search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bakra Eid"

    • முஸ்லிம்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படக்கூடியது ‘பக்ரீத் பண்டிகை’ ஆகும்.
    • குர்பானி கொடுப்பது முஸ்லிம்கள் மீது ஹிஜ்ரி 2-ம் ஆண்டு கடமையாக்கப்பட்டது.

    அரபி மாதங்களில் 12-வது நிறைவு மாதமாக இடம் பெறுவது துல்ஹஜ் மாதம் ஆகும். இந்த மாதத்தின் பத்தாம் நாளன்று உலக முஸ்லிம்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படக்கூடியது 'பக்ரீத் பண்டிகை' ஆகும். 'பக்ரா' மற்றும் 'ஈத்' எனும் இரண்டு உருது வார்த்தைகளின் இணைப்புதான் 'பக்ரீத்' ஆகும். இதன் பொருள்- 'ஆட்டைப் பலியிட்டு கொண்டாடப்படும் பெருநாள்' என்பதாகும்.

    மேலும் இதற்கு 'குர்பானி பெருநாள்' என்றும் பெயருண்டு. 'குர்பானி' என்றால் 'தியாகம் செய்தல்' என்பது அர்த்தமாகும். குர்பானி கொடுப்பது முஸ்லிம்கள் மீது ஹிஜ்ரி 2-ம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. இதற்கு காரணமாக ஒரு சரித்திர நிகழ்வும் உண்டு. நபி இப்ராகீம் (அலை) அவர்கள் தமது 86-ம் வயதில் குழந்தை வரம் கேட்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்தபோது அவர்களுக்கு இஸ்மாயீல் எனும் ஆண் குழந்தையை இறைவன் வழங்கினான்.

    சில ஆண்டுகள் கழித்து அந்தக்குழந்தையை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவதாக கனவு கண்டார். இந்த இறை உத்தரவை செயல்படுத்திட குழந்தையை அறுத்துப் பலியிட துணிந்தார். அவரின் தியாகத்தை ஏற்றுக்கொண்ட இறைவன் குழந்தைக்கு பதிலாக பிராணி ஒன்றை பலியிட வழிகாட்டினார். இதுகுறித்து திருக்குர்ஆன் கூறுவதாவது:

    "ஆகவே அவ்விருவரும் இறைவனின் விருப்பத்திற்கு முற்றிலும் வழிபட்டு இப்ராகீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட முகங்குப்புறக் கிடத்தினார். அச்சமயம் நாம் 'இப்ராகீமே என அழைத்து உண்மையாகவே நீங்கள் உங்களுடைய கனவை மெய்யாக்கி வைத்து விட்டீர்கள் என்றும் நன்மை செய்பவருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்' என்றும் கூறி 'நிச்சயமாக இது மகத்தானதொரு பெரும் சோதனையாகும்' என்றும் கூறினோம். ஆகவே மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.

    அவருடைய கீர்த்தியைப் பிற்காலத்திலும் நிலைக்க வைத்தோம்". (திருக்குர்ஆன் 37:103-108) 'நபியே நீர் உம் இறைவனை தொழுது குர்பானியும் கொடுப்பீராக' (திருக்குர்ஆன் 108:3) இந்த தியாகத்திருநாள் குறித்த நபிமொழிகள் வருமாறு: 'துல்ஹஜ் 10-ம் நாளன்று ஆதமின் மகன் செய்யும் செயல்களில் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது கால்நடைகளை குர்பானி கொடுப்பதாகும். அவைகள் மறுமைநாளில் தமது கொம்புகளுடனும் ரோமங்களுடனும் கால்குளம்புகளுடனும் அவர்களை வந்தடையும். அறுக்கப்படும் பிராணிகளின் ரத்தங்கள் பூமியில் விழும் முன்பாகவே இறைவனிடம் அவை சென்றடைகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: திர்மிதி)

    'குர்பானி கொடுப்பதினால் எங்களுக்கு என்ன கிடைக்கும்?' என நபித்தோழர்கள் வினவிய போது 'அதன் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு நன்மை உண்டு' என நபி (ஸல்) பதில் தெரிவித்தார்கள். (அறிவிப்பாளர்: ஜைத் பின் அர்க்கம் (ரலி) நூல்: அஹ்மது)

    இறைவன் நமக்கு வழங்கிய வாழ்க்கை மற்றும் செல்வங்கள் கால்நடைகள் ஆகிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்திட தியாகப்பெருநாள் கொண்டாடப்படுகிறது. இதன்மூலம் இறை நெருக்கத்தையும் பெறமுடிகிறது. இறைவனுக்கு அடிபணிதலையும் காட்டமுடிகிறது. குர்பானி என்பது தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் அனைத்து சமுதாய ஏழை எளியோருக்கும் உணவு மற்றும் மாமிசங்களை வழங்கி உணவு வழங்குவதை விரிவுபடுத்தி பசியில்லாத சமுதாயத்தை உருவாக்குவதும் உறவுகளை ஆதரிப்பதும் விருந்தினர்களை உபசரிப்பதும் அண்டை அயலாரை அன்புடன் நடத்துவதும் நலிந்தோருக்கு தர்மம் செய்வதும் ஆகும்.

    குர்பானி என்பது நபி இப்ராகீம் (அலை) அவர்களின் தியாக வழிமுறையை நினைவு கூர்வதும் அதை கடைப்பிடிப்பதும் ஆகும். குர்பானி என்பது இறைவனின் கூற்றை உண்மைப்படுத்துவதும் இறைவிசுவாசத்தின் மீது உறுதியாக இருப்பதின் சாட்சியமும் ஆகும். இறைவன் பிரியப்படும் விதமாகவும் அவன் பொருந்திக் கொள்ளும் விதமாகவும் அவனது உத்தரவை வெகுவிரைவாக செயல்படுத்துவதும் தான் குர்பானியாகும்.

    • குர்பானி கொடுக்கப்பட்ட ஆட்டின் இறைச்சியின் ஒரு பங்கை தாங்கள் வைத்துக் கொள்வார்கள்.
    • மற்ற இரண்டு பங்குகளை உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் பிரித்துக் கொடுப்பார்கள்.
    • மெக்காவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்றாகும்.

    சென்னை :

    உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் இரண்டு பெருநாளை கொண்டாடுவார்கள். ஒன்று ரம்ஜான் பண்டிகை. மற்றொன்று பக்ரீத் பண்டிகை ஆகும்.

    புனித ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருந்து அதன் இறுதியில் கொண்டாடப்படுவது ரம்ஜான் பண்டிகையாகும்.

    இந்த நிலையில் நாடு முழுவதும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இறைத்தூதர் இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இப்ராஹீம் நபி தான் கண்ட கனவின்படி தனது மகன் இஸ்மாயிலை அறுத்துப் பலியிட துணிந்தார். அப்போது வந்த இறைக்கட்டளை மகனை அறுக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஒரு ஆட்டை இறைவனுக்காக பலியிடுமாறும் கூறப்பட்டது. அதன்படியே அவர் அக்கடமையை நிறைவேற்றினார்.

    இறைக்கட்டளை என்றதும் தனது மகனையே பலி கொடுக்க முயன்ற இந்தத் தியாகம் தான் இந்த பண்டிகையின் பின்னணியாகும்.

    இந்த தியாகத் திருநாளில் சிறப்பு தொழுகை நடத்தியும், கால்நடைகளான ஆடு, மாடு, ஒட்டகங்களை பலியிட்டு அதன் இறைச்சிகளை உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் கொடுத்தும் கொண்டாடப்படும்.

    ஈதுல் அல்ஹா எனும் இந்த தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. முஸ்லிம்களின் கடைசி மாதமான துல்ஹஜ் மாதம் 10-வது நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    பக்ரீத் பண்டிகையையொட்டி மசூதிகளிலும், திடல்களிலும் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள். காலையிலேயே சிறப்பு தொழுகை நடைபெறும். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள்.

    தொழுகைக்குப் பிறகு குர்பானி கொடுக்கப்படும். ஆடு தனி நபராகவும், மாடு கூட்டு குர்பானி ஆகவும் கொடுக்கப்படும். குர்பானி கொடுக்கப்பட்ட ஆட்டின் இறைச்சியின் ஒரு பங்கை தாங்கள் வைத்துக் கொள்வார்கள். மற்ற இரண்டு பங்குகளை உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் பிரித்துக் கொடுப்பார்கள்.

    சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்றாகும். உலகம் முழுவதும் இருந்து 20 லட்சம் பேர் கூடுவார்கள்.

    கொரோனா காரணமாக சவுதி அரேபியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமே கடந்த 2 ஆண்டாக அனுமதி வழங்கப்பட்டது. மற்ற நாடுகளில் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை. கொரோனா பாதிப்பு குறைந்ததால் 2 ஆண்டுகளுக்கு பிறகு மற்ற நாடுகளில் உள்ளவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. 10 லட்சம் பேர் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள்.

    • நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
    • தமிழகத்தில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது

    நாகப்பட்டினம் :

    இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

    பக்ரீத் பண்டிகையின் போது ஆடு, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் பலி கொடுக்கப்பட்டு, அதன் இறைச்சியை மூன்றில் ஒரு பங்காகப் பிரித்து ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்வர்.

    இந்நிலையில் சவுதி அரேபியாவில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, நாகை மாவட்டம் நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பினர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

    இதேப்போல் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    தமிழகத்தில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

    ×