search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுயம்பு லிங்கம்"

    • வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • ஏழாவது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்து வருவது வழக்கம்.

    கோவை:

    கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வெள்ளிங்கிரி மலை உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் இந்த மலையானது உள்ளது. 5.5 கி.மீ தூரம் செல்லும் இந்த மலைப்பாதையில் வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுணன் வீல், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்றவற்றை கடந்து 7-வது மலையில் சுயம்பு லிங்கத்தை தரிசிக்க முடியும்.

     ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் இங்கு வருவார்கள். அவர்கள் ஏழு மலைகள் ஏறி, ஏழாவது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்து வருவது வழக்கம்.

    இந்த ஆண்டு சிவாரத்திரியை முன்னிட்டு கடந்த மாதம் 9-ந் தேதி முதல் பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். அன்று முதல் தினந்தோறும் வெள்ளியங்கிரி மலைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    வருடத்திற்கு வருடம் வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது. அதற்கு ஏற்ப அனைத்து வசதிகளையும் வனத்துறையினர் செய்து கொடுத்து வருகின்றனர்.

     நாளை மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கடந்த சில தினங்களாக வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளிங்கிரி மலையேறி சாமி தரிசனம் செய்து சென்றுள்ளனர். இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி உள்ளனர்.

    நாளைய தினம் மகா சிவராத்திரி என்பதால் இன்றும், நாளையும் அதிகளவிலான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் 3 லட்சம் பக்தர்கள் வெள்ளிங்கிரி மலையேறுவார்கள் என தெரிகிறது. அடர் வனப்பகுதியில் மலை ஏற்றம் உள்ளதால் ஒரு சிலருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், அடிவாரத்தில் 108 ஆம்பலன்ஸ் மற்றும் அவசர கால மருத்துவர்கள் பணியில் உள்ளனர்.

    மேலும் கோடைக்காலம் என்பதால் தீயணைப்பு மீட்புக்குழுவினரும், வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்களை கண்காணிக்க வனத்துறை சார்பில் சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 6-வது மலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • `கரைக்கால் முதலையைப் பிள்ளைத் தரச் சொல்லு காலனையே’
    • சிறுவனின் பெற்றோர் ஆனந்தம் கொண்டனர்.

    சுந்தர மூர்த்தி நாயனார், சிவதலம் தோறும் தரிசனம் செய்து கொண்டு வந்தார். அப்படி அவர் இந்தத் திருத்தலம் வந்தபோது, ஒரு தெருவில் இரண்டு விதமான சத்தம் கேட்டு ஒரு கணம் நின்றார். அங்கே ஒரு வீட்டில் 7 வயது சிறுவனுக்கு முப்புரிநூல் (உபநயனம்) அணிவிக்கும் மங்கல விழா நடந்தது. அதன் எதிர் வீட்டில் இறப்பு நிகழ்ந்ததற்கான அழுகை ஓலம் கேட்டது. இதுபற்றி சுந்தரர் விசாரித்தபோது, 'பூணூல் அணிவிக்கும் சிறுவனின் வயதை கொண்ட எதிர் வீட்டு சிறுவனை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முதலை விழுங்கிவிட்டதாகவும், அந்தச் சிறுவன் இருந்தால் இன்று பூணூல் அணிவிக்கும் நிகழ்வு நடைபெறும் என்பதால் அந்த வீட்டினர் அழுவதாகவும் தெரியவந்தது.

    சுந்தரர் அந்தச் சிறுவனின் பெற்றோருடைய துன்பத்தை துடைக்க எண்ணினார். அவர்களை சிறுவன் விழுங்கப்பட்ட முதலை வாழும் குளக்கரைக்கு அழைத்துச் சென்றார். `கரைக்கால் முதலையைப் பிள்ளைத் தரச் சொல்லு காலனையே..' என்று சிவனிடம் மனமுருக வேண்டிப் பாடினார், சுந்தரர். அப்போது நீருக்குள் இருந்து வெளிப்பட்ட முதலை, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் விழுங்கிய சிறுவனை உயிருடன் உமிழ்ந்தது.

    அதுவும் அந்தச் சிறுவன் தற்போதைய பருவத்தில் இருந்தது மேலும் ஆச்சரியமான ஒன்று. அந்த சிறுவனின் பெற்றோர் ஆனந்தம் கொண்டனர். இறைவனின் கருணையையும், சுந்தரரின் பக்தியையும் நினைத்து மெய்சிலிர்த்தனர். பின்னர் சிறுவனை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவனுக்கும் உபநயனம் செய்துவைத்தனர்.

    • தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், இது 256-வது தலமாகும்.
    • தானே தோன்றிய சுயம்பு மூர்த்தி ஆவார்.

    மாணிக்கவாசகரால் `அரிய பொருளே அவிநாசி அப்பா..' என்று போற்றப்பட்டவர், அவிநாசியில் உள்ள அவிநாசியப்பர். இந்தத் திருத்தலம் பழமையும், பெருமையும் கொண்டது. தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், இது 256-வது தலமாகும். சிவபெருமான் ஆடிய அக்னி தாண்டவத்தின்போது வெளிப்பட்ட வெம்மைக்குப் பயந்து, தேவர்கள் அனைவரும் ஓரிடத்தில் புகுந்து ஒளிந்துகொண்டனர். தேவர்கள் புகுந்து ஒளிந்த காரணத்தால் `புக்கொளியூர்' (புக்கு+ஒளியூர்) என்று பெயர் பெற்றது. புராண காலத்தில் இவ்வூரின் பெயர் திருப்பொக்குளியூர்.

    கோவிலின் பெயர் அவிநாசி. `விநாசி' என்றால் `பெருங்கேடு' என்று பொருள். `அவிநாசி' என்பதற்கு `பெருங்கேட்டை போக்கவல்லது' என்று பொருள். காலப்போக்கில் கோவிலை ஒட்டி வளர்ச்சியடைந்த நகரம், கோவிலின் பெயரால் `அவிநாசி' என்றே பெயர் பெற்றது.

    இந்த ஆலயத்தின் தெற்கே சற்று தொலைவில் இன்றும் `திருப்பொக்குளியூர்' என்ற சிற்றூர் இருக்கிறது. இந்த ஆலய இறைவன், தானே தோன்றிய சுயம்பு மூர்த்தி ஆவார். காசியில் உள்ள சுயம்பு மூர்த்தியான விசுவநாதரின், வேர் ஒன்று தென் திசை நோக்கி ஓடி வந்து, நுனியில் கிளைத்து முளைத்தெழுந்த கொழுந்தாக, அவிநாசியில் உள்ள சுயம்பு மூர்த்தி அறியப்படுகிறார். இதனால் இந்த மூர்த்தி, `வாரணாசி கொழுந்து' என்று போற்றப்படுகிறார்.

    எனவே இத்தல இறைவன், காசி விசுவநாதருக்கு இணையான மூர்த்தியாகும். அவிநாசியில் அருள்வதால், `அவிநாசியப்பர்', `அவிநாசிநாதர்' என்றும், பிரம்மதேவன் பூஜித்ததால் `பிரம்மபுரீசுவரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

    இத்தல அம்பாளின் திருநாமம், `கருணாம்பிகை' என்பதாகும். இவர் `பெருங்கருணாம்பிகை', `கருணாலய செல்வி', `திருக்காமக்கோட்டை நாச்சியார்' போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவ்வாலய தலவிருட்சம் பாதிரி மரம், ஆதி காலத்தில் மா மரம் தல விருட்சமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இங்கு காசி தீர்த்தம், கங்கை தீர்த்தம், தெப்பக்குளம், நாககன்னி தீர்த்தம், தாமரைக் குளம், ஐராவதத்துறை ஆகியவை தீர்த்தங்களாக இருக்கின்றன.

     ஆலய அமைப்பு

    இத்திருக்கோவில் நல்லாற்றின் கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுரத்தின் முன்னால் 70 அடி உயரம் கொண்ட ஒரே கல்லாலான தீப ஸ்தம்பம் உள்ளது. அதற்குப் பின்னால் ஏழு நிலை கோபுரம் காணப்படுகிறது. அம்மன் சன்னிதிக்கு முன்பாகவும் ஐந்து நிலை கோபுரம் ஒன்று இருக்கிறது. இத்தீப ஸ்தம்பம் கொங்கு நாட்டில் வேறெந்த ஆலயத்திலும் காணக்கிடைக்காத ஒன்று. தீப ஸ்தம்பத்திற்கு தெற்கே தெப்பக்குளமும், அதன் எதிரில் பாதிரி மரத்து அம்மன் கோவிலும், அதற்கு சற்று தெற்கே முதலை வாயில் இருந்து சிறுவனை அழைத்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் சன்னிதியும், முதலை வெளிப்பட்ட ஏரியும் உள்ளது.

    ஏழுநிலை ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தால் நவரங்க மண்டபத்தை அடையலாம். இந்த மண்டபத்திற்குள் ஊர்த்துவ தாண்டவமூர்த்தி, ஆலங்காட்டு காளியம்மை, வீரபத்திரர் சிலைகளும், பலிபீடம், கொடிமரம், நந்தியம்பெருமான் உள்ளனர். இந்த மண்டபத்தைக் கடந்து சென்றால், மூலவர் அவிநாசியப்பரை தரிசிக்கலாம்.

    பல அற்புதங்கள் நிகழ்த்திய இத்தல இறைவன், இங்கே சுயம்பு லிங்கமாக அருளை அள்ளி வழங்குகிறார். மூலவர் அருளும் கருவறையும், பிரகார அமைப்பும் இந்த ஆலயத்தின் ஆதி வடிவமைப்பாகும். இந்த ஈசனை வழிபட்டு விட்டு வெளியே வரும்போது, உள்சுற்று பிரகாரத்தில் அறுபத்து மூவரும் காட்சி தருகின்றனர்.

    தொடர்ந்து தென்மேற்கு மூலையில் தல விநாயகரும், அவரை அடுத்து ஐம்பூதங்களின் வடிவாக பஞ்ச லிங்கங்கள், முருகப்பெருமான், மகாலட்சுமி சன்னிதிகளும் உள்ளன. கருவறைக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை அம்மனும் காட்சி தருகின்றனர். ஈசானிய மூலையில் சண்டிகேசுவரரும், நவக்கிரகங்களும் உள்ளன.

    துர்க்கை அம்மனுக்கு அருகில் காசி தீர்த்த கிணறு இருக்கிறது. கங்கை நதி, இந்த கிணற்றுக்குள் வருவதாக ஐதீகம். கிணற்றுக்கு அருகாமையில் உள்ள ஞான (கால) பைரவர், சிறப்புக்குரிய மூர்த்திகளில் ஒருவராவார். இவருக்கு மட்டும் தனி சகஸ்ரநாமம் உள்ளது. வசிஷ்டருக்கு சனி தோஷம் நீக்கிய, அனுக்கிரக சனி பகவானும் இங்கே சிறப்புடன் வணங்கப்படுகிறார்.

    பிரகாரத்தின் தெற்கு பக்கத்தில் சுவாமியின் வலப்புறம் அம்பிகை சன்னிதி உள்ளது. சுமார் மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த அம்மனின் திருமேனி, கருணை பொங்கும் விழியோடு அமைக்கப்பட்டுள்ளது. சுவாமி சன்னிதியை அடுத்து திருக்கல்யாண மண்டபம் அமைந்துள்ளது.

    தினசரி ஐந்து கால பூஜைகள் நடைபெறும் இவ்வாலயத்தில், ஆயுள் நீட்டிப்புக்காகவும், விஷப் பூச்சிகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், எதிரிகள் பயம் விலகவும் இறைவனையும், அம்பாள் சன்னிதியில் உள்ள தேள் வடிவத்தையும் வணங்குகின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    கோயம்புத்தூருக்கு கிழக்காக 42 கி.மீ தொலைவிலும், திருப்பூரில் இருந்து வடமேற்காக 12 கி.மீ தூரத்திலும், திருப்பூர் மாவட்டத்தில் கோவையில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அவிநாசி திருத்தலம் உள்ளது. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான பஸ் வசதி இருக்கிறது. இந்த ஆலயத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மற்றொரு தேவாரத் தலமான திருமுருகன்பூண்டி உள்ளது.

    • அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார்.
    • ஆனந்தவல்லி அம்பாளின் திருமேனி பச்சை மரகதத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து வடமேற்கில் சுமார் 28 கீ.மீ தொலைவில் கொல்கத்தா நெடுஞ்சாலையில் பஞ்சேஷ்டி பேருந்து நிலையம் உள்ளது. பேருந்து நிறுத்தத்திலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் சாலையில் 200 மீட்டர் தொலைவில் தெற்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கூடிய "பஞ்சேஷ்டி" திருக்கோயில் அமைந்துள்ளது.

    திருக்கோவிலின் மூலவருக்கு அகத்தீஸ்வரர் என்று பெயர். இச்சிவலிங்கம் ஓர் சுயம்பு லிங்கம். அகத்தியர் இத்தலத்திற்கு வரும் முன்பு இச்சிவலிங்கம் இங்கு அமைந்திருந்தது.

    எனினும் அகத்தியர் வழிபட்டதால், அகத்தீஸ்வரர் என்று பெயர் பெற்றது. அகத்திய முனிவர் இச்சிவலிங்கத்தின் இடது பாகத்தில் அம்பாள் மனோன்மணி சக்தியை அரூபமான தோற்றத்தில் வைத்து, சிவசக்தி ரூபமாக பூஜித்துள்ளார்.

    அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். அம்பாள் ஆனந்தவல்லி தாயார் முக்கண் நாயகி உருவத்திலேயே மூன்று கண்களை கொண்ட அம்பாள் ஆனந்தவல்லி தெற்கு நோக்கி தரிசனம் தருகிறார். ஆனந்தவல்லி அம்பாளின் திருமேனி பச்சை மரகதத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இடது பாதம் முன் வைத்த தோற்றமாகக் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.

    பொதுவாக வலது காலை முன்வைத்து வா என்று அழைப்பதே வழக்கம். ஆனால், ஆனந்தவல்லி அம்பாள், அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது யாகங்களுக்கு இடையூறு செய்ய வந்த அசுர சக்திகளை அழிக்க, தன் இடது பாதத்தை முன்வைத்து, மூன்று கண்களைக் கொண்டு அசுர சக்திகளையும், தீய சக்திகளையும் அழித்ததால் இங்கு சத்ரூ சம்ஹார கோலத்தில் காட்சி தருகிறார்.

    தீய சக்திகளை அழிக்கும் பொருட்டு அம்பாள் தன்னுடைய இடது பாதத்தை முன்வைத்துச் சென்ற கோலத்தில் காட்சி தருகிறார். எனவே, இத்தலத்து அன்னை சத்ருசம்ஹாரியாக திகழ்கிறாள். இச்சத்ருசம்ஹாரியை வழிபாடு செய்தால் தீய சக்திகளின் தொல்லைகள் இருக்காது. செயல்களில் தடங்கல்கள் இருக்காது.

    • அடையாளமாக சூரிய ஒளி ஆண்டிற்கு இரண்டு முறை மூலவர் லிங்கத் திருமேனியில் விழுகிறது.
    • ஊர்வசியின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த இந்திரன், குருவை அலட்சியம் செய்தான்.

    காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும் தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது. புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது பூலோகமே நீரில் அமிழ்ந்திருந்த போது திட்டை என்னும் இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளினார். இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார். இவ்வாறு ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இத்தலத்தை பஞ்சலிங்க ஷேத்திரம் என்று கூறுவர். இந்த ஒரு தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பஞ்சபூத தலங்களுக்கு சென்று வந்த புண்ணியம் கிட்டிவிடும். சம்பந்தர் சிவபெருமானை விட அவர் சுயம்பு லிங்கமாக காட்சி தரும் இத்தலம் மேலானது என்று குறிப்பிடுகிறார்.

    சூரியன் இங்கு இறைவனை வழிபட்டிருக்கிறான். இதன் அடையாளமாக சூரிய ஒளி ஆண்டிற்கு இரண்டு முறை மூலவர் லிங்கத் திருமேனியில் விழுகிறது. தட்சினாயண புண்ய காலத்தில் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளிலும், உத்தராயண புண்ய காலத்தில் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளிலும் சூரிய கிரணங்கள் மூலவர் மீது விழுகின்றன.

    மூலவர் வசிஷ்டேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கியது.

    மூலத்திருமேனி சுயம்பு. சதுர ஆவுடையார் மீது உள்ள சிவலிங்கத் திருமேனி சிறியதாக உள்ளது. திருமேனியின் மீது வரி வரியாகக் கோடுகள் சுற்றிலும் உள்ளன. நான்கு பட்டையாக உள்ளது. முன்னால் செப்பினாலான நந்தி பலிபீடம் உள்ளன. மூலவர் கருவறையின் மேல் விதானத்தில் ஒரு சந்திர காந்தக் கல் பொருத்தப்பட்டிருக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி சுமார் 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒருமுறை மூலவர் சிவலிங்கத் திருமேனியில் ஒரு சொட்டு நீர் விழும்படி இக்கல் பொருத்தப்பட்டிருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். பிரம்மா, விஷ்ணு, சுப்பிரமணியர், பைரவர், சூரியன், யமதர்மன், சனீஸ்வரன், தேவேந்திரன், ஆதிசேஷன், வசிஷ்டர், ஜமதக்னி முனிவர் ஆகியோர் இத்தலத்தில் வசிஷ்டேஸ்வரரை வழிபட்டுள்ளனர். கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தன விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், இலிங்கோத்பவரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதியும் உள்ளது.

    குரு ஸ்தலம்:

    ஆங்கிரசர் முனிவரின் ஏழாவது குழந்தை வியாழன். சகல கலைகளிலும் சிறந்து விளங்கிய இவர் தேவர்களுக்கு குருவானார். குருவின் வழிகாட்டலில் தேவர்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். ஒருநாள் குரு இந்திரனை பார்க்கச் சென்றார். ஊர்வசியின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த இந்திரன், குருவை அலட்சியம் செய்தான். குருவுக்கு ஆத்திரம் வந்தது. அங்கிருந்து புறப்பட்ட அவர் ஒரு மறைவிடத்தில் வாழத் தொடங்கினார். சரியான வழிகாட்டல் இல்லாததால் தேவலோகமே ஸ்தம்பித்தது. அரக்கர்கள் தேவர்களை கொடுமைப்படுத்தினார்கள். தவறை உணர்ந்த இந்திரன், எங்கெங்கெல்லாம் சிவத்தலங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் சென்று குருவை தேடினான். அப்படித் தேடிவரும் வழியில்தான் திட்டைக்கு வந்தான். வசிஷ்டேஸ்வரர் கோயிலில் மனமுருக மன்னிப்பு கேட்டு வேண்டிக்கொண்டான். இனியும் அவனை சோதிக்க விரும்பாத குரு, அவனுக்கு காட்சி தந்தார். இந்த சிவாலயத்திலேயே தனி சந்நதியும் கொண்டார்.

    தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர்

    கோவில் அமைப்பு:

    ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு ஒரு கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக சில படிகள் ஏறி உள்ளே சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். உள்ளே நுழைந்தவுடன் காணப்படும் முன்மண்டபத்தில் ஒரு தூணில் வலப்பால் நால்வர் வடிவங்களும் மறுபுறத் தூணில் ரிஷபாரூடர் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது. கொடிமரம் கருங்கல்லால் ஆனது. உயரத்தில் பலிபீடம் நந்தி உள்ளது. மூலவர் சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடைப்பட்ட நிலையில், அம்பாள் சந்நிதிக்கு மேற்குப் பக்கத்தில் தனி விமானத்துடன் கூடிய தெற்கு நோக்கிய குரு பகவானின் தனி சந்நிதி அமைந்துள்ளது.

    எல்லா சிவாலயங்களிலும் ஞான வடிவான தட்சிணாமூர்த்தியாக குரு கோயில் கொண்டிருப்பார். ஆனால் தென்குடித் திட்டையில் இவர் ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. சந்நிதிக்கு முன்னால் செப்பாலான நந்தி பலிபீடம் உள்ளன. அம்மன் சந்நிதிக்கு முனபாக மேல் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அவரவர் ராசிக்குக் கீழே நின்று பிரார்த்தனை செய்தால் வேண்டியது கிட்டும் என்பது ஆன்றோர் நம்பிக்கை.

    சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

    முன்னைநான் மறையவை முறைமுறை குறையடுந்

    தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்

    மன்னுமா காவிரி வந்தடி வருடநற்

    செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.

    மகரமா டுங்கொடி மன்மத வேள்தனை

    நிகரலா காநெருப் பெழவிழித் தானிடம்

    பகரபா ணித்தலம் பன்மக ரத்தோடுஞ்

    சிகரமா ளிகைதொகுந் தென்குடித் திட்டையே.

    கருவினா லன்றியே கருவெலா மாயவன்

    உருவினா லன்றியே உருவுசெய் தானிடம்

    பருவநாள் விழவொடும் பாடலோ டாடலுந்

    திருவினான் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே.

    உண்ணிலா வாவியா யோங்குதன் தன்மையை

    விண்ணிலார் அறிகிலா வேதவே தாந்தனூர்

    எண்ணிலார் எழில்மணிக் கனகமா ளிகையிளந்

    தெண்ணிலா விரிதருந் தென்குடித் திட்டையே.

    வருந்திவா னோர்கள்வந் தடையமா நஞ்சுதான்

    அருந்திஆர் அமுதவர்க் கருள்செய்தான் அமருமூர்

    செருந்திபூ மாதவிப் பந்தர்வண் செண்பகந்

    திருந்துநீள் வளர்பொழில் தென்குடித் திட்டையே.

    ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால்

    கூறினார் அமர்தருங் குமரவேள் தாதையூர்

    ஆறினார் பொய்யகத் தையுணர் வெய்திமெய்

    தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே.

    கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்

    வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடந்

    தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை

    தேனலைக் கும்வயல் தென்குடித் திட்டையே.

    மாலொடும் பொருதிறல் வாளரக் கன்நெரிந்

    தோலிடும் படிவிர லொன்றுவைத் தானிடங்

    காலொடுங் கனகமூக் குடன்வரக் கயல்வரால்

    சேலொடும் பாய்வயல் தென்குடித் திட்டையே.

    நாரணன் தன்னொடு நான்முகன் தானுமாய்க்

    காரணன் அடிமுடி காணவொண் ணானிடம்

    ஆரணங் கொண்டுபூ சுரர்கள்வந் தடிதொழச்

    சீரணங் கும்புகழ்த் தென்குடித் திட்டையே.

    குண்டிகைக் கையுடைக் குண்டரும் புத்தரும்

    பண்டுரைத் தேயிடும் பற்றுவிட் டீர்தொழும்

    வண்டிரைக் கும்பொழில் தண்டலைக் கொண்டலார்

    தெண்டிரைத் தண்புனல் தென்குடித் திட்டையே.

    தேனலார் சோலைசூழ் தென்குடித் திட்டையைக்

    கானலார் கடிபொழில் சூழ்தருங் காழியுள்

    ஞானமார் ஞானசம் பந்தன செந்தமிழ்

    பானலார் மொழிவலார்க் கில்லையாம் பாவமே.

    தேன் துளிக்கும் மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருத்தென்குடித்திட்டையைப் போற்றி ஞானசம்பந்தன் அருளிய இச் செந்தமிழ்ப்பாக்களைப் பாடவல்லவர்கட்குப் பாவம் இல்லை என்று சம்பந்தர் பாடியுள்ளார்.

    ×