search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடையை எட்டியது- விவசாயிகள் பொங்கல் வைத்து வழிபாடு
    X

    கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடையை எட்டியது- விவசாயிகள் பொங்கல் வைத்து வழிபாடு

    • தற்போது தண்ணீர் வரவர கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்து விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    • குறிப்பிட்ட கால அளவுக்கு முன்னதாகவே தண்ணீர் கடைமடையை எட்டியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து இந்த ஆண்டுக்கான முதல் போகத்துக்கான தண்ணீர் கீழ்பவானி வாய்க்காலின் இரட்டைப் படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாயின் ஒற்றைப் படை மதகுகளில் கடந்த 15-8-2023 முதல் 13-12-2023 வரை 120 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

    ஆனால், கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்புப் பணிகள் முடிவடையாத நிலையில், ஆகஸ்ட் 15ம் தேதி மாலை 5 மணியளவில் தண்ணீர் திறக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே மீண்டும் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, மீண்டும் 19-ந் தேதி காலை 11 மணியளவில் பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    தொடர்ந்து அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. 20-ந் தேதி காலை 8 மணி நிலவரப்படி அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    இதுமேலும் தினமும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று காலை 8 மணி நிலவரத்தின் படி அணைக்கு வினாடிக்கு 2,200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டபோது 105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர் இருப்பு 82.71 அடியாக இருந்த நிலையில், தண்ணீர் திறப்பு அதிகரித்ததையடுத்து, அணையின் நீர் மட்டமும் படிப்படியாக குறைந்து தற்போது 80.46 அடியாக உள்ளது.

    இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் கடந்த 19ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலையில் அதன் கடைமடைப் பகுதியான 125-வது மைலில் உள்ள மங்களப்பட்டியை எட்டியது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இதுகுறித்து, கீழ்பவானி பாசன பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி கூறியதாவது:-

    கடந்த 19-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து, குறிப்பிட்ட கால அளவுக்கு முன்னதாகவே தண்ணீர் கடைமடையை எட்டியுள்ளது. தவிர எப்போதும், கடைமடையை தண்ணீர் எட்டிய பின்னரே கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பார்கள். ஆனால், தற்போது தண்ணீர் வரவர கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்து விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    குறிப்பிட்ட கால அளவுக்கு முன்னதாகவே தண்ணீர் கடைமடையை எட்டியதற்கு காரணம், கடந்த போகத்தில் வாய்க்காலை முறையாக தூர் வாரி, மணல் திட்டுகளை அகற்றியதே ஆகும். காங்கிரீட் போட்டால் தான் தண்ணீர் கடைமடைக்கு போய்ச் சேரும் என கூறிவரும் சிலரின் கூற்று இதன் மூலமாக பொய்யாகியுள்ளது.

    பல்வேறு இடையூறுகளுக்கு இடையிலும், எங்களது கோரிக்கையை ஏற்று குறிப்பிட்ட காலத்தில், இந்த போகத்துக்கு, எவ்வித பாதிப்பும் இன்றி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுத்த மாவட்ட அமைச்சர் சு.முத்துசாமிக்கும், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மற்றும் சம்பந்தப்பட்ட நீர்வளத் துறை அதிகாரிகளுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் இன்று தண்ணீர் கடைமடையை எட்டியதையடுத்து அதைக் கொண்டாடும் விதமாக அப்பகுதி விவசாயிகள் கடைமடைப் பகுதியில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

    Next Story
    ×