search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய பட்ஜெட்"

    • மத்திய பட்ஜெட் அறிவிப்புக்கு ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் சார்பில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
    • ரெயில்வே போக்கு வரத்து மேம்பாட்டுக்கென ரூ. 2.40 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்திய தனி நபர் வருமான வரி வரம்பு 3 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது வரவேற்கத்தக்கது. ரூ. 7 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வரி செலுத்த தேவை யில்லை என்ற அறி விப்பு பாராட்டத்தக்கது.

    நாடெங்கும் 157 நர்சிங் கல்லூரிகள் நிறுவ உத் தேசித்துள்ளதும், விவசாய தொழில் முனை வோரை ஊக்குவிக்க தனி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதும், மீன் வளத்துறையை மேம்படுத்த ரூ.6000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ரெயில்வே போக்கு வரத்து மேம்பாட்டுக்கென ரூ. 2.40 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டுள்ளதும், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.79,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதும் பாராட்ட தகுந்த அம்சங்கள். மின்சார வாகனங்களுக்கு பொருத்தப்படும் லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி குறைப்பை வரவேற்கிறோம்.

    மிகப்பழைய அரசு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாக னங்க ளுக்கு மாற்றாக புதிய வாகனங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு, உள்நாட்டு விமான போக்குவரத்தை மேம்படுத்த 50 புதிய விமான நிலையங்கள் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது சிறப்பான அம்சம்.

    இப்படி பல நல்ல அம்சங்களை கொண்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு மக்கள் பெரிதும் எதிர்பார்த்த சேது கால்வாய் திட்டம் பற்றி ஒரு வரி கூட இல்லாதது தான் ஏமாற்றம் அளிக்கிறது. பொதுவாக இந்த பட்ஜெட் வரவேற்கத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனைத்து தரப்பினருக்கும் பட்ஜெட்டில் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
    • விவசாயத்துறையை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது.

    பெங்களூரு

    கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மத்திய பட்ஜெட் குறித்து பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசின் தவறான ஆட்சி நிர்வாகம் மற்றும் கொரோனா பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. நாட்டின் முதுகெலும்பு என்று நாம் போற்றும் விவசாயிகள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வேலையின்மை அதிகரித்துவிட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் விவசாயத்துறையை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது.

    அதாவது விவசாயத்துறைக்கு ரூ.8 ஆயிரத்து 468 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. விளைபொருட்களுக்கு ஆதரவு விலை, அறிவியலுக்கு மாறான பயிர் காப்பீட்டு திட்டம், வெள்ளம், வறட்சி நிவாரண பணிகளுக்கு நிதி பற்றாக்குறை போன்றவை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. விவசாயிகளின் வருவாயை 2 மடங்காக அதிகரிப்பதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கவில்லை.

    பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ.23 ஆயிரம் கோடி தேவை. ஆனால் மத்திய அரசு ரூ.5,300 கோடி வழங்குவதாக கூறியுள்ளது. இதில் 40 சதவீத கமிஷனை கழித்தால் ரூ.3 ஆயிரம் கோடி தான் கிடைக்கும். மேலும் பத்ரா திட்டம் குறித்து கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு முடிவடையும் வரை இந்த நிதியை செலவு செய்ய முடியாது. உணவு மானியம், நரேகா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மானியம் குறைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை.மத்திய அரசு கர்நாடகத்தை முழுமையாக நிராகரித்துவிட்டது.

    நாட்டின் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்பது இந்த பட்ஜெட் காட்டுகிறது. இது ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், "மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்த திட்டங்களும் இல்லை. ஆதரவு விலை பற்றி கூறவில்லை. சிறுதானியங்களில் ராகியும் ஒன்று என்று கூறியுள்ளனர். அரசியல் நோக்கத்தில் தேர்தலை மனதில் கொண்டு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது" என்றார்.

    கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கூறும்போது, "மத்திய பட்ஜெட் வளர்ச்சியை மையமாக வைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பத்ரா திட்டத்திற்கு ரூ.5,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பிறகும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரெயில்வே துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நடுத்தர குடும்பத்தினருக்கு வருமான வரியில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

    ஜனதா தளம் (எஸ்) மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி கூறுகையில், "பத்ரா திட்டத்திற்கு ரூ.5,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை தேசிய திட்டமாக அறிவித்து விரைவாக பணிகளை தொடங்க வேண்டும். இப்போது எந்த திட்டத்தை அறிவித்தாலும், அது தேர்தலுக்கு பிறகே அமலுக்கு வரும். இந்த விஷயத்தில் அடுத்து கர்நாடகத்தில் புதிதாக அமையும் அரசின் பங்கும் முக்கியமானது. சில ரெயில்வே திட்டங்கள் கடந்த 25 ஆண்டுகளாக முடங்கி கிடக்கின்றன. அதை நிறைவேற்ற மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை. பா.ஜனதா தலைவர்கள் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு சென்று வளர்ச்சி திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை அறிவிக்கிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு அதை மறந்து விடுகிறார்கள். மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது" என்றார்.

    முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டர் பதிவில், "மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட், எதிர்காலத்தை மனதில் வைத்தும், ரூ.380 லட்சம் கோடி (5 டிரில்லியன் டாலர்) பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்லும் வகையிலும் அமைந்துள்ளது. நடுத்தர மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் வருமான வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே போல் அனைத்து தரப்பினருக்கும் பட்ஜெட்டில் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • உள்கட்டமைப்பு வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.
    • உள்கட்டமைப்புக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    மும்பை :

    மத்திய அரசின் பட்ஜெட்டை நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கருத்து கூறியதாவது:-

    விவசாயிகள், பழங்குடியின மக்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்ட சமுதாயத்தின் அனைத்து பிரிவினரின் நலன்களையும் கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளது.

    மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த பட்ஜெட் அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும்.

    ரூ.7 லட்சம் வரையிலான வருமானவரி விலக்கு கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்திற்கு உதவும். நடுத்தர மற்றும் கீழ்தட்டு நடுத்தர வர்க்கத்தினர் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற இந்த பட்ஜெட் உதவும்.

    முன்பு எப்போதும் இல்லாத வகையில் உள்கட்டமைப்புக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது உள்கட்டமைப்பு வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதேபோல மத்திய மந்திரி ராவ்சாகேப் தன்வே கூறுகையில், "பா.ஜனதா தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் எப்போதும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த பட்ஜெட்டும் அதையே செய்கிறது" என்றார்.

    • காலாவதியான வாகனங்களை அழிக்கும் திட்டம் பற்றி பேசியபோது, தவறான வார்த்தையை உச்சரித்தார்.
    • ஆளுங்கட்சி தரப்பில் பலத்த சிரிப்பொலி எழுந்தது.

    புதுடெல்லி :

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், பழமையான, காலாவதியான வாகனங்களை அழிக்கும் திட்டம் பற்றி பேசியபோது, தவறான வார்த்தையை உச்சரித்தார்.

    'மாசு உண்டாக்கும் பழமையான வாகனங்களை மாற்றுவது தொடர்ந்து கடைபிடிக்கப்படும் கொள்கை' என்று கூற நினைத்த அவர், 'பழமையான அரசியலை (கட்சியை) மாற்றுவது' என்று தொடங்கினார்.

    உடனே ஆளுங்கட்சி தரப்பில் பலத்த சிரிப்பொலி எழுந்தது. பழமையான அரசியல் கட்சியான காங்கிரசுக்கு மாற்றாக பா.ஜனதா வலிமையான கட்சியாக உருவெடுத்து இருப்பதாக அவர் உள்ளர்த்தத்துடன் பேசியதாக கருதி, ஆளுங்கட்சியினர் சிரித்தனர்.

    நிர்மலா சீதாராமன் உடனே சுதாரித்துக்கொண்டு, ''மாசு உண்டாக்கும் பழமையான வாகனங்களை மாற்றுவது தொடர்ச்சியான கொள்கை'' என்று திருத்திக்கொண்டார்.

    மத்திய அரசின் பழமையான வாகனங்களை அழிக்க போதிய நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.

    • கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசு ஜன்தன் திட்டத்தை தொடங்கியது.
    • கிராமப்புற பெண்களை 1 லட்சம் சுய உதவிக்குழுக்களாக திரட்டி குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது

    புதுடெல்லி :

    நாட்டில் உள்ள அனைத்து பிரிவினரும் வங்கி கணக்குகளை கையாளும் நோக்கில் கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசு ஜன்தன் திட்டத்தை தொடங்கியது.

    பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஜன்தன் திட்டம் குறித்தும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'ஜன்தன் திட்டத்தின் கீழ் இதுவரை 47.8 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் கிராமப்புற பெண்களை 1 லட்சம் சுய உதவிக்குழுக்களாக திரட்டி குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது' என தெரிவித்தார்.

    பசுமை வளர்ச்சி முயற்சிகள் கார்பன் தீவிரத்தை குறைக்கவும், பசுமையான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

    • 2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
    • பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் குறித்து அவர் விரிவாக விளக்கினார்.

    புதுடெல்லி :

    பாராளுமன்றத்தில் 2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.

    இதில் பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் குறித்து அவர் விரிவாக விளக்கினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கொரோனா காலத்தில் 80 கோடி ஏழைகளுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இதன் மூலம் இந்த தொற்றுநோய் காலத்தில் யாரும் பசியாக இருக்கவில்லை என்பதை அரசு உறுதி செய்துள்ளது.

    பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை ரூ.2 லட்சம் கோடி செலவில் ஜனவரி 1 முதல் அரசு செயல்படுத்துகிறது.

    பயிர் மற்றும் கால்நடை உற்பத்தியைப் பெருக்க, விவசாயிகளுக்கான விளை பொருட்களுக்கு விலை ஆதரவு மற்றும் பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகளை நோக்கி திரும்பும் நடவடிக்கைகளின் பின்னணியில், விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளின் வளர்ச்சி பல ஆண்டுகளாக உற்சாகமாக உள்ளது.

    வேளாண் துறையில் தனியார் முதலீடு நிதியாண்டில் 9.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

    • நண்பர்கள் கால பட்ஜெட்டில், வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமில்லை.
    • இந்தியாவின் எதிர்காலத்தை கட்டமைக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை.

    புதுடெல்லி:

    மத்திய பட்ஜெட்டில் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க எந்த திட்டமும் இல்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்த நாட்களை மத்திய அரசு அமிர்த காலம் என அழைத்து வருகிறது. அமிர்த காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த முதல் பட்ஜெட் நாட்டை வளர்ந்த நாடாக்குவதற்கு அடித்தளமிட்டு உள்ளதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.

    ஆனால் மத்திய அரசு தனது கார்பரேட் நண்பர்களுக்கு சலுகைகளை வாரி வழங்குவதாக குற்றம் சாட்டி இந்த காலத்தை 'நண்பர்கள் காலம்' என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அந்தவகையில் இந்த பட்ஜெட்டை 'நண்பர்கள் கால பட்ஜெட்' என அவர் குறைகூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    நண்பர்கள் கால பட்ஜெட்டில், வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமில்லை. விலைவாசியை கட்டுப்படுத்த திட்டமில்லை. சமத்துவமின்மையைத் தடுக்கும் நோக்கம் இல்லை.

    1 சதவீத பணக்காரர்களுக்கு 40 சதவீத செல்வம் உள்ளது. 50 சதவீத ஏழைகள் ஊதியத்தின் 64 சதவீதத்தை ஜி.எஸ்.டி.யாக செலுத்துகிறார்கள். 42 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர்.

    இருந்தாலும் பிரதமர் மோடிக்கு கவலை இல்லை.

    இந்தியாவின் எதிர்காலத்தை கட்டமைக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்பதை இந்த பட்ஜெட் நிரூபிக்கிறது.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    • மத்திய பட்ஜெட்டில் மறைமுக வரிகள் குறைக்கப்படவில்லை.
    • பெட்ரோல், டீசல், சிமெண்டு, உரங்கள் போன்றவற்றின் விலைகளில் குறைப்பு இல்லை.

    புதுடெல்லி:

    மத்திய பட்ஜெட் பெரும்பாலான மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துள்ளதாக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 'மத்திய பட்ஜெட்டில் மறைமுக வரிகள் குறைக்கப்படவில்லை. கொடூரமான மற்றும் பகுத்தறிவற்ற ஜி.எஸ்.டி விகிதங்களில் எந்தக் குறைப்பும் இல்லை. பெட்ரோல், டீசல், சிமெண்டு, உரங்கள் போன்றவற்றின் விலைகளில் குறைப்பு இல்லை. மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படாத பல கூடுதல் கட்டணம் மற்றும் செஸ்களில் எந்தக் குறைப்பும் இல்லை' என குற்றம் சாட்டினார்.

    மேலும் அவர், 'இந்த பட்ஜெட்டால் யாருக்கு லாபம்? நிச்சயமாக ஏழைகளுக்கு அல்ல. வேலை தேடும் இளைஞர்கள், வேலை இழந்தவர்கள், பெரும்பகுதி வரி செலுத்துவோர், இல்லத்தரசிகள் ஆகியோருக்கும் அல்ல. மொத்தத்தில் பெரும்பான்மையாக இருக்கும் மக்களுக்கானது அல்ல' என தெரிவித்தார்.

    • பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கப் பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை வாங்கவும் அனுமதிக்க வேண்டும்.
    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூடநிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

    சென்னை:

    மத்திய பட்ஜெட் அறிவிப்பு குறித்து தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். வழக்கம் போல மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2023-24-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த விதத் திட்ட அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூடநிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனை அளிக்கிறது. மத்திய பட்ஜெட்டில் "தனிநபர் வருமான வரியில் கொண்டு வந்துள்ள மாற்றம், இருக்கின்ற 157 மருத்துவக் கல்லூரிகளில் புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, மாநிலங்களுக்கு மூலதனச் செலவினங்களுக்காக வட்டியில்லாக் கடன், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்களாக இருப்பது ஆறுதல் என்றாலும், தனிநபர் வருமான வரி மாற்றங்கள் வெறும் New regime (புதிய முறைக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது ஒரு சாராருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருக்கிறது. ஆகவே இந்த மாற்றங்களை, Old regime (பழைய முறைக்கும்) அறிமுகப்படுத்த வேண்டும்.

    ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவதைக் குறைந்தது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் கோரிக்கை ஏற்கப்படாததும், தேர்தல் நடைபெறப் போகும் மாநிலங்களை மட்டுமே குறிவைத்து வளர்ச்சித் திட்டங்கள், நிதி உதவிகள் அறிவிக்கப்படுவதும் மத்திய பட்ஜெட் அனைத்து மாநிலத்திற்குமானது என்பதிலிருந்து முற்றிலும் விலகிச் செல்வதைக் காட்டுகிறது.

    மாநிலங்களுக்கு மூலதனக் கடன் வழங்குவதற்குப் பல்வேறு நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களுக்கு முழுப் பயனும் வராது. இது, மாநிலங்களுக்கு வழங்கப்படும் கடன் என்பதால், எந்த ஒரு நிபந்தனையுமின்றி மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இத்திட்டம் வழிவகை செய்ய வேண்டுமே தவிர, இப்படி பல நிபந்தனைகளை விதித்துப் பயனைத் தடுப்பது முறையாகாது.

    மேலும், இத்திட்டத்தில் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கப் பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை வாங்கவும் அனுமதிக்க வேண்டும். நகர்ப்புர கட்டமைப்பு மேம்பாட்டிற்கு UIDF என்ற புதிய நிதியை உருவாக்கியிருந்தாலும், இதற்கான 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவாக உள்ளது.

    பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் ஒதுக்கீடு 48,000 கோடி ரூபாயிலிருந்து 79,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருந்தாலும், ஒரு வீட்டின் கட்டுமான விலையை (Unit cost) உயர்த்தாவிட்டால், மாநிலங்களுக்கு அது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். எனவே, மத்திய அரசு இத்திட்டத்தின்கீழ். உயர்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப தனது பங்கை உயர்த்திட வேண்டும்.

    மத்திய அரசின் திட்டங்கள் Results based financing என்ற ஒரு புதிய வழிமுறைப்படி தொடக்க முயற்சியாக (pilot basis) செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியாயமாக மாநிலங்களுக்கு வரவேண்டிய உரிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்காக ஒரு கருவியாக இது பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஆபத்து இதில் இருக்கிறது. ஆகவே இத்திட்டத்தை மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பின்னர், மாநிலத்திற்கு வர வேண்டிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்கு வாய்ப்பில்லாத வகையில் மாற்றிச் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், இத்திட்டங்களுக்காக தனி நிதி ஒதுக்கீடு செய்யாதது வருந்தத்தக்கது. கோவிட் பெருந்தொற்றிலிருந்து நம் நாடு மீண்டு வரும் இச்சூழலில் மத்திய அரசின் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. அந்த எதிர்பார்ப்பு இன்று பொய்த்துப் போயிருக்கிறது. இது மத்திய அரசின் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில், குறிப்பாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பட்ஜெட் போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது.

    நாட்டில் நிலவும் வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி ஏற்றம், பணவீக்கம் ஆகியவற்றைப் புறக்கணித்து, மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்திற்கு எந்த வித ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் முன்னெடுக்காமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டானது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எந்த ஒரு நம்பிக்கையையும் அளிக்கவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த மத்திய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகிறது.
    • கிச்சன் சிம்னிகளுக்கான இறக்குமதி வரி 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

    மத்திய பட்ஜெட்டில் தங்கம், சிகரெட் மீதான இறக்குமதி வரி கூடுதலாக அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீது விதிக்கப்படும் தேசிய பேரிடர் நிவாரண நிதி வரி 16 சதவீதம் அதிகரிக்கப்படும்.

    தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகிறது. கிச்சன் சிம்னிகளுக்கான இறக்குமதி வரி 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

    கூடுதல் வரி விதிப்பு காரணமாக சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விலை உயர்கிறது. ஏற்கனவே தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் தங்கம் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தி இருப்பதால் வரும் நாட்களில் தங்கம், வெள்ளி விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது.

    • அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட்.
    • விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரும் பயனடைவர்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது. இதை தொடர்ந்து மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்ட நிதி மந்திரி, துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார்.

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

    மேலும் பிரதமர் மோடி கூறியதாவது:- அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட். விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரும் பயனடைவர். புதிய இந்தியாவுக்கு வலுவான அடித்தளமிடும் பட்ஜெட் என கூறியுள்ளார்.

    • நிதி சார்ந்த சேவைகளுக்காக கே.ஒய்.சி. என்ற தனி நபர் விவர முறை எளிதாக்கப்படும்.
    • ஆதார், பான், டிஜிலாக்கர் முறை ஆகியவை தனி நபர் அடையாளத்திற்காக பிரபலப்படுத்தப்படும்.

    மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்ட நிதி மந்திரி, துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார்.

    மத்திய பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-

    பான் கார்டு இனி முக்கிய அரசுத் துறை கொள்கை சேவைகளில் பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும். அனைத்து அரசு சேவைகளிலும் அடையாள ஆவணமாக பான் எண் பயன்படுத்தப்படும். நிதி சார்ந்த சேவைகளுக்காக கே.ஒய்.சி. என்ற தனி நபர் விவர முறை எளிதாக்கப்படும்.

    ஆதார், பான், டிஜிலாக்கர் முறை ஆகியவை தனி நபர் அடையாளத்திற்காக பிரபலப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×