search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவலிங்கம்"

    • சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாம்பை தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தனர்.
    • கடந்த 4 நாட்களாக கோவில் வளாகத்தில் நாகப்பாம்பு உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஹுசூராபாத் நகரில் உள்ள ராமர் கோவிலில் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. கோவிலில் உள்ள சிவன் சன்னதிக்குள் நுழைந்தது. அங்கிருந்த சிவலிங்கத்தை சுற்றி சுற்றி வந்தது.

    மேலும் சிவலிங்கத்தின் மீது உடலை சுற்றியபடி படமெடுத்து ஆடியது. இது பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    கோவிலில் நாகப்பாம்பு இருப்பதாக தகவல் பரவியதையடுத்து, பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாம்பை தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தனர்.

    சிவலிங்கம் மீது நாகப்பாம்பு கண்டதால், சிவன் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்

    அவர்களில் சிலர் பூஜை செய்து வழிபட்டனர். பாம்பின் காட்சிகளை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். கடந்த 4 நாட்களாக கோவில் வளாகத்தில் நாகப்பாம்பு உள்ளது. இதனால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.

    • கோடை காலத்தில் சிவலிங்கம் வெளியே தெரியும்.
    • குளிர்காலங்களில் சிவலிங்கம் நீருக்குள் மூழ்கியிருப்பதைக் காண முடியும்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சித்தோர்கர் கோட்டையில் இருக்கிறது, 'கவ்முக் குந்த் (கோமுகம்) நீர்த்தேக்கம்'. 'கவ்முக்' என்பது 'பசுவின் வாய்' என்று பொருள்படும். பசுவின் வாய் வடிவப் புள்ளியில் இருந்து பள்ளமாக அமைந்த பகுதிக்கு நீர் பாய்ந்து, அதனை நீர்த்தேக்கமாக மாற்றுகிறது. இதனை 'கோமுகம்' என்று அழைக்கிறார்கள்.

    புனித தலங்களுக்கு யாத்திரையாகச் செல்லும் பக்தர்கள் பலரும், தங்களின் யாத்திரையின் நிறைவாக, இந்த நீர்த்தேக்கத்திற்கு வந்து அங்குள்ள சிவலிங்கத்தை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்த இடம், சித்தோர்கரின் 'தீர்த் ராஜ்' என்று புகழப்படுகிறது.

    இந்த நீர்த்தேக்கத்தில் விழும் நீரானது, வருடம் முழுவதும் பாய்கிறது. கோடை காலத்தில் நீரின் வேகம் குறைவாக இருக்கும். இதனால் சிவலிங்கம் வெளியே தெரியும். ஆனால் மழை மற்றும் குளிர்காலங்களில் அதிகமாக நீர்வரத்து இருப்பதால், சிவலிங்கம் நீருக்குள் மூழ்கியிருப்பதைக் காண முடியும். இந்த நீர்த்தேக்கத்திற்கு வரும் தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்கிறார்கள்.

    • மலையை குடைந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
    • இந்த சிவலிங்கத்திற்கு, 28 வருடத்திற்கு ஒருமுறை பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, நார்த்தாமலை. இங்குள்ள அறிவர் கோவிலின் மலை உச்சியில் இருக்கிறது, நவால் என்ற பெயருடைய சுனை. சுமார் 10 அடி ஆழம் கொண்ட இந்த சுனையின் அடியில், ஒரு பக்கத்தில் குடைவரை சிவலிங்கம் உள்ளது. சுனையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதால், இந்த சிவலிங்கம் தண்ணீரில் மூழ்கிய நிலையிலேயேதான் தென்படும். மலையை குடைந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சுனையின் உள்ளே தண்ணீருக்குள் ஒரு மண்டபத்தில் காட்சியளிக்கும் இந்த சிவலிங்கத்திற்கு, 28 வருடத்திற்கு ஒருமுறை பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

    2018-ம் ஆண்டு இந்த சுனையில் இருந்த நீர் முழுவதையும் மின் மோட்டார் மூலம் அகற்றிவிட்டு, பின்பு வெளிப்பட்ட சிவலிங்கத் திருமேனிக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. அப்போது பாதாளத்தில் இருக்கும் இந்த சிவலிங்கம் மீது சூரிய ஒளிபட்டது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. பல நூறு ஆண்டுகளாக தண்ணீருக்குள்ளேயே இருந்தும், இந்த சிவலிங்கத்தின் மீது பாசி எதுவும் படியவில்லை என்பதும் அனைவருக்கும் வியப்பை அளித்திருக்கிறது. சுனையை சுற்றிலும் இருக்கும் பாறை, மலைகளில் எல்லாம் பாசி படர்ந்திருக்கும் நிலையில், சிவலிங்கத்தின் மீது பட்டும் பாசியே இல்லாமல் இருந்தது, இறையருள் தான் என்று பலரும் அதிசயித்தனர்.

    இந்த குடைவரை சிவலிங்கத்தை, 1876-ம் ஆண்டு, புதுக்கோட்டை மன்னனின் மனைவி, நீர் முழுவதையும் வெளியேற்றிய பிறகு வழிபட்டதாக கல்வெட்டு குறிப்புகள் எடுத்துரைக்கின்றன. அதன் பிறகு யாரும் நார்த்தாமலை குடைவரை சிவலிங்கத்தை பார்த்து வழிட்டதாக கல்வெட்டுகள் இல்லை. இதன் ஒரு பக்கத்தில் குடைவரை சிவலிங்கம் ஒன்றும் உள்ளது. இந்த குடைவரை பல்லவர்கள் அல்லது முத்தரையர் மன்னர்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    • சிவம் என்றால் மங்களம்.
    • லிங்கம் என்றால் அடையாளம்.

    சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும் என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தெஸ்மைகாமா சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு ஸர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது.

    சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும். உடல். உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி, எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம்.

    சிவ ஆகமப்படி 16 வகையான பொருள்களால் லிங்க ரூபம் செய்து வழிபடுதல் பெரும் சிறப்பென்று ரிஷிகள் கூறுகின்றனர்.

    1. புற்றுமண் லிங்கம்: முத்தி

    2. ஆற்று மணல் லிங்கம்: பூமிலாபம்

    3. பச்சரிசி லிங்கம்: பொருள் பெருக்கம்

    4. சந்தன லிங்கம்: எல்லா இன்பங்கள்

    5. மலர்மாலை லிங்கம்: நீண்ட வாழ்நாள்

    6. அரிசி மாவு லிங்கம்: உடல் வலிமை

    7. பழம் லிங்கம்: நல்லின்ப வாழ்வு

    8. தயிர் லிங்கம்: நல்லகுணம்

    9. தண்ணீர் லிங்கம்: எல்லா மேன்மை

    10. சோறு (அன்னம்) லிங்கம்: உணவுப்பெருக்கம்

    11. முடிச்சிட்ட நாணல் (கூர்ச்சம்) லிங்கம்: முக்தி

    12. சர்க்கரை, வெல்லம் லிங்கம்: விரும்பிய இன்பம்

    13. பசுவினசாணம் லிங்கம்: நோயற்ற வாழ்வு

    14. பசுவெண்ணெய் லிங்கம்: மனமகிழ்ச்சி

    15. உருத்திராட்ச லிங்கம்: நல்ல அறிவு

    16. திருநீற்று (விபூதி) லிங்கம்: எல்லா வகை செல்வம்.

    • நேற்று இரவு புவனேஸ்வரிக்கு அருள் வந்து சாமி ஆடி உள்ளார்.
    • 10 அடி ஆழத்தில் சிவலிங்கம் இருப்பது தெரியவந்தது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காட்டாண்டி குப்பத்தை சேர்ந்தவர் அமரேசன் (வயது 40), இவரது மனைவி புவனேஸ்வரி (35). இவர்கள் அதே பகுதியில் பச்சைவாழி அம்மன்கோவில் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்த கோவிலில் உள்ள பழமையான வேப்பமரம் ஒன்றில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பால் வடிந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் நேற்று இரவு புவனேஸ்வரிக்கு அருள் வந்து சாமி ஆடி உள்ளார்.

    சாமி ஆடியபோது வேப்பமரத்தின் அடியில் பூமியில் லிங்கத் திருமேனியாக சிவபெருமான் வீற்றிருக்கிறார். அவரை வெளியே எடுத்து பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் பக்தர்கள் திரண்டு வேப்ப மரத்தின் அடியில் பள்ளம் தோன்டியுள்ளனர். 10 அடி ஆழத்தில் சிவலிங்கம் இருப்பது தெரியவந்தது. இதனை யாரும் எடுக்க கூடாது என்று சாமி ஆடி புவனேஸ்வரி கூறினார். மேலும் பக்தர்கள் சிவாய நம, நம சிவாயம் என விண் அதிர கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • என்னவென்று சொல்ல முடியாத சாந்தி,மனஅமைதி, நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.
    • பாறணை பண்ணும் அன்று ஆறு பேருக்கு அன்னதானம் வழங்கி உட்கொள்ள வேண்டும்.

    இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் பாராயணம் செய்வதால், என்னவென்று சொல்ல முடியாத சாந்தி,மனஅமைதி, நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.

    கந்த சஷ்டி விரத ஆறு நாட்களும் கந்தப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆலயங்களில் எல்லாம் பூரண கும்பம் வைத்து விஷேட அபிஷேகமும், சண்முகார்ச்சனையும், கந்த புராண படனப்படிப்பும் நடைபெறும்.

    விரதம் முடிவுற்ற அன்று முருகன் ஆலயத்தில் சூரன் போர் நடைபெற்று, மறுநாள் விரதம் அனுஷ்டித்த அனைவரும் பாறணை பண்ணி விரத பூசையை நிறைவு செய்கின்றனர். பாறணை பண்ணும் அன்று ஆறு பேருக்கு அன்னதானம் வழங்கி உட்கொள்ள வேண்டும்.

    • ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும்.
    • ஞான சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே ஏற்பட்ட போர் சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும் துன்புறுத்தி அழித்து வந்தனர்.

    ஐப்பசித் திங்கள் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் கந்தப் பெருமானை நினைத்து வழிபட்டு விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

    உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப *கந்தசஷ்டி* விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

    ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்குவார்கள் முருகனுடைய விரதங்களுள் கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய மூன்றும் பிரதானமானவையாகும். கந்த சஷ்டி விரதம் தொடர்ந்து ஆறு வருடங்களும், கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும் வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

    அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாகஎடுக்கப்படுகின்றது. ஏனைய விரத அனுட்டானங்களைப் போலன்றி கந்த சஷ்டி விரதானுஷ்டானத்தை பெருவாரியான ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் கடைப்பிடிக்கின்றார்கள். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழக்கைத் துணையாக அடைய வேண்டியும்,குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

    ஞான சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே ஏற்பட்ட போர் சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும் துன்புறுத்தி அழித்து வந்தனர். பரமசிவன் இதற்கொரு முடிவு காணும் நோக்கில், தனது சக்தியையே முருகப் பெருமானாகப் பிறப்பித்தார். அந்த முருகப் பெருமான் இந்தச் சூரபதுமாதி அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்டு வென்றார். இந்த அருட் பெருங்கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறை முதல் ஆறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் நோற்றுவந்தனர். இதுவே கந்த சஷ்டி என்ற பேரில் பூலோக மாந்தரும் அனுஷ்டிக்கக் கிடைத்தது.

    கந்த புராணக் கதையைச் சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தார் என்ற சொற்றொடர் மூலம் நகைச் சுவையார் வழங்குவார். சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் ஷஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரனைக் கடிந்தார் என்பது இதன் பொருள். வெறும் கதை சொல்லும் புராணமாகக் கந்த புராணத்தை எண்ண முடியாது. சைவ சித்தாந்த பேருண்மைகளை உருவகப்படுத்திக் கதை வடிவில் சுவைபடத் தரும் அருமையான நூல் இதுவாகும்.

    • கந்தசஷ்டி விரதம் மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது.
    • மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது.

    கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே கந்த சஷ்டி விரத விழாவாகும். முருகன் கோவில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலுமே கந்தசஷ்டி விரதம் மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித்த நாள்.

    கந்த விரத மகிமை

    முழு முதற் கடவுளாக கலியுகக்கந்தப் பெருமான் போற்றப்படுகின்றார். மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அத்திவாரமாக கந்தசஷ்டி விரதம் அமைகிறது. கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அசுர சக்திகளையெல்லாம் கலியுக வரதனான பெருமான் அழித்து, நீங்காத சக்தியை நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

    • முதலில் சூரனுடன் பேசிப் பார்ப்போம் என்று வீரபாகுவை முருகன் தூது அனுப்பினார். இதுதான் 10 நாள் சூரசம்ஹார நிகழ்வின் தொடக்க நாளாகும்.
    • பானுகோபன் மாயாஜல வித்தைகள் செய்து போர்செய்யும் வல்லமை படைத்தவன்.

    சூரபத்மன் ஆணவமாக, அதர்மமாக நடந்து கொண்டதால் அவனை முருகன் அழித்தார். இதை சூரசம்ஹாரம் என்கிறோம்.

    இந்த சம்ஹாரம் எங்கு நடந்தது? எப்படி நடந்தது? எத்தனை நாட்கள் நடந்தது? என்பன போன்றவற்றை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நாம் புராண கால நிகழ்வுக்கு செல்ல வேண்டும்.

    அசுரர்களில் நம்பர்-ஒன் அசுரனாக இருந்த சூரபத்மன் வீரமகேந்திரபுரி என்ற நாட்டில் வசித்து வந்தான். அந்த நாடு ஒரு குட்டித்தீவாகும்.

    இலங்கைக்கும் தெற்கே அந்த தீவு இருந்தது. லெமூரியா கண்டம் அழிந்தபோது அந்த தீவும் கடலால் சூழப்பட்டது என்கிறார்கள். தற்போது அந்த தீவு கடலுக்குள் மூழ்கி உள்ளது.

    அந்த தீவுக்கு செல்ல திருச்செந்தூர் ஏற்ற இடமாக இருந்தது. எனவே திருமால், பிரம்மன், இந்திரன் முதலான தேவர்கள் போற்ற முருகப் பெருமான் அத்தலத்தில் எழுந்தருளினார்.

    முதலில் சூரனுடன் பேசிப் பார்ப்போம் என்று வீரபாகுவை முருகன் தூது அனுப்பினார். இதுதான் 10 நாள் சூரசம்ஹார நிகழ்வின் தொடக்க நாளாகும்.

    தூதை ஏற்காத சூரன், வீரவாகுதேவரை சிறை பிடிக்க முயன்றான். இதையடுத்து வீரவாகு போர் நடத்தினார்.

    2-வது நாள் சூரனின் மகன் வச்சிரவாகுவை கொன்றார். 3-வது நாள் அசுரர் கூட்டத்தின் தலைவனான சகத்திரவாகுவை கொன்றார்.

    பிறகு முருகனிடம் திரும்பி வந்து நடந்தவற்றை வீரவாகு விளக்கமாக கூறினார்.

    இதையடுத்து 4-வது நாள் முருகனே களத்தில் குதித்தார். அவருக்கும் சூரனுக்கும் திருச்செந்தூர் கடலோரத்தில் 6 நாட்கள் கடும் போர் நடந்தது.

    அந்த 6 நாட்களும் முருகன் வெற்றிக்காக அனைவரும் விரதம் இருந்தனர். அதனால்தான் இப்போதும் 6 நாட்கள் சஷ்டி விரதம் இருக்கிறார்கள்.

    இந்த 6 நாள் போர் எப்படி நடந்தது என்பதை பாருங்கள்...

    பானுகோபன் வதைப் படலம்:

    தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து அழித்துப் பின், தருமகோபன் (சூரனின் மந்திரி), சூரனின் மகன் அக்கினிமுகாசுரன் உள்ளிட்ட மூவாயிரவர் பேர் இறந்தபின் சூரனின் மகனான பானுகோபன் போருக்கு வந்தான்.

    பானுகோபன் மாயாஜல வித்தைகள் செய்து போர்செய்யும் வல்லமை படைத்தவன். சிறந்த சிவ பக்தன். பானுகோபன் நன்நீர்க் கடலில் முருகன் சேனையை ஆழ்த்த முருகன் அதை முறியடித்தார். அதன்பிறகு பானுகோபன் முருகன் வேலுக்கு பலியானான்.

    சிங்கமுகன் வதை:

    பானுகோபன் பலியான தகவவல் அறிந்தததும், சூரனின் தம்பி சிங்காசுரன் போருக்கு வந்தான். சிங்கமுகன் ஒரு பெரும் ஞானி. மாபெரும் வீரன். இவன் பல மாய வித்தைகள் செய்தும், பல விதமாக முருகவேளுடன் போர் செய்தான். இவனது தலை விழுந்தால் உடனே அதற்குப் பதிலாக புதிய தலை தோன்றும் வரம் பெற்றவன். அதனால் அவனை முருகப் பெருமான் வேல்கொண்டு கொல்லாமல் குஞ்சபடையால் நெஞ்சைப் பிளந்து சம்காரம் செய்தான்.

    சூரன் சம்காரம்:

    சூரன் அண்டம் விட்டு அண்டம் பாயும் வரம் பெற்றவன். சிறந்த சிவபக்தன். ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டு அதர்ம வழியில் சென்றான்.

    தன் சொந்தபந்தங்களையும், துணை நின்ற படைச் சேனைகளையும் இழந்து செய்வதறியாது நின்ற சூரனின் ஆணவம் அப்போதும் அடங்கவில்லை. தானே போருக்கு செல்வதாக முடிவு செய்து முருகப் பெரூமான் முன் தோன்றி சரமாரியாக அம்புக்கணைகளைத் தொடுத்தான்.

    அவையாவும் முருகவேளின் கடைக்கண் பார்வையால் அழிந்தன. சூரன் தனது மாயஜாலங்களினால் பலவாறாக தோன்றி போர் செய்தான். அப்போது முருகன் சூரனை நோக்கி இப்போதும் நீ உயிர்வாழலாம் தேவர்களை சிறையில் இருந்து விடுவித்து விடு என்று அறிவுறுத்தினார்.

    அப்போதும் அவனின் ஆணவம் அடங்கவில்லை. அதனால் போர் செய்யவே துடித்தான்.

    வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிந்தான் சூரன். கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் சூரனுக்கு உதவவில்லை. உதவிசெய்ய இருந்த உற்றமும் சுற்றமும் அழிந்து உறவும் அற்றுப் போனதினால் சூரனும் மயங்கித் தத்தளித்தான்.

    தன்னுடன் போர் செய்ய வந்தது இறைவனே என அறிந்தும், அடிபணிய ஆணவம் விடவில்லை.

    முருகன் சூரனின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு தன் விஸ்வரூபத்தைக் காட்டினார். எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டினார். சிவனும், அவன் மகனும் மணியும் ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தினார். தன் தன்மை மாறாது போர் செயலானான்.

    சூரன் போர் செய்த ஒவ்வொரு தினமும் தனது ஆயுதங்களை ஒவ்வொன்றாக இழந்தான். அவன் தனக்கு சிவனால் வழங்கப் பெற்ற "இந்திரஞாலம்" என்னும் தேரை அழைத்து முருகனின் படைச் சேனையையும் துக்கிச் சென்று பிரபஞ்ச உச்சியில் வைக்கும்படி கட்டளை இட்டான்.

    இந்திரஞாலம் என்ற தேரும் அவன் கட்டளையை நிறைவேற்ற முருகனின்படையை தூக்கி பிரபஞ்ச உச்சிக்கு கொண்டு சென்றது. முருகனின் வேலானது சீறிப்பாய்ந்து தேரைத் தடுத்து நிறுத்தி முருகனிடம் கொண்டு வந்து சேர்த்தது. முருகன் அத்தேரை தம் வசப்படுதி தன் உடைமையாக்கிக் கொண்டார்.

    இது கண்ட சூரபத்மன் செய்வதறியாது திகைத்தான். அதனால் சிவனால் அவனுக்கு வழங்கப்பெற்ற சூலப்படையை முருகனை அழிக்கும்படி ஏவினான்.

    சூலப்படை முருகனை நோக்கி வந்தபோது முருகனின் வேல் அதனை மழுங்கச் செய்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சூரன், கடைசியாக தனது அம்புப் படையை முருகனை அழிக்க அனுப்பினான். முருகனின் வேல் அதை பொடிப் பொடியாக்கி செயலிழக்கச் செய்தது.

    முருகனால் இறப்பது நிச்சயம் என உறுதியாக தெரிந்திருந்தும் தேவர்களை விடுதலை செய்வது மானக் குறைவு என எண்ணிய சூரன் ஆணவ மிகுதியால் தொடர்ந்து போராடினான். இது கண்ட முருகப் பெருமான் நிராயுதபாணியாக இருக்கும் எதிரியுடன் ஆயுதம் தாங்கி போர்புரிவது யுத்த தர்மத்திற்கு விரோதமானது என எண்ணினான்.

    எனவே, இந்திரனை மயிலாக உருமாறும்படி கூறி அதன் மீது பறந்து சூரனை தாக்கலானார். சூரனும் தனது மாயாஜால வித்தைகளினால் மறைந்து தாக்கி மறைந்தான்.

    தனது படையினரையும், படைக் கலங்களையும் இழந்த சூரன் அண்டங்கள் எல்லாம் மறைந்து ஒழிந்து பதுங்கினான். கடைசியாக முருகப் பெருமான் எய்திய வேலானது அவன் சென்ற இடமெல்லாம் துரத்திச் சென்று கடைசியாக நடுக்கடலடியில் மாமரமாய் மாறுவேடத்தில் நின்ற சூரனை; நீரினுள் சென்று மாமரத்தை இருகூறாக்கி சூரனை சம்காரம் செய்தது.

    ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து; தன்னை மன்னித்து, ஏற்றுக்கொள்ளும்படி முருகனிடம் மன்றாடினான்.அவன்மேல் இரக்கம் கொண்ட முருகன் பிளவுபட்ட மாமர பாதிகள் இரண்டையும் தன் அருளால் சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார். மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் பிணைத்துக்கொண்டார்.

    வெற்றி வீரத் திருமகனாய், முருகப் பெருமான் திருச்செந்தூர் திரும்பினார்.

    சூரனுடன் முருகப் பெருமான் போர் புரிந்து அவனது ஆணவத்தினை அடக்கி ஆட்கொண்ட நாளே இறுதி நாளாகிய சஷ்டி தினமாகும்.

    சூரனை அழித்த பாவம் தீர, திருச்செந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, முருகன் சிவ பூசை செய்தார். இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காணும் முருகனின் கைகளில் ஜப மாலையுடன் செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்க, சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்.

    இங்கே முருகப் பெருமான் அபயம் / வரம் தரும் கோலத்தில் இல்லாமல், ஜபம் செய்யும் கோலத்தில் உள்ளான். கையில் வேல் கிடையாது. சும்மா அலங்காரத்துக்கு வேல் அல்லது யோக தண்டத்தையோ தோள் மீது சார்த்தி வைத்திருப்பார்கள்; பின் கரம் சத்திப்படை ஏந்தி, இன்னொரு கரம் ஜபமாலை தாங்கி நிற்க, தியானத்தில் முழந்தாளில் கைவைத்து, ஈசனை மலர்களால் அர்ச்சிக்கும் இன்னொரு கரம் உள்ளது.

    முருகனுக்கு இடப்பக்கத்தில் உலகீசர் (ஜகன்னாதர்) என்னும் சிவலிங்கம் உள்ளது. அவருக்கே முதல் பூசைகள் செய்யப்படுகின்றன!

    மூலவரின் காலடியில் இரு மருங்கிலும் அவரைப் போலவே சின்னஞ்சிறு சிலைகள் உள்ளன, வெள்ளியில் ஒன்று; தங்கத்தில் ஒன்று!

    கருவறையைக் காலையிலும், மாலையிலும் வெளி-வலம் வரும் மூர்த்திகளாக அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

    ஆலயத்தில் சிறு செம்பாறைகளை குடைந்தே கருவறை அமைந்துள்ளது அதனால்தான் செந்து+இல்=செந்தில் என பெயர் ஆனது.

    பின்னாளில் பிரகாரங்கள் (வீதிகள்) என்று பெருகிப் பாறைக் குன்றுகள் மறைந்தாலும், இன்றும் இந்தச் செந்திலில் உள்ளவனே மூலத்தானத்து முதல்வன்.

    கிழக்கே கடலைப் பார்த்த திருமுகம். ஒருமுகம். சிரிமுகம். பாலமுகம். சிறு பாலகன் ஆதலால், அதே உயரம் தான் ஆளுயரம். இல்லை! தலைமுடி மாலை சூடி, மணி முடி தரித்து, வங்கார மார்பில் அணிப் பதக்கமும் தரித்து, வெற்றிப் பீடத்தில் ஏறி நிற்கும் காட்சி!

    சூரசம்ஹாரம் நடைபெறும் தினத்தில் திருச்செந்தூர் ஆலயக் கடல் நீரானது சம்ஹாரம் நடைபெறுவதற்கு வசதியாக செந்தில் ஆண்டவனின் அருள் கருணையால் உள் முகமாகச் சென்று சூரசம்ஹாரம் முடிந்து செந்தில் ஆண்டவர் இருப்பிடம் திரும்பும் போது கடலானது பழைய நிலைக்கு வருவதை காணலாம். கருவறையில் உள்ள மூலவரின் முகத்தில் சூரசம்ஹார களைப்பினால் ஏற்பட்ட வியர்வைத் துளிகளையும் காணலாம்.

    சூரசம்காரங்கள் முடிந்த பின்னர், இந்திரன் தேவயானையை முருகப் பெருமானிடமே ஒப்படைக்க முடிவுசெய்தார். முருகனும் சரவணப் பொய்கையில் முன்னர் தாம் அருளிய வாக்கின் படியே, தேவானை அம்மையைப் திருப்பரங்குன்றில் திருமணம் செய்துகொண்டார். பின்னர், வள்ளியை திருத்தணியில் திருமணம் புரிந்தார்.

    • அடையாளமாக சூரிய ஒளி ஆண்டிற்கு இரண்டு முறை மூலவர் லிங்கத் திருமேனியில் விழுகிறது.
    • ஊர்வசியின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த இந்திரன், குருவை அலட்சியம் செய்தான்.

    காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும் தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது. புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது பூலோகமே நீரில் அமிழ்ந்திருந்த போது திட்டை என்னும் இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளினார். இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார். இவ்வாறு ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இத்தலத்தை பஞ்சலிங்க ஷேத்திரம் என்று கூறுவர். இந்த ஒரு தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பஞ்சபூத தலங்களுக்கு சென்று வந்த புண்ணியம் கிட்டிவிடும். சம்பந்தர் சிவபெருமானை விட அவர் சுயம்பு லிங்கமாக காட்சி தரும் இத்தலம் மேலானது என்று குறிப்பிடுகிறார்.

    சூரியன் இங்கு இறைவனை வழிபட்டிருக்கிறான். இதன் அடையாளமாக சூரிய ஒளி ஆண்டிற்கு இரண்டு முறை மூலவர் லிங்கத் திருமேனியில் விழுகிறது. தட்சினாயண புண்ய காலத்தில் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளிலும், உத்தராயண புண்ய காலத்தில் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளிலும் சூரிய கிரணங்கள் மூலவர் மீது விழுகின்றன.

    மூலவர் வசிஷ்டேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கியது.

    மூலத்திருமேனி சுயம்பு. சதுர ஆவுடையார் மீது உள்ள சிவலிங்கத் திருமேனி சிறியதாக உள்ளது. திருமேனியின் மீது வரி வரியாகக் கோடுகள் சுற்றிலும் உள்ளன. நான்கு பட்டையாக உள்ளது. முன்னால் செப்பினாலான நந்தி பலிபீடம் உள்ளன. மூலவர் கருவறையின் மேல் விதானத்தில் ஒரு சந்திர காந்தக் கல் பொருத்தப்பட்டிருக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி சுமார் 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒருமுறை மூலவர் சிவலிங்கத் திருமேனியில் ஒரு சொட்டு நீர் விழும்படி இக்கல் பொருத்தப்பட்டிருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். பிரம்மா, விஷ்ணு, சுப்பிரமணியர், பைரவர், சூரியன், யமதர்மன், சனீஸ்வரன், தேவேந்திரன், ஆதிசேஷன், வசிஷ்டர், ஜமதக்னி முனிவர் ஆகியோர் இத்தலத்தில் வசிஷ்டேஸ்வரரை வழிபட்டுள்ளனர். கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தன விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், இலிங்கோத்பவரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதியும் உள்ளது.

    குரு ஸ்தலம்:

    ஆங்கிரசர் முனிவரின் ஏழாவது குழந்தை வியாழன். சகல கலைகளிலும் சிறந்து விளங்கிய இவர் தேவர்களுக்கு குருவானார். குருவின் வழிகாட்டலில் தேவர்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். ஒருநாள் குரு இந்திரனை பார்க்கச் சென்றார். ஊர்வசியின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த இந்திரன், குருவை அலட்சியம் செய்தான். குருவுக்கு ஆத்திரம் வந்தது. அங்கிருந்து புறப்பட்ட அவர் ஒரு மறைவிடத்தில் வாழத் தொடங்கினார். சரியான வழிகாட்டல் இல்லாததால் தேவலோகமே ஸ்தம்பித்தது. அரக்கர்கள் தேவர்களை கொடுமைப்படுத்தினார்கள். தவறை உணர்ந்த இந்திரன், எங்கெங்கெல்லாம் சிவத்தலங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் சென்று குருவை தேடினான். அப்படித் தேடிவரும் வழியில்தான் திட்டைக்கு வந்தான். வசிஷ்டேஸ்வரர் கோயிலில் மனமுருக மன்னிப்பு கேட்டு வேண்டிக்கொண்டான். இனியும் அவனை சோதிக்க விரும்பாத குரு, அவனுக்கு காட்சி தந்தார். இந்த சிவாலயத்திலேயே தனி சந்நதியும் கொண்டார்.

    தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர்

    கோவில் அமைப்பு:

    ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு ஒரு கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக சில படிகள் ஏறி உள்ளே சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். உள்ளே நுழைந்தவுடன் காணப்படும் முன்மண்டபத்தில் ஒரு தூணில் வலப்பால் நால்வர் வடிவங்களும் மறுபுறத் தூணில் ரிஷபாரூடர் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது. கொடிமரம் கருங்கல்லால் ஆனது. உயரத்தில் பலிபீடம் நந்தி உள்ளது. மூலவர் சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடைப்பட்ட நிலையில், அம்பாள் சந்நிதிக்கு மேற்குப் பக்கத்தில் தனி விமானத்துடன் கூடிய தெற்கு நோக்கிய குரு பகவானின் தனி சந்நிதி அமைந்துள்ளது.

    எல்லா சிவாலயங்களிலும் ஞான வடிவான தட்சிணாமூர்த்தியாக குரு கோயில் கொண்டிருப்பார். ஆனால் தென்குடித் திட்டையில் இவர் ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. சந்நிதிக்கு முன்னால் செப்பாலான நந்தி பலிபீடம் உள்ளன. அம்மன் சந்நிதிக்கு முனபாக மேல் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அவரவர் ராசிக்குக் கீழே நின்று பிரார்த்தனை செய்தால் வேண்டியது கிட்டும் என்பது ஆன்றோர் நம்பிக்கை.

    சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

    முன்னைநான் மறையவை முறைமுறை குறையடுந்

    தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்

    மன்னுமா காவிரி வந்தடி வருடநற்

    செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.

    மகரமா டுங்கொடி மன்மத வேள்தனை

    நிகரலா காநெருப் பெழவிழித் தானிடம்

    பகரபா ணித்தலம் பன்மக ரத்தோடுஞ்

    சிகரமா ளிகைதொகுந் தென்குடித் திட்டையே.

    கருவினா லன்றியே கருவெலா மாயவன்

    உருவினா லன்றியே உருவுசெய் தானிடம்

    பருவநாள் விழவொடும் பாடலோ டாடலுந்

    திருவினான் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே.

    உண்ணிலா வாவியா யோங்குதன் தன்மையை

    விண்ணிலார் அறிகிலா வேதவே தாந்தனூர்

    எண்ணிலார் எழில்மணிக் கனகமா ளிகையிளந்

    தெண்ணிலா விரிதருந் தென்குடித் திட்டையே.

    வருந்திவா னோர்கள்வந் தடையமா நஞ்சுதான்

    அருந்திஆர் அமுதவர்க் கருள்செய்தான் அமருமூர்

    செருந்திபூ மாதவிப் பந்தர்வண் செண்பகந்

    திருந்துநீள் வளர்பொழில் தென்குடித் திட்டையே.

    ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால்

    கூறினார் அமர்தருங் குமரவேள் தாதையூர்

    ஆறினார் பொய்யகத் தையுணர் வெய்திமெய்

    தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே.

    கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்

    வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடந்

    தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை

    தேனலைக் கும்வயல் தென்குடித் திட்டையே.

    மாலொடும் பொருதிறல் வாளரக் கன்நெரிந்

    தோலிடும் படிவிர லொன்றுவைத் தானிடங்

    காலொடுங் கனகமூக் குடன்வரக் கயல்வரால்

    சேலொடும் பாய்வயல் தென்குடித் திட்டையே.

    நாரணன் தன்னொடு நான்முகன் தானுமாய்க்

    காரணன் அடிமுடி காணவொண் ணானிடம்

    ஆரணங் கொண்டுபூ சுரர்கள்வந் தடிதொழச்

    சீரணங் கும்புகழ்த் தென்குடித் திட்டையே.

    குண்டிகைக் கையுடைக் குண்டரும் புத்தரும்

    பண்டுரைத் தேயிடும் பற்றுவிட் டீர்தொழும்

    வண்டிரைக் கும்பொழில் தண்டலைக் கொண்டலார்

    தெண்டிரைத் தண்புனல் தென்குடித் திட்டையே.

    தேனலார் சோலைசூழ் தென்குடித் திட்டையைக்

    கானலார் கடிபொழில் சூழ்தருங் காழியுள்

    ஞானமார் ஞானசம் பந்தன செந்தமிழ்

    பானலார் மொழிவலார்க் கில்லையாம் பாவமே.

    தேன் துளிக்கும் மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருத்தென்குடித்திட்டையைப் போற்றி ஞானசம்பந்தன் அருளிய இச் செந்தமிழ்ப்பாக்களைப் பாடவல்லவர்கட்குப் பாவம் இல்லை என்று சம்பந்தர் பாடியுள்ளார்.

    • ஆதிகல்ப காலத்தில் இறைவனால் படைக்கப்பட்ட பல தலங்கள் பிரளய கால வெள்ளத்தில் மூழ்கிப் பின் தோன்றின.
    • திருவிளையாடல் நடந்த திருத்தலமே திட்டை ஆகும்.

    தஞ்சை மாவட்டம் திட்டை கிராமத்தில் அமைந்துள்ளது வசிஷ்டேஸ்வரர் கோவில். இங்கு தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள குரு பகவானுக்கு வருடம் தோறும் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் நாடு முழுவதும் இருந்து ஏராளமாக பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டு குரு பெயர்ச்சியை முன்னிட்டு 12 ராசிக்காரர்களும் பலன்பெற வேண்டி லட்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்கள் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற உள்ளது. ஆதிகல்ப காலத்தில் இறைவனால் படைக்கப்பட்ட பல தலங்கள் பிரளய கால வெள்ளத்தில் மூழ்கிப் பின் தோன்றின.

    ஆனால் அந்த பேரூழிக்காலத்திலும் அழியாத பெருமை உடையது திட்டை ஸ்தலம். கைலாசம் கேதாரம், காசி, ஸ்ரீ சைலம், காஞ்சி. சிதம்பரம் போன்ற சுயம்பு தலங்களில் வரிசையில் இருபத்தி இரண்டாவது சுயம்புத்தலமாக விளங்குவது திட்டை. பிரளய காலத்தில் இவ்வுலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டது.

    மும்மூர்த்திகளும் மாயை வசப்பட்டு நீர் சூழ்ந்தும், இருள் கவிந்தும், இருந்த இந்தப் பிரமாண்ட உலகத்தைக் கண்டு அஞ்சினர். பரம்பொருளை பலவாறு வேண்டி துதித்தனர். அப்போது பார்வதி பரமேஸ்வரனின் அருளாள் ஊழிப்பெரு வெள்ளத்தின் நடுவில் நீண்ட பரப்பளவுள்ள ஒரு மேட்டுப் பகுதியை கண்டு வியந்தனர்.

    அம்மேட்டுப்பகுதியில் ஜோதிமயமான ஒரு சிவலிங்கம் தரிசனம் அளித்தது. அதனை மும்மூர்த்திகளும் கண்டு அதிசயித்து பூஜித்தனர். இந்த லிங்கத்தினின்று காட்சி தந்த இறைவன் மும்மூர்த்திகளிடம் ஏற்பட்ட மயக்கத்தை அகற்றி அபயமளித்து அவர்களுக்கு படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் அதற்கான வேத, வேதாந்த சாஸ்திர அறிவையும் அருளினார்.

    இந்த திருவிளையாடல் நடந்த திருத்தலமே திட்டை ஆகும். இங்கு இறைவன் தானாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என அழைக்கப்பட்டார். வசிஷ்டர் இங்கு வந்து தவம் புரிந்து பிரம்ம ஞானிகளில் தலை சிறந்தவர் ஆனார். அதனால் இத்தல இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்பட்டார்.

    இத்திருக்கோவில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் சந்நிதியின் விமானத்தில் சந்திர காந்தக்கல், சூரிய காந்தக்கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. இக்கற்கள் காற்றில் இருந்து ஈரப்பதத்தை தம்முள் ஈர்த்து வேதிவினை ஏற்பட்டு 24 நிமிடங்களுக்கு ஒரு சொட்டு நீரை சுவாமியின் மீது சொட்டுகின்றது. இத்தகைய அமைப்பு வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாது.

    • ஜோதிர்லிங்க வழிபாட்டுத் தலங்களில் முதன்மையானது சோமநாதர் ஆலயம்.
    • ஸ்ரீராமர் பூஜித்த ஈஸ்வரர் என்பதால் ராமேஸ்வரம் என பெயர் பெற்றது.

    இறைவன் ஒளிமயமானவன். அவ்வாறு ஒளியாய் விளங்கும் பரம்பொருளைத் தியானிப்பது அல்லது பூஜை செய்வது, வணங்குவது என்பது பொதுவாக மனிதர்களுக்கு கடினமாய்த் தென்பட்டது.

    ஆகவே அந்த ஒளியை எளிதாய் வழிபட லிங்க உருவத்தைக் கண்டு, அதைப் பல்வேறு கோணங்களில் உலகின் பல பாகங்களிலும், பல மதத்தினரும் வணங்கி வந்துள்ளனர் என்பது சரித்திர ஆய்வாளர்களின் முடிவு. அந்த சிவலிங்க உருவம் தொன்று தொட்டு பாரதத்தின் 12 முக்கிய திருத்தலங்களில் பிரசித்தமாய் பல்வேறு பெயர்களில் வணங்கப்பட்டு வருகிறது.

    ஜோதிர்லிங்க வழிபாடானது துவாபரயுக ஆரம்பத்தில் விக்கிரமாதித்த மன்னரால் முதல் முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

    ஆக, முழுமுதற் கடவுளாம் சிவனை - ஜோதி உருவாய்த் திகழ்பவரை மனதார எண்ணி, புத்தியின் மூலமாய் தியானம் செய்வது அவருடைய வழிபாட்டின் உன்னத நிலையாகும். இவ்வாறு மனதையும் புத்தியையும் ஒருமுகப்படுத்தும் முறையே ராஜ யோக தியானம் எனப்படுகிறது.

    மனித ஆத்மாக்கள் அனைவருக்கும் மேலான தந்தை நிராகாரமானவர் (மனித உருவற்றவர்); ஜோதி சொரூபமாய் விளங்குபவர். இந்த உலக சிருஷ்டியின் கர்த்தா அவரே! அவரை அன்புடன் நினைத்து தியானம் செய்வதன் மூலமே நமது பாவச்சுமைகள் அழிந்து, அமைதியும் அன்பும் ஆனந்தமும் பொங்கி வழியும்; புதிய உலகமான சொர்க்கம் இப்புவியில் படைக்கப்படும். அதுவே இறைவனின் படைப்பில் முதல் யுகமாகும். அதைத் தொடர்ந்து திரேதா, துவாபர, கலியுகம் என்று காலச்சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கும். தற்போது நாம் கலியுகம் என்னும் இருண்ட- துக்கம் நிறைந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிவோம்.

    ஆனாலும் பலரால் மறந்துபோய் விடப்பட்டிருக்கும் இம்மாபெரும் உண்மையை எளிய முறையில் இன்றைய தலைமுறையினரும் புரிந்து கொண்டு தியானம் செய்ய வேண்டுமென்பதற்காகவே பிரம்மாகுமாரிகள் இயக்கம் இந்த மாபெரும் 12 ஜோதிர்லிங்க தரிசனத்தை ஏற்பாடு செய்துள்ளது.

    தமிழகத்தில் பல முக்கிய நகரங்களில் ஜோதிர்லிங்க தரிசனம் நடந்தேறியுள்ளது. பல லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்துள்ளனர்.

    இத்தரிசனத்தின் சிறப்பு யாதெனில், பாரதத்தின் 12 ஜோதிர்லிங்க சிவத்தலங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கிறது. அதுவும் அந்தந்த தலங்களின் லிங்கங்களை அதே உருவில் அங்கு சென்று தரிசனம் செய்வது போன்ற ஓர் அற்புத அனுபவம் கிடைக்கும்.

    12 ஜோதிர்லிங்கங்கள்

    காசி விஸ்வநாதர் (வாரணாசி- உத்தரபிரதேசம்)

    பாரதத்தின் அனைத்து தீர்த்த தலங்களிலும் தலைசிறந்தது காசி.

    பரமாத்மா சிவன் இந்த புனித தலத்தைத் தனது திரிசூலத்திலிருந்து நேரடியாகப் படைத்தார் எனவும்; பிறகு பிரம்மாவுக்கு உலக சிருஷ்டியை ஆரம்பிக்குமாறு கூறியதாகவும் சிவபுராணம் கூறுகிறது. இந்த தலம் கர்மத்தின் தீய கணக்கினை அழிக்கக்கூடியது எனவும்; அனைவருக்கும் முக்தி அளிக்கக்கூடிய சிவலிங்கத்தை சிவனே படைத்ததாகவும் கூறப்படுகிறது. உலகத்தையே படைக்கும் காரியத்தைச் செய்வித்ததால் அங்குள்ள லிங்கமே விஸ்வநாத் என்றழைக்கப்படுகிறது.

    மல்லிகார்ஜுனர் (ஸ்ரீசைலம்- ஆந்திரா)

    இங்குள்ள மூலவர் எட்டு அங்குல உயரத்தில் சுயம்பு லிங்கமாகக் காட்சியளிக்கிறார். இந்த தலத்தில் ஜோதிர்லிங்கம் என்ற பெயரில் 11 வேறு கோவில்களும் உள்ளன. இக்கோவிலுக்குப் பின்னால் சிறிய குன்றின்மேல் பார்வதி கோவில் ஒன்றும் உண்டு. இத்தேவி இங்கு மல்லிகாதேவி என அழைக்கப்படுகிறாள். இங்குள்ள சிவனின் பெயர் அர்ஜுனன். எனவேதான் இங்குள்ள மூலவரை மல்லிகார்ஜுனர் என்றழைக்கிறோம்.

    ஓங்காரேசுவரர் (மத்தியப் பிரதேசம்)

    இங்குள்ள சிறப்பு யாதெனில், இங்கே ஓங்காரேசுவரர் மற்றும் பரமேஷ்வர் என்னும் இரண்டு ஜோதிர்லிங்கங்கள் உண்டு. அமலேஷ்வர் என்கிற வேறு பெயரும் உண்டு. இக்கோவிலுக்கு சற்று தூரத்தில் நர்மதை நதி இரண்டாகப் பிரிந்து பெருக்கெடுத்து ஓடுகிறது. பிறகு சற்று தூரத்தில் மீண்டும் ஒன்றாக இணைந்து விடுகிறது. இடைப்பட்ட தீவுப் பகுதியில்தான் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இரண்டாகப் பிரிந்தோடும்போது ஒன்று நர்மதா எனவும், மற்றொன்று காவேரி எனவும் அழைக்கப்படுகிறது. இத்தீவில் தான் மகாராஜா மாங்கதன் இறைவனை வேண்டி நின்றதாகவும், அதற்கு இறைவன் காட்சியளித்து அருள்புரிந்ததால் அவரது பெயரே இத்தீவிற்கும் சூட்டப்பட்டு மாங்கத தீவு என்றழைக்கப்படுகிறது.

    சோமநாதர் (குஜராத்)

    ஜோதிர்லிங்க வழிபாட்டுத் தலங்களில் முதன்மையானது சோமநாதர் ஆலயம். இந்த ஜோதிர்லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த சந்திர பகவான், சிவனை வேண்டி தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. இறைவனும் அவரது தவத்தை மெச்சி வரம் அளித்தார். எனவேதான் இந்த லிங்கம் சந்திரன் பெயரால் (சோமன்-சந்திரன்) வழங்கி வருகிறது. இந்த ஜோதிர்லிங்க தரிசனத்தின் மூலமே மனிதர்கள் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுகிறார்கள். மேலும் மேலும் மனம் நிறைந்த பலன்களை அடைந்து, மரணத்திற்குப்பின் சொர்க்கத்தையும் அடைவதாகக் கூறப்படுகிறது. அரபிக்கடல் ஓரத்தில் இக்கோவில் அமைந்திருப்பது சிறப்பு அம்சமாகும்.

    இராமநாதசுவாமி (இராமேஸ்வரம்- தமிழ்நாடு)

    பாரதத்தின் தெற்கு ஓரத்தில் அமைந்திருக்கும் திருத்தலம் இராமேஸ்வரம்.

    ஸ்ரீராமர் பூஜித்த ஈஸ்வரர் என்பதால் ராமேஸ்வரம் என பெயர் பெற்றது. பிரதான மூர்த்தி இராமநாத சுவாமி என்றழைக்கப்படுகிறார். இந்த லிங்க மூர்த்திக்கு கங்கை நீரை அபிஷேகம் செய்து, இத்தலத்திலுள்ள மண்ணை எடுத்து கங்கையில் கரைப்பது விசேஷம். எனவேதான் வடநாட்டு யாத்ரீகர்கள் நிறைய பேர் இங்கு வருகின்றனர்.

    இங்குள்ள 22 தீர்த்தங்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவை. இவற்றில் நீராடவில்லையெனில் இராமேஸ்வர யாத்திரை நிறைவு பெறாது என்றே கூற வேண்டும். இறுதி தீர்த்தமான கோடி தீர்த்தத்தில் நீராடிய பிறகே சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். அக்னி தீர்த்தம் என்ற பெயரில் வங்கக்கடல் விளங்குகிறது.

    நாகேஸ்வரர்

    இங்கு மூலவர் நாகேஸ்வரர் என்றும்; பார்வதி தேவி நாகேஸ்வரி என்றும் பூஜிக்கப்படுகின்றனர். இன்று இந்த ஜோதிர்லிங்கம் பாகிஸ்தானின் தலைநகரான கராச்சியில், கவர்னர் மாளிகைக்கு அருகில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. ஒரு நடைபாதை பாலத்தின் மூலமே இக்குகையைச் சென்றடைய முடியும்.

    கேதார்நாத் (உத்தரகாண்டம், உத்தர பிரதேசம்)

    பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களிலும் இயற்கையின் எழில் சூழ்ந்த அழகுமிக்க தலம் கேதார்நாத் ஆகும். மந்தாகினி நதிக்கு வலப்புறத்தில் அமைந்துள்ள இத்தலத்தைச் சுற்றி மூன்று பக்கமும் மலைகள் சூழ்ந்து காணப்படுவது கண்கொள்ளாக் காட்சி. இந்த இமாலய மலைத் தொடரிலிருந்துதான் மந்தாகினி நதி உற்பத்தியாகி ஓடி வருகிறது. இங்குள்ள கேதாரேஷ்வர் மற்றும் பத்ரி நாராயணரை பக்தி சிரத்தையுடன் வழிபடுவோருக்கு வாழ்க்கையில் வரும் துன்பங்கள் விலகிப் போகும்; எண்ணங்கள் பூர்த்தியாகும் என சிவபுராணம் கூறுகிறது. மேலும் இந்த யாத்திரையின்போது மரணம் எய்துவோருக்கு மோட்சம் நிச்சயம் என்றும் கூறப்படுகிறது.

    கேதார்நாத்திற்கு விஜயம் செய்யும் யாத்ரீகர்கள் மிக அவசியமாக நேபாளத்திலுள்ள பசுபதிநாத் மூலவரையும் சென்று தரிசிக்க வேண்டுமென்பது ஐதீகம். ஏனெனில் பரமனின் தலைப்பாகம் பசுபதி நாத் என்றும்; பாதப்பகுதி கேதார்நாத் என்றும் கூறப்படுகிறது.

    மகாகாளேஸ்வர் (உஜ்ஜயினி, மத்திய பிரதேசம்)

    உஜ்ஜயினி என்றும் அவந்திகா என்றும் அழைக்கப்படும் நகரம் சிப்ரா நதிக்கரையோரம் அமைந்துள்ளது. இந்த நதி பகவான் விஷ்ணுவின் சரீரத்திலிருந்து உற்பத்தியாவதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு கிரகம் சிம்ம ராசியில் வரும்போது, வைகாசி விசாகத்தின்போது இங்கு மகாமகம் நடைபெறுகிறது.

    இரு பிரிவுகளாக வளர்ந்து நிற்கிறது மகாகாளேஸ்வர் கோவில். மேல் தளத்தில் ஓங்காரேஸ்வர் சிவலிங்கம் பிரதிஷ்டையாகியுள்ளது. கீழ்ப்பகுதியில் மகாகாளேஸ்வரர் ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. இந்த சிவனைத் தரிசனம் செய்வதால் ஒருவருக்கு கனவில்கூட துக்கம் ஏற்படாது என்றும்; எந்தெந்த ஆசைகளுடன் பூஜை செய்கின்றனரோ அந்த ஆசைகள் பூர்த்தியாகும் என்றும் கூறப்படுகிறது.

    வைத்தியநாதேஸ்வரர் (பரளி, மகாராஷ்டிரா)

    ஒளரங்காபாத்திற்கு அருகில் பாபானி ரெயில் நிலையத்தருகில் பரளி வைத்திய நாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள லிங்கமானது கைலாசத்திலிருந்து ராவணனால் கொண்டு வரப்பட்டது என்று கருதப்படுகிறது. இந்த லிங்கம் சிறு மலைக்குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.

    இக்குன்றில் எவரது சடலம் எரியூட்டப்படுகிறதோ, அவர்கள் நேரடியாக மோட்சம் செல்வார்கள் என்று கூறப்படுகிறது. எனவே பெருவாரியான மக்கள் தங்கள் உறவினர்களின் சடலங்களை இங்கே கொண்டு வந்து தகனகிரியை செய்தனர். இந்த வழக்கம் சென்ற நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்து வந்தது. எனவே இந்த தலம் தகன பூமியின் பேரால் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இதைப் பின்பற்றி பாரதத்தின் பிற நகரங்களிலும்கூட தகன பூமியில் சிவபெருமானின் கோவில் (சுடலை காப்பவர்) அமைத்துள்ளனர்.

    குகமேசம் (கிருஷ்ணேஷ்வர்- மகாராஷ்டிரா)

    வடமொழியில் குஷ்மேஷ்வர் என்றழைக்கப்படும் இத்தலத்தில் அருள்பாலிக்கும் ஈஸ்வரனின் பெயர் கிருஷ்ணேசுவரர் ஆகும். ஒளரங்காபாத் மற்றும் தௌலதாபாத் நிலையங்களுக்கு அருகே இத்தலம் அமைந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற ஓவியங்கள் அமைந்துள்ள எல்லோரா குகைகளுக்கருகில் இக்கோவில் அமைந்துள்ளது.

    திரியம்பகேஸ்வரர் (மகாராஷ்ட்ரா)

    நாசிக் ரோடு அருகில், பிரம்மகிரி மலையில், கோதாவரி நதி உற்பத்தியாகும் இடத்திற்கு அருகில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகப்பெரிய நிலப்பரப்பில், நாலாபுறமும் மிக உயர்ந்த மதில் சுவர்களுடன் அமைந்துள்ளது. உள்பிராகாரத்தில் மூன்று லிங்கங்கள் உள்ளன. இவை பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் பிரதிமைகள் என்று கூறப்படுகின்றன. இந்த ஜோதிர்லிங்கங்களைத் தொட்டு வணங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் அமிர்தகுண்டம் என்னும் பெயரால் புஷ்கரணி (திருக்குளம்) உள்ளது.

    பீமா சங்கர் (அருணாசலபிரதேசம்)

    இக்கோவில் பழைய அஸ்ஸாமில் தென்புறத்திலுள்ள- தற்போதைய அருணாசல பிரதேசத்தின் தேஜி நகரில் அமைந்துள்ளது. இப்பகுதியில் பீமாசங்கர் மற்றும் பிரம்மா குண்டம் (பரசுராம் குண்டம்) என்னும் இரண்டு புகழ் பெற்ற தீர்த்தங்கள் உள்ளன.

    கும்பகர்ணனின் மகனான பீம சூரன் அனைவருக்கும் பெருந்துன்பம் விளைவித்தான். அப்போது சிவன் தோன்றி சூலத்தால் பீம சூரனை வதம் செய்தார். அந்த சாம்பலிலிருந்து அநேக காரியங்களுக்குப் பயன்படும் மருந்து வகைகள் உற்பத்தியாயின என்றும்; "பூதம், பேய், பிசாசு போன்றவற்றை விரட்ட வல்லது என்றும் கூறப்படுகிறது.

    "தேவர்கள், முனிவர்கள், மக்களுடைய பாதுகாப்பின் பொருட்டு, யுத்தம் செய்யாதோருக்கும் துன்பம் விளைவிக்கக்கூடிய இந்த மண்ணில், தாங்கள் அவசியம் இருந்து காத்தருள வேண்டும்' என்கிற பிரார்த்தனையின்பேரில் பீமாசங்கர் என்னும் பெயரில் ஈசன் இங்கு கோவில் கொண்டார்.

    ×