search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை விபத்து"

    • மக்கள் மீது அடுத்தடுத்து வந்த கார்கள் மோதியதால் பெரும் விபத்து.
    • சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்.

    இலங்கையின் பதுளை மாவட்டத்தில் கார் பந்தய திடலில் இன்று கார் பந்தயப் போட்டி நடைபெற்றது.

    ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 21 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காயம் அடைந்தவர்கள் தியத்தலாவ, பண்டாரவளை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கார் பந்தயத்தின்போது, கார் செல்வதற்கான பாதையைவிட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியுள்ளது. விபத்துக்குள்ளான காரை சூழ்ந்த மக்கள் மீது அடுத்தடுத்து வந்த கார்கள் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.

    இதனால், உயிரிழப்புகளும், படுகாயங்களும் அதிகளவில் பதிவாகியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் விபத்து நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆந்திராவில் சாலை விபத்துகள் வெற்றிகரமாக குறைந்துள்ளது.
    • சாலை விபத்துகள் 4.7 சதவீதம் அதிகரித்து 2023ல் 23,652 ஆக உயர்ந்துள்ளது.

    சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க உத்தரபிரதேச போக்குவரத்து துறை புதிய உத்தியை கையாண்டுள்ளது.

    அனைத்து வணிக வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்கள் தங்கள் குடும்பத்தினரின் படத்தை டாஷ்போர்டில் வைக்குமாறு போக்குவரத்து ஆணையர் சந்திர பூஷன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    குடும்பப் படங்களைக் வைக்கும் யோசனை ஆந்திராவில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று போக்குவரத்து முதன்மைச் செயலாளர் எல்.வெங்கடேஷ்வர் லு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும்," இது ஓட்டுநர்களுக்கு அவர்களின் குடும்பங்களை நினைவூட்டும் மற்றும் பாதுகாப்பாக வாகனத்தை ஓட்ட அவர்களை ஊக்குவிக்கும்.

    இந்த நடவடிக்கையால் ஆந்திராவில் சாலை விபத்துகள் வெற்றிகரமாக குறைந்துள்ளது.

    கடந்த 2022ல் 22,596 ஆக இருந்த சாலை விபத்துகள் 4.7 சதவீதம் அதிகரித்து 2023ல் 23,652 ஆக உயர்ந்துள்ளது. அதனால், சாலை விபத்துகளை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை புதுமையான தீர்வுகளை தேட தூண்டியது" என்றார்.

    • விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் தப்பி ஓட்டம்.
    • விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை கோயம்பேட்டில் இன்று காலை தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி ஒன்று சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதனால், லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. மேலும், லாரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் வெளியேறி வீணாக பெருக்கெடுத்து ஓடியது.

    லாரி ஓட்டி வந்த ஓட்டுநர் விபத்தைதொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்து தப்பிவிட்டார்.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் சிக்கிய யாத்ரீகர்கள் தட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
    • கராச்சியில் இருந்து 200 கிமீ தொலைவில் ஷா நூரானி ஆலயம் அமைந்துள்ளது.

    பாகிஸ்தானில் உள்ள பலோசிஸ்தானின் ஹப் மாவட்டத்தில் ஷா நூரானி சன்னதிக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் காயமடைந்ததாக பலோசிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    பலோசிஸ்தானின் குஜ்தார் மாவட்டத்தில் உள்ள ஷா நூரானி கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த போது, தட்டாவிலிருந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டிரக், ஹப் மாவட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    கராச்சியில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள தொலைதூர மலைப்பகுதியில் ஷா நூரானி ஆலயம் அமைந்துள்ளது.

    இதற்கிடையில், விபத்தில் சிக்கிய யாத்ரீகர்கள் சிந்து மாகாணத்தில் உள்ள தட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதுகுறித்து, பலோசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்டி, படுகாயமடைந்தவர்களை கராச்சிக்கு மாற்ற சிந்து அரசாங்கத்தை தொடர்பு கொள்ளுமாறு நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

    • விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
    • உள்ளாட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுவதில் ஈடுபட்டுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தின் கும்ஹாரி பகுதியில் பேருந்து கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட விபத்தில், 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 14 பேர் காயமடைந்துள்ளனர்.

    விபத்து குறித்து துர்க் மாவட்ட ஆட்சியர் ரிச்சா பிரகாஷ் சவுத்ரி கூறுகையில், " துர்க்கில், தொழிலாளர்களுடன் சென்றுக் கொண்டிருந்த பேருந்து நேற்று இரவு 8.30 மணியளவில் கும்ஹாரி அருகே ஒரு பள்ளத்தில் விழுந்தது. இதில், 12 நபர்கள் இறந்தனர். மேலும், 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    காயமடைந்தவர்களில் 12 பேர் பரிந்துரைக்கப்பட்டு எய்ம்ஸ் (ராய்ப்பூர்) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மீதமுள்ள இருவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் தற்போது சீரான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கிறோம்.

    விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" என்றார்.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சத்தீஸ்கர் மாநிலம் துர்கில் ஏற்பட்ட பேருந்து விபத்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளாட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுவதில் ஈடுபட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காங்கேயம் அருகே அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
    • இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் காங்கயம் ரோடு, நல்லிகவுண்டர் நகர் புதுநகர் 7-வது வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (60). திருப்பூரில் டையிங் நிறுவனம் நடத்திவந்தார். இவரது மனைவி சித்ரா (57). இந்த தம்பதியர் மயிலாடுதுறை திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேசுவரர் கோவிலுக்கு சென்று 60-ம் கல்யாணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி சந்திரசேகரன், தனது குடும்பத்தினருடன், திருக்கடையூர் சென்று 60-வது கல்யாணத்தை முடித்துவிட்டு நேற்று மாலை 4 மணிக்கு அங்கிருந்து மீண்டும் திருப்பூருக்கு காரில் புறப்பட்டனர்.

    சந்திரசேகரனின் 2-வது மகன் இளவரசன் (26) காரை ஓட்டி வந்துள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்துள்ள ஓலப்பாளையம் அருகே கரூர்-கோவை சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது திருப்பூரில் இருந்து திருச்சியை நோக்கி அரசு பேருந்து சென்றது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக காரும்-பஸ்சும் நேருக்கு நேர் மோதியது. இதில் சந்திரசேகரன், அவரது மனைவி சித்ரா, சந்திரசேகரனின் மருமகள் ஹரிவி வித்ரா (30), பேத்தியான 3 மாத பெண் குழந்தை ஷாக்ஷி, காரை ஓட்டி வந்த 2-வது மகன் இளவரசன் ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.

    காரில் வந்த சந்திரசேகரனின் மூத்த மகன் சசிதரன் (30) என்பவர் மட்டும் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். அக்கம்பக்கம் உள்ளவர்கள் விரைந்து வந்து பலத்த காயத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்த அவரை அங்கிருந்து மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அரசு பஸ்சை ஓட்டி வந்த கரூர் மாவட்டம், கடவூர் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் (51), கண்டக்டர் கரூர் மாவட்டம், நொய்யல் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (53) மற்றும் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதற்கிடையே பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் இறந்தவர்களின் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. வெள்ளகோவில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி, காரை உடைத்து இறந்தவர்களின் உடல்களை மீட்டனர்.

    காரின் அருகே உறவினர்களுக்கு கொடுப்பதற்காக வாங்கி வந்த சாமி படங்கள், பூஜைப்பொருட்கள் சிதறிக்கிடந்தன. காங்கயம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் உயிரிழந்த 5 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக, வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • விபத்தில் சிக்கிய, 19 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

    தென்காசியில் இருந்து கோவை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து தற்காலிக பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

    இந்த கோர விபத்தில், இருவர் உயிரிழந்த நிலையில், 19 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

    மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் நிறுவன ஊழியர்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளனர்.
    • 2 பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    கேரள மாநிலம் இடுக்கி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    அடிமாலி மாங்குளம் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

    இதில், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த மீட்டு குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அடிமாலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து தொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில், நெல்லையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளனர்.

    • டிராக்டரில் அதிக பாரம் ஏற்றப்பட்டதும் விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
    • விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் இன்று காலை டிராக்டர் மீது ஜீப் நேருக்கு நேர் மோதியதில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

    தேசிய நெடுஞ்சாலை 31-ல் பஸ்ராஹா பகுதியில் உள்ள பெட்ரோல் பம்ப் அருகே இன்று அதிகாலை 5.15 மணியளவில் விபத்து நடந்துள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "ஏழு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த மூவரும் சிறந்த சிகிச்சைக்காக பாகல்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஜீப்பில் பயணித்தவர்கள் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

    மேலும், டிராக்டரில் அதிக பாரம் ஏற்றப்பட்டதும் விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

    இறந்தவர்கள் கவுதம் குமார் (10), பிரகாஷ் சிங் (60), மோனு குமார் (11), அமன் குமார் (19), பூந்தி குமார் (22), அன்ஷு குமார் (22), வில்லோ குமார் (5) மற்றும் பல்து தாக்கூர் (5) என்றும்,

    காயமடைந்தவர்கள் சச்சித் தாக்கூர், தர்மேந்திர குமார் மற்றும் குந்தன் குமார் என்றும் தெரியவந்துள்ளது.

    விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மயங்கிய நியைில் இருக்கும் மம்தாவின் புகைப்படங்கள் வெளியானது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியீடு.

    மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சாலை விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், மம்தா பானர்ஜியின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    நெற்றியில் ரத்த காயத்துடன் மயங்கிய நியைில் இருக்கும் மம்தாவின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், மம்தா விரைவில் குணம் பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட சாலை விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்தேன்.

    இந்த கடினமான நேரத்தில் என் எண்ணங்கள் அவருடன் இருக்கும். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

    இவ்வறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து கனிமொழி எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில், " மேற்கு வங்க முதல்வரின் சாலை விபத்து பற்றிய செய்தி அதிர்ச்சியாக உள்ளது. அவள் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன்" என்றார்.

    • செங்கல்பட்டு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோதியது
    • இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்களின் பெற்றோர்களுக்கும். அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சிறுநாகலூர் கிராமம். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று 12.3.2024 தொழுப்பேடுவிலிருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோதியது.

    அந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மதுராந்தகம் தனியார் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர்கள் தனுஷ் (வயது 21) த.பெ. முனியப்பன். கமலேஷ் (வயது 19) த.பெ. முருகேசன் மற்றும் மோனிஷ் (வயது 19) த.பெ. சிவகுமார் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிழிந்தனர் மேலும் இவ்விபத்தில் திரு ரவிச்சந்திரன் (வயது 20) த.பெ. குணசேகரன் என்பவர் மதுராந்தகம் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும். வேதனையுமடைந்தேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்களின் பெற்றோர்களுக்கும். அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்தப் பேரிழப்பு நம் அனைவருக்கும் ஆழ்ந்த வேதனை அளிக்கிறது உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா இரண்டு இலட்சம்ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது.
    • இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், மதனப்பள்ளி அடுத்த கொல்ல பள்ளியை சேர்ந்தவர் காளிதாஸ். அதே பகுதியை சேர்ந்தவர் சந்திரா. இவர்கள் 2 பேரும் இன்று அதிகாலை சிக்கல பைலு பால் பண்ணைக்கு சென்றுவிட்டு பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

    மதனப்பள்ளி புறநகரில் உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    காரில் வந்தவர்கள் தப்பி செல்வதற்காக காரை வேகமாக ஓட்டினர். அப்போது எதிரே வந்த லாரி மீது கார் பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து மதனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டு இருந்த 3 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காரில் வந்தவர்கள் மதனப்பள்ளி அடுத்த ராமராவ் காலனியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    இதேபோல் காக்கிநாடா பதிப்பாடு நெடுஞ்சாலையில் தாசரி பிரசாத் என்பவர் லாரியை ஓட்டி வந்தார். அப்போது லாரி பஞ்சரானது. லாரியை நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தினார். அவருக்கு உதவியாக தாசரி கிஷோர், நாகையா, கிளீனர் ராஜு ஆகியோர் லாரியின் டயரை கழற்றிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது வேகமாக வந்த ஆந்திர மாநில அரசு பஸ் லாரி டயரை மாற்றிக்கொண்டு இருந்தவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×