search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுரங்கப்பாதை விபத்து"

    • இன்னமும் 65 மீட்டர் தூரத்துக்கு மலை உச்சியில் இருந்து துளை போட வேண்டியது உள்ளது.
    • மேலும் 4 இடங்களில் இருந்து 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ள சுரங்கப்பாதை நோக்கி துளை போடும் பணிகள் நடந்து வருகின்றன.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலை பகுதியில் 4.50 கிலோ மீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது.

    கடந்த 12-ந்தேதி தீபாவளி தினத்தன்று காலை சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 70 மீட்டர் தூரத்துக்கு இடிந்ததால் சுரங்கப் பாதையின் மையப் பகுதிக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

    அவர்களை மீட்க 70 மீட்டர் இடிபாடுகளுக்குள் குழாய்களை செலுத்தி மீட்கும் பணி நடந்தது. முதல் தடவை நடந்த முயற்சியில் எந்திரம் பழுது அடைந்ததால் அதிநவீன ஆகர் எந்திரம் கொண்டு வரப்பட்டு துளையிட்டு குழாய் அமைக்கும் பணி நடந்தது.

    47 மீட்டர் தூரத்துக்கு துளையிட்டு குழாய் அமைக்கப்பட்ட நிலையில் ஆகர் எந்திரத்தின் துளையிடும் பிளேடுகள் வெடித்து சிதறி நொறுங்கி போனதால் மீட்பு பணிகளில் முடக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மலை உச்சியில் இருந்து துளை போட்டு 41 தொழிலாளர்களை மீட்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மலை உச்சியில் சாலை அமைக்கப்பட்டு நவீன எந்திரம் கொண்டு செல்லப்பட்டது. 2 இடங்களில் இருந்து துளை போட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை மலை உச்சியில் இருந்து செங்குத்தாக சுரங்கப்பாதை நோக்கி துளையிடும் பணிகள் நடந்து வருகின்றன.

    அப்படி துளையிடும் பகுதியில் 700 மி.மீட்டர் சுற்றளவு கொண்ட இரும்பு குழாய்களை உள்ளே செலுத்தும் பணிகளும் நடந்து வருகிறது. இன்று காலை வரை 22 மீட்டர் தூரத்துக்கு மலை உச்சியில் இருந்து செங்குத்தாக துளை போடப்பட்டு உள்ளது.

    இன்னமும் 65 மீட்டர் தூரத்துக்கு மலை உச்சியில் இருந்து துளை போட வேண்டியது உள்ளது. இன்னும் 4 நாட்கள் அதற்கு தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பக்க வாட்டில் கிடைமட்டமாக துளை போடும் பணியில் சிக்கி இருந்த ஆகர் எந்திரத்தை அகற்றும் பணிகள் நடந்து வந்தன. இன்று காலை அந்த எந்திரம் முழு மையாக அகற்றப்பட்டது. இதையடுத்து அந்த பாதையில் ஆட்கள் மூலம் துளையிடும் பணி தொடங்கி உள்ளது.

    இதுவரை ஆகர் எந்திரம் மூலம் 47 மீட்டருக்கு துளையிட்டு குழாய் பொறுத்தப்பட்டு இருப்பதால் அந்த குழாய் வழியாக 2 வீரர்கள் உள்ளே சென்று தொடர்ந்து அங்கு தோண்டும் பணியை மேற்கொண்டுள்ளனர். ஒரு வீரர் துளையிடும் பணியை மேற்கொள்வார். மற்றொருவர் அந்த இடிபாடு கழிவுகளை வெளியில் அள்ளும் பணியில் ஈடுபடுவார்.

    இப்படி ஆட்கள் மூலம் துளைபோடும் பணி சுமார் 10 முதல் 12 மீட்டர் தூரத்துக்கு செய்ய வேண்டி உள்ளது. இந்த ஆட்கள் மூலம் துளைபோடும் பணியை செய்ய சுமார் 36 மணி நேரம் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே மேலும் 4 இடங்களில் இருந்து 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ள சுரங்கப்பாதை நோக்கி துளை போடும் பணிகள் நடந்து வருகின்றன. மொத்தம் 6 விதமாக துளை போடப்பட்டு குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. எந்த பாதையில் முதலில் பணிகள் நிறைவு பெறுகிறதோ அதன் வழியாக 41 தொழிலாளர்களும் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே 41 தொழிலாளர்கள் சிக்கி சில்க்யாரா மலை பகுதியில் இன்று முதல் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இன்று பிறபகல் முதல் அங்கு மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா எச்சரித்துள்ளது. இதனால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதை தவிர்க்க மாற்று ஏற்பாடுகளை மீட்பு குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
    • 9 மீட்டர் தூரம் இருக்கும் நிலையில், துளையிடும் வழியில் கான்கிரீட் தடையை ஏற்படுத்தியதால் தாமதம்.

    41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள சுரங்கப்பாதையில் மாற்று பாதை அமைத்து, அவர்களை மீட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய 95 சதவீதம் பணி முடிவடைந்து, விரைவில் அவர்களை மீட்கும் பணி தொடங்கப்போகிறது.

    அவர்கள் எவ்வாறு வெளியே கொண்டு வரப்பாடுவார்கள் என்பது குறித்து தேசிய பேரிடர் மீட்புப்படை ஜெனரல் அதுல் கர்வால் கூறியதாவது:-

    தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழாய் மூலம் உள்ளே செல்வார்கள். அவர்கள் தொழிலாளர்கள் இருக்கும் இடத்தை அடைந்ததும், அவர்கள் கொண்டு சென்றுள்ள பொருட்கள் மூலம், தொழிலாளர்களை ஒருவர் பின் ஒருவராக வெளியே அனுப்பி வைப்பார்கள்.

    உயரம் குறைவாக உள்ள தொழிலாளர்கள் வீல் ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்கப்பட்டு, என்டிஆர்எஃப் வீரர்கள் மூலம் ரோப் கட்டி இழுக்கப்படுவார்கள்.

    அதற்கு முன்னதாக, 800 மி.மீ. விட்டம் குழாய் கொண்ட மீட்பு குழு தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழு வீரர்களால் சுத்தம் (துளையில் இறக்கும்போது, வெல்டிங் வைக்கும்போது துகள் சிக்கியிருந்தால்) செய்யப்படும். இது ஸ்டெச்சர் செல்லும் வழியில் எந்த பொருட்களும் தடையை ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்து கொள்ளும்.

    800 மி.மீ. குழாய்கள் ஏறக்குறைய 32 இன்ச் அகலம் கொண்டது. இது போதுமானது. 22 முதல் 24 இன்ச் அகலம் கிடைத்தால் கூட, எங்களால் அவர்களை வெளியே இழுக்க முடியும்.

    இவ்வாறு அதுல் கர்வால் தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்பு வரை நடைபெற்ற மீட்புப்பணி விவரங்கள்

    மீட்க பேரிடர் மீட்பு படையினரும், மீட்பு குழுவினரும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இன்று 12-வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது. மீட்பு பணிகளில் பல்வேறு சவால்களை சந்தித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாகவே மீட்பு பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

    நேற்று முன்தினம் சுரங்கத்துக்குள் சிறுதுளை வழியாக எண்டாஸ்கோபி கேமரா செலுத்தும் பணி வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த எண்டோஸ்கோபி கேமரா டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் வரவழைக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

    இதையடுத்து 41 தொழிலாளர்களும் நல்ல நிலையில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அந்த கேமரா மூலம் 41 தொழிலாளர்களையும் வெளியில் இருக்கும் மீட்பு குழுவினர் உள்பட அனைவருமே பார்த்தனர். அந்த வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டன.

    இதையடுத்து, சுரங்கத்துக்குள் செலுத்தப்பட்ட 6 அங்குல குழாய் மூலம் தொழிலாளர்களுக்கு சூடான உணவுகள் நேற்று முன்தினம் முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

    சுரங்கப்பாதைக்குள் 'ஆகர்' என்ற எந்திரம் மூலம் 51 மீட்டர் தூரத்துக்கு துளையிடும் பணி முடிந்துவிட்டது. தொழிலாளர்கள் 57 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளனர். இன்னும் 6 மீட்டர் ஆழம் குழி தோண்டினால் சுரங்கப்பாதைக்குள் குழாய் மூலமாக வழி ஏற்படுத்திவிடலாம்.

    இதற்காக இரும்பு குழாய்கள் வெல்டிங் செய்யப்பட்டு, தோண்டப்பட்ட துளைக்குள் இறக்கப்படுகின்றன. இந்த குழாய்களை வெல்டிங் செய்வது முக்கியமான பணி என்பதால் இதற்கு தாமதம் ஆனது. மேலும் 18 மீட்டர் குழாய் 3 பிரிவுகளாக உள்ளே இறக்கப்பட்டுள்ளது.

    48 மீட்டருக்கு மேல் துளையிட்ட நிலையில் வெறும் 9 மீட்டர் இருக்கும்போது நடுவில் கான்கிரீட் ஒன்று தடுப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கான்கிரீட்டின் நடுவில் 16 மி.மீ முதல் 20 மி.மீ அளவு உள்ள கம்பிகள் குறுக்கே இருக்கிறது. அந்த கம்பிகளை அறுத்து எடுப்பது மிகவும் சவாலான பணியாக உள்ளது. அந்த கம்பியை அறுக்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

    இதையடுத்து சுரங்கப்பாதை திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்தின் ஊழியர்கள் அனுப்பப்பட்டு கம்பியை அறுக்கும் பணியை மேற்கொண்டனர். அவர்கள் மூலம் கம்பிகளை அறுத்து அகற்றும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த கம்பிகளை அறுக்கும் பணி கடுமையான போர் நடப்பதற்கு நிகரான சவாலான பணியாக உள்ளது. கம்பியை அறுத்து அகற்றும் பணி நடந்து வரும் நிலையில் தற்போது 'ஆகர்' எந்திரத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    கான்கிரீட்டில் உள்ள கம்பியை அறுத்து எடுத்ததும் அதை மீண்டும் வெல்டிங் செய்து பாலிஷ் செய்ய வேண்டும். இதற்காக வெல்டிங் செய்வதில் திறன் வாய்ந்த நிபுணர்கள் 5 பேர் சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை 9.30 மணியளவில் வரவழைக்கப்பட்டனர். கம்பியை அறுத்து முடிந்ததும் அவர்கள் வெல்டிங் செய்து பாலிஷ் செய்வார்கள். இந்த பணிகள் முடிந்து விட்டால் அதன் பிறகு உடனடியாக துளையிட்டு 41 தொழிலாளர்களையும் எளிதாக மீட்டு விடலாம்.

    எனவே 41 தொழிலாளர்களையும் மீட்பதற்கான இறுதிகட்ட முயற்சியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். முதலில் இன்று பிற்பகல் அல்லது மாலைக்குள் 41 பேரும் மீட்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கான்கிரீட் கம்பிகளை அறுத்து அகற்றுவது மீட்பு குழுவினர் எதிர்பார்த்ததை விட சவால் நிறைந்த பணியாக இருந்தது.

    எனவே கம்பிகளை அறுத்து அகற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இன்று பகலில் கான்கிரீட் இரும்பு கம்பி அறுத்து அகற்றப்பட்டது. அதன்பிறகு சுரங்கப் பாதைக்குள் 800 மி.மீ விட்டம் கொண்ட குழாய் இறக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. இதனால் மீட்பு பணி நிறைவடைய இன்று இரவாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து மீட்பு குழு அதிகாரியும், பிரதமர் அலுவலகத்தின் முன்னாள் ஆலோசகருமான பாஸ்கர் குல்பே இன்று மதியம் கூறுகையில், 'மீட்பு பணி முடிவடைய இன்னும் 12 முதல் 14 மணி நேரம் ஆகும். அதன் பிறகு தொழிலாளர்களை ஒவ்வொருவராக வெளியே கொண்டு வர கூடுதலாக 3 மணி நேரம் தேவைப்படும்.

    கான்கிரீட் கம்பி குறுக்கிட்டதால் இடையில் துளையிடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கான்கிரீட் கம்பியை அறுத்து அகற்றிய பிறகு துளையிடும் பணி மீண்டும் தொடங்கியது. எனவே இன்று இரவுக்குள் 41 தொழிலாளர்களும் மீட்கப்படுவார்கள்' என் றார்.

    மேலும் மீட்பு பணியில் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கழகம் உள்பட அரசின் 5 நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. தொழிலாளர்கள் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜன், குடிநீர் போதிய அளவில் உள்ளது. சுரங்கப் பாதைக் குள் மண் சரிவு ஏற்பட்ட போதும், மின்தடை ஏதும் ஏற்படவில்லை. சுரங்கப் பாதைக்குள் மின்னொளி வெளிச்சமும் நன்றாக உள்ளது.

    இதற்கிடையே தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும் தேவைப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க 8 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை, சுரங்கப்பாதைக்கு அருகே உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு 15 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் 41 ஆம்புலன்ஸ் வாகனங்களும், ஒரு ஹெலிகாப்டரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    இன்று காலையில் மருத்துவர்கள் குழுவினர் சுரங்கப்பாதைக்குள் சென்றனர். ஆம்புலன்சில் இருந்து சில மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை எடுத்துக்கொண்டு அவர்கள் உள்ளே சென்றுள்ளனர். டாக்டர்களுடன், நர்சுகளும் சுரங்கப்பாதைக்குள் சென்றுள்ளனர். அவர்கள் 41 தொழிலாளர்களுடன் தொடர்பு கொண்டு பேசி அவர்களின் உடல்நிலை பற்றி அறியவும் உள்ளே சென்றனர்.

    மேலும் 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்ட பிறகு அவர்களை மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்சில் ஏற்ற சுரங்கப்பாதைக்குள் 300 மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். எனவே ஆம்புலன்சுகளை சுரங்கப்பாதைக்குள் கொண்டு சென்று தொழிலாளர்களை ஏற்றி வர வழி உள்ளதா என்று மருத்துவ குழுவினர் ஆராய்ந்தனர்.

    தற்போதைய நிலையில் ஒரு ஆம்புலன்ஸ் உள்ளே சென்று ஒரு தொழிலாளியை ஏற்றி வந்த பிறகு, ஒவ்வொரு ஆம்புலன்சாக உள்ளே சென்று அனைத்து தொழிலாளர்களையும் வெளியே கொண்டு வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மீட்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், 41 தொழிலாளர்களின் குடும்பத்தினரும் உத்தரகாசிக்கு வரவழைக்கப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, மத்திய மந்திரி வி.கே.சிங் ஆகியோர் உத்தரகாசி விரைந்தனர். 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ள சுரங்கப்பாதை பகுதிக்கு சென்ற அவர்கள் மீட்பு பணியை பார்வையிட்டனர்.

    • மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, உத்தரகாசி வந்துள்ளார்.
    • புஷ்கர் சிங் தாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி மீட்பு பணிகள் குறித்த விவரத்தை கேட்டறிந்தார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்களையும் மீட்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, உத்தரகாசி வந்துள்ளார். அவரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி மீட்பு பணிகள் குறித்த விவரத்தை கேட்டறிந்தார்.

    போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் பற்றியும், அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றியும் பிரதமர் மோடியிடம் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி எடுத்துக் கூறினார்.

    • முன்னோடி நிறுவனமான பி.ஆர்.டி. நிறுவனம் தயாரித்த ஜி.டி.-5 என்ற நவீன வசதிகள் கொண்ட ரிக்கை பயன்படுத்துகின்றனர்.
    • தொழிலாளர்கள் எவ்வாறு இருக்கிறார்கள்? என்று கண்டறிய கேமரா மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் சாலை அமைக்க கடந்த 12-ந்தேதி சுரங்கப்பாதை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 41 பேர் சுரங்கப்பாதையில் சரிவு ஏற்பட்டதால் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

    11 நாட்களாக அவர்களை மீட்கும் பணிகள் தீவரமாக நடந்து வருகிறது. பல்வேறு தொழில் நுட்பங்கள் பயன்படுத்தி மீட்பு பணி நடந்து வருகிறது. எண்டோஸ்கோபி கேமரா மூலம் 41 தொழிலாளர்களும் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த சூழலில் தொழிலாளர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த தரணி ஜியோ டெக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் இம்மாதிரியான பணிகளில் நிபுணத்துவம் பெற்ற வல்லுனர்களை கொண்டது ஆகும்.

    இவர்களது முயற்சியால் தான் தொழிலாளர்கள் பத்திரமாக இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது இடிபாடுகளை அகற்றும் பணியில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்கு அவர்கள் ரிக் தயாரிப்பில் முன்னோடி நிறுவனமான பி.ஆர்.டி. நிறுவனம் தயாரித்த ஜி.டி.-5 என்ற நவீன வசதிகள் கொண்ட ரிக்கை பயன்படுத்துகின்றனர்.

    இந்த ரிக் மிகவும் நவீனமானது. 360 டிகிரியிலும் சுழலும் வசதி கொண்டது. அதனால் கீழே, மேலே, பக்கவாட்டு என எந்த நிலையிலும் துளையிடும் திறன் கொண்டது. 6 அங்குல விட்டத்துடன் பாறைகளை உடைத்து 80 மீட்டர் துளை ஏற்படுத்தும் வலிமை கொண்டது. மேலும் துளையிடும்போதே துளையில் குழாயை சொருகும் வசதி உள்ளது.

    இது குறித்து பி.ஆர்டி. நிறுவன மேலாண் இயக்குநர் பரந்தாமன், தரணி ஜியோடெக் நிறுவனத்தின் மேலாளர் இயக்குநர் ஜெயவேல் ஆகியோர் கூறியதாவது:-

    உத்தரகாசியில் சுரங்கத்தில் தொழிலாளர்களை மீட்கும் முயற்சிக்கு தரணி ஜியோடெக் நிறுவனத்தை அரசு அணுகியது. சுரங்கம் அமைத்தல், அணை கட்டுதல், சாலை அமைத்தல் போன்ற பணிகளுக்கு நவீன தொழில் நுட்பங்களை தரணி ஜியோடெக் நிறுவனம் கடந்த 25 வருடங்களாக அளித்து வருகிறது.

    அதேபோல் தொழிலாளர்களை மீட்கும் சவாலான முயற்சியில் பி.ஆர்.டி.யின் ஜிடி-5 ரிக் பயன்படுத்தப்படுகிறது. 6 இன்ச் அகலத்தில் சுமார் 110 அடி ஆழத்தில் துளையமைத்து அதன் மூலம் சிமெண்ட்ரி டெக்னாலஜியை கொண்டு துளை அமைத்து செல்லும்போது கேசிங் பைப்பையும் உடன் அனுப்பி அதன் மூலம் எந்த சரிவு ஏற்படாமல் ஆழத்தில் சிக்கி இருந்தவர்களை எட்டும் வகையில் செய்தோம்.

    இதனால் சுரங்கப்பாதைக்குள் சிக்கி இருப்பவர்கள் பாதுகாப்பாக இருப்பதையும் அவர்களை மாற்று தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மீட்க முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்படுத்தி கொடுத்தது. இதற்கான துளையிடும் எந்திரம் வெளிநாடுகளில் இறக்குமதி செய்தால் ரூ.2 கோடி ஆகும் என்கிற நிலையில் திருச்செங்கோட்டில் உள்ள பி.ஆர்.டி. நிறுவனம் இதனை 85 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறது.

    சிமெண்ட்ரி சிஸ்டம் என்ற ஒரு சிஸ்டத்தை நாங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வைத்திருந்தோம். இந்த சிமெண்ட்ரி சிஸ்டத்தில் துளையிடும்போது உடன் செல்லும் கேஸிங் பைப் ட்ரில்லரை வெளியில் எடுக்கும் போது துளைக்குள்ளேயே நின்றுவிடும் தொழில்நுட்பமாகும். இந்த சுரங்கப்பாதையில் 6 இன்ஞ் துளை அமைத்து பணியை மேற்கொள்ளும் போது முதல் முறையாக இரும்பு ராடு ஒன்று குறுக்கிட்டதால் தோல்வி கண்டோம். 2-வது முறை ஒரு தடங்கல் ஏற்பட்டு 3-வது முறையாக வெற்றி பெற்றோம்.

    இதன் மூலம் தான் தற்போது சுரங்க பாதைக்குள் சிக்கியிருக்கிற தொழிலாளர்கள் எவ்வாறு இருக்கிறார்கள்? என்று கண்டறிய கேமரா மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. உணவு, மருந்து, குடிநீர் ஆகியவையும் இதன் மூலம் வழங்கப்படுகிறது. எங்களுக்கு இந்த எந்திரம் இருந்ததால் தான் இந்த பணியை நாங்கள் செய்ய முடிந்தது. இந்த எந்திரத்தை உருவாக்கிய பி. ஆர். டி நிறுவனத்தை பாராட்டுகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • 41 தொழிலாளர்களும் சிக்கியுள்ள சுரங்கத்துக்குள் அதிர்ஷ்டவசமாக மின் இணைப்பும், குடிநீர் இணைப்பும் உள்ளது.
    • இன்று 9-வது நாளாக மீட்பு பணிகள் முழு வீச்சில் நடக்கிறது.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி பகுதியில் பிரம்மகால்-யமுனோத்திரி நெடுஞ்சாலையில் சில்க் யாரா-தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே மலைக்கு கீழ் நீண்ட சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு எளிதான போக்குவரத்து வசதிக்காக இந்த சுரங்கப்பாதையை கடந்த சில ஆண்டுகளாக அமைத்து வருகிறார்கள்.

    கடந்த 12-ந்தேதி சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது அதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக் கொண்டனர். சுரங்கம் தோண்ட வேண்டிய மலை பகுதிக்கு கீழும் ஏற்கனவே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு இடையில் அவர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள்.

    அவர்களை மீட்க பேரிடர் மீட்பு குழுவினர் கடந்த 8 நாட்களாக போராடி வருகிறார்கள். முதலில் 3 அடி சுற்றளவு கொண்ட குழாய்களை உள்ளே செலுத்தி 41 தொழிலாளர்களையும் அதன் வழியாக மீட்கலாம் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.

    இதையடுத்து டெல்லியில் இருந்து அமெரிக்காவில் தயாரான அதிநவீன எந்திரம் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. அந்த எந்திரம் சுரங்கப்பாதைக்குள் மண் சரிந்து விழுந்துள்ள 70 மீட்டர் தூரத்தில் 24 மீட்டர் தூரத்துக்கு தோண்டியது. அதற்கு பிறகு மலைப்பகுதியில் குறிப்பாக சுரங்கப்பாதை மேல் அதிர்வுகள் ஏற்பட்டதால் ஒட்டுமொத்த சுரங்கப்பாதையும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது.

    இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் அமெரிக்க எந்திரம் மூலம் சுரங்கம் தோண்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதற்கிடையே சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு தொடர்ந்து சிறிய குழாய் வழியே உலர் பழங்கள், உணவு வகைகள், ஆக்சிஜன் காற்று அனுப்பப்பட்டு வருகின்றன.

    41 தொழிலாளர்களும் சிக்கியுள்ள சுரங்கத்துக்குள் அதிர்ஷ்டவசமாக மின் இணைப்பும், குடிநீர் இணைப்பும் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் சற்று தைரியமான மனநிலையுடன் வெளியில் இருப்பவர்களுடன் பேசி வருகிறார்கள். 41 தொழிலாளர்கள் எத்தகைய நிலையில் இருக்கிறார்கள் என்பதை சிறிய ரக டிரோன் மூலம் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் 41 தொழிலாளர்களையும் மீட்க சுரங்கப்பாதை மேல் பகுதியில் மலை உச்சியில் இருந்து துளையிட்டு மீட்பு பணிகளை செய்யலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது. இந்த பணிகள் செய்வதற்கு எந்திரங்களை எடுத்து செல்ல மலை மீது சுமார் ஆயிரம் மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்க வேண்டும். அந்த பணிகள் நேற்று நடந்தது.

    கடந்த 2015-ம் ஆண்டு இதுபோல் நடந்த ஒரு விபத்தில் மலை உச்சியில் இருந்து துளையிட்டு பணியாளர்கள் மீட்கப்பட்டனர். அதே தொழில்நுட்பத்தை கையாள முடிவு செய்து மலையில் சாலை அமைக்கும் பணியை எல்லைப்படை வீரர்கள் தொடங்கி உள்ளனர். இன்றும் மலையில் சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இதற்கிடையே 41 தொழிலாளர்களை மீட்பதற்கு 5 முன்னணி நிறுவனங்கள் களத்தில் குதித்து உள்ளன. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் (ஓ.எம்.சி.) சட்லஜ் நதி வாரியம் ரெயில் நிறுவனம், தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம், தெக்ரி டெக்ரோ டெவலப் மெண்ட் கார்ப்பரேஷன் ஆகிய 5 நிறுவனங்களும் 5 விதமான திட்டங்களுடன் மீட்பு பணியில் தங்களது நிறுவனங்களை இறக்கி விட்டுள்ளன.

    இவர்களுக்கு பேரிடர் மீட்பு குழு மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வீரரக்ள் துணையாக இருந்து பணிகளை தொடங்கி உள்ளனர். சட்லஜ் நதி நீர் நிறுவனத்தினர் மலை உச்சியில் இருந்து சுரங்கப்பாதையை இணைக்கும் துளையை போடுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் மற்ற நிறுவனங்கள் மூலமாகவும் சுரங்கப்பாதைக்குள் இருக்கும் 41 தொழிலாளர்கள் இருக்கும் பகுதியை இணைக்க 3 இடங்களில் துளை போட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இப்படி பல்வேறு வகைகளிலும் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

    இன்று 9-வது நாளாக மீட்பு பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. இன்று தொடங்கி இருக்கும் பணிகளில் திட்டமிட்ட வெற்றி கிடைத்தால் இன்னும் 2 தினங்களில் 41 தொழிலாளர்களையும் மீட்க முடியும் என்று மத்திய-மாநில அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இன்று காலை பிரதமர் மோடி மீட்பு குழு உயர் அதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டு பேசினார். மீட்பு பணிகள் எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதை கேட்டறிந்தார்.

    • சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் அடுத்தடுத்து மண்ணில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
    • 41 தொழிலாளர்களும் நல்ல மனநிலை மற்றும் நல்ல உடல்நலத்துடன்இருப்பார்களா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    சுரங்கப் பாதையின் நடுப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் 41 தொழிலாளா்கள் சுரங்கத்தின் நடுவில் சிக்கிக் கொண்டனா்.

    அவா்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பேரிடா் மீட்புக் குழுவினா் சுமார் 200 பேர் ஈடுபட்டுள்ளனா். முன்னதாக இடிபாடுகளில் துளையிட்டு பெரிய இரும்புக் குழாக்களைச் செலுத்தி, அவற்றின் வழியே தொழிலாளா்களை வெளியே மீட்டு வர திட்டமிடப்பட்டது. ஆனால் துளையிடும் எந்திரம் சரிவர வேலை செய்யவில்லை.

    இதையடுத்து வேறு எந்திரம் மூலம் சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள பாறை சரிவை துளையிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி டெல்லியில் இருந்து இந்திய விமானப் படையின் சி-130 ஹொ்குலிஸ் விமானத்தின் மூலமாக விபத்துப் பகுதிக்கு 25 டன் அளவிலான அமெரிக்காவில் தயாரான அதி நவீன கனரக எந்திரம் கடந்த 15-ந் தேதி கொண்டு செல்லப்பட்டது.

    இந்த எந்திரம் ஒரு மணி நேரத்தில் 6 மீட்டர் தூரத்துக்கு பாறைகளில் துளையிடும் ஆற்றல் கொண்டது. இந்த நவீன எந்திரம் மூலம் சுரங்கப்பாதையின் இடிபாடுகளில் துளையிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

    சுரங்கப் பாதையின் நடுப்பகுதியில் சரிந்து விழுந்துள்ள பாறை கலந்த மண் பகுதி சுமார் 70 மீட்டர் தூரத்துக்கு உள்ளது. அந்த 70 மீட்டர் தூரத்தையும் நவீன எந்திரம் மூலம் துளையிட்டு சென்றால்தான் 41 தொழிலாளர்களையும் மீட்க முடியும்.

    தொழிலாளர்கள் சிக்கி இருக்கும் பகுதிக்குள் தொடர்ந்து ஆக்சிஜன் மற்றும் உணவு பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையே நவீன எந்திரம் மூலம் நேற்று காலை தொடங்கிய துளையிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் 24 மீட்டர் தூரத்துக்கு அந்த எந்திரம் துளையிட்டு இருந்தது.

    அதன் பிறகு பாறைகளில் மிகவும் வலுவான பகுதி இருந்ததால் துளையிடும் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டது. இன்னும் பாதிக்கு மேற்பட்ட தொலைவுக்கு துளையிட வேண்டியது உள்ளது.

    இதற்கிடையே 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள சுரங்கப்பாதையில் உலோகப்பகுதி ஒன்று உள்ளது. இந்த உலோகப் பகுதியை வெட்டி அகற்றினால் தான் சுரங்கப் பாதையில் துளையிடும் பணியை தொடர முடியும். எனவே அந்த உலோக பகுதியை கட்டர் மூலம் வெட்டி அகற்றுவதற்காக பணிகள் நடந்தன.

    நேற்று அந்த பணிகள் நடந்து கொண்டிருந்த போது சுரங்க பாதை இடிந்து விழுவதை போன்று பயங்கர சத்தம் கேட்டது. இதனால் மீட்பு குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக மீட்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நேற்று மாலை 4 மணிக்கு நிறுத்தப்பட்ட மீட்பு பணிகள் இன்று மதியம் வரை தொடங்கவில்லை.

    சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் அடுத்தடுத்து மண்ணில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுரங்கப் பாதைக்குள் இடிபாடுகளை நவீன எந்திரங்கள் மூலம் அகற்றும்போது கடுமையாக அதிர்வு ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.

    இந்த அதிர்வு காரணமாக சுரங்கப்பாதை ஓட்டுமொத்தமாக இடிந்து விழுந்துவிடுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து சுரங்கப்பாதையின் மேல் இருந்து துளைபோட்டு 41 தொழிலாளர்களை மீட்கலாமா? என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    சுரங்கப்பாதை மீட்பு பணிகளில் அடுத்தடுத்து இடையூறு ஏற்படுவதால் 41 பேரையும் திட்டமிட்டப் படி மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) 7-வது நாளாக 41 தொழிலாளர்களையும் மீட்கும் பணி நடக்குமா? என்று கேள்விக்குறி நீடிக்கிறது.

    சுமார் 150 மணி நேரம் கடந்துவிட்டதால் சுரங்கப் பாதைக்குள் சிக்கி இருக்கும் 41 தொழிலாளர்களும் நல்ல மனநிலை மற்றும் நல்ல உடல்நலத்துடன்இருப்பார்களா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    • மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விதுரா பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்.

    திருவனந்தபுரம்:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப் பாதை அமைக்கும்பணியில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மீட்பு பணியில் ஈடுபட கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவர், தாமாகவே முன்வந்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விதுரா பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்.

    தேசிய பேரிடர் மீட்பு படையில் உறுப்பினராக உள்ள இவர், பல்வேறு இயற்கை பேரழிவு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். முக்கியமாக 2013-ல் உத்தரகாண்டில் ஏற்பட்ட மேகவெடிப்பு, 2018-ல் ஏற்பட்ட வெள்ள பேரழிவு, 2019-ல் காவலபாரா மற்றும் 2020-ல் பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவு, உத்தரகாண்ட் தபோவன் சுரங்கப்பாதை பேரழிவு போன்ற இயற்கை பேரிடர்களில் ரஞ்சித் பங்கேற்றிருக்கிறார்.

    இதனால் தற்போது உத்தரகாண்ட் உத்திர காசியில் சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட தானாகவே முன்வந்திருக்கிறார். ரஞ்சித் இந்த துறையில் சம்பளம் வாங்காமல் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையை சேர்ந்த சுமார் 160-க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • எல்லை சாலை அமைப்பு மற்றும் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் இருந்து யமுனோத்ரி தாம் நகருக்கு யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக சில்க்யாரா- தண்டல்ஹன் பகுதியை இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டமும் நடைபெற்று வருகிறது.

    சார்தாம் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக, உத்தர்காசியில் இருந்து யமுனோத்ரி தாம் வரையிலான 26 கிலோ மீட்டர் தூரத்தை குறைக்கும் நோக்கத்தில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

    நேற்று அதிகாலை இந்த சுரங்கப்பாதையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருந்தது. சுமார் 40 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், சுரங்க பாதையில் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு தொடக்க பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

    இதனால் சுரங்கத்திற்குள் வேலை செய்த 40 தொழிலாளர்களும் சிக்கி கொண்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். மேலும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினரும் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்த விபத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம் சுரங்கப்பாதையில் சிக்கிய 40 தொழிலாளர்களின் கதி என்ன? என்பது தெரியாமல் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத வண்ணம் உள்ளனர்.

    இடிபாடுகள் அதிக அளவில் இருப்பதால் மீட்பு பணிகளில் கடும் சிரமம் நிலவுகிறது. இதனால் 15 மணிநேரத்திற்கு மேலாகியும் நேற்று வரை ஒரு தொழிலாளரை கூட மீட்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையை சேர்ந்த சுமார் 160-க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதவிர எல்லை சாலை அமைப்பு மற்றும் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஆக்சிஜன் குழாய் மூலம் ஆக்சிஜன் மற்றும் அவர்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மேலும் ஜே.சி.பி., துளையிடும் கருவிகள் மூலமாகவும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை உத்தர்காசி கலெக்டர் அபிஷேக் ருஹேலா மேற்பார்வையிட்டு வருகிறார்.

    மீட்பு பணிகள் தொடர்பாக அவருடன் உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி பேசி உள்ளார்.

    மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி கூறுகையில், "சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடனேயே அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி வருகிறேன். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்தில் உள்ளனர்.

    விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக திரும்பி வர இறைவனை பிரார்த்திக்கிறோம்" என்றார்.

    ×