search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 6,753 கன அடியாக தண்ணீர் திறப்பு குறைப்பு
    X

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 6,753 கன அடியாக தண்ணீர் திறப்பு குறைப்பு

    • நீர்வரத்தை பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
    • அணைக்கு தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து போதிய அளவு தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படவில்லை. இதனால் காவிரியில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 6,181 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 1000 கன அடி நீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இன்று காலை இந்த 2 அணைகளில் இருந்தும் நீர் திறப்பு 6,753 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 6,149 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த அணைக்கு நீர்வரத்து 3,988 கன அடியாகவும், நீர்மட்டம் 99.06 அடியாகவும் உள்ளது. இதேபோல் கபினி அணையில் இருந்து 604 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 274 கன அடியாகவும், நீர்மட்டம் 73.62 அடியாகவும் உள்ளது.

    இந்த நீர்வரத்தை பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலையில் 6,430 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 8,060 கன அடியாக அதிகரித்தது.

    இன்று காலையில் நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 6,428 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

    அணைக்கு தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது. நேற்று காலை 8 மணி அளவில் 48.23 அடியாக நீடித்த நீர்மட்டம் இன்று காலையில் 47.99 அடியாக சரிந்தது.

    இதனால் அணைக்குள் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை, கிறிஸ்துவ ஆலய கோபுரம் ஆகியவை தற்போது முழு மையாக வெளியே தெரிகிறது. அணையின் நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருந்த மணல் திட்டுகள், பாறைகள் ஆங்காங்கே வெளியே தெரிகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையில் 16.56 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது. இதில் இன்னும் 10.56 டி.எம்.சி. தண்ணீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்படும். மீதியுள்ள தண்ணீர் குடிநீர், மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும். அணையில் நீர்மட்டம் குறைந்ததால் குறுவை சாகுபடி முழுமை பெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    Next Story
    ×