு விழா பத்து நாட்கள் நடை பெறும். தவமிருந்த அன்னைக்கு இறைவன் சங்கர- நாராயண ராகக் காட்சி தந்த நாள் ஆடி பௌர்ணமி நாளாகும். காவேரிக் கரையோர மக்கள் ஆடி 18 அன்று காவேரி அன்னையை வழிபாடு செய்வார்கள். காவேரி அம்மனுக்கு இந்தச் சமயத்தில் மசக்கை ஏற்பட்டிருப்பதாக ஐதீகம்.

    அதனால் சித்திரான்னங்களான புளியஞ் சாதம், தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், பாயசம் மற்றும் கலவைச் சாதம், பழம், வெற்றிலைப் பாக்கு, காதோலை, கருகமணி என்று காவேரி நதிக்குப் படைத்து, சிறிதளவு ஓடும் காவேரி நதிக்கு சமர்ப்பிப்பார்கள். காவேரி நதியை வழிபடும்போது, மஞ்சள் தடவிய நூலினை வைத்துப் படைத்து, பிறகு பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது மணிக்கட்டிலும் அணிந்துகொள்வது வழக்கம்.

    ஆடி 18 அன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீரங்கநாதர் காவேரித் தாயாருக்கு மரியாதை செய்வார். காலையில் சுமார் பத்து மணிக்கு ஸ்ரீரங்கம் தென்புறத்தில் உள்ள அம்மா மண்டபம் காவேரிப் படித்துறைக்கு எழுந்தருள்வார். பிறகு மாலையில் கோவிலிலிருந்து யானையின்மேல் மங்கலப் பொருட்களான புடவை, ரவிக்கைத் துணி, மஞ்சள், குங்குமம், சந்தனம், பழம், தாம்பூலம், கருகமணி ஆகியவற்றைக் கொண்டு வருவார்கள்.

    அந்த மங்கலப் பொருட்களை பெருமாள்முன் சமர்ப்பித்து பூஜைசெய்து, பின் காவேரித் தாயாருக்கு பூஜை செய்து காவேரி நதியில் சமர்ப்பிப் பார்கள். இந்த நிகழ்ச்சி நடைபெற்றதும், பெருமாள், வெளி ஆண்டாள் சந்நிதிக்குச் சென்று, அங்கு ஸ்ரீஆண்டாளின் மாலையை மாற்றிக்கொண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செல்வார். இந்த விழாவில் கலந்துகொண்டால் வாழ்க்கையில் என்றும் வசந்தம் வீசும் என்பர். முருகப் பெருமானுக்கும் ஆடி மாதம் உகந்த மாதமாகும். ஆடி கிருத்திகை அன்று முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள அனைத்துக் கோவில்களிலும் விழாக் கோலம் காணும்.

    ஆடி மாதப் பௌர்ணமி நாளில் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்ததாகக் கூறுவர். அன்று வைணவத் திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆடி மாத சுக்ல தசமியில் திக்வேதா விரதம் கடைப்பிடித்து, திக்தேவதைகளை அந்தத் திசைகளில் வழிபட்டால் நினைத்தது தடையின்றி நடைபெறும்.

    ஆடி மாத வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி வரை துளசி பூஜை செய்து வந்தால் சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடுவதுடன் வளமான வாழ்வு கிட்டும். ஆடி மாத சுக்ல துவாதசியில் மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வ வளம் பெருகும். மேலும் ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி அன்று அன்னதானம் செய்தால் புண்ணியம் கூடுவதுடன், பசித்த வேளைக்கு உணவு தேடிவரும் என்பர். கருடபஞ்சமி, நாகபஞ்சமி ஆகியவையும் ஆடி மாதத்திற்கு சிறப்பினைக் கூட்டுகின்றன. ஆடி மாத சிறப்பு நாட்களில் விரதம் கடைப்பிடித்து இறைவழிபாட்டில் ஈடுபட்டால், வளமான வாழ்வு என்றும் நிரந்தரம்!

    • ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள்.
    • ஒன்பது வகை மலர்களால் ஒரே சமயத்தில் அர்ச்சிக்கும் “நவசக்தி அர்ச்சனை’ நடைபெறும்.

    ஆடி முதல் வெள்ளி. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு சிறப்பு மகத்துவம் உள்ளது. ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். தேவர்களின் இரவுக் காலமாக இதனைக் கருதுவர். ஆடி மாதத்தை "சக்தி மாதம்' என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமக் சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும். உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவே. வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்களுக்கும் ஆடி மாதம் சிறந்தது. ஆடி மாதம் - அம்பிகைக்கு உகந்த மாதம். மாரியம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் காலம். ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகள் இணைந்தால் அந்நாள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. ஆடி மாதம் பண்டிகைகளை அழைக்கும் காலம்' என்பர். மழைக்காலம் தொடங்குவதும் இப்பொழுதுதான். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.

    இம்மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து இறைவனை வழிபாடுவார்கள். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும். ஒளவை நோன்பு: ஆடி செவ்வாயில் ஒளவையாருக்கு மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத் தக்கது. இந்த ஒளவை நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். இந்த நோன்பில் பச்சரிசி மாவுடன், வெல்லம் கலந்து உப்பில்லாமல் கொழுக்கட்டை செய்வார்கள். பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் இந்த விரதம் இரவு பத்து மணிக்கு மேல் துவங்கும். அச்சமயத்தில் ஆண்கள் யாரும் அவ்விடத்தில் இருப்பதில்லை. பின்னர் ஒளவையார் கதையை வயதான பெண்மணி கூறுவார்.

    ஒளவையை வேண்டி கொழுக்கட்டை நிவேதனம் செய்து இரவைக் கழிப்பர். இதுவே ஒளவை நோன்பு. இந்த வழிபாடு மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல இடங்களில் கடைபிடிக்கப்படுகிறது. மகாலட்சுமி வழிபாடு: ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. அன்றையதினம் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும். ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. சண்டி ஹோமம்: ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள். பராசக்தியின் ஒன்பது அம்சங்களை (சர்வபூதசமனி, மனோன்மணி, பலப்பிரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரௌத்ரி, ஜேஷ்டை, வாமை) ஒன்பது சிவாச்சார்யர்கள், ஒன்பது வகை மலர்களால் ஒரே சமயத்தில் அர்ச்சிக்கும் "நவசக்தி அர்ச்சனை' நடைபெறும். ஆடி வெள்ளியில் "சண்டி ஹோமம்' போன்ற சக்தி ஹோமங்களும் செய்வார்கள்.

    • திருமண பாக்கியம் வேண்டி பிரார்த்திப்பவர்கள், மஞ்சள் சரடை வேப்பமரத்தில் கட்டி, வேண்டிக் கொள்ளலாம்.
    • முதல் வார பிரார்த்தனையை திங்கள் அன்று துவங்கினால் 9 வாரங்களும் திங்கட்கிழமையில் கோவிலுக்கு வரவேண்டும்.

    சென்னை அருகில் உள்ள புட்லூரில் அமைந்துள்ள அங்காள பரமேசுவரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் முழுவதும் கோலாகலமாக இருக்கும்.

    திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கோவிலில் நீராடிவிட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிராகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும்.

    குழந்தைப் பேறு வேண்டுவோர் எலுமிச்சைப் பழம் மற்றும் தொட்டிலை எடுத்து வந்து, கோவிலின் உள்ளே இடது புறத்தில் புற்றுக்கு அருகில் உள்ள வேப்பமரத்தில், கட்டிவிட்டு பிரார்த்திக்க வேண்டும். திருமண பாக்கியம் வேண்டி பிரார்த்திப்பவர்கள், மஞ்சள் சரடை வேப்பமரத்தில் கட்டி, வேண்டிக் கொள்ளலாம்.

    கருவறையில் உள்ள புற்று வடிவில் கோலோச்சும் பூங்காவனத்தம்மனது பாதத்தில் எலுமிச்சைப் பழத்தை வைத்து, அப்படியே உருட்டிவிடுவார் பூசாரி. இதை பெண்கள், தங்கள் புடவைத் தலைப்பு அல்லது சுடிதார் துப்பாட்டாவால் ஏந்தி எடுத்துவந்து, கோவில் வளாகத்தில் அமர்ந்து அப்படியே தோலுடன் கடித்துச் சாப்பிட வேண்டும்.

    இதே போல் தொடர்ந்து 9 வாரங்கள் இங்கு வந்து அம்மனை தரிசித்து பிரார்த்திக்க வேண்டும். முதல் வாரம் மட்டுமே தொட்டில் கட்ட வேண்டும் (மஞ்சள் சரடும் அப்படியே!). பிறகு ஒவ்வொரு வாரமும் எலுமிச்சைப் பழம் மட்டும் எடுத்துவந்தால் போதும்!

    செவ்வாய், வெள்ளி மட்டுமின்றி எந்த நாளும் வழிபடலாம்! முதல் வார பிரார்த்தனையை திங்கள் அன்று துவங்கினால் 9 வாரங்களும் திங்கட்கிழமையில் கோவிலுக்கு வரவேண்டும். செவ்வாய்க்கிழமை என்றால், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று வரவேண்டும். பக்தர்களில் சிலர், ஆடி மாதம் முழுவதும் பிரார்த்தனையைத் தொடர்வதுண்டு. ஆடிப்பூரம் மிகவும் விசேஷ நாளகும். அன்று பெண்கள் தங்கள் வேண்டுதலை நினைத்து பிரார்த்தனையைத் தொடங்கலாம்.

    • கருவறையில் சாந்தமும், கருணையும் பொங்க, அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறாள் முப்பாத்தம்மன்.
    • நாகதோஷம் உள்ளவர்கள் இங்கே வந்து புற்று வழிபாடு செய்து, முப்பாத்தம்மனை வேண்டிக் கொண்டால், தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

    சென்னை தி.நகர் பனகல்பார்க் அருகில் முப்பாத்தம்மன் கோவில் உள்ளது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி விவசாய பூமியாகத் திகழ்ந்த போது, முப்பாத்தம்மன் தோன்றினாள்.

    முன்பு இங்கு அரசு மற்றும் வேம்புக்கு நடுவே புற்று வளர்ந்திருந்தது. இதைத்தான் ஆரம்பத்தில் வழிபட்டனராம். பின்னர், முப்போகமும் விளையும் நிலத்தில் இருந்து அம்மன் விக்கிரகத்தைக் கண்டெடுத்தனராம்.

    இதை, புற்றுக்கு அருகில் வைத்து வழிபடவும் தொடங்கினார்கள். முப்போகமும் விளையும் நிலத்தில் இருந்து வந்தால், முப்பாத்தம்மன் என்றனர். இந்த கோவிலின் விசேஷங்களில் பிராகார வலம் வருதலும் ஒன்று! செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 108 முறை பிராகாரம் வலம் வரும் பக்தர்கள் நிறைய பேர் உள்ளனர். இப்படி 108 முறை வலம் வந்தால் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை.

    கருவறையில் சாந்தமும், கருணையும் பொங்க, அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறாள் முப்பாத்தம்மன்.

    'இரண்டு நிமிடம் முழு ஈடுபாட்டுடன் நமது பிரார்த்தனையை அம்மனிடம் வைத்து வேண்டிக் கொண்டால் போதும். நினைத்தது நிறைவேறும்' என்கின்றனர் பக்தர்கள்.

    நாக தோஷம் உள்ளவர்கள் இங்கே வந்து புற்று வழிபாடு செய்து, முப்பாத்தம்மனை வேண்டிக் கொண்டால், தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. எலுமிச்சைப் பழத் தோலில் நெய் விளக்கு ஏற்றி வைத்து, செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை என ஒன்பது வாரங்கள் தொடர்ந்து முப்பாத்தம்மனை வழிபட்டு வந்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது நம்பிக்கை. ஆடி மாத விசேஷ நாட்களில் குறிப்பாக ஆடிப்பூரம் தினத்தன்று எலுமிச்சை மாலை அணிவித்து அம்மனை வேண்டிக் கொண்டால் தீராத நோயையும் தீர்த்து வைப்பாள் முப்பாத்தம்மன்.

    • ஆலயத்தின் மகிமையே, அம்மன் சுயம்புவாக வடிவெடுத்து இருப்பதுதான்.
    • நாகதோஷம் இருப்பவர்கள் முண்டகக்கண்ணி அம்மனை வழிப்பட்டு, நாகக்கன்னி சிலை பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள்.

    நாகதோஷம் நீங்குவதற்கு தமிழ்நாட்டிலேயே சக்திவாய்ந்த தலமாக விளங்கிவரும் முண்டகக்கண்ணி அம்மன் திருக்கோயில் சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கிறது. சென்னைப் பட்டணம் தோன்றுவதற்கு சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த அம்மன் அவதரித்ததாக ஆலய வரலாறு கூறுகிறது. ஆனால், அதையும் தாண்டி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியிருக்கக் கூடும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த ஆலயத்தின் மகிமையே, அம்மன் சுயம்புவாக வடிவெடுத்து இருப்பதுதான்.

    நாகதோஷம் இருப்பவர்கள் முண்டகக்கண்ணி அம்மனை வழிப்பட்டு, நாகக்கன்னி சிலை பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதன்பிறகு, 48 நாட்களுக்கு நீரிலேயே நாகக்கன்னியை வைத்திருந்து, அதை ஆலயத்தின் முகப்பில் இருக்கிற மரத்தடியில் பிரதிஷ்டை செய்து, அதற்கு பாலாபிஷேகமும் வழிபாடும் நடத்தி வழிபடுவது இந்த ஆலயத்தின் விசேஷம். அதேபோல ஆடி மாதம் அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் காப்பு மற்றும் அன்னாபிஷேகம் செய்வதும் இங்கு விசேஷம்.

    ஆடிப்பூரத்துக்கு 1008 மலர் கூடைகள் எடுத்துவந்து அம்மனுக்கு பூச்சுடுதல் நடக்கும். நவராத்தி 10 நாளும் உற்சவ புறபாடு இருக்கும். 10 நாளும் 10 அலங்காரத்தில் அம்மன் காட்சி தருவாள். எல்லா விசேஷ நாளிலும் அம்மனுக்கு தங்கக் கவசம் சாற்றி வழிபாடு நடக்கும்.

    • அம்பிகைக்கு வளையல்கள் சார்த்தியும் வழிபாடுகள் நடைபெறும்.
    • வளைகாப்பு நிகழ்ச்சி என்பது கர்ப்பமான பெண்ணுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக, உறவினர்கள் புடைசூழ வாழ்த்துவார்கள்.

    ஆடி மாதம்-அம்பிகைக்கு உகந்த மாதம். மாரியம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் காலம்.

    ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகள் இணைந்தால் அந்நாள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. (ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு.)

    அந்த வகையில் ஆடிப்பூரம் தினத்தன்று அம்பிகை கருவுற்று இருப்பதை முளைப்பயிற்றை அம்பிகையின் வயிற்றில் பிணைத்து, கருக்கோலம் கொண்டிருப்பதாக எண்ணி பிரார்த்தனை செய்வார்கள்.

    முளைப்பயிறின் வடிவமும், நுண்ணோக்கியில் தெரியும் உயிரணுவின் வடிவமும் ஒன்று போலவே இருப்பதைக் காணுங்கள். ஆன்றோர்கள், இவற்றை அறிந்திருந்ததால், இப்படி ஒரு ஏற்பாட்டினைச் செய்திருப்பார்களோ?

    நூற்றுக்கணக்கான முளைப் பயிற்றை ஒரு துணியில் கட்டி, அதை அம்பிகையின் வயிற்றில் பிணைப்பார்கள். முளைப் பயிறு கட்டுவது, வம்ச அபிவிருத்திக்காகவும், நற்குழந்தைப் பேற்றுக்காகவும் கட்டப்படுவது ஆகும்.

    அம்பிகைக்கு வளையல்கள் சார்த்தியும் வழிபாடுகள் நடைபெறும். அகிலாண்ட நாயகிக்கு வளையல்களாலேயே அலங்காரம் செய்து வழிபடும் நாள் ஆடி மாதத்தில், பூரம் நட்சத்திரம் இணையும் நாள் ஆகும்.

    வளைகாப்பு நிகழ்ச்சி என்பது கர்ப்பமான பெண்ணுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக, உறவினர்கள் புடைசூழ வாழ்த்துவார்கள்.

    கர்ப்ப காலத்தில் பெண்ணுக்கு எவ்வித கஷ்டங்களும் உண்டாகதவாறு பார்த்துக் கொள்வார்கள்.

    கருக்கொண்ட காலம் பிள்ளைப் பேற்றுக்கு பூர்வ (முந்தைய காலம்). ஆடி மாதத்தில், பூர்வ பல்குனி எனும் பூரம் நட்சத்திரம் இணையும் நாள் ஆடிப்பூரம்.

    இந்த ஆடிப் பூர தினத்தில் தான் அம்பிகைக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். அம்பிகை வளையல் அலங்காரத்தின் மனம் மகிழ்ந்து, நெஞ்சம் நிறைந்து, தன் மக்கள் அனைவருக்கும் அருள் பாலிப்பாள்.

    அம்பிகைக்கு வளையல்கள் வழங்கி சார்த்துவதும், வளையல் காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வதும்- அற்புதமான பலன்களை வாரி வழங்கக் கூடியது, ஆனந்தத்தை வழங்கக்கூடியது. வளமான வாழ்க்கையை வழங்கக்கூடியது.

    • குதிரையை குளிக்கவைத்து, அதன் உடலுக்கு பட்டு துண்டு கட்டிவிட்டனர்.
    • வளைகாப்பு விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு தாம்பூலமாக வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமமும் வழங்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அம்மன்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு பெண் குதிரை வளர்க்கப்பட்டு வருகிறது. கோவில் திருவிழாவின்போது இந்த குதிரை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வரப்படும். இதற்கிடையே குதிரை கர்ப்பமாக இருந்தது.

    இந்தநிலையில் பருவமழை பெய்ய வேண்டி கிராம மக்கள் கர்ப்பமாக இருந்த குதிரைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று காலை கிராம மக்கள் வீடுகளில் இருந்து வளையல், கலவை சாதம், சந்தனம், குங்குமம், பூ என வளைகாப்புக்கு தேவையான சீர் வரிசை தட்டுகளுடன் கோவிலுக்கு வந்தனர்.

    அதன் பின்னர் குதிரையை குளிக்கவைத்து, அதன் உடலுக்கு பட்டு துண்டு கட்டிவிட்டனர். குதிரையின் கழுத்துக்கு பெண்கள் வளையல்களை தொடுத்து, மாலையாக அணிவித்து நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து குதிரைக்கு புளிசாதம், தக்காளி சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை, தயிர் என 5 வகை கலவை சாதத்தை பெண்கள் ஊட்டிவிட்டனர். ஆண்கள் பூ தூவி வாழ்த்தினார்கள். இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் 100, 200, 500 ரூபாய் நோட்டுகளை குதிரையின் மீது கட்டப்பட்டு இருந்த பட்டு துண்டில் மொய் பணமாக வைத்தனர். அனைவருக்கும் 5 வகை சாதத்துடன் விருந்தும் நடைபெற்றது.

    வளைகாப்பு விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு தாம்பூலமாக வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமமும் வழங்கப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவரிடம் கேட்டபோது, 'கோவில் குதிரை கர்ப்பமாக இருக்கும்போது அதற்கு வளைகாப்பு நடத்தினால் பருவமழை தவறாமல் பெய்யும். ஊர் மக்கள் நோய் நொடியின்றி இருப்பார்கள்' என்றார்.

    இந்த வினோத நிகழ்ச்சியை கண்டு ரசிக்க அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

    • செவிலியர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து சீர் செய்தனர்.
    • 5 வகை உணவுடன் விருந்தும் நடந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை அரசு ஆரம்ப சுகாதாரநிலையம், யாம் அறக்கட்டளை இணைந்து 40 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா நடத்தினர்.

    வட்டார மருத்துவ அலுவலர் குமார் தலைமையில் நடந்த விழாவில் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் புடவை, தாம்பூலம், மஞ்சள், குங்குமம், கனி வகைகள் வழங்கப்பட்டது.

    விழாவில் செவிலியர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து சீர் செய்தனர். பின்பு 5 வகை உணவுடன் விருந்தும் நடந்தது. இதில் கர்ப்பிணி பெண்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

    • தென்கரை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசார் மற்றும் ஆண் போலீசார் ஒன்றாக இணைந்து ஏட்டு பாரதிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
    • போலீசார் ஏற்பாடு செய்திருந்த 5 வகையான உணவு வகைகளை கர்ப்பிணி மற்றும் அவரது கணவர் இருவருக்கும் வழங்கினர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் பாரதி. இவருக்கும் அவருடைய உறவினரான அருண் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது பாரதி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு பிறக்க இருக்கும் முதல் குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சுகப்பிரசவமாக பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு பெரியகுளம் டி.எஸ்.பி. கீதா தலைமையில் பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அன்னமயில், பெரியகுளம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மீனாட்சி தென்கரை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசார் மற்றும் ஆண் போலீசார் ஒன்றாக இணைந்து ஏட்டு பாரதிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

    இதில் பங்கேற்ற டி.எஸ்.பி. மற்றும் பெண் போலீசார் பாரதிக்கு நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகமிட்டு, வளையல் அணிவித்து, மலர் தூவி குழந்தை நலமுடன் பிறக்க வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் ஏற்பாடு செய்திருந்த 5 வகையான உணவு வகைகளை கர்ப்பிணி மற்றும் அவரது கணவர் இருவருக்கும் வழங்கினர். மேலும் போலீஸ் நிலையத்தில் உடன் பணியாற்றும் பெண் காவலருக்கு அனைத்து போலீசாரும் ஒன்று சேர்ந்து தாயுள்ளத்தோடும் சொந்த பந்தங்களாக கூடி நின்று வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • தோழிகளான சக பெண் காவலர்கள் சந்தனம், குங்குமம் இட்டு, கைநிறைய வளையல் போட்டு, சீர்வரிசை தட்டு, தாம்பூலம் கொடுத்தனர்.
    • வளைகாப்பு நிகழ்ச்சியில், வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ஆகியோரும் பங்கேற்று மோகனாவை வாழ்த்தினர்.

    வாழப்பாடி:

    சேலம் அருகே அயோத்தியாப்பட்டணம் அடுத்த பள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மோகனா (வயது 27). இவர் வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

    கர்ப்பிணியான இவரை மகிழ்விக்க, வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசார் ஒன்றிணைந்து வளைகாப்பு நடத்திட திட்டமிட்டனர்.

    அதன்படி, நேற்று காவலர் மோகனாவை வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். பின்பு அவருக்கு தோழிகளான சக பெண் காவலர்கள் சந்தனம், குங்குமம் இட்டு, கைநிறைய வளையல் போட்டு, சீர்வரிசை தட்டு, தாம்பூலம் கொடுத்தனர். இதையடுத்து மோகனாவுக்கு அறுசுவை விருந்து கொடுத்து மகிழ்ந்தனர்.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த மோகனா சக போலீசாருக்கு நன்றி தெரிவித்தார். இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில், வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ஆகியோரும் பங்கேற்று மோகனாவை வாழ்த்தினர்.

    பெண் காவலருக்கு போலீஸ் நிலையத்திலேயே, சக பெண் போலீசார் வளைகாப்பு நடத்திய நிகழ்வு, பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

    • ரமேஷ் குடும்பத்தினர் பைரவன் என்ற ஆண் நாய் மற்றும் பைரவி என்ற பெண் நாய் ஆகிய 2 நாய்களை செல்லமாக வளர்த்து வருகின்றனர்.
    • வளைகாப்பில் கலந்து கொண்ட உறவினர்கள் மொய் பணம் வைத்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் குச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தேன்மொழி (28). இவர்கள் கடந்த சில வருடங்களாக வீட்டில் நாய்களை வளர்த்து வருகின்றனர்.

    தற்போது ரமேஷ் குடும்பத்தினர் பைரவன் என்ற ஆண் நாய் மற்றும் பைரவி என்ற பெண் நாய் ஆகிய 2 நாய்களை செல்லமாக வளர்த்து வருகின்றனர். இதில் பெண் நாய் பைரவி கர்ப்பம் அடைந்தது. இதை அறிந்த ரமேஷ் குடும்பத்தினர், பைரவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தனர். அதன்படி, நேற்று பைரவிக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அருகில் இருந்த உறவினர்களும் வந்திருந்து வளைகாப்பில் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் வளையல், பூ, சந்தனம், குங்குமம் உள்ளிட்டவைகளை அணிவித்து பைரவிக்கு வளைகாப்பு நடத்தினர். மேலும் தக்காளி, எலுமிச்சை, புளி உள்பட 3 கலவை சாதம், இனிப்பு வகையில் கச்சாயம், கார வகையில் போண்டா, அப்பளம் உள்ளிட்டவைகளை தலைவாழை இலையில் வைத்து பரிமாறினர்.

    வளைகாப்பில் கலந்து கொண்ட உறவினர்கள் மொய் பணம் வைத்தனர். தங்கள் வீட்டு பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போல் நாய்க்கு வளைகாப்பு நடத்திய ரமேஷ் குடும்பத்தினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

    • சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    ஆரணி அருகே சேவூர் ஊராட்சிக்குட்பட்ட இ.பி.நகரில் தனியார் மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட அலுவலர் கந்தன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக ஆரணி எம்.பி. விஷ்ணு பிரசாத் திமுக மாவட்ட செயலாளர் தரணி வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணிகளுக்கு மேற்கு ஆரணி சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன், ஆரணி ஒன்றிய சேர்மன் கனிமொழி சுந்தர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் லலிதா சண்முக சுந்தரம், ஆகியோர் மாலை மற்றும் வலையல்களை அணிவித்தனர்.

    இதனையடுத்து மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் 350-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ.கள் சிவானந்தம் தயாநிதி மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, பொதுக்குழு உறுப்பினர் வெள்ளை கணேசன், நகர மன்ற தலைவர் ஏ.சி. மணி. ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மோகன், துரைமாமது, கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், ஒன்றிய குழு துணை சேர்மன் ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித், வட்டார மருத்துவ அலுவலர்கள் எம்நாத், சுரேஷ், பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×