search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை கலைத்து விடுவீர்களா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
    X

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை கலைத்து விடுவீர்களா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

    • சட்டம் நிறைவேறிவிட்டால் தி.மு.க.வுக்கு மட்டுமல்ல எந்த அரசியல் கட்சியும் நாட்டில் செயல்பட முடியாது.
    • இப்படிப்பட்ட கொடுமையான ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க வர இருக்கிற தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற நாம் இன்றைக்கே தயாராக இருக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை திருவொற்றியூரில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் மனோகரன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மகேஷ்குமார்-ரம்யா திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

    இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சி என்ன செய்திருக்கிறது என்று சொன்னால், திடீரென்று பாராளுமன்றத்தை கூட்டப் போகிறோம் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

    ஆனால் பாராளுமன்றத்தை இப்போது கூட்ட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டுள்ளது என்று சொன்னால், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற ஒரு நிலையை ஏற்படுத்துவதற்காக சில முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த ஒரே நாடு ஒரே தேர்தல் அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு குழு அமைத்துள்ளனர். அந்த குழுவுக்கு யார் தலைவர் என்றால், இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதியை தலைவராக நியமித்து இந்திய நாட்டின் ஜனாதிபதி என்பவர் ஒரு பொதுவானவர். அவர் பதவியில் இருந்து விலகினாலும் அவர் அரசியலுக்கு வரக் கூடாது அல்லது அரசியல் சம்மந்தப்பட்ட எந்த பிரச்சினையிலும் அவர் தலையிடுவதற்கு நியாயம் கிடையாது. அது தான் மரபு. அவர் ஒரு பொதுவானவராக மாறி விடுகிறார்.

    ஆனால் அதையெல்லாம் இன்றைக்கு கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி, எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவரை நியமித்து அதற்கு பிறகு அதிலே சில உறுப்பினர்களை நியமித்து உள்ளனர்.

    அந்த உறுப்பினர்களில் எல்லா கட்சிகளையும் கலந்து கேட்டு நியமித்தார்களா? என்றால் அதுவும் கிடையாது.

    தி.மு.க. இன்று நாடாளுமன்றத்தில் 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த தி.மு.க.வுக்கு இதில் பிரதிநிதி இருக்கிறதா என்றால் கிடையாது. ஆகவே தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என்பதற்காக சிலரை போட்டு அவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சர்வாதிகாரத்தோடு அந்த கமிட்டியை நியமித்து ஒரு சதித்திட்டத்தை ஏற்படுத்த இந்த முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

    அதை இன்றைக்கு தமிழ் நாட்டில் இருக்கக் கூடிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. ஆதரிக்கிறது. அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது அந்த கொள்கையை எதிர்த்தார்கள். இப்போது தி.மு.க. ஆளும் கட்சியாக இருக்கிறபோது அதே அ.தி.மு.க. அதை ஆதரிக்கிறது.

    இதுபற்றி என்ன நினைக்கிறோம் என்றால், ஒரு கோடாரியை எடுத்து ஒரு ஆட்டுத் தலையை வைத்து வெட்டி பலிகடா செய்வார்கள். அந்த மாதிரி தான் பலிகடா ஆக போகிறோம் என ஆட்டுக்கு தெரியாது. அதேபோல் அ.தி.மு.க. பலி கடா ஆகப்போகிறது.

    இந்த சட்டம் நிறைவேறிவிட்டால் தி.மு.க.வுக்கு மட்டுமல்ல எந்த அரசியல் கட்சியும் நாட்டில் செயல்பட முடியாது. அரசியல் கட்சி நடத்த முடியாது. 'ஒன் மேன் ஷோ' ஆகிவிடும்.

    ஒரே நாடு ஒரே அதிபர் என அறிவித்து விட்டு சென்று விடுவார்கள். ஆகவே தேர்தலே கிடையாது. ஒரே தேர்தல் தான் வைக்கப்போகிறோம் என்கிறார்கள்.

    நான் கேட்கிறேன். 2021-ல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2½ வருடம் ஆகிறது இன்னும் 2½ வருடம் ஆட்சி இருக்கிறது.

    இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் வருகிறபோது, ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்றால் இந்த ஆட்சியை கலைத்து விடுவீர்களா?

    பக்கத்தில் உள்ள கேரள மாநிலம் அதேபோல் மேற்கு வங்கம், அங்கெல்லாம் கலைத்து விடுவீர்களா? அவர்களுக்கும் இன்னும் 2½ வருடத்துக்கு மேல் ஆட்சி இருக்கிறதே?

    ஏன் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கர்நாடகா மாநில தேர்தல். அங்கு 40 சதவீதம் ஊழல் என்ற குற்றச்சாட்டில், பெயரெடுத்த பி.ஜே.பி. படுதோல்வி அடைந்து அங்கே காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. அந்த ஆட்சியையும் கலைத்து விடுவீர்களா?

    சரி ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துடன் சட்ட மன்றத்துக்கும், தேர்தலை வைக்கும்போது மெஜாரிட்டி வராமல் போகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆட்சி அமைக்க முடியாவிட்டால், அல்லது கவிழ்ந்துவிட்டால் அப்போது என்ன செய்வீர்கள்? மறுபடியும் அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரும் வரை தேர்தல் நடத்தாமல் ஜனாதிபதி ஆட்சி நடத்தப்போகிறீர்களா?

    இப்படி ஒரு அசிங்கமான, கேவலமான, ஒரு சதித் திட்டத்தை தீட்டி, அதிபராக தான் இருக்க வேண்டும் என்பதற்காக இன்றைக்கு இந்த முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்களே தவிர நாட்டைப் பற்றி இவர்கள் கவலைப்பட வில்லை. இதற்கு தேர்தல் செலவை குறைக்க வேண்டும் என்று ஒரு காரணத்தை சொல்கிறார்கள். நீங்கள் தேர்தல் செலவை குறைக்கிறீர்களோ இல்லையோ, முதலில் நீங்கள் கொள்ளையடிப்பதை குறையுங்கள்.

    சி.ஏ.ஜி. ரிப்போர்ட் என்ன கூறி உள்ளது? 7½ லட்சம் கோடி நெடுஞ்சாலையில் ரோடு போட்டதில், டோல்கேட் கட்டணம் வசூல், இப்படி பல நிலைகளில் கோடி கோடியாக கொள்ளையடித்து, அதுவும் ஆதாரங்களோடு சி.ஏ.ஜி. அறிக்கை வெளியிட்டு உள்ளது.

    அதைப்பற்றி கவலைப்படாமல் அதற்கு இதுவரை பதில் சொல்ல முடியாத நிலையில், இன்று ஒரு பிரதமர் இருக்கிறார் என்றால், இப்படிப்பட்ட கொடுமையான ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க வர இருக்கிற தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற நாம் இன்றைக்கே தயாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×