search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு க ஸ்டாலின்"

    • 15 லட்சம் பெண்கள் ரேஷன் கடைகள் மூலம் பயன்பெற்று வந்தாலும் இத்திட்டத்தின் விதிமுறைகளின்படி குறைந்த அளவில் விண்ணப்பித்துள்ளனர்.
    • திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து பயனாளிகளை தேர்வு செய்ய 3 கட்டமாக சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் கடந்த மாதம் நடத்தப்பட்டன.

    சென்னையில் இத்திட்டம் மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்படுகிறது. 2 கட்டமாக ரேஷன் கடைகள் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியான பெண்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 1,727 சிறப்பு முகாம்கள் மூலம் 9 லட்சத்து 58 ஆயிரத்து 807 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15 லட்சம் பெண்கள் ரேஷன் கடைகள் மூலம் பயன்பெற்று வந்தாலும் இத்திட்டத்தின் விதிமுறைகளின்படி குறைந்த அளவில் விண்ணப்பித்துள்ளனர்.

    ஏற்கனவே வேறு திட்டங்களில் பயன்பெறக் கூடிய பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டதால் அவர்கள் விண்ணப்பிக்கவில்லை. மொத்தமுள்ள 1428 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு களஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

    பெறப்பட்ட விண்ணப்பங்களில் முறையான ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள் தெரிவிக்காமல் இருந்த குடும்ப தலைவிகள் வீடுகளில் மட்டும் அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதியானவர்களை பயனாளிகள் பட்டியலில் சேர்த்தனர்.

    பெறப்பட்ட மனுக்களில் எல்லாவற்றையும் ஆய்வு செய்யாமல் சந்தேகமாக இருந்த, உரிய தகவல் இல்லாத விண்ணப்பதாரர்களின் வீடுகளில் மட்டும் நேரில் சென்று ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கு உள்ளதா? அவை நடப்பில் செயல்பாட்டில் உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று முடிந்துள்ளது.

    விண்ணப்பித்த பெரும்பாலான பெண்களின் வங்கி கணக்கு முறையாக இருந்ததால் எவ்வித பிரச்சினையும் எழவில்லை. அதன் அடிப்படையில் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு தனி ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுகிறது. பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சி பகுதியில் 9 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி உடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது வங்கி கணக்கில் மாதம் ரூ.1000 இந்த மாதத்தில் இருந்து வழங்கப்படும்.

    வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார். சென்னையில் நடக்கும் விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைக்கின்றனர்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 9 லட்சத் திற்கும் மேலானவர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்றனர்.

    • சட்டம் நிறைவேறிவிட்டால் தி.மு.க.வுக்கு மட்டுமல்ல எந்த அரசியல் கட்சியும் நாட்டில் செயல்பட முடியாது.
    • இப்படிப்பட்ட கொடுமையான ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க வர இருக்கிற தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற நாம் இன்றைக்கே தயாராக இருக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை திருவொற்றியூரில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் மனோகரன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மகேஷ்குமார்-ரம்யா திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

    இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சி என்ன செய்திருக்கிறது என்று சொன்னால், திடீரென்று பாராளுமன்றத்தை கூட்டப் போகிறோம் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

    ஆனால் பாராளுமன்றத்தை இப்போது கூட்ட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டுள்ளது என்று சொன்னால், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற ஒரு நிலையை ஏற்படுத்துவதற்காக சில முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த ஒரே நாடு ஒரே தேர்தல் அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு குழு அமைத்துள்ளனர். அந்த குழுவுக்கு யார் தலைவர் என்றால், இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதியை தலைவராக நியமித்து இந்திய நாட்டின் ஜனாதிபதி என்பவர் ஒரு பொதுவானவர். அவர் பதவியில் இருந்து விலகினாலும் அவர் அரசியலுக்கு வரக் கூடாது அல்லது அரசியல் சம்மந்தப்பட்ட எந்த பிரச்சினையிலும் அவர் தலையிடுவதற்கு நியாயம் கிடையாது. அது தான் மரபு. அவர் ஒரு பொதுவானவராக மாறி விடுகிறார்.

    ஆனால் அதையெல்லாம் இன்றைக்கு கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி, எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவரை நியமித்து அதற்கு பிறகு அதிலே சில உறுப்பினர்களை நியமித்து உள்ளனர்.

    அந்த உறுப்பினர்களில் எல்லா கட்சிகளையும் கலந்து கேட்டு நியமித்தார்களா? என்றால் அதுவும் கிடையாது.

    தி.மு.க. இன்று நாடாளுமன்றத்தில் 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த தி.மு.க.வுக்கு இதில் பிரதிநிதி இருக்கிறதா என்றால் கிடையாது. ஆகவே தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என்பதற்காக சிலரை போட்டு அவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சர்வாதிகாரத்தோடு அந்த கமிட்டியை நியமித்து ஒரு சதித்திட்டத்தை ஏற்படுத்த இந்த முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

    அதை இன்றைக்கு தமிழ் நாட்டில் இருக்கக் கூடிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. ஆதரிக்கிறது. அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது அந்த கொள்கையை எதிர்த்தார்கள். இப்போது தி.மு.க. ஆளும் கட்சியாக இருக்கிறபோது அதே அ.தி.மு.க. அதை ஆதரிக்கிறது.

    இதுபற்றி என்ன நினைக்கிறோம் என்றால், ஒரு கோடாரியை எடுத்து ஒரு ஆட்டுத் தலையை வைத்து வெட்டி பலிகடா செய்வார்கள். அந்த மாதிரி தான் பலிகடா ஆக போகிறோம் என ஆட்டுக்கு தெரியாது. அதேபோல் அ.தி.மு.க. பலி கடா ஆகப்போகிறது.

    இந்த சட்டம் நிறைவேறிவிட்டால் தி.மு.க.வுக்கு மட்டுமல்ல எந்த அரசியல் கட்சியும் நாட்டில் செயல்பட முடியாது. அரசியல் கட்சி நடத்த முடியாது. 'ஒன் மேன் ஷோ' ஆகிவிடும்.

    ஒரே நாடு ஒரே அதிபர் என அறிவித்து விட்டு சென்று விடுவார்கள். ஆகவே தேர்தலே கிடையாது. ஒரே தேர்தல் தான் வைக்கப்போகிறோம் என்கிறார்கள்.

    நான் கேட்கிறேன். 2021-ல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2½ வருடம் ஆகிறது இன்னும் 2½ வருடம் ஆட்சி இருக்கிறது.

    இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் வருகிறபோது, ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்றால் இந்த ஆட்சியை கலைத்து விடுவீர்களா?

    பக்கத்தில் உள்ள கேரள மாநிலம் அதேபோல் மேற்கு வங்கம், அங்கெல்லாம் கலைத்து விடுவீர்களா? அவர்களுக்கும் இன்னும் 2½ வருடத்துக்கு மேல் ஆட்சி இருக்கிறதே?

    ஏன் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கர்நாடகா மாநில தேர்தல். அங்கு 40 சதவீதம் ஊழல் என்ற குற்றச்சாட்டில், பெயரெடுத்த பி.ஜே.பி. படுதோல்வி அடைந்து அங்கே காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. அந்த ஆட்சியையும் கலைத்து விடுவீர்களா?

    சரி ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துடன் சட்ட மன்றத்துக்கும், தேர்தலை வைக்கும்போது மெஜாரிட்டி வராமல் போகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆட்சி அமைக்க முடியாவிட்டால், அல்லது கவிழ்ந்துவிட்டால் அப்போது என்ன செய்வீர்கள்? மறுபடியும் அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரும் வரை தேர்தல் நடத்தாமல் ஜனாதிபதி ஆட்சி நடத்தப்போகிறீர்களா?

    இப்படி ஒரு அசிங்கமான, கேவலமான, ஒரு சதித் திட்டத்தை தீட்டி, அதிபராக தான் இருக்க வேண்டும் என்பதற்காக இன்றைக்கு இந்த முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்களே தவிர நாட்டைப் பற்றி இவர்கள் கவலைப்பட வில்லை. இதற்கு தேர்தல் செலவை குறைக்க வேண்டும் என்று ஒரு காரணத்தை சொல்கிறார்கள். நீங்கள் தேர்தல் செலவை குறைக்கிறீர்களோ இல்லையோ, முதலில் நீங்கள் கொள்ளையடிப்பதை குறையுங்கள்.

    சி.ஏ.ஜி. ரிப்போர்ட் என்ன கூறி உள்ளது? 7½ லட்சம் கோடி நெடுஞ்சாலையில் ரோடு போட்டதில், டோல்கேட் கட்டணம் வசூல், இப்படி பல நிலைகளில் கோடி கோடியாக கொள்ளையடித்து, அதுவும் ஆதாரங்களோடு சி.ஏ.ஜி. அறிக்கை வெளியிட்டு உள்ளது.

    அதைப்பற்றி கவலைப்படாமல் அதற்கு இதுவரை பதில் சொல்ல முடியாத நிலையில், இன்று ஒரு பிரதமர் இருக்கிறார் என்றால், இப்படிப்பட்ட கொடுமையான ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க வர இருக்கிற தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற நாம் இன்றைக்கே தயாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ரூ.13 கோடி மதிப்பில் 460 மீட்டர் அளவுள்ள ஒரு ரோப் கார் வசதி ஏற்படுத்தி தர திட்டமிடப்பட்டுள்ளது.
    • வரலாற்றிலேயே 2 ஆண்டுகளில் 922 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது திராவிட மாடல் ஆட்சியில் தான்.

    கோவை:

    கோவை கணுவாய் அடுத்துள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வந்தார்.

    அவர் கோவிலுக்கு மலைஏறி சென்று சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவிலை சுற்றி பார்த்து ஆய்வு செய்தார்.

    மேலும் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் இது தொடர்பான தகவல்களையும் கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க. அரசு அமைந்தவுடன் தமிழகத்தில் உள்ள மலைக்கோவில்களில் பக்தர்கள் வசதிக்காகவும், முதியோர்கள் மற்றும் உடல் உபாதை உள்ள பக்தர்களின் வசதிக்காகவும் ரோப்கார் மற்றும் தானியங்கி லிப்ட் அமைத்து தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன்படி இன்று கோவை அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆய்வு மேற்கொண்டோம். 560 படிகள் கொண்ட இந்த மலைக்கோவிலுக்கு ரூ.13 கோடி மதிப்பில் 460 மீட்டர் அளவுள்ள ஒரு ரோப் கார் வசதி ஏற்படுத்தி தர திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று ஏற்கனவே ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. அப்போது சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தியக்கூறுக்கான அறிக்கைகள் வந்த பின்னர் ரோப்கார் அமைப்பதற்கான வேலைகள் தொடங்கும்.

    இதேபோன்று திருக்கழுக்குன்றம், திருநீர்மலை, இடும்பன் மலை, திருப்பரங்குன்றத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவில்களுக்கும் ரோப்கார் வசதி ஏற்படுத்தி தர உள்ளோம்.

    கரூர் அய்யர்மலை, சோழிங்கநல்லூர் கோவில்களில் ரோப் கார் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

    கோவை மருதமலையில் தானியங்கி லிப்ட் அமைப்பதற்கான பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது. இதுபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மலை கோவில்களிலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்பேரில் அந்தந்த பகுதிகளில் மலைக்கோவில்களில் அங்குள்ள அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.

    தி.மு.க ஆட்சி அமைந்த பின்னர் கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 922 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. வரலாற்றிலேயே 2 ஆண்டுகளில் 922 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது திராவிட மாடல் ஆட்சியில் தான்.

    அதேபோன்று தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ.5135 கோடி மதிப்பிலான 5335 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. அரசானது இறையன்பர்களுக்கு இறைபற்று ள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியான ஆட்சியாக உள்ளது.

    விலங்குகள் அதிகம் நடமாடும் கோவில் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு காடுகளில் இருந்து வெளியே வராதபடி முள்வேலிகள் அமைக்க ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் பேரூரில் நடந்த நொய்யல் திருவிழாவில் பங்கேற்றார். பின்னர் தண்டுமாரியம்மன், லட்சுமி நரசிம்மர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கலெக்டர் கிராந்திகுமார் பாடி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    • டாக்டர் மஸ்தானின் மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் இன்று மாலை நடைபெற இருந்த நிலையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
    • என் மீது தனி மரியாதையும், பற்றும் பாசமும் மிகுந்தவராகவும், என்றைக்கும் இயக்க உணர்வை நெஞ்சில் ஏந்தி பணியாற்றிய செயல்வீரர் என்று முதலமைச்சர் கூறினார்.

    சென்னை:

    தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளரும், தமிழக சிறுபான்மை வாரிய துணைத் தலைவருமான முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் நேற்றிரவு சென்னையில் இருந்து காரில் கூடுவாஞ்சேரி அருகே சென்று கொண்டிருந்தார். அவரது உறவினர் காரை ஓட்டிச் சென்றதாக தெரிகிறது.

    அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், நெஞ்சு வலி ஏற்பட்டு வலிப்பு வந்ததாக கூறி அவரை கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அதற்குள் மஸ்தான் பரிதாபமாக இறந்துவிட்டார்.

    அவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரிய வந்ததால் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    டாக்டர் மஸ்தான் உடல் திருவல்லிக்கேணி பாலாஜி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப் பட்டது.

    தகவல் அறிந்ததும் தி.மு.க. நிர்வாகிகள் விரைந்து சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு உள்பட ஏராளமானோர் மஸ்தான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    டாக்டர் மஸ்தானின் மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் இன்று மாலை நடைபெற இருந்த நிலையில் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மஸ்தான் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சந்தேகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான டாக்டர் மஸ்தான் மறைவெய்தினார் என்ற துயர்மிகு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என் மீது தனி மரியாதையும், பற்றும் பாசமும் மிகுந்தவராக தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பயணித்து வந்த டாக்டர் மஸ்தான் என்றைக்கும் இயக்க உணர்வை நெஞ்சில் ஏந்தி பணியாற்றிய செயல்வீரர்.

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் செயலாளராக - அந்த அணியின் பணி சிறக்க தன்னை முழு மூச்சாக அர்ப்பணித்துக் கொண்டவர். இப்தார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து மிகச் சிறப்புற நடத்துவதில் அவருக்கு நிகர் அவரே.

    சிறுபான்மையினர் நலன் மட்டுமின்றி, அனைத்துச் சமுதாய நலனிற்காகவும் முன்னின்று செயலாற்றும் ஒப்பற்ற ஒரு களப்பணியாளரை இன்றைக்கு நான் இழந்து தவிக்கிறேன்.

    அண்ணா அறிவாலயம் செல்கின்ற நேரங்களில் எல்லாம் அங்கே நின்று என்னை இன்முகத்துடன் வரவேற்கும் அவர் சில நாட்களுக்கு முன்புதான் என்னை இல்லத்தில் நேரில் சந்தித்து தனது மகனின் நிச்சயதார்த்தத்திற்கு அன்போடு அழைத்தார். மனித நேயராக, சமூக சேவகராக - தீவிர கழகத் தொண்டராக பணியாற்றிய டாக்டர் மஸ்தானின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - கழகத்தினருக்கும் - சிறு பான்மையினச் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அனுதாபத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா.
    • இவரின் சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார்.

    இதையடுத்து பாரதியாரின் நினைவு நாளையொட்டி, இளையராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''எல்லா வருடங்களும் எனக்கு இந்த நாளில் பாரதியாரின் நினைவு வரும். அது என்னை வருத்தும். என்னை பாரதியாரோடு ஒப்பிட்டு பார்த்து, 'நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? என்று அவன் தன்னை தானே நொந்துகொண்டானில்லையா? 'நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?' தன்னை நல்லதோரு வீணையாகவும் அவனை உருவாக்கிய அம்மையே சக்தியே என்னை நலங்கெட புழுதியில் ஏறிந்துவிடுவாயோ என அவனின் நொந்தல் என்னை வருத்தும்.


    இளையராஜா

    அவருக்கு ஆறுதல் சொல்லும் வகையில் என் பட பாடலில் நான் பதில் சொல்லியிருக்கிறேன். 'உன் குத்தமா என் குத்தமா' பாடலில் வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசையுண்டு என்று பாரதிக்கு நான் ஆறுதல் சொல்லியிருக்கிறேன். பாரதி கலங்குவதை என்னால் தாங்க முடியவில்லை. இன்று நதிகள் இணைப்பு திட்டத்தைப் பற்றி நாமெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவன் சிறுவயதில் நதிகள் இணைப்பு திட்டத்தை அப்போதே கற்பனை செய்திருக்கிறான்.

    அவனை நினைத்து நாம் மரியாதையும், வணக்கமும், அஞ்சலியும் செலுத்துவது மாபெரும் ஒப்பற்ற விஷயம். பாரதியாரின் நினைவு நாளை நினைவில் கொண்டு தமிழக அரசு இந்த நாளை அவரின் பெயரால் அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. தமிழக அரசு வாழ்க.. மு.க.ஸ்டாலின் வாழ்க..'' என்று தெரிவித்துள்ளார்.


    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கிறது.
    • இந்த போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

    இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் போட்டியில் 180-க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து 2.500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இதையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிக்கான விளம்பரம் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். அந்த விளம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இதற்கான படப்பிடிப்பு சென்னை நேப்பியர் பாலத்தில் நடைபெற்றுள்ளது.


    ஏ. ஆர். ரஹ்மான்

    முதலமைச்சரை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த விளம்பரத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதைத்தொடர்ந்து, நேப்பியர் பாலத்தில் விளம்பர படப்பிடிப்பிற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×