search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Avinasilingeswarar temple"

    • `கரைக்கால் முதலையைப் பிள்ளைத் தரச் சொல்லு காலனையே’
    • சிறுவனின் பெற்றோர் ஆனந்தம் கொண்டனர்.

    சுந்தர மூர்த்தி நாயனார், சிவதலம் தோறும் தரிசனம் செய்து கொண்டு வந்தார். அப்படி அவர் இந்தத் திருத்தலம் வந்தபோது, ஒரு தெருவில் இரண்டு விதமான சத்தம் கேட்டு ஒரு கணம் நின்றார். அங்கே ஒரு வீட்டில் 7 வயது சிறுவனுக்கு முப்புரிநூல் (உபநயனம்) அணிவிக்கும் மங்கல விழா நடந்தது. அதன் எதிர் வீட்டில் இறப்பு நிகழ்ந்ததற்கான அழுகை ஓலம் கேட்டது. இதுபற்றி சுந்தரர் விசாரித்தபோது, 'பூணூல் அணிவிக்கும் சிறுவனின் வயதை கொண்ட எதிர் வீட்டு சிறுவனை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முதலை விழுங்கிவிட்டதாகவும், அந்தச் சிறுவன் இருந்தால் இன்று பூணூல் அணிவிக்கும் நிகழ்வு நடைபெறும் என்பதால் அந்த வீட்டினர் அழுவதாகவும் தெரியவந்தது.

    சுந்தரர் அந்தச் சிறுவனின் பெற்றோருடைய துன்பத்தை துடைக்க எண்ணினார். அவர்களை சிறுவன் விழுங்கப்பட்ட முதலை வாழும் குளக்கரைக்கு அழைத்துச் சென்றார். `கரைக்கால் முதலையைப் பிள்ளைத் தரச் சொல்லு காலனையே..' என்று சிவனிடம் மனமுருக வேண்டிப் பாடினார், சுந்தரர். அப்போது நீருக்குள் இருந்து வெளிப்பட்ட முதலை, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் விழுங்கிய சிறுவனை உயிருடன் உமிழ்ந்தது.

    அதுவும் அந்தச் சிறுவன் தற்போதைய பருவத்தில் இருந்தது மேலும் ஆச்சரியமான ஒன்று. அந்த சிறுவனின் பெற்றோர் ஆனந்தம் கொண்டனர். இறைவனின் கருணையையும், சுந்தரரின் பக்தியையும் நினைத்து மெய்சிலிர்த்தனர். பின்னர் சிறுவனை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவனுக்கும் உபநயனம் செய்துவைத்தனர்.

    • தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், இது 256-வது தலமாகும்.
    • தானே தோன்றிய சுயம்பு மூர்த்தி ஆவார்.

    மாணிக்கவாசகரால் `அரிய பொருளே அவிநாசி அப்பா..' என்று போற்றப்பட்டவர், அவிநாசியில் உள்ள அவிநாசியப்பர். இந்தத் திருத்தலம் பழமையும், பெருமையும் கொண்டது. தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், இது 256-வது தலமாகும். சிவபெருமான் ஆடிய அக்னி தாண்டவத்தின்போது வெளிப்பட்ட வெம்மைக்குப் பயந்து, தேவர்கள் அனைவரும் ஓரிடத்தில் புகுந்து ஒளிந்துகொண்டனர். தேவர்கள் புகுந்து ஒளிந்த காரணத்தால் `புக்கொளியூர்' (புக்கு+ஒளியூர்) என்று பெயர் பெற்றது. புராண காலத்தில் இவ்வூரின் பெயர் திருப்பொக்குளியூர்.

    கோவிலின் பெயர் அவிநாசி. `விநாசி' என்றால் `பெருங்கேடு' என்று பொருள். `அவிநாசி' என்பதற்கு `பெருங்கேட்டை போக்கவல்லது' என்று பொருள். காலப்போக்கில் கோவிலை ஒட்டி வளர்ச்சியடைந்த நகரம், கோவிலின் பெயரால் `அவிநாசி' என்றே பெயர் பெற்றது.

    இந்த ஆலயத்தின் தெற்கே சற்று தொலைவில் இன்றும் `திருப்பொக்குளியூர்' என்ற சிற்றூர் இருக்கிறது. இந்த ஆலய இறைவன், தானே தோன்றிய சுயம்பு மூர்த்தி ஆவார். காசியில் உள்ள சுயம்பு மூர்த்தியான விசுவநாதரின், வேர் ஒன்று தென் திசை நோக்கி ஓடி வந்து, நுனியில் கிளைத்து முளைத்தெழுந்த கொழுந்தாக, அவிநாசியில் உள்ள சுயம்பு மூர்த்தி அறியப்படுகிறார். இதனால் இந்த மூர்த்தி, `வாரணாசி கொழுந்து' என்று போற்றப்படுகிறார்.

    எனவே இத்தல இறைவன், காசி விசுவநாதருக்கு இணையான மூர்த்தியாகும். அவிநாசியில் அருள்வதால், `அவிநாசியப்பர்', `அவிநாசிநாதர்' என்றும், பிரம்மதேவன் பூஜித்ததால் `பிரம்மபுரீசுவரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

    இத்தல அம்பாளின் திருநாமம், `கருணாம்பிகை' என்பதாகும். இவர் `பெருங்கருணாம்பிகை', `கருணாலய செல்வி', `திருக்காமக்கோட்டை நாச்சியார்' போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவ்வாலய தலவிருட்சம் பாதிரி மரம், ஆதி காலத்தில் மா மரம் தல விருட்சமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இங்கு காசி தீர்த்தம், கங்கை தீர்த்தம், தெப்பக்குளம், நாககன்னி தீர்த்தம், தாமரைக் குளம், ஐராவதத்துறை ஆகியவை தீர்த்தங்களாக இருக்கின்றன.

     ஆலய அமைப்பு

    இத்திருக்கோவில் நல்லாற்றின் கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுரத்தின் முன்னால் 70 அடி உயரம் கொண்ட ஒரே கல்லாலான தீப ஸ்தம்பம் உள்ளது. அதற்குப் பின்னால் ஏழு நிலை கோபுரம் காணப்படுகிறது. அம்மன் சன்னிதிக்கு முன்பாகவும் ஐந்து நிலை கோபுரம் ஒன்று இருக்கிறது. இத்தீப ஸ்தம்பம் கொங்கு நாட்டில் வேறெந்த ஆலயத்திலும் காணக்கிடைக்காத ஒன்று. தீப ஸ்தம்பத்திற்கு தெற்கே தெப்பக்குளமும், அதன் எதிரில் பாதிரி மரத்து அம்மன் கோவிலும், அதற்கு சற்று தெற்கே முதலை வாயில் இருந்து சிறுவனை அழைத்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் சன்னிதியும், முதலை வெளிப்பட்ட ஏரியும் உள்ளது.

    ஏழுநிலை ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தால் நவரங்க மண்டபத்தை அடையலாம். இந்த மண்டபத்திற்குள் ஊர்த்துவ தாண்டவமூர்த்தி, ஆலங்காட்டு காளியம்மை, வீரபத்திரர் சிலைகளும், பலிபீடம், கொடிமரம், நந்தியம்பெருமான் உள்ளனர். இந்த மண்டபத்தைக் கடந்து சென்றால், மூலவர் அவிநாசியப்பரை தரிசிக்கலாம்.

    பல அற்புதங்கள் நிகழ்த்திய இத்தல இறைவன், இங்கே சுயம்பு லிங்கமாக அருளை அள்ளி வழங்குகிறார். மூலவர் அருளும் கருவறையும், பிரகார அமைப்பும் இந்த ஆலயத்தின் ஆதி வடிவமைப்பாகும். இந்த ஈசனை வழிபட்டு விட்டு வெளியே வரும்போது, உள்சுற்று பிரகாரத்தில் அறுபத்து மூவரும் காட்சி தருகின்றனர்.

    தொடர்ந்து தென்மேற்கு மூலையில் தல விநாயகரும், அவரை அடுத்து ஐம்பூதங்களின் வடிவாக பஞ்ச லிங்கங்கள், முருகப்பெருமான், மகாலட்சுமி சன்னிதிகளும் உள்ளன. கருவறைக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை அம்மனும் காட்சி தருகின்றனர். ஈசானிய மூலையில் சண்டிகேசுவரரும், நவக்கிரகங்களும் உள்ளன.

    துர்க்கை அம்மனுக்கு அருகில் காசி தீர்த்த கிணறு இருக்கிறது. கங்கை நதி, இந்த கிணற்றுக்குள் வருவதாக ஐதீகம். கிணற்றுக்கு அருகாமையில் உள்ள ஞான (கால) பைரவர், சிறப்புக்குரிய மூர்த்திகளில் ஒருவராவார். இவருக்கு மட்டும் தனி சகஸ்ரநாமம் உள்ளது. வசிஷ்டருக்கு சனி தோஷம் நீக்கிய, அனுக்கிரக சனி பகவானும் இங்கே சிறப்புடன் வணங்கப்படுகிறார்.

    பிரகாரத்தின் தெற்கு பக்கத்தில் சுவாமியின் வலப்புறம் அம்பிகை சன்னிதி உள்ளது. சுமார் மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த அம்மனின் திருமேனி, கருணை பொங்கும் விழியோடு அமைக்கப்பட்டுள்ளது. சுவாமி சன்னிதியை அடுத்து திருக்கல்யாண மண்டபம் அமைந்துள்ளது.

    தினசரி ஐந்து கால பூஜைகள் நடைபெறும் இவ்வாலயத்தில், ஆயுள் நீட்டிப்புக்காகவும், விஷப் பூச்சிகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், எதிரிகள் பயம் விலகவும் இறைவனையும், அம்பாள் சன்னிதியில் உள்ள தேள் வடிவத்தையும் வணங்குகின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    கோயம்புத்தூருக்கு கிழக்காக 42 கி.மீ தொலைவிலும், திருப்பூரில் இருந்து வடமேற்காக 12 கி.மீ தூரத்திலும், திருப்பூர் மாவட்டத்தில் கோவையில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அவிநாசி திருத்தலம் உள்ளது. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான பஸ் வசதி இருக்கிறது. இந்த ஆலயத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மற்றொரு தேவாரத் தலமான திருமுருகன்பூண்டி உள்ளது.

    • பதிகம் பாடி உயிருடன் மீட்ட வரலாறும் உடைய சிறப்பு பெற்றது
    • சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறும்.

     அவினாசி : 

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் பதிகம் பாடி உயிருடன் மீட்ட வரலாறும் உடைய சிறப்பு பெற்றது அவினாசி லிங்கேஸ்வரர் கோவில். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா தொடங்கியது. கடந்த 29-ந்தேதி இரவுபஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்கள் காட்சி அளித்தல் ஆகியவை நடந்தன. கடந்த 2-ந்தேதி மற்றும் 3-ந்தேதி பெரிய தேர் இழுக்கப்பட்டது. 4-ந்தேதி சிறிய தேர் (அம்மன் தேர்) இழுக்கப்பட்டது. நேற்று பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.இன்று(சனிக்கிழமை) இரவு அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்தேர் பவனி நடைபெறுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பி அதிக அளவில் உள்ளது.

    தெப்பத்தேர் நிகழ்ச்சி மாலையில் நடை பெறுவதால் பக்தர்கள் வெள்ளம் கட்டுக்கடங்காமல் குளத்தில் இறங்கி படிக்கட்டுகளில் அமர்ந்து, தெப்ப தேரில் சுவாமி வலம் வருவதைக் காண்பர்.தற்போது குளத்தி ல் தண்ணீர் அதிகமாக நிரம்பியுள்ளதால் அதிக பட்சமாக ஒரு வரிசை யில் உள்ள படியில் மட்டுமே அமர்ந்து தரிசனம் செய்யும் நிலையில் உள்ளது. இதனால் தீய ணைப்பு படையினர் மற்றும் போலீசார், தெப்ப க்குளத்தின் உள்பகுதி யில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காமல் தகுந்த பாதுகாப்பு முன்னேற்பா டுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்ப ட்டுள்ளது.

    • கோவில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டது.
    • 2 மாதமாக கோவில் நிர்வாகத்தினர் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான முயற்சி மேற்கொண்டுவருகின்றனர்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பும், முதலையுண்ட பாலகனை சுந்தரர் பதிகம்பாடி மீட்டெடுத்த கோவில் என்ற பல சிறப்புகள் பெற்றது கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் ஆகும்.

    இவ்வாறு பல சிறப்பு வாய்ந்த இக்கோவிலுக்கு தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்களிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்குசாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்தநிலையில் இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்து ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும் என்பது நியதி. கடந்த 2 மாதமாக கோவில் நிர்வாகத்தினர் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான முயற்சி மேற்கொண்டுவருகின்றனர். எனவே கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகள் தொடங்கி விரைவில் நடப்பதற்காக பொதுமக்கள் வளமாக வாழவும் கருணாம்பிகை அம்மன் சன்னதியில் நேற்று நவசக்தி அர்ச்சனை நடந்தது.

    இதில் கோவில் 9 சிவாச்சாரியார் ஒன்றிணைந்து வேத மந்திரங்கள் படித்து சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் நவசக்தி அர்ச்சனை செய்தனர். இதில் அவினாசி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×