search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு- 1,250 கன அடியாக அதிகரிப்பு
    X

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு- 1,250 கன அடியாக அதிகரிப்பு

    • 105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையில் தற்போதைய நீர் இருப்பு 82.54 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டால் அணையின் நீர்மட்டம் குறையும் நிலை ஏற்படும்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையில் இருந்து, இந்த ஆண்டுக்கான முதல் போகத்துக்கான தண்ணீர் கீழ்பவானி வாய்க்காலின் இரட்டைப் படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாயின் ஒற்றைப்படை மதகுகளில் கடந்த 15-ந் தேதி முதல் வரும் டிசம்பர் 13ஆம் தேதி வரை வரை 120 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

    ஆனால், கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்புப் பணிகள் முடிவடையாத நிலையில், ஆகஸ்ட் 15-ந் தேதி மாலை 5 மணியளவில் தண்ணீர் திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் நிறுத்தப்பட்டது.

    அதைத் தொடர்ந்து, மீண்டும் 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை செயற்பொறியாளர் திருமூர்த்தி தெரிவித்தார்.

    இந்நிலையில், அவர் தெரிவித்தபடி, 19-ந் தேதி காலை 11 மணியளவில் பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    தொடர்ந்து படிப்படியாக பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதுமேலும் அதிகரிக்கப்பட்டு நேற்று மாலை 4 மணிக்கு வினாடி க்கு 750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில், இன்று காலை 8 மணி நிலவரத்தின் படி அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,250 கன அடியாக அதிகரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையில் தற்போதைய நீர் இருப்பு 82.54 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 217 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

    கீழ்பவானி வாய்க்கால் மூலமாக நேரடியாகவும், கசிவு நீர் மூலமாகவும் சுமார் 1.25 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்று வரும் நிலையில், வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக நடப்பு முதல்போகத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா என பாசனதாரர்களும், இந்த வாய்க்கால் மூலமாக குடி நீர் ஆதாரம் பெறும் கிராம மக்களும் பெரும் அச்சத்துக்குள்ளாகி இருந்தனர்.

    இருப்பினும், ஆகஸ்ட் 15-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட அமைச்சர், மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் 4 நாள்கள் தாமதமானாலும் குறிப்பிட்டவாறு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு ள்ளது.

    இதனால், விவசாய முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டிருந்த விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

    கடந்த வருடங்களில் இதே காலகட்டத்தில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பி இருந்தது.

    ஆனால், தற்போது போதிய மழையின்மை காரணமாக 105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையின் நீர் இருப்பு, தற்போது 82 அடியாக மட்டுமே உள்ளது.

    இதனால், அணையில் இருந்து வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டால் அணையின் நீர்மட்டம் குறையும் நிலை ஏற்படும்.

    இருப்பினும், போதிய மழை பெய்து அணையின் நீர்மட்டத்தை உயரச் செய்தும், கீழ்பவானி வாய்க்காலில் அதன் முழு அளவு தண்ணீரான வினாடிக்கு 2,300 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு இந்த போகம் சாகுபடி எவ்வித பாதிப்புமின்றி நடைபெற வேண்டும் என்பதே கீழ்பவானி பாசன விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×