search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் திறப்பு"

    • பாசன தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்படுகிறது.
    • அணையில் தற்போது 8.70 டி.எம்.சி. நீர் மட்டுமே இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் 12 மாவட்டங்களில சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் இந்த மாவட்டங்களில் நடந்து வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் முப்போக விளைச்சலுக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருந்ததால் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    கடந்த 5 மாதமாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்துவிட்டது.

    இந்நிலையில் தற்போது கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படும் நிலையிலும் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு குறைந்த அளவிலேயே உள்ளது. பாசன தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்படுகிறது.

    அணையின் நீர்மட்டம் 10 டி.எம்.சிக்கும் கீழே குறைந்ததால் நேற்று காலை முதல் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 4 ஆயிரம் அடியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் பாசனத்துக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32.84 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 334 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் தற்போது 8.70 டி.எம்.சி. நீர் மட்டுமே இருப்பு உள்ளது.

    இதில் 6 டி.எம்.சி. குடிநீர் மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும். எனவே மீதி உள்ள 2.7 டி.எம்.சி.தண்ணீர் மட்டுமே பாசனத்துக்கு திறக்கப்படும். நீர்வரத்தை விட அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் விரைவில் நிறுத்தப்படும் என்று தெரிகிறது.

    • கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.
    • அணையில் 9.83 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.

    நேற்று காலை அணைக்கு 3ஆயிரத்து 122 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 1560 கனஅடியாக குறைந்தது. மேலும் அணையின் நீர்மட்டமும் 35.38 அடியாக குறைந்து விட்டது. தற்போது அணையில் 9.83 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.

    இதற்கிடையே கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் அங்கு உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 5ஆயிரத்து 481 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 11ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 1592 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. 2 அணைகளுக்கும் வினாடிக்கு 17ஆயிரத்து 281 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 2ஆயிரத்து 592 கனஅடி தண்ணீரே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • வினாடிக்கு 1350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
    • நீர்வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக வாலாஜா அருகே உள்ள பாலாறு அணைக்கட்டு தடுப்ப ணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    இதனால் பாலாறு அணைக்கட்டில் நீர் தேங்கி பரந்து விரிந்து கடல் போல்காட்சி அளிக்கிறது.

    நீர் வரத்து அதிக ரித்துள்ளதை தொடர்ந்து பாலாறு அணைக்கட்டு தடுப்பணையிலிருந்து பாசன கால்வாய்கள் மூலம் வினாடிக்கு 1350 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதன்படி காவேரிப்பாக்கம் பெரிய ஏரிக்கு 280 கன அடி, மகேந்திரவாடி ஏரிக்கு 268 கன அடி, சக்கரமல்லூர் ஏரிக்கு 110 கன அடி, தூசி ஏரிக்கு 692 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • கடந்த சில நாட்களாக 5000 கனஅடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டது. பின்னர் அதையும் குறைத்தது.
    • 161 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதால் தங்களால் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகம் மறுத்து வருகிறது.

    சென்னை:

    காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் செய்து வருகிறது.

    இதன் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட குறுவை நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி காய்ந்துவிட்டது.

    காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை தரவேண்டிய நீரில் மூன்றில் ஒரு பங்கை கூட தராத நிலையில் இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையிட்டது. இதில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

    அதன்படி தமிழகத்திற்கு காவிரியில் 5000 கன அடிநீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவை முதலில் உத்தரவிட்டன. அதற்கு கர்நாடகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த சில நாட்களாக 5000 கனஅடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டது. பின்னர் அதையும் குறைத்தது.

    இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு, அடுத்த 15 தினங்களுக்கு தொடர்ந்து 3000 கன அடி நீர் வீதம் தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து பெங்களூருவில் பந்த் நடந்தது. மேலும் மாநிலம் தழுவிய அளவில் இன்று கர்நாடகத்தில் பந்த் நடந்து வருகிறது.

    தமிழகத்திற்கு 3000 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்ட நிலையில் அதனை பின்பற்ற கர்நாடகா அரசு பிடிவாதமாக மறுப்பு தெரிவித்து வருகிறது. 161 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதால் தங்களால் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகம் மறுத்து வருகிறது.

    இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் கூட்டப்பட்டது.

    இதில் தமிழகம் சார்பில் நீர் வளத்துறை செயலாளர் (பொறுப்பு) டாக்டர் மணிவாசன், காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் எல்.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

    அப்போது தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். வினாடிக்கு 12,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட் டால்தான் நெற் பயிர்களை காப்பாற்ற முடியும் என்று வலியுறுத்தினார்கள்.

    ஆனால் இதற்கு கர்நாடகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் எங்களுக்கே தண்ணீர் போதாது என்று கூறினார்கள்.

    கர்நாடகாவின் இந்த பிடிவாதம் காரணமாக இந்த ஆண்டு டெல்டா மாவட்டத்தில் ஒருபோக சாகுபடிக்கு உலை வைத்துவிடும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • அணையில் இருந்து வினாடிக்கு 3ஆயிரத்து 575 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
    • நேற்று 6ஆயிரத்து 337 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூரு:

    கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து கடந்த 23-ந் தேதி முதல் வினாடிக்கு 5ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 7ஆயிரத்து 451 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3ஆயிரத்து 575 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேபோல் கபினி அணைக்கு வினாடிக்கு 1180 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 6ஆயிரத்து 75 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று 6ஆயிரத்து 337 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 3 நாட்களாக 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2ஆயிரத்து 384 கனஅடி தண்ணீர் வருகிறது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கடந்த 3 நாட்களாக 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று 4-வது நாளாகவும் வினாடிக்கு 6ஆயிரத்து 337 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 7ஆயிரத்து 134 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அந்த அணையில் இருந்து 3ஆயிரத்து 837 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேபோல் கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2ஆயிரத்து 384 கனஅடி தண்ணீர் வருகிறது. இந்த அணையில் இருந்து காவிரி ஆற்றில் 2ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    • அணையில் இருந்து உபரிநீர் வினாடிக்கு 1687 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • அணையின் முழு கொள்ளளவான 124.80 அடியில் தற்போது நீர்மட்டம் 98.06 அடியாக உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு இன்று காலை, நீர்வரத்து 3686 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து உபரிநீர் வினாடிக்கு 1687 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையின் முழு கொள்ளளவான 124.80 அடியில் தற்போது நீர்மட்டம் 98.06 அடியாக உள்ளது. அதேபோல் கபினி அணைக்கு இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 4726 கன அடியாக இருந்தது.

    அணையில் இருந்து வினாடிக்கு 1100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் முழு கொள்ளளவு 84 அடியில் தற்போதைய நீர்மட்டம் 75.82 அடியாக உள்ளது. கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் இன்று காலை 2 ஆயிரத்து 787 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

    • நீர்வரத்தை பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
    • அணைக்கு தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து போதிய அளவு தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படவில்லை. இதனால் காவிரியில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 6,181 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 1000 கன அடி நீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இன்று காலை இந்த 2 அணைகளில் இருந்தும் நீர் திறப்பு 6,753 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 6,149 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த அணைக்கு நீர்வரத்து 3,988 கன அடியாகவும், நீர்மட்டம் 99.06 அடியாகவும் உள்ளது. இதேபோல் கபினி அணையில் இருந்து 604 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 274 கன அடியாகவும், நீர்மட்டம் 73.62 அடியாகவும் உள்ளது.

    இந்த நீர்வரத்தை பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலையில் 6,430 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 8,060 கன அடியாக அதிகரித்தது.

    இன்று காலையில் நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 6,428 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

    அணைக்கு தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது. நேற்று காலை 8 மணி அளவில் 48.23 அடியாக நீடித்த நீர்மட்டம் இன்று காலையில் 47.99 அடியாக சரிந்தது.

    இதனால் அணைக்குள் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை, கிறிஸ்துவ ஆலய கோபுரம் ஆகியவை தற்போது முழு மையாக வெளியே தெரிகிறது. அணையின் நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருந்த மணல் திட்டுகள், பாறைகள் ஆங்காங்கே வெளியே தெரிகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையில் 16.56 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது. இதில் இன்னும் 10.56 டி.எம்.சி. தண்ணீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்படும். மீதியுள்ள தண்ணீர் குடிநீர், மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும். அணையில் நீர்மட்டம் குறைந்ததால் குறுவை சாகுபடி முழுமை பெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    • 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
    • கபினி அணையில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதற்கிடையே காவிரியில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து கடந்த 3 நாட்களாக மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதத்துக்கு குறையாமலும், மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதமும் என மொத்தம் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 7,436 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கே.ஆர்.எஸ் அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 7,128 கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று 6, 436 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது

    அதுபோல் கபினி அணையில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த 2 அணைகளில் இருந்தும் 7,436 கன அடி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    • தற்போது தண்ணீர் வரவர கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்து விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    • குறிப்பிட்ட கால அளவுக்கு முன்னதாகவே தண்ணீர் கடைமடையை எட்டியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து இந்த ஆண்டுக்கான முதல் போகத்துக்கான தண்ணீர் கீழ்பவானி வாய்க்காலின் இரட்டைப் படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாயின் ஒற்றைப் படை மதகுகளில் கடந்த 15-8-2023 முதல் 13-12-2023 வரை 120 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

    ஆனால், கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்புப் பணிகள் முடிவடையாத நிலையில், ஆகஸ்ட் 15ம் தேதி மாலை 5 மணியளவில் தண்ணீர் திறக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே மீண்டும் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, மீண்டும் 19-ந் தேதி காலை 11 மணியளவில் பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    தொடர்ந்து அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. 20-ந் தேதி காலை 8 மணி நிலவரப்படி அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    இதுமேலும் தினமும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று காலை 8 மணி நிலவரத்தின் படி அணைக்கு வினாடிக்கு 2,200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டபோது 105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர் இருப்பு 82.71 அடியாக இருந்த நிலையில், தண்ணீர் திறப்பு அதிகரித்ததையடுத்து, அணையின் நீர் மட்டமும் படிப்படியாக குறைந்து தற்போது 80.46 அடியாக உள்ளது.

    இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் கடந்த 19ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலையில் அதன் கடைமடைப் பகுதியான 125-வது மைலில் உள்ள மங்களப்பட்டியை எட்டியது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இதுகுறித்து, கீழ்பவானி பாசன பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி கூறியதாவது:-

    கடந்த 19-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து, குறிப்பிட்ட கால அளவுக்கு முன்னதாகவே தண்ணீர் கடைமடையை எட்டியுள்ளது. தவிர எப்போதும், கடைமடையை தண்ணீர் எட்டிய பின்னரே கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பார்கள். ஆனால், தற்போது தண்ணீர் வரவர கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்து விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    குறிப்பிட்ட கால அளவுக்கு முன்னதாகவே தண்ணீர் கடைமடையை எட்டியதற்கு காரணம், கடந்த போகத்தில் வாய்க்காலை முறையாக தூர் வாரி, மணல் திட்டுகளை அகற்றியதே ஆகும். காங்கிரீட் போட்டால் தான் தண்ணீர் கடைமடைக்கு போய்ச் சேரும் என கூறிவரும் சிலரின் கூற்று இதன் மூலமாக பொய்யாகியுள்ளது.

    பல்வேறு இடையூறுகளுக்கு இடையிலும், எங்களது கோரிக்கையை ஏற்று குறிப்பிட்ட காலத்தில், இந்த போகத்துக்கு, எவ்வித பாதிப்பும் இன்றி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுத்த மாவட்ட அமைச்சர் சு.முத்துசாமிக்கும், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மற்றும் சம்பந்தப்பட்ட நீர்வளத் துறை அதிகாரிகளுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் இன்று தண்ணீர் கடைமடையை எட்டியதையடுத்து அதைக் கொண்டாடும் விதமாக அப்பகுதி விவசாயிகள் கடைமடைப் பகுதியில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

    • 3000 ஹெக்டேரில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது
    • கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தல்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் கன்னிபூ, கும்பப்பூ என இருபோக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் தற்போது கன்னி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை தண்ணீரை நம்பியே விவசாயிகள் சாகு படி செய்துள்ளனர். சுமார் 6000 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் 3000 ஹெக்டேரில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. கடைமடை பகுதியில் உள்ள நெற்பயிர்க ளுக்கு போதிய தண்ணீர் இல்லாததால் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோவாளை சானலில் துவச்சி உலக் கருவி பகுதியில் மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டது. 26 மீட்டர் நீளத்தில், 8 மீட்டர் ஆழத்தில் உடைப்பு ஏற்பட்டதால் சானலில் உள்ள தண்ணீர் அந்த பகுதிகளில் புகுந்தது. இதையடுத்து தோவாளை சானலில் விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு அந்த உடைப்பை சரி செய்யும் பணியை மேற்கொண்டனர். இரவு பகலாக உடைப்பு சரி செய்யும் பணி நடந்தது. இந்தநிலையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தோவாளை சானலில் உடைப்பு ஏற்பட்ட தற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள். மேலும் பணியை வேகமாக முடித்து தண்ணீரை திறந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

    இதையடுத்து பணி மேலும் துரிதப்படுத்தப்பட்டு வேகமாக நடந்தது. நேற்று மாலையுடன் பணிகள் முடி வடைந்ததை தொடர்ந்து இன்று காலை தோவாளை சானலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சானலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதையடுத்து அந்த பகுதியில் உள்ள பயிர்களுக்கு தண்ணீர் பாய்ந்தது. கடந்த ஒரு வாரமாக தண்ணீர் இன்றி இருந்த நெற்பயிர்கள் மீண்டும் தண்ணீர் விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • 105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையில் தற்போதைய நீர் இருப்பு 82.54 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டால் அணையின் நீர்மட்டம் குறையும் நிலை ஏற்படும்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையில் இருந்து, இந்த ஆண்டுக்கான முதல் போகத்துக்கான தண்ணீர் கீழ்பவானி வாய்க்காலின் இரட்டைப் படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாயின் ஒற்றைப்படை மதகுகளில் கடந்த 15-ந் தேதி முதல் வரும் டிசம்பர் 13ஆம் தேதி வரை வரை 120 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

    ஆனால், கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்புப் பணிகள் முடிவடையாத நிலையில், ஆகஸ்ட் 15-ந் தேதி மாலை 5 மணியளவில் தண்ணீர் திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் நிறுத்தப்பட்டது.

    அதைத் தொடர்ந்து, மீண்டும் 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை செயற்பொறியாளர் திருமூர்த்தி தெரிவித்தார்.

    இந்நிலையில், அவர் தெரிவித்தபடி, 19-ந் தேதி காலை 11 மணியளவில் பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    தொடர்ந்து படிப்படியாக பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதுமேலும் அதிகரிக்கப்பட்டு நேற்று மாலை 4 மணிக்கு வினாடி க்கு 750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில், இன்று காலை 8 மணி நிலவரத்தின் படி அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,250 கன அடியாக அதிகரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையில் தற்போதைய நீர் இருப்பு 82.54 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 217 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

    கீழ்பவானி வாய்க்கால் மூலமாக நேரடியாகவும், கசிவு நீர் மூலமாகவும் சுமார் 1.25 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்று வரும் நிலையில், வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக நடப்பு முதல்போகத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா என பாசனதாரர்களும், இந்த வாய்க்கால் மூலமாக குடி நீர் ஆதாரம் பெறும் கிராம மக்களும் பெரும் அச்சத்துக்குள்ளாகி இருந்தனர்.

    இருப்பினும், ஆகஸ்ட் 15-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட அமைச்சர், மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் 4 நாள்கள் தாமதமானாலும் குறிப்பிட்டவாறு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு ள்ளது.

    இதனால், விவசாய முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டிருந்த விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

    கடந்த வருடங்களில் இதே காலகட்டத்தில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பி இருந்தது.

    ஆனால், தற்போது போதிய மழையின்மை காரணமாக 105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையின் நீர் இருப்பு, தற்போது 82 அடியாக மட்டுமே உள்ளது.

    இதனால், அணையில் இருந்து வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டால் அணையின் நீர்மட்டம் குறையும் நிலை ஏற்படும்.

    இருப்பினும், போதிய மழை பெய்து அணையின் நீர்மட்டத்தை உயரச் செய்தும், கீழ்பவானி வாய்க்காலில் அதன் முழு அளவு தண்ணீரான வினாடிக்கு 2,300 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு இந்த போகம் சாகுபடி எவ்வித பாதிப்புமின்றி நடைபெற வேண்டும் என்பதே கீழ்பவானி பாசன விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ×