search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருத்தாசலம் அருகே ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்-  பெண் தீக்குளிக்க முயற்சி
    X

    விருத்தாசலம் அருகே ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்- பெண் தீக்குளிக்க முயற்சி

    • அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த ஒரு பெண், பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணையை தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.
    • தீக்குளிக்க முயற்சித்த பெண்ணை அழைத்த போலீசார், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாதென எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மன்ற தலைவராக தனலட்சுமி உள்ளார். இவரது கணவர் அய்யாசாமி 100 நாள் வேலை, முதியோர் ஓய்வூதியம் போன்ற திட்ட நிதிகளை பயனாளிகளுக்கு வழங்குவதில்லை.

    மாறாக அதனை தனது சொந்த செலவிற்கு பயன்படுத்திக் கொள்கிறார் என்று குற்றஞ்சாட்டி குப்பநத்தம் கிராம மக்கள் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும், இது தொடர்பாக விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறினர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சாலைமறியல் 8.30 மணி வரை நீடித்தது.

    அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த ஒரு பெண், பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணையை தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். இதனால் பதறிப்போன கிராம மக்கள், பெண்ணிடமிருந்த மண்எண்ணை பாட்டிலையும், தீப்பெட்டியையும் பிடுங்கி எறிந்தனர். அவர் மீது தண்ணீரை ஊற்றி சமாதானம் செய்து அமர வைத்தனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார், புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    தீக்குளிக்க முயற்சித்த பெண்ணை அழைத்த போலீசார், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாதென எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×