search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு- வினாடிக்கு  3 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
    X

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு- வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக குறைப்பு

    • பாசன தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்படுகிறது.
    • அணையில் தற்போது 8.70 டி.எம்.சி. நீர் மட்டுமே இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் 12 மாவட்டங்களில சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் இந்த மாவட்டங்களில் நடந்து வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் முப்போக விளைச்சலுக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருந்ததால் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    கடந்த 5 மாதமாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்துவிட்டது.

    இந்நிலையில் தற்போது கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படும் நிலையிலும் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு குறைந்த அளவிலேயே உள்ளது. பாசன தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்படுகிறது.

    அணையின் நீர்மட்டம் 10 டி.எம்.சிக்கும் கீழே குறைந்ததால் நேற்று காலை முதல் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 4 ஆயிரம் அடியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் பாசனத்துக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32.84 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 334 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் தற்போது 8.70 டி.எம்.சி. நீர் மட்டுமே இருப்பு உள்ளது.

    இதில் 6 டி.எம்.சி. குடிநீர் மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும். எனவே மீதி உள்ள 2.7 டி.எம்.சி.தண்ணீர் மட்டுமே பாசனத்துக்கு திறக்கப்படும். நீர்வரத்தை விட அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் விரைவில் நிறுத்தப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×