search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்ரீத் பண்டிகை"

    • பக்ரீத் பண்டிகையொட்டி அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்தது.
    • 5000 முதல் 15 ஆயிரம் வரை உள்ள ஆடுகள் விற்பனைக்கு வந்தது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் திரு.வி.க நகர் அருகே உள்ள வியாழக்கிழமை தோறும் நடைபெறும் வார சந்தை நடைபெறுவது வழக்கம். வருகின்ற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகையொட்டி அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்தது. இதில் 4 மணி நேரத்தில் ரூ.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை வரவுள்ள நிலையில் ஆடுகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல்வேறு மாவட்டங்களில் வியாபாரிகள் சந்தைகளில் ஆடுகளை விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில் சின்னசேலம் வார சந்தையில் காலை 5 மணி முதல் வியாபாரிகள் ஆடுகளை விற்க தொடங்கினர். சுமார் 5000 முதல் 15 ஆயிரம் வரை உள்ள ஆடுகள் விற்பனைக்கு வந்தது.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • 25 கிலோ எடை கொண்ட செம்மறியாடு ஒன்று ரூ.17 ஆயிரம் வரை விற்கப்பட்டது.
    • 25 கிலோ எடை கொண்ட செம்மறி ஆடுகள் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழன் அன்று கூடுகிறது. இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.

    இந்த சந்தையில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கரூர், நீலகிரி மற்றும் புளியம்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும், வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில் இன்று கூடிய ஆட்டு சந்தையில் வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 400-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதில் 25 கிலோ எடை கொண்ட செம்மறியாடு ஒன்று ரூ.17 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

    மேலும் 25 கிலோ எடை கொண்ட செம்மறி ஆடுகள் ரூ.30 ஆயிரம் வரையும் விற்பனையானது. மொத்தம் இன்று கூடிய ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி செம்மறியாடுகள் ரூ.70 லட்சத்துக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • செம்மறி ஆடு 1 ஜோடி ரூ.80 ஆயிரம் வரை விற்கப்பட்டது.
    • 10 கிலோ கொண்ட வெள்ளாடு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு திண்டுக்கல், கரூர், திருச்சி, தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடு, கோழிகள், சேவல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இதனை வாங்குவதற்காகவும் பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர். வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று சந்தைக்கு ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    இதனை வாங்குவதற்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகாலையிலேயே சந்தையில் குவிந்தனர். செம்மறி ஆடு 1 ஜோடி ரூ.80 ஆயிரம் வரை விற்கப்பட்டது. 10 கிலோ கொண்ட வெள்ளாடு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது.

    மருக்கை ஆடுகளையும் விவசாயிகள் வளர்ப்புக்காக அதிக அளவில் வாங்கிச் சென்றனர். நாட்டுக்கோழி ரூ.380 முதல் ரூ.450 வரை விற்கப்பட்டது. கட்டுச்சேவல்கள் ரூ.3000 முதல் ரூ.30,000 வரை விற்பனையானது. சேவல்களை சந்தையிலேயே விளையாட வைத்து அதன் தரத்தை ஆய்வு செய்து வாங்கிச் சென்றனர்.

    வழக்கமாக காலை 5 மணிக்கே ஆடு, கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இன்று சந்தை தொடங்கிய 2 மணி நேரத்தில் ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் தற்போது பல்வேறு கிராமங்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் அதற்காகவும் ஆடுகள் வாங்கிச் செல்லப்பட்டன.

    மதுரையைச் சேர்ந்த ஒரு கிராமத்தினர் 100 ஆடுகளை மொத்தமாக வாங்கிச் சென்றனர். இதனால் சந்தையில் கூட்டம் அலைமோதியது. இதுகுறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில், பக்ரீத் பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் ஆடுகளை தங்கள் வீட்டில் ஒரு வாரத்துக்கு முன்பே வளர்த்து பண்டிகை நாளில் அதன் இறைச்சியை 3 கூறுகளாக பிரிப்பார்கள். ஒரு பகுதியை இயலாதவர்களுக்கும், மற்றொரு பகுதியை தங்கள் உறவினர்களுக்கும், மீதமுள்ள பகுதியை தங்கள் குடும்பத்துக்கும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

    வருடத்தில் ஒரு முறை குர்பானி கொடுக்க வேண்டும் என்ற இஸ்லாமியர்களின் கடமையை நிறைவேற்றும் வகையில் இந்த நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் அய்யலூர் சந்தைக்கு ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை வாங்க குவிந்தனர்.

    வழக்கமாக தீபாவளி பண்டிகையின் போது மட்டுமே இது போன்ற விற்பனை நடைபெறும் நிலையில் தற்போது பக்ரீத் பண்டிகைக்கும் விற்பனை அதிகரித்துள்ளது என்றனர்.

    • ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னையிலும் ஆயிரக்கணக்கான ஆடுகள் ஆண்டுதோறும் வெட்டப்படுவது வழக்கம்.
    • தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்தும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்காக வருகிறது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் இறைச்சிக்காக ஆடுகள் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டி இருக்கிறது.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னையிலும் ஆயிரக்கணக்கான ஆடுகள் ஆண்டுதோறும் வெட்டப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு 50 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்காக வரவழைக்கப்படுகிறது.

    தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்தும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்காக வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க பொதுச் செயலாளரான ராயபுரம் அலி கூறும்போது, "இந்த ஆண்டு ரம்ஜானுக்காக வருகிற 23-ந்தேதி மாலையில் இருந்தே ஆடுகள் விற்பனைக்காக வர இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்காக வருகின்றன. ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரையில் ஆடுகள் தரத்துக்கு ஏற்ப விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சில ஆடுகள் மட்டுமே ரூ.40 ஆயிரம் வரையில் விலை போகும் என்று எதிர்பார்க்கிறோம். எப்போதுமே பக்ரீத் பண்டிகையை ஒட்டி கொம்பு வளர்ந்த ஆடுகளையே விரும்புவார்கள்.

    அந்த வகையில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஆடுகளே கொம்புகளுடன் காணப்படும். இதன் காரணமாகவே தென் மாநிலங்களை சேர்ந்த ஆடுகளுக்கு பக்ரீத் பண்டிகையையொட்டி கிராக்கி இருக்கும் அந்த வகையில் இந்த ஆண்டும் கொம்பு வைத்த ஆடுகளே வர வழைக்கப்படுகின்றன.

    ஒடிசா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள ஆடுகளுக்கு கொம்பு இருக்காது. இதனை பக்ரீத் பண்டிகையை யொட்டி வெட்டுவதற்கு விரும்ப மாட்டார்கள். சென்னையில் ரெட்டேரி சந்தை, புளியந்தோப்பு, ஆட்டு தொட்டி, தாம்பரம் சந்தை, வில்லிவாக்கம் சந்தை உள்ளிட்ட இடங்களில் ஆடுகள் விற்பனை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கி குவித்தனர்

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

    இந்த வார சந்தைக்கு காட்டுசெல்லூர், வட குரும்பூர், கிளியூர், மடப்பட்டு ,சேந்தநாடு, ஆசனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். வழக்கமாக இந்த சந்தையில் சுமார் 25 லட்சம் முதல் 50 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடை பெறும்.

    இந்த நிலையில் அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது. இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சந்தையில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கி குவித்தனர்

    8 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையான நிலையில் சுமார் 3 மணி நேரத்தில் ஆடுகள் 3 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • பக்ரீத் பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் ஆடுகளை குர்பானி கொடுப்பது வழக்கம்.

    நெல்லை:

    தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக விளங்கும் எட்டயபுரம் ஆட்டுச்சந்தைக்கு அடுத்தப்படியாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கால்நடை சந்தை புகழ்பெற்றது.

    செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்த சந்தைக்கு தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம். அன்றைய தினம் சந்தைக்கு ஆயிரக்கணக்கில் ஆடுகள் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படும். இங்கு ஆடுகள் மட்டுமின்றி மாடுகள், கோழிகள், மீன், கருவாடு உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் தனித்தனி இடங்களில் நடைபெறும்.

    வழக்கமாக சுமார் ரூ.2 கோடி அளவில் வர்த்தகம் நடைபெறும் நிலையில் ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் சுமார் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனை நடக்கும்.

    இந்நிலையில் பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் ஆடுகளை குர்பானி கொடுப்பது வழக்கம். இதையொட்டி இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தைக்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேல் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதிகளவில் செம்மறி ஆடுகள் வந்திருந்தது. இதேபோல் வெள்ளாடுகளும் வந்தன.

    அவற்றை வாங்குவதற்காக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த வியாபாரிகள் குவிந்தனர். அவர்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர். பிற்பகலில் செம்மறி ஆடுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. ஆடுகள் தரத்திற்கேற்ப ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 35 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

    அதிகபட்சமாக பொட்டு வகை ஆடுகள் ரூ. 35 ஆயிரத்திற்கு விற்பனையானது. இதனால் இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தை களைக்கட்டி காணப்பட்டது. இது தொடர்பாக வியாபாரிகள் கூறும்போது, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செம்மறி, வெள்ளாடு என ஆயிரக்கணக்கான ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தோம். இதில் செம்மறி ஆடுகள் விற்றுத்தீர்ந்த நிலையில் வெள்ளாடுகள் மட்டும் குறைந்த அளவில் உள்ளன. இன்று சுமார் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது. இதனால் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடந்துள்ளது.

    ஆயிரக்கணக்கான பொது மக்களும், நூற்றுக்கணக்கான வியாபாரிகளும் திரளும் மேலப்பாளையம் கால்நடை சந்தையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் அனைவரும் வெயில், மழையில் நிற்கும் நிலை உள்ளது. எனவே ஷெட்டுகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் கோழி, இறைச்சி விற்பனை அதிகரித்துள்ளது.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்று மேலப்பாளையம் கால்நடை சந்தை ஆகும். இங்கு ஆடுகளுடன், மாடு, கோழி, கருவாடும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 100-க்கணக்கான வியாபாரிகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் மேலப்பாளையம் சந்தையில் கூடுவார்கள். இங்கு வாரந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல் ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூடுதலாக விற்பனை செய்யப்படும்.

    இந்நிலையில் பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் இன்று ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனால் சந்தை களைகட்டி காணப்பட்டது. இன்று சுமார் 2,500 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

    தரத்திற்கேற்ப அவை விற்பனை செய்யப்பட்டது. குறைந்தபட்சம் ரூ. 7 ஆயிரம் முதல் அதிகபட்சமாக நாட்டுக்கிடா வகை ஒன்று ரூ. 40 ஆயிரம் வரை விலை போனது. வியாபாரிகள் பலரும் மொத்தமாக ஆடுகளை வாங்கி சென்றனர். பொதுமக்களும் தங்களுக்கு ஏற்ற ஆடுகளை வாங்கினர். அடுத்த வாரம் ஆடுகளை வாங்க கூட்டம் அதிகரித்து காணப்படும் என கூறப்படுகிறது.

    தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் கோழி, இறைச்சி விற்பனை அதிகரித்துள்ளது. மேலப்பாளையம் சந்தையில் கோழிகளும் விற்கப்படுவதால் அதனை வாங்கவும் ஏராளமானவர்கள் திரண்டனர்.

    • தேசிய தவ்ஹீத் கூட்டமைப்புடன் இணைந்த காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவையின் சார்பாக பக்ரீத் பெருநாள் தொழுகை ஜெய்லானி நகரில் நடைபெற்றது.
    • பெருநாள் உரையை மஹ்மூது இத்ரீஸ் நிகழ்த்தினார்.

    ஆறுமுகநேரி:

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. காயல்பட்டினம் தவ்ஹீத் ஜும்மா பள்ளியின் இமாம் அப்துல் சமது தொழுகையை நடத்தினார். தூத்துக்குடி மாவட்ட பேச்சாளர் கழிமுதீன் பைஜ் இப்ராஹிம்ர். தொழுகையில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்புடன் இணைந்த காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவையின் சார்பாக பக்ரீத் பெருநாள் தொழுகை ஜெய்லானி நகரில் நடைபெற்றது.தவ்ஹீத் பேரவை பள்ளிவாசல் இமாம் சூபி ஹுசைன் சிறப்பு தொழுகையை நடத்தினார். பெருநாள் உரையை மஹ்மூது இத்ரீஸ் நிகழ்த்தினார். இதற்கான ஏற்பாடுகளை காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவையின் தலைவர் முத்து ஹனீபா, செயலாளர் நைனா முகமது, பொருளாளர் ரய்யான் சாகுல் ஹமீது மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய மாதம் துல் ஹஜ் 10-ம் நாள் பக்ரீத் பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது.
    • இஸ்லாத்தின் புனித நூலான குரான் சொல்லும் வழியில் பயணிப்போம் நாட்டில் அமைதியை நிலைநாட்டி மதநல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவோம்.

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கண்ணியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விஜய் வசந்த் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய மாதம் துல் ஹஜ் 10-ம் நாள் பக்ரீத் பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது.

    இறைவனின் கட்டளையை ஏற்றுத் தவம் இருந்து பெற்ற பிள்ளை என்றும் பாராமல் தனது மகனான இஸ்மாயிலை கடவுளுக்குப் பலியிட நினைத்த இறைத்தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தைப் போற்றும் தினமாகக் கொண்டாடப்படும் இந்த புனித நாளில் நபிகள் கூறிய அறவழியில் பயணிப்போம்.

    ஒரு தாய் பிள்ளை போல் வாழ்ந்து வரும் நம்மைத் துண்டாட நினைக்கும் தீய சக்திகளிடம் இருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாப்பது இன்றைய தலைமுறையின் தலையாகக் கடமையாக உள்ளது. இஸ்லாத்தின் புனித நூலான குரான் சொல்லும் வழியில் பயணிப்போம் நாட்டில் அமைதியை நிலைநாட்டி மதநல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவோம்.

    நாட்டில் நல்ல மனம் கொண்ட மக்களுக்கு எல்லாம் கிடைத்திட இறைவனை வேண்டி துவா செய்வோம். அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • முஸ்லிம்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படக்கூடியது ‘பக்ரீத் பண்டிகை’ ஆகும்.
    • குர்பானி கொடுப்பது முஸ்லிம்கள் மீது ஹிஜ்ரி 2-ம் ஆண்டு கடமையாக்கப்பட்டது.

    அரபி மாதங்களில் 12-வது நிறைவு மாதமாக இடம் பெறுவது துல்ஹஜ் மாதம் ஆகும். இந்த மாதத்தின் பத்தாம் நாளன்று உலக முஸ்லிம்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படக்கூடியது 'பக்ரீத் பண்டிகை' ஆகும். 'பக்ரா' மற்றும் 'ஈத்' எனும் இரண்டு உருது வார்த்தைகளின் இணைப்புதான் 'பக்ரீத்' ஆகும். இதன் பொருள்- 'ஆட்டைப் பலியிட்டு கொண்டாடப்படும் பெருநாள்' என்பதாகும்.

    மேலும் இதற்கு 'குர்பானி பெருநாள்' என்றும் பெயருண்டு. 'குர்பானி' என்றால் 'தியாகம் செய்தல்' என்பது அர்த்தமாகும். குர்பானி கொடுப்பது முஸ்லிம்கள் மீது ஹிஜ்ரி 2-ம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. இதற்கு காரணமாக ஒரு சரித்திர நிகழ்வும் உண்டு. நபி இப்ராகீம் (அலை) அவர்கள் தமது 86-ம் வயதில் குழந்தை வரம் கேட்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்தபோது அவர்களுக்கு இஸ்மாயீல் எனும் ஆண் குழந்தையை இறைவன் வழங்கினான்.

    சில ஆண்டுகள் கழித்து அந்தக்குழந்தையை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவதாக கனவு கண்டார். இந்த இறை உத்தரவை செயல்படுத்திட குழந்தையை அறுத்துப் பலியிட துணிந்தார். அவரின் தியாகத்தை ஏற்றுக்கொண்ட இறைவன் குழந்தைக்கு பதிலாக பிராணி ஒன்றை பலியிட வழிகாட்டினார். இதுகுறித்து திருக்குர்ஆன் கூறுவதாவது:

    "ஆகவே அவ்விருவரும் இறைவனின் விருப்பத்திற்கு முற்றிலும் வழிபட்டு இப்ராகீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட முகங்குப்புறக் கிடத்தினார். அச்சமயம் நாம் 'இப்ராகீமே என அழைத்து உண்மையாகவே நீங்கள் உங்களுடைய கனவை மெய்யாக்கி வைத்து விட்டீர்கள் என்றும் நன்மை செய்பவருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்' என்றும் கூறி 'நிச்சயமாக இது மகத்தானதொரு பெரும் சோதனையாகும்' என்றும் கூறினோம். ஆகவே மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.

    அவருடைய கீர்த்தியைப் பிற்காலத்திலும் நிலைக்க வைத்தோம்". (திருக்குர்ஆன் 37:103-108) 'நபியே நீர் உம் இறைவனை தொழுது குர்பானியும் கொடுப்பீராக' (திருக்குர்ஆன் 108:3) இந்த தியாகத்திருநாள் குறித்த நபிமொழிகள் வருமாறு: 'துல்ஹஜ் 10-ம் நாளன்று ஆதமின் மகன் செய்யும் செயல்களில் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது கால்நடைகளை குர்பானி கொடுப்பதாகும். அவைகள் மறுமைநாளில் தமது கொம்புகளுடனும் ரோமங்களுடனும் கால்குளம்புகளுடனும் அவர்களை வந்தடையும். அறுக்கப்படும் பிராணிகளின் ரத்தங்கள் பூமியில் விழும் முன்பாகவே இறைவனிடம் அவை சென்றடைகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: திர்மிதி)

    'குர்பானி கொடுப்பதினால் எங்களுக்கு என்ன கிடைக்கும்?' என நபித்தோழர்கள் வினவிய போது 'அதன் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு நன்மை உண்டு' என நபி (ஸல்) பதில் தெரிவித்தார்கள். (அறிவிப்பாளர்: ஜைத் பின் அர்க்கம் (ரலி) நூல்: அஹ்மது)

    இறைவன் நமக்கு வழங்கிய வாழ்க்கை மற்றும் செல்வங்கள் கால்நடைகள் ஆகிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்திட தியாகப்பெருநாள் கொண்டாடப்படுகிறது. இதன்மூலம் இறை நெருக்கத்தையும் பெறமுடிகிறது. இறைவனுக்கு அடிபணிதலையும் காட்டமுடிகிறது. குர்பானி என்பது தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் அனைத்து சமுதாய ஏழை எளியோருக்கும் உணவு மற்றும் மாமிசங்களை வழங்கி உணவு வழங்குவதை விரிவுபடுத்தி பசியில்லாத சமுதாயத்தை உருவாக்குவதும் உறவுகளை ஆதரிப்பதும் விருந்தினர்களை உபசரிப்பதும் அண்டை அயலாரை அன்புடன் நடத்துவதும் நலிந்தோருக்கு தர்மம் செய்வதும் ஆகும்.

    குர்பானி என்பது நபி இப்ராகீம் (அலை) அவர்களின் தியாக வழிமுறையை நினைவு கூர்வதும் அதை கடைப்பிடிப்பதும் ஆகும். குர்பானி என்பது இறைவனின் கூற்றை உண்மைப்படுத்துவதும் இறைவிசுவாசத்தின் மீது உறுதியாக இருப்பதின் சாட்சியமும் ஆகும். இறைவன் பிரியப்படும் விதமாகவும் அவன் பொருந்திக் கொள்ளும் விதமாகவும் அவனது உத்தரவை வெகுவிரைவாக செயல்படுத்துவதும் தான் குர்பானியாகும்.

    • 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளும் விவசாயிகளும் குவிந்தனர்.
    • 20 கிலோ கொண்ட ஆடு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையும் விற்கப்பட்டது.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள குந்தாரப்பள்ளி வார வெள்ளிக்கிழமை வெள்ளிசந்தை நடைபெறு வது வழக்கம். இந்த சந்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிகப்பெரிய தனியார் சந்தையாகும்.

    இந்த சந்தையில் ஞயாற்றுகிழமை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், ராயக்கோட்டை, சூளகிரி, பர்கூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர், தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், சேலம், ஓமலூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்தும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் குவிக்கப்பட்டது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளை வாங்க இப்பகுதியில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளும் விவசாயிகளும் குவிந்தனர்.

    இதனால் சந்தை வியபாரம் கலைகட்டியது. இன்று சந்தையில் சுமார் 15 கிலோ கொண்ட ஆடு 10,000 முதல் 15,000 வரையும், 20 கிலோ கொண்ட ஆடு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையும் விற்கப்பட்டது. அதிகபட்சமாக 1 ஆடு சுமார் 35,000 வரை விற்கப்பட்டது.இந்த வார சந்தையில் சுமார் 1Ñகோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்ட த்திலேயே அதிகப்படியான இந்த சந்தையில் ஆடுகள் மாடுகள் குவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சந்தையில கோழிகள், ஆடுகள், மாடுகள் குவிக்கப்பட்டுதால் இப்பகுதியில் பொதுமக்கள் வெள்ளம் அலைமோதியது. 

    • மாபெரும் தியாக திருநாளானது பிறரை புரிந்துகொள்ளும் தன்மையை வளர்க்கவும், தியாகத்தை கடைபிடிக்கவும், மக்களுக்கு வாய்ப்பினை வழங்குகிறது.
    • நமது இளம் தலைமுறையினருக்கு நற்சிந்தனை, கருணை, பெருந்தன்மை ஆகியவற்றை வழங்குவதற்கு இந்நன்னாளில் நாம் உறுதி கொள்வோம்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில், கூறி இருப்பதாவது:-

    'ஈத்-உல்-அதா (பக்ரீத்) தியாகத் திருநாளில் நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இறைவனின் விருப்பத்திற்கு இணங்க நல்ல நோக்கத்திற்காக தனது அளப்பரியத் தியாகத்தை செய்த பக்தியுள்ள தலைவரை இந்த நாள் குறிப்பிடுகிறது. இந்த மாபெரும் தியாக திருநாளானது பிறரை புரிந்துகொள்ளும் தன்மையை வளர்க்கவும், தியாகத்தை கடைபிடிக்கவும், அமைதியைப் பேணவும், உலகளாவிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும், மக்களுக்கு வாய்ப்பினை வழங்குகிறது.

    இந்த புனிதமான நன்னாளில், அன்பை வெளிப்படுத்துவதன் தேவையையும், சகோதரத்துவத்தின் மாண்பையும் மற்றும் மனித குலத்திற்கு ஆற்ற வேண்டிய சேவைகளையும் முழுமையாக குறிப்பிடுகிறது. அமைதியான மற்றும் வளமான வாழ்க்கையை வாழ்வதற்கு, நமது இளம் தலைமுறையினருக்கு நற்சிந்தனை, கருணை, பெருந்தன்மை ஆகியவற்றை வழங்குவதற்கு இந்நன்னாளில் நாம் உறுதி கொள்வோம்.

    இந்த தியாக திருநாளானது நம் அனைவருக்கும் அன்பின் வலிமையும், நல்லிணக்கத்தையும், உடல்நலன் மற்றும் மகிழ்ச்சியையும், வழங்குவதுடன் நமது பெரும் முயற்சிகளில் வெற்றியையும் அளிக்கட்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×