search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்துநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்
    X

    சேலம் முத்துநாயக்கன்பட்டி மெயின் ரோடு மூலக்கடை அருகே சாக்கடை வசதி இல்லாமல் உள்ளதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    முத்துநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

      சேலம்:

      சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மூலக்கடை பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கழிவுநீர் கால்வாய் ஏதும் இல்லாததால் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

      இதையடுத்து மத்திய நிதி குழு மானியத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் நல்லுகாரர் வீதி முதல் மூலக்கடை வரை கான்கிரீட் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. ஆனால் இப்பணிகள் முழுமை பெறுவதற்கு முன்னதாகவே பணிகள் நிறைவு பெற்றதாக கூறி கல்வெட்டு ஒன்றை வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது, கழிவுநீர் முறையாக செல்ல வழி இல்லாததால் கழிவு நீர் முழுவதும் சாலையில் தேங்குவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காய்ச்சல், மலேரியா, டெங்கு, தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

      இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதுரோட்டில் இருந்து முத்துநாயக்கன்பட்டி செல்லும் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

      இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்க அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

      Next Story
      ×