search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெலன்ஸ்கி"

    • கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை புதுப்பிக்க ரஷியா மறுப்பு
    • உக்ரைனில் இருந்து தானிய பொருட்கள் ஏற்றுமதி ஆவதில சிக்கல்

    உலகின் பல நாடுகளுக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசியமான உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வருகிறது. ரஷிய-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷியாவால் கைப்பற்றப்பட்டது. இதனால் தானிய ஏற்றுமதி நின்று மிகப்பெரிய உணவு நெருக்கடி உருவாகும் அபாயம் ஏற்பட்டது.

    இதை தவிர்க்க கடந்த வருடம் ஜூலை மாதம், ஐ.நா. மற்றும் துருக்கி தலையிட்டு ரஷியாவுடன் ஒரு உடன்படிக்கை செய்தது. கருங்கடல் தானிய ஒப்பந்தம் எனும் அந்த உடன்படிக்கையின்படி உக்ரைனின் 3 துறைமுகங்களிலிருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி தொடர்வதற்கு ரஷியா சம்மதித்தது. இதன்படி அந்த கப்பல்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தாது.

    இந்த ஒப்பந்தம் நேற்று காலாவதியான நிலையில் இதனை மீண்டும் புதுப்பிக்க ரஷியா மறுத்து, இதிலிருந்து விலகிக் கொள்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷியாவின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

    கடும் கண்டனம் தெரிவித்த ஜெலன்ஸ்கி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகின் 40 கோடி மக்கள் இந்த உணவு பொருட்களை நம்பியிருக்கின்றனர். இதனை வினியோகம் செய்வதை தடுக்க ரஷியாவிற்கு எந்த உரிமையும் இல்லை. எகிப்து, சூடான், ஏமன், வங்காளதேசம், துருக்கி, இந்தியா, இந்தோனேசியா, என அனைத்து நாடுகளையும் பாதிக்கும் ரஷியாவின் இந்த மிரட்டலுக்கு உலகம் அடி பணியக்கூடாது.

    ரஷியாவின் எதேச்சதிகார முடிவை மீறி தானிய ஏற்றுமதி தொடர உலக நாடுகள் அனைத்தையும் செய்ய வேண்டும். ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தங்களுக்கு தடையற்ற உணவு பொருள் வினியோகம் கோர உரிமையுண்டு.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதியை உறுதி செய்ய பிற நாடுகளுடன் ஆலோசித்து வருவதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

    தற்போது ரஷியாவால் தாக்குதலுக்குள்ளாகும் அபாயம் இருப்பதால், எந்த கப்பல் நிறுவனமும் அதனை அலட்சியப்படுத்தி தானிய ஏற்றுமதியில் பங்கேற்காது என தெரிவிக்கும் வல்லுனர்கள், இந்த சிக்கல் உலகின் மிகப்பெரிய உணவு நெருக்கடியாக மாறுவதற்கு முன் சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும் என கருத்து தெரித்தனர்.

    • ரஷியப் படைக்கு எதிராக உக்ரைன் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது,
    • உக்ரைன் எதிர்தாக்குதல் வேகம் தற்போது சற்று குறைந்துள்ளது.

    ரஷிய- உக்ரைன் போர் 507-வது நாளை எட்டிவிட்டது. ரஷிய படைகளை பின்னுக்கு தள்ளுவதில், உக்ரைன் எதிர்பார்த்ததை விட மெதுவான வேகத்தில் முன்னேறி வருவதாக உக்ரைன் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

    இந்நிலையில் போர் நிலவரம் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தனது நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் நமது தாக்குதலை எதிர்கொள்ள ரஷியா தன்னிடமுள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி வருகிறது. முன்னேறும் ஒவ்வொரு 1,000 மீட்டருக்கும் நாம் நமது போர் படைப்பிரிவின் ஒவ்வொருவருக்கும் நன்றி கூற வேண்டும்.

    தற்போது பெரிய அளவிலான அச்சுறுத்தல்கள் பெலாரஸ் பகுதியில் இருந்து இல்லை என முக்கியமான அறிக்கை கிடைத்துள்ளது. அங்குள்ள நிலவரத்தை நான் உன்னிப்பாகக் கண்காணிக்கிறேன். ஆனால் எனது முழு கவனமும் தற்போது போரின் முன்வரிசையை குறித்தே உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரஷியாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் படை, பெலாரஸ் துருப்புகளுக்கு பயிற்சி அளிக்க ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது என்று செய்திகள் வெளியாகின. இதன் பின்னணியில் ஜெலன்ஸ்கியின் இந்த உரை பார்க்கப்படுகிறது.

    உக்ரைனுக்கு பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை வழங்கி வரும் மேற்கத்திய நட்பு நாடுகள், போரில் வேகமாக முன்னேற உக்ரைனுக்கு அழுத்தம் எதுவும் கொடுக்கவில்லை என ஜெலன்ஸ்கியின் அலுவலக தலைவர் ஆன்ட்ரி எர்மக் கூறியிருக்கிறார்.

    வாக்னர் படையால் கைப்பற்றப்பட்ட கிழக்கு நகரமான பாக்முட் அருகே உள்ள பகுதிகளையும், நாட்டின் தென்கிழக்கில் உள்ள கிராமங்களையும் மீண்டும் கைப்பற்றுவதில் மட்டுமே உக்ரைனின் பல வார கால எதிர்த்தாக்குதல் இருந்து வருகிறது.

    கிரிமியா தீபகற்பத்தில் ரஷிய படைகள் நிறுவியுள்ள தரைப்பாலத்தை துண்டிக்க உக்ரேனியப் படைகள் முயற்சி செய்து வருகின்றன.

    • லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது.
    • நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கி புறக்கணிக்கப்பட்டதாக வலைதளங்களில் பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    நேட்டோ குழுவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது. இதில் 2-வது நாளில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்றார். அப்போது பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், ஜெலன்ஸ்கி மட்டும் தனியாக நிற்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த படத்தில் பச்சை நிற ராணுவ உடையில் ஜெலன்ஸ்கி தனியாகவும், அதே நேரம் முகத்தில் கடுமையாக எதையோ யோசிப்பது போன்றும் காட்சிகள் இருந்தன.

    இதனை தொடர்ந்து நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கி புறக்கணிக்கப்பட்டதாக வலைதளங்களில் பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் அழைப்பு இல்லாமல் கூட உறுப்பினர்கள் நிகழ்ச்சிக்கு வரும் போது இதுபோன்று நடக்கும் என கிண்டல் செய்துள்ளார். இதே போல பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதே நேரம் சந்தர்ப்ப சூழல் காரணமாகவே அந்த தருணத்தில் ஜெலன்ஸ்கி மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தார் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    • எதிர்காலத்தில்தான் இணைய முடியும் என நேட்டோ நாடுகள் அறிவிப்பு
    • காலவரையறை கூறப்படாதது அபத்தமான செயல் என்கிறார் ஜெலன்ஸ்கி

    நேட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் உள்ள 31 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேற்று லிதுவேனியா நாட்டின் தலைநகர் வில்னியஸ் நகரில் இரண்டு நாள் உச்சி மாநாட்டிற்காக கூடியுள்ளனர். இந்த மாநாட்டில் உக்ரைன் நாட்டை நேட்டோவில் இணைத்து கொள்ள முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உட்பட பல நாட்டினர் எதிர்பார்த்திருந்தனர்.

    ஆனால், நேட்டோ தலைவர்கள் உக்ரைன் எதிர்காலத்தில்தான் இந்த கூட்டணியில் சேர முடியும் என்று கூறியதோடு நிறுத்தி விட்டனர். அதனை அமைப்பில் சேர எந்த முறையான அழைப்பையும் வழங்கவில்லை.

    உக்ரைனின் எதிர்காலம் நேட்டோவில் உள்ளது என்று பிரகடனத்தில் தெரிவித்த தலைவர்கள், அதற்கான செயல்முறைக்கு எந்த காலக்கெடுவையும் வழங்கவில்லை.

    நேட்டோவின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், "கூட்டணியில் உள்ள உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டு நிபந்தனைகள் நிறைவேற்றப்படும்போது கூட்டணியில் சேர உக்ரைனுக்கு அழைப்பு விடுப்போம்" என்று மட்டுமே கூறியிருக்கிறார்.

    இந்த பின்னடைவு ஜெலன்ஸ்கியை கோபப்படுத்தியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இதுகுறித்து டுவீட் செய்திருக்கும் அவர், "நேட்டோ உக்ரைனை சேர்க்க தயாராக இல்லை. இணைவதற்கு எந்த காலவரையறையும் கூறப்படவில்லை. இது அபத்தமான செயல்" என்று தெரிவித்திருக்கிறார்.

    ரஷியாவுடன் போரில் ஈடுபடும்போது நேட்டோவில் சேர முடியாது என்பதை ஜெலன்ஸ்கி ஏற்று கொள்கிறார். ஆனால், போர் முடிந்தவுடன் கூடிய விரைவில் அதில் சேர விரும்புகிறார்.

    காலக்கெடு எதுவும் வரையறுக்காததால், ரஷியாவுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் நேட்டோ ஈடுபடும்போது உக்ரைனை உறுப்பினராக்குவதா? வேண்டாமா? என தங்கள் நிலை ஒரு பேரம் பேசும் பொருளாக மாறிவிடும் சந்தர்ப்பம் உள்ளது. இது எங்களுக்கு ஒரு பலவீனம் ஆகி விடலாம்" என்று அதிபர் செலன்ஸ்கி கூறியிருக்கிறார்.

    கடந்த காலத்தில், மேற்கத்திய பாதுகாப்பு உறுதிமொழிகள், 2 ரஷிய படையெடுப்புகளைத் தடுக்கத் தவறிவிட்டன என்பதாலும், உக்ரைன் நேட்டோவின் ஒரு அங்கமானால் ரஷியாவிற்கு போரை நீடிக்க ஒரு ஊக்கத்தை அளிக்கலாம் என்பதாலும் சில உறுப்பு நாடுகள் உக்ரைனை சேர்த்துக்கொள்ள அஞ்சுகிறது.

    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி துருக்கி சென்றுள்ளார்
    • உக்ரைன்- ரஷியா போர் முடிவுக்கு வர துருக்கிய மத்தியஸ்தராக செயல்பட்டது

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி சுமார் 500 நாட்களை நெருங்கியுள்ளது. என்றாலும், இதுவரை சண்டை முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு மிகப்பெரிய அளவில் ராணுவ உதவி செய்து வருகிறது. ராணுவ உதவி கேட்பதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அதன் ஒரு பகுதியாக அவர் துருக்கி சென்றுள்ளார். துருக்கி சென்ற அவரை, அந்நாட்டு அதிபர் எர்டோகன் வரவேற்றார். அப்போது உக்ரைன் நேட்டோ படையில் இணைய சம்மதம் தெரிவித்தார். அதோடு நேட்டோவில் இணைய தகுதியான நாடு எனவும் தெரிவித்தார்.

    முன்னதாக, சுவீடன் நேட்டோ படையில் இணைய விண்ணப்பம் செய்திருந்தது. ஆனால் துருக்கி அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சுவீடன் நிரந்தர உறுப்பினர் ஆக முடியவில்லை. துருக்கி பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் குர்திஷ் மற்றும் இதர குரூப் விவகாரத்தில் போதுமான நடவடிக்கை எடுக்காததால் சுவீடனுக்கு ஆதரவு அளிக்கவில்லை. ஆனால் பின்லாந்து நேட்டோவில் இணைய ஆதரவு அளித்துள்ளது.

    துருக்கி- ஐரோப்பிய நாடுகள் இடையே உணவு தானியம் குறித்த ஒப்பந்தம் ஒன்று உள்ளது. இந்த ஒப்பந்தம் கருங்கடல் வழியாக உணவு தானியங்களை கொண்டு செல்வது என்பதாகும். இந்த ஒப்பந்தம் வரும் ஜூலை 17-ந்தேதி முடிவடைகிறது. இதை நீட்டிக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என எர்டோகன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் உக்ரைன் தானியங்கள் கருங்கடல் வழியாக எடுத்துச் செல்ல உதவியாக இருக்கும். சுமார் 30 மில்லியன் டன் உணவு தானியங்கள் வெளிநாடுகளுக்கு உக்ரைனில் இருந்து செல்வதால் உணவு தட்டுப்பாட்டை ஓரளவிற்கு சமாளிக்க முடியும்.

    ரஷியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தடைவிதித்துள்ளதால், இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க ரஷியா தயக்கம் காட்டுகிறது.

    உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இருநாடுகளிடமும் துருக்கி நெருங்கிய நட்பு வைத்துள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தராக இருக்க உதவியாக இருக்கிறது.

    சுவீடன், பின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணையாமல் நடுநிலை வகித்து வந்தன. ஆனால், உக்ரைன் போரைத் தொடர்ந்து, தற்போது தங்களது நிலைப்பாட்டை மாற்றியுள்ளன.

    • இரண்டு முறை ஜார்ஜியா அதிபராக இருந்த சாகாஷ்விலி உக்ரைன மாகாண கவர்னராகவும் இருந்துள்ளார்
    • விசாரணையின்போது மிகவும் மெலிந்து காணப்பட்டதால் உக்ரைன் கண்டனம்

    ஜார்ஜியாவின் முன்னாள் அதிபர் சாகாஷ்விலி. இவர் 2004 முதல் 2013 வரை இரண்டு முறை ஜார்ஜியாவின் அதிகபராக இருந்துள்ளார். அதன்பின் உக்ரைன் சென்று 2015-16 ஒடேசா மாகாணத்தின் கவர்னராக இருந்துள்ளார். இவருக்கு உக்ரைன் நாட்டின் குடியுரிமையும் உள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு நாடு திரும்பிய அவரை, நாடு தழுவிய நகராட்சி தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சி படைகளை ஒன்றிணைத்து வலுப்படுத்த முயற்சி செய்ததாக ஜார்ஜியா அரசு கைது செய்தது. மேலும், 2007-ம் ஆண்டு எதிர்க்கட்சி பேரணியின்போது வன்முறையை பரப்பியதாக புதிதாக ஒரு குற்றச்சாட்டும் அவர் மீது போடப்பட்டுள்ளது.

    ஜெயிலில் இருக்கும் சாகாஷ்விலி சில தினங்களுக்கு முன் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் உடல் மெலிந்து காணப்பட்டார். கைது செய்யப்பட்டபோது இருந்ததைவிட தற்போது பாதி எடையுடன் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். மேலும், சிறையில் இருக்கும்போது அவருக்கு விசம் கொடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினர்.

    இந்த நிலையில் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஜார்ஜியா தூதருக்கு சம்மன் அனுப்பியது. அதில், சாகாஷ்விலியின் உடல்நலம் குறித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தது. அவரை மருத்துவ பரிசோதனைக்காக உக்ரைனுக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறியதோடு, ஜார்ஜியா தூதர் சொந்த நாடு திரும்ப வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தது.

    இதற்கு ஜார்ஜியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில உக்ரைன் நடவடிக்கை மிகவும் அதிகமானது என ஜார்ஜியா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில் ''உக்ரைன் அதிகாரிகள் எடுத்த இந்த முடிவால் இருநாட்டு மூலோபாய உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், ஒரு இறையாண்மை நாட்டின் உள்விவகாரத்தில் நேரடியாக தலையிடுவதாக உள்ளது'' எனவும் தெரிவித்துள்ளது.

    மருத்துவ சிகிச்சைக்காக சாகாஷ்விலியை உக்ரைனுக்கு அனுப்ப வேண்டும் ஜெலன்ஸ்கியும் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஷியாவில் தற்போது நடைபெற்ற வரும் சூழ்நிலை குறித்து ஆலோசனை
    • நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்குமாறு ஜெலன்ஸ்கி கேட்டுள்ளார்

    உக்ரைன்- ரஷியா இடையே கடந்த ஒன்றரை வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. தற்போது உக்ரைன் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இதன்மூலம் சில கிராமங்களை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

    இதற்கிடையே வாக்னர் கூலிப்படை திடீரென ரஷியாவிற்கு எதிராக திரும்பியது. எவ்ஜெனி புரிகோசின் தலைமையிலான வாக்னர் கூலிப்படை ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், மாஸ்கோ நோக்கி முன்னோக்கி செல்ல இருப்பதாகவும் அறிவித்தது.

    இதனால் ரஷியாவுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது. ஒரு பக்கம் உக்ரைனுக்கு எதிராக போரிட வேண்டும். மறுபுறம் துரோகியை ஒடுக்க வேண்டும். இதனால் புதின் வாக்னர் படை வீரர்களை கண்டதும் சுட உத்தரவிட்டார். இந்த நிலையில்தான் ரஷியாவின் மிகவும் நெருங்கிய நாடான பெலாரஸ் மத்தியஸ்தராக செயல்பட்டு, புரிகோசினிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.

    அப்போது புரிகோசின் பெலாரஸ் செல்ல வேண்டும். வாக்னர் படை மீதான கிரிமினல் வழக்குகளை ரஷியா திரும்ப பெற வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனால் வாக்னர் படை மாஸ்கோ நோக்கி செல்வதில் இருந்து பின்வாங்கியது.

    இந்த பரபரப்பான சூழ்நிலை நடந்து கொண்டிருந்த வேலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

    இதுகுறித்து ஜெலன்ஸ்கி கூறுகையில் ''நான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பேசினேன். நேர்மறை மற்றும் உத்வேகம் அளிக்கும் உரையாடல் நடைபெற்றது. உக்ரைன்- ரஷியா இடையிலான போர் மற்றும் தற்போது ரஷியாவில் நடைபெற்று வரும் சூழ்நிலை குறித்து விவாதித்தோம். சர்வதேச உத்தரவு நடைமுறைக்கு வரும்வரை, சர்வதேச நாடுகள் ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்'' என்றார்.

    மேலும், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்குவது குறித்து ஜெலன்ஸ்கி பைடன் உடன் ஆலோசனை நடத்தியதை உறுதிப்படுத்திய வெள்ளை மாளிகை, இது தனி விசயம் என்று தெரிவித்துள்ளது.

    • ஆப்பிரிக்கா தலைவர்கள் புதின் உடன் பேசுவது எப்படி லாஜிக்கல் ஆகும்
    • புதின் உடன் பேச்சுவார்த்தை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை

    உக்ரைன்- ரஷியா இடையிலான போர் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா ஆக்கிரமித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

    அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன், பதில்தாக்குதல் நடத்தி ரஷியா ஆக்கிரமித்துள்ள இடங்களை மீட்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இதற்கிடையே ஆப்பிரிக்கா தலைவர்கள் இருநாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளனர். முதற்கட்டமாக நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தனர். அப்போது அமைதி பேச்சுவார்த்தை குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.

    ஆப்பிரிக்கா தலைவர்கள் இன்று ரஷிய அதிபர் புதினை சந்திக்க இருக்கிறார்கள்.

    இந்தநிலையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப்பின் ஜெலன்ஸ்கி கூறியிருப்பதாவது:-

    ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பிராந்தியத்தில் இருந்து ரஷிய துருப்புகள் வாபஸ் பெற்ற பின்னரே, அமைதி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு உள்ளது. ரஷிய அதிபர் புதினை ஆப்பிரிக்கா தலைவர்கள் சந்திக்க இருக்கிறார்கள். இது அவர்களின் முடிவு. இது எப்படி பொருத்தமுடையதாக இருக்கும். உண்மையிலேயே இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    ஆக்கிரமிப்புக்காரர்கள் எங்கள் நிலத்தில் இருக்கும்போது, ரஷியாவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் தயாராகுவது, எங்களது நிலத்தை முடக்குவதாகும். அது எல்லாவற்றையும் முடக்குவதற்கு சமம். இது வலி மற்றும் துன்பம்.

    எங்களுக்கு உண்மையான அமைதி தேவை. அதற்கு எங்களது நிலத்தில் இருந்து ரஷியா துருப்புகள் உண்மையாகவே வெளியேற வேண்டும்.

    இவ்வாறு ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

    ரஷிய துருப்புகள் உக்ரைன் எல்லையில் இருந்து வெளியேறும் வரை புதின் உடன் பேச்சுவார்த்தை இல்லை என்பதில் ஜெலன்ஸ்கி உறுதியாக உள்ளார்.

    • ரஷிய ஆதரவு கோஷங்கள், கவிதைகள் மற்றும் பாடல்ளை கற்று, அவற்றை உச்சரிக்க கட்டாயப்படுத்தியும் உள்ளனர்.
    • ரஷியாவை சேர்ந்த எஸ்-300 ரக ஏவுகணை, அந்த கட்டிடம் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.

    உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரானது, ஓராண்டை கடந்து நீண்டு கொண்டே செல்கிறது. போரில் பல அக்கிரமங்களை ரஷியா செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

    ஆனால், இதனை ரஷியா மறுத்து வருகிறது. உக்ரைனின் அணு ஆயுத பகுதிகளை இலக்காக கொண்டு தாக்குதல் நடக்கிறது என கூறியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் போரின் தொடக்கத்தின்போது உக்ரைனின் கெர்சன் நகரை ரஷியா கைப்பற்றிய பின்னர், மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் தொடக்கம் வரையிலான 8 மாதங்களாக அந்நகரை தனது கட்டுப்பாட்டில் ரஷியா வைத்திருந்து உள்ளது.

    அப்போது, கெர்சன் நகரில் சித்ரவதை முகாம்களை ரஷியா அமைத்து உள்ளது என கூறப்படுகிறது. உக்ரைன் மற்றும் உக்ரைனுடன் தொடர்பில் உள்ளவர்கள் அந்த முகாம்களில் கைதிகளாக அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் அடைக்கப்பட்டு உள்ளனர். இதுபோன்று கெர்சனில் 20 சித்ரவதை அறைகள் காணப்பட்டு உள்ளன.

    ரஷிய படைகள் இவற்றை நிறுவி, நிர்வாகம் செய்து, முகாம்களை அமைக்க நிதியுதவியும் செய்த விவரங்கள் இங்கிலாந்து வழக்கறிஞர் வெய்னே ஜோர்டாஷ் தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்து உள்ளது.

    இதன்படி, உயிர் தப்பிய ஆயிரம் பேரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சான்றுகளின் அடிப்படையில் மேற்கூறிய பல விவரங்கள் தெரிய வந்து உள்ளன. உக்ரைனில் சித்ரவதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள், அடித்து, துன்புறுத்தியும், மின்சாரம் பாய்ச்சி அதிர்ச்சி ஏற்படுத்தும் பல கொடுமைகள் நடந்து உள்ளன.

    ரஷிய ஆதரவு கோஷங்கள், கவிதைகள் மற்றும் பாடல்ளை கற்று, அவற்றை உச்சரிக்க கட்டாயப்படுத்தியும் உள்ளனர். இந்த முகாம்களில் உள்ள 400 பேரை காணவில்லை. அவர்கள் உயிரிழந்து விட்டனரா? அல்லது ரஷியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டனரா? என்பதும் தெளிவாக தெரியவில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் ஜபோரிஜ்ஜியா நகரில் மக்கள் வசிக்க கூடிய, 5 அடுக்குமாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் மீது நடந்த ரஷிய ஏவுகணை தாக்குதலால் அந்த கட்டிடம் முற்றிலும் சேதமடைந்தது.

    இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உள்ளது. பெண் ஒருவரின் உடலை உக்ரைனின் அவசரகால குழுவினர் மீட்டனர். இந்த ஏவுகணை வீச்சில் குழந்தை ஒன்றும் உயிரிழந்து உள்ளது. ரஷியாவை சேர்ந்த எஸ்-300 ரக ஏவுகணை, அந்த கட்டிடம் மீது தாக்குதல் நடத்தி உள்ளது என உக்ரைனின் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, எங்களது மக்களுக்கு ஒவ்வொரு நாளையும் பயங்கர நாளாக மாற்றுவதற்கு அந்த பயங்கரவாத நாடு விரும்புகிறது என ரஷியாவை குறிப்பிட்டார்.

    ஆனால், எங்களது நிலத்தில் தீங்கு செய்பவர்கள் ஆட்சி செய்ய முடியாது. ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரையும் நாங்கள் ஓட ஓட விரட்டுவோம். ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்திற்கும் அவர்களே முழு அளவில் பொறுப்பாவார்கள் என்று கூறியுள்ளார்.

    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டை தாண்டி விட்டது.
    • உலக பாதுகாப்புக்கு மிக முக்கியமாக இருக்கும். ரஷியாவுக்கு சீனா ஆயுதங்களை வழங்காது என நான் நம்புகிறேன்.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டை தாண்டி விட்டது. ஆனாலும் இந்த சண்டை இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. ரஷியா தொடர்ந்து தனது தாக்குதலை நடத்தி வருகிறது. அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் ஆக்ரோஷத்தடன் போரிட்டு வருகின்றனர்.

    இந்த போரை நிறுத்துமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா. சபையிலும் ரஷியாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு 141 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில் அமைதி பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என சீன அதிபர் ஜின்பிங் வலியுறுத்தி இருந்தார்.

    இதை ஏற்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சீன அதிபரை சந்திக்க முடிவு செய்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தாக்குதலுக்கு உள்ளான ஒரு நாடு மட்டுமே எந்தவொரு அமைதி முயற்சியையும் தொடங்க முடியும். நான் சீன அதிபர் ஜின் பிங்கை சந்திக்க திட்டமிட்டு உள்ளேன். இது உலக பாதுகாப்புக்கு மிக முக்கியமாக இருக்கும். ரஷியாவுக்கு சீனா ஆயுதங்களை வழங்காது என நான் நம்புகிறேன்.

    மூன்றாம் உலகப்போரின் அபாயத்தை தவிர்ப்பதற்காக ரஷியாவுக்கு சீனா ஆயுத வினியோகத்தை தடுக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா எனது தாய்நாடு, உக்ரைன் எனக்கு வாழ்க்கை தந்த நாடு.
    • ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து உள்ளது. கடந்த 10 மாதத்துக்கு மேல் உக்ரைன் நாட்டில் பல்வேறு நகரங்கள் மீது ரஷியா குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    போர் காரணமாக உக்ரைனில் ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான வெளிநாட்டினர் வெளியேறிவிட்டனர். ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் உக்ரைனின் கார்கிவ் நகரில் உணவு விடுதி நடத்தி வரும் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பாலா சங்கர் என்பவர் உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவி செய்து வருகிறார்.

    அவர் போர் முனையில் உள்ள வீரர்களுக்கு மருந்து பொருட்கள், ஹெல்மெட்கள், வெப்ப உடைகள், ஷூக்கள், குண்டுகள் துளைக்காத உடைகள், துப்பாக்கி குண்டுகள் மற்றும் கண்காணிப்பு டிரோன்கள் உள்ளிட்டவற்றை அங்குள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தரவின்படி சென்று சேர்த்து வருகிறார்.

    போர் மேகம் சூழ்ந்துள்ள சாலைகளில் அவர் பயணம் செய்து ராணவத்தினருக்கு உதவிகள் செய்கிறார்.

    இது தொடர்பாக பாலா சங்கர் கூறும்போது, 'எனக்கு வாழ்க்கை தந்த நாட்டை இக்கட்டான காலத்தில் கைவிடமுடியாது. இந்தியா எனது தாய்நாடு, உக்ரைன் எனக்கு வாழ்க்கை தந்த நாடு. நான் என்ன வேண்டுமானாலும் செய்ய விரும்புகிறேன்' என்றார்.

    போர் ஆரம்பித்த கால கட்டத்தில் பாலா சங்கர் தனது உணவு விடுதி மூலம் பலருக்கு உணவு வழங்கி உதவி செய்தார். பாலா சங்கரின் இந்த ஆபத்தான சேவையை அவரது குடும்பத்தினர் நினைத்து அச்சத்தில்ல் உள்ளனர். எனினும் பாலாசங்கர் தனது சேவையை தொடர்ந்து வருகிறார்.

    அவரது சகோதரர்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்து விட்டனர். மனைவி மற்றும் மகன் போலந்து நாட்டிற்கு இடம்மாறி உள்ளனர். பாலா சங்கர் கடந்த 2013-ம் ஆண்டு மருத்துவமாணவராக உக்ரைன் நாட்டுக்கு சென்று இருந்தார்.

    கடந்த 2014-ம் ஆண்டு கிரிமியாவை ரஷியா இணைந்த இணைந்த பிறகு இது அவருக்கு 2-வது போர் ஆகும். படிப்பை முடித்த பிறகு பாலா சங்கர் உக்ரைன் நாட்டின் நிரந்தர குடியுரிமை பெற்றார். மேலும் உணவகத்தை தொடங்கி நடத்தினார்.

    கடந்த 2015-ம் ஆண்டு அவர் கார்கிவ் தமிழ்ச்சங்கம் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் கடந்த ஆண்டு இதனை தனது மகன் மாறன் பெயரில் அறக்கட்டளையாக மாற்றி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    இதுவரை இந்த போரினால் 243 குழந்தைகள் இறந்துள்ளனர். 446 பேர் காயம் அடைந்துள்ளனர்.
    கீவ்:

    ரஷிய ராணுவம் இதுவரை 2 லட்சம் குழந்தைகளை கடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

    உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100-வது நாளை நெருங்கி வருகிறது. இந்த போர் உலக அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரினால் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் இந்த போர் குறித்து  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ரஷிய ராணுவம் உக்ரைனில் இருந்து 2 லட்சம் குழந்தைகளை கட்டாயமாக கடத்தி சென்றுள்ளது. கடத்தப்பட்ட இந்த குழந்தைகள் ரஷியாவின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இந்த குழந்தைகளில் சிலர் பெற்றோர்களிடம் இருந்தும், குடும்பங்களில் இருந்தும் பிரிக்கப்பட்டவர்கள் ஆவர். இந்த கிரிமினல் திட்டத்தின் நோக்கம் குழந்தைகளை கடத்துவது மட்டுமல்ல, அவர்களை பல்வேறு இடங்களுக்கு அனுப்பும்போது உக்ரைனை மறந்துவிடுவார்கள். மேலும் அவர்களால் திரும்பி வரவே முடியாது.

    இந்த குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை உக்ரைன் தண்டிக்கும், ஆனால் அதற்கு முன் போர்களத்தில், ‘உக்ரைனை யாரும் கைப்பற்ற முடியாது. நாங்கள் சரணடையமாட்டோம். எங்கள் குழந்தைகள் ஒன்றும் உடைமை கிடையாது’ என்பதை நாம் நிரூபிப்போம்.

    இதுவரை இந்த போரினால் 243 குழந்தைகள் இறந்துள்ளனர். 446 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இவ்வாறு ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
    ×