search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் போராட்டம்"

    • சில கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க குத்தகை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியானதாக கூறப்படுகிறது.
    • கிரானைட் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சேக்கிப்பட்டியில் உள்ள மந்தையில் கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலைகளை குடைந்து கிரானைட் கற்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிலில் ஈடுபட்ட பல நிறுவனங்கள் அரசுக்கு தெரிவிக்காமல் சட்ட விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட மலைகளை பெயர்த்து எடுத்து கிரானைட் கற்களை வியாபாரம் செய்து வந்தது. இதன் மூலம் அரசுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.

    கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த சகாயம், கிரானைட் குவாரிகளில் அதிரடி ஆய்வு நடத்தினார். அப்போது சட்டவிதிகள் மீறப்பட்டு இயற்கை வளங்களை சுரண்டி கிரானைட் கற்கள் எடுக்கப்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமானது. இதையடுத்து சகாயம் தீவிர விசாரணை நடத்தி தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட போலீசார் கனிம வளங்களை கொள்ளையடித்ததாக கிரானைட் நிறுவனங்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகளை தாக்கல் செய்தனர். சகாயம் அளித்த ஆய்வறிக்கை எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் இயங்கி வந்த கிரானைட் குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டது. அரசின் நடவடிக்கைக்கு கிராம மக்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பின் மதுரை மாவட்ட மேலூர் பகுதியில் உள்ள சில கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க குத்தகை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியானதாக கூறப்படுகிறது. இதற்கு புவியியல் மற்றும் சுங்கத்துறையும் அனுமதி அளித்திருந்தது.

    இந்த அறிவிப்பு ஏற்கனவே கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடக்க நிலையில் மேலூர் அருகே கொட்டாம்பட்டியை அடுத்துள்ள சேக்கிப்பட்டி, அய்யாபட்டி, திருச்சுனை ஆகிய கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இதற்கு அப்பகுதி மக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது

    கிரானைட் குவாரிகளால் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படும். மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படும். எனவே கிரானைட் குவாரி அமைக்க கூடாது என வலியுறுத்தி வந்தனர். கிரானைட் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சேக்கிப்பட்டியில் உள்ள மந்தையில் கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் அய்யாபட்டி, திருச்சுனை, கம்பூர், ஒட்டகோவில்பட்டி, அலங்கம்பட்டி உள்பட 15 கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கிரானைட் குவாரிகளை மீண்டும் இயக்க அரசு முடிவெடுத்துள்ள நிலையில் தொடக்கத்திலேயே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் முசிறி அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • பேருந்து சாலப்பட்டி கிராமத்திற்குள் சென்று வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

    முசிறி:

    முசிறி அருகே வெள்ளூர் அடுத்த சாலப்பட்டி கிராமம் வழியாக முசிறியில் இருந்து மாங்கரைப்பேட்டை, வெள்ளூர், வேப்பந்துறை, மணப்பாறையில், தெற்கு சித்தாம்பூர் ஆகிய கிராமங்களுக்கு காலை மற்றும் மாலை இருவேளை அரசு பேருந்து சென்று வருகிறது.

    இவ்வாறு செல்லும் அரசு பேருந்து சாலப்பட்டி கிராமத்திற்குள் வந்து செல்ல வேண்டும். இதனால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பயனடைவர் என்று கூறி, அப்பகுதி மக்கள் முசிறி கோட்டாட்சியர் மற்றும் அரசு போக்குவரத்து கிளை மேலாளர் ஆகியோரிடம் மனு அறிவித்துள்ளனர். ஆனால் அந்த மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த கிராமத்தின் வழியாக சென்ற பேருந்தினை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் முசிறி அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது பேருந்து சாலப்பட்டி கிராமத்திற்குள் சென்று வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

    • கோவில் முன்பு பாப்பாரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.
    • ஒரு தரப்பு மட்டும் திருவிழா நடத்தக்கூடாது என்று கூறி கோவில் உண்டியல் மற்றும் அன்னதான கூடம், அரிசி-பருப்பு இருப்பு அறை ஆகியவற்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பிக்கிலி ஊராட்சிக்குட்பட்ட மலையூர் கிராமத்தில் மலை உச்சியில் பழமை வாய்ந்த கோபால்சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறும். மேலும் நவராத்திரியின் போது சாமி திருக்கல்யாணம் நடைபெறும்.

    திருவிழா காலத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் இந்த கோவில் நிர்வாகிகள் கோவில் பொது பணத்தை கையாடல் செய்து மோசடி செய்ததாக கூறி ஊர் பொதுமக்கள் சார்பில் கடந்த ஜனவரி மாதம் ஒரு தரப்பினர் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆர்.டி.ஓ விசாரணைக்கு அனுப்பி வைத்தனர். கோவில் பொதுபணத்தை நிர்வாகிகள் பேரில் வங்கியில் கூட்டாக கணக்கு துவக்கி வரவு செலவை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் அனைவரையும் இணைத்துக் கொண்டு திருவிழா நடத்த ஆர்.டி.ஓ உத்தரவிட்டார். இந்த உத்தரவை மீறி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பினர் தன்னிச்சையாக திருவிழா நடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ உத்தரவை அமுல்படுத்த கோரியும், ஒரு தரப்பினர் மட்டும் கோவில் திருவிழாவை நடத்தக்கூடாது என்று கூறி மலையூர் கிராமத்தில் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி விட்டு மலை உச்சியில் உள்ள கோபால்சாமி கோவில் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோவில் முன்பு பாப்பாரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். தகவலறிந்து பென்னாகரம் தாசில்தார் (பொறுப்பு) அன்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஒரு தரப்பு மட்டும் திருவிழா நடத்தக்கூடாது என்று கூறி கோவில் உண்டியல் மற்றும் அன்னதான கூடம், அரிசி-பருப்பு இருப்பு அறை ஆகியவற்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மாவட்ட கலெக்டர் உத்தரவிடும் வரை திருவிழா நடத்த அனுமதிக்கப்படாது என்று உறுதியளித்தார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    • பணிகளை தடுத்து நிறுத்தி ஜே.சி.பி. எந்திரத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசாரம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ளது பெரியபுலியூர் கிராமம். இந்த கிராம மக்கள் அதே பகுதியில் உள்ள மயானத்தை கடந்த 200 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தனியார் ஒருவர் அந்த மயானத்தை ஆக்கிரமித்து மயானத்தில் ரோடுகள் அமைக்கும் வகையில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. இதேபோல் அங்கு சாக்கடை தோண்டும் பணியும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரிய புலியூர் கிராம மக்கள் 20-க்கும் மேற்பட்டோர் தி.மு.க. 3-வது வார்டு செயலாளர் பி.டி.ரமேஷ் தலைமையில் திரண்டு வந்து மயானத்தில் நடைபெற்ற பணிகளை தடுத்து நிறுத்தி ஜே.சி.பி. எந்திரத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து கலெக்டருக்கு பெரிய புலியூர் கிராமம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்த இடத்தில் கலெக்டர் உத்தரவின் பெயரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயானத்திற்கு விரைந்து வந்தனர். இதுபோல் கவுந்தப்பாடி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசாரம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் மயானத்தில் நடைபெற்ற பணிகளை தடுத்து நிறுத்தினர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

    இதனை ஏற்று சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்துக்கு பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • குடிநீர் விநியோகம் செய்யும் பைப் லைன் உடைந்துள்ளது
    • போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா மின்னூர் ஊராட்சி பகுதியில் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கிருந்து கட்டுமான பணிக்காக லாரிகள் மூலம் கற்கள் மற்றும் சல்லிகள் எடுத்துச் செல்லப்படுகிறது.

    இந்நிலையில் அதிகமான லாரிகள் அந்தப் பகுதி வழியாக செல்வதால் கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யும் பைப் லைன் உடைந்துள்ளது.

    இதனையடுத்துஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • தனியார் தொழிற்சாலை நிர்வாகம் மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து, கட்டிட கழிவுகளை கொட்டியுள்ளது.
    • நீரோடை கால்வாயை முற்றிலுமாக தூர்வாராவிட்டால் மழை நேரங்களில் கிராமப் பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படும்.

    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த வெள்ளி வாயல் ஊராட்சியில் உள்ள மழை நீர் கால்வாய்வழியாக அருமந்தை, வழுதிகை மேடு, விச்சூர், ஞாயிறு, திருநிலை, முல்லைவாயல், கிராமங்களில் இருந்து மழை நீர் கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.

    இந்நிலையில் தனியார் தொழிற்சாலை நிர்வாகம் மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து, கட்டிட கழிவுகளை கொட்டியுள்ளது. இதனால் மழைநீர் செல்வது தடைபட்டு ஊருக்குள் வெள்ளம் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வெள்ளிவாயல் ஊராட்சியை சேர்ந்த பொது மக்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்காததால் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

    நீரோடை கால்வாயை முற்றிலுமாக தூர்வாராவிட்டால் மழை நேரங்களில் கிராமப் பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படும் என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கால்வாய் அருகில் பந்தல் அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.

    • சீலாத்திகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலிகுடங்களுடன் ராதாபுரம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் யூனியனுக்கு உட்பட்ட சீலாத்திகுளம் கிராமத்தில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் யூனியன் அலுவலகத்தில் உரிய புகார் அளித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து சீலாத்திகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலிகுடங்களுடன் ராதாபுரம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்தையில் ஈடுபட்டார். எனினும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

      சேலம்:

      சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மூலக்கடை பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கழிவுநீர் கால்வாய் ஏதும் இல்லாததால் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

      இதையடுத்து மத்திய நிதி குழு மானியத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் நல்லுகாரர் வீதி முதல் மூலக்கடை வரை கான்கிரீட் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. ஆனால் இப்பணிகள் முழுமை பெறுவதற்கு முன்னதாகவே பணிகள் நிறைவு பெற்றதாக கூறி கல்வெட்டு ஒன்றை வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது, கழிவுநீர் முறையாக செல்ல வழி இல்லாததால் கழிவு நீர் முழுவதும் சாலையில் தேங்குவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காய்ச்சல், மலேரியா, டெங்கு, தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

      இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதுரோட்டில் இருந்து முத்துநாயக்கன்பட்டி செல்லும் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

      இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்க அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

      • பல ஆண்டுகளாக மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என்கின்ற கோரிக்கையை பொதுமக்கள் வைத்து வருகின்றனர்.
      • பொதுமக்களின் போராட்டத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

      மதுராந்தகம்:

      செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மோச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார், விஜயலட்சுமி தம்பதியர் நேற்று இருவரும் இருசக்கர வாகனத்தில் வரும் போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

      ஆகவே இந்த இடத்தில் பல ஆண்டுகளாக மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என்கின்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர். நேற்று இரண்டு பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவத்தையொட்டி இன்று மோச்சேரி கிராம பொது மக்கள் 250-க்கும் ஏற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

      டிஎஸ்பி சிவசக்தி தலைமையிலான போலீசார் பொதுமக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் கூறியதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

      இதனால் 45 நிமிடங்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

      • மாணவி நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் உறவினர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.
      • சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

      அம்மாபேட்டை:

      ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூனாட்சி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் பூனாட்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

      இந்த நிலையில் அந்த மாணவி வழக்கம் போல் நேற்று காலை பள்ளிக்கு வந்தார். இதையடுத்து ஒரு வாலிபர் நேற்று பள்ளிக்கு வந்து அந்த மாணவிக்கு தான் மாமா என்று கூறி விட்டு உள்ளே சென்றார். இதை தொடர்ந்து அவர் அந்த மாணவியை பள்ளியில் இருந்து அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

      இந்த நிலையில் நேற்று மாலை அந்த மாணவி நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து மாணவியின் உறவினர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.

      அப்போது ஒரு வாலிபர் மாமா என்று கூறி மாணவியை அழைத்து சென்று விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் யார் என்று விசாரிக்காமல் எப்படி அனுப்பி வைக்கலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

      இது குறித்து மாணவியின் பெற்றோர் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை கடத்தி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள், மாணவியின் உறவினர்கள் என 100-க்கு மேற்பட்டவர்கள் இன்று காலை அம்மாபேட்டை-அந்தியூர் மெயின் ரோடு பூனாட்சி பகுதியில் அந்த தனியார் பள்ளி அருகே ஒன்று திரண்டனர்.

      இதைதொடர்ந்து அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டடனர். இதையடுத்து நிர்வாகத்தை கண்டித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, பள்ளிக்கு வந்த வாலிபர் மாணவியை கடத்தி சென்று விட்டார். எனவே பள்ளி நிர்வாகம் மீதும், மாணவியை கடத்தி சென்றவர் மீதும் நடவடிக்கை எடுக்க என கூறினர்.

      இது பற்றி தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளி நிர்வாகத்தினர் நேரில் வந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றனர். இதனால் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

      இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

      • அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த ஒரு பெண், பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணையை தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.
      • தீக்குளிக்க முயற்சித்த பெண்ணை அழைத்த போலீசார், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாதென எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

      விருத்தாசலம்:

      கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மன்ற தலைவராக தனலட்சுமி உள்ளார். இவரது கணவர் அய்யாசாமி 100 நாள் வேலை, முதியோர் ஓய்வூதியம் போன்ற திட்ட நிதிகளை பயனாளிகளுக்கு வழங்குவதில்லை.

      மாறாக அதனை தனது சொந்த செலவிற்கு பயன்படுத்திக் கொள்கிறார் என்று குற்றஞ்சாட்டி குப்பநத்தம் கிராம மக்கள் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

      மேலும், இது தொடர்பாக விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறினர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சாலைமறியல் 8.30 மணி வரை நீடித்தது.

      அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த ஒரு பெண், பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணையை தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். இதனால் பதறிப்போன கிராம மக்கள், பெண்ணிடமிருந்த மண்எண்ணை பாட்டிலையும், தீப்பெட்டியையும் பிடுங்கி எறிந்தனர். அவர் மீது தண்ணீரை ஊற்றி சமாதானம் செய்து அமர வைத்தனர்.

      தகவல் அறிந்து விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார், புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

      தீக்குளிக்க முயற்சித்த பெண்ணை அழைத்த போலீசார், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாதென எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

      • வீடு மற்றும் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
      • ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வேலூர்-ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

      வேலூர்:

      வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவில் முதல் காகிதபட்டறை டான்சி தொழிற்சாலை வரை மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 32 வீடுகள் மற்றும் கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.

      ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடந்த ஒரு வருடமாக முயற்சி செய்து வருகின்றனர்.

      இதில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கடைகளை அவர்களே அகற்ற, வீடு மற்றும் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

      கால அவகாசம் கொடுத்த பிறகும் கூட அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.

      இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இன்று காலை பொக்லைன் எந்திரத்துடன் காகிதப்பட்டறைக்கு வந்தனர்.

      மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் பிரகாஷ், இளநிலை பொறியாளர் விஜயா, வேலூர் தாசில்தார் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

      வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், கருணாகரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

      ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வேலூர்-ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

      மேலும் சாலை யோரத்தில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

      அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டக்காரர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

      இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

      ×