search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளழகர்"

    • சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார்.
    • திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள்கோவில் பழமை வாய்ந்த கோவிலாகும்.இங்கு சித்ரா பவுர்ணமி அன்று வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கி வருகிறார்.அதன்படி இன்று அதிகாலை அதிர்வேட்டு முழங்க கோவிலில் இருந்து வெள்ளை குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார்.

    வைகை பாலம் அருகில் உள்ள எம்.வி.எம். மருது மகால் முன்பு, பா.ஜ.க. விவசாயி மாநில துணைத் தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் ஆகியோர் கள்ளழகரை வரவேற்றனர்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தண்ணீரை பீய்ச்சியடித்து கள்ளழகரை வரவேற்றனர்.

    பேரூராட்சி மன்றதலைவர் ஜெயராமன், கவுன்சிலர் சத்யபிரகாஷ், நகரத் துணைச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி. பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் சிவபாலன் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சோழவந்தான் பேரூராட்சி சார்பில் சுகாதாரப் பணி, குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இன்று இரவு வைகை ஆற்றில் இருந்து கருட வாகனத்தில் சுவாமி புறப்பட்டு பேட்டை, முதலி யார்கோட்டை, சங்கங்கோட்டை ஆகிய பகுதி சென்று இரட்டை அக்ரஹாரத்தில் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்புள்ள மண்டகப்படிக்கு வந்து சேரும்.

    யாதவர்கள் சங்கத்தின் சார்பில் விடிய, விடிய தசாவதாரம் நடைபெறும்.நாளை இரவு சனீஸ்வர்ன கோவில் முன்பு முதலியார் கோட்டை கிராமமக்கள் சார்பில் பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நடைபெற்று கோவிலை வந்தடையும்.

    • அபரஞ்சி என்பது தேவலோகத் தங்கம்.
    • உலகிலேயே அபரஞ்சி தங்கத்திலான சிலைகள் 2 இடங்களில் தான் உள்ளது.

    சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் மதுரை நோக்கி வருகிறார். இவ்வாறு வரும் கள்ளழகர் உற்சவ சிலை மிகவும் அரிய வகை அபரஞ்சி என்னும் தங்கத்திலான சிலை ஆகும்.

    இந்த அபரஞ்சி என்பது தேவலோகத் தங்கம் என்பதால் கள்ளழகரும் தேவலோக பெருமாளாக வணங்குகிறார்கள். உலகிலேயே அபரஞ்சி தங்கத்திலான சிலைகள் 2 இடங்களில் தான் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று கள்ளழகர் உற்சவர் சிலையாகும்.

    மற்றொன்று திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாபசுவாமி சுவாமி கோவிலில் உள்ள சிலையாகும். அழகர் விக்ரகத்துக்கு கோவிலின் மலைமேல் உள்ள நூபுர கங்கை நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.

    • இன்று பகல் 12 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
    • தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை மக்கள் வெள்ளத்தால் நிரம்பி காணப்பட்டது.

    உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதியும், அழகர் கோவில் கள்ளழகர் கோவிலில் கடந்த 1-ந் தேதியும் தொடங்கியது.

    மீனாட்சி அம்மன் கோவிலில் 2-ந் தேதி திருக்கல்யாணமும், 3-ந் தேதி தேரோட்டமும் நடந்த நிலையில் 12 நாள் சித்திரை திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. அழகர் கோவில் கள்ளழகர் கோவிலில் திருவிழா தொடங்கிய கடந்த 1-ந் தேதி மாலை 6 மணிக்கு அழகர் தோளுக்கினியானாக திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அங்கு பக்தர்களுக்கு 2 நாட்கள் காட்சி கொடுத்தார். அதன் பிறகு 3-ந் தேதி சுந்தர்ராஜ பெருமான் உள்பிரகார அலங்கார மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

    வைகை ஆற்றில் இறங்குவதற்காக மதுரைக்கு புறப்பட்ட அவருக்கு கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி, இடுப்பில் ஜமதாடு உள்ளிட்ட வித விதமான ஆயுதங்கள் செறிந்த கள்ளழகர் திருக்கோலம் அணிவிக்கப்பட்டது. அடுத்தபடியாக கண்டாங்கி புடவை கட்டி தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார்.

    முன்னதாக காவல் தெய்வம் பதினெட்டாம்படி கருப்பணசாமியிடம் உத்தரவு பெறும் சடங்கு நடத்தப்பட்டது. அதன் பிறகு கள்ளழகர் சர்வ அலங்காரம், படை பரிவாரங்களுடன் தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.

    இதனைத் தொடர்ந்து கொண்டப்ப நாயக்கன் மண்டபம், பொய்கை கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி ஜமீன்தார் மண்டபம், சுந்தர்ராஜன் பட்டி மறவர் மண்டபம், கடச்சனேந்தல் வழியாக தங்க பல்லக்கு சென்றது. இதனைத் தொடர்ந்து மதுரை மூன்று மாவடியில் நேற்று கள்ளழகர் எதிர்சேவை நடந்தது.

    அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு அழகருக்கு எதிர்சேவை அளித்து வரவேற்றனர். சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி பெண்கள் அழகருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

    அதன் பிறகு கே.புதூர் மாரியம்மன் கோவில், ரிசர்வ் லைன் மாரியப்பன் கோவில், அவுட் போஸ்ட் மாரியம்மன் கோவில், அம்பலக்காரர் மண்டபம் ஆகியவற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த கள்ளழகர், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு இரவு 9 மணிக்கு வந்தார்.

    அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடத்தப்பட்டது. கள்ளழகருக்கு திருமஞ்சனம் செய்வதற்காக ஏற்கனவே அழகர் கோவில் நூபுர கங்கையில் இருந்து தீர்த்தம், தலைச்சுமையாக தல்லாகுளத்துக்கு எடுத்து வரப்பட்டு இருந்தது.

    இதன் மூலம் கள்ளழகருக்கு இரவு 12 மணி வரை திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன் பிறகு அபிஷேகம் ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து அழகருக்கு அலங்காரம் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக அழகரின் அலங்கார பொருட்கள் அடங்கிய பெட்டி கொண்டுவரப்பட்டது.

    அந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருந்தன. கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கை விட்டு ஏதாவது ஒரு புடவையை எடுப்பார்.

    தலைமை பட்டரின் கையில் பச்சை புடவை வந்தது. இதையடுத்து பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வெட்டிவேர் சத்திரத்தில் எழுந்தருளினார். அப்போது அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டது.


    இதனைத் தொடர்ந்து கள்ளழகர், கருப்பணசாமி கோவில் எதிரே உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். 100 ஆண்டுகளுக்கு பிறகு அழகர் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளியதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.

    அதன் பிறகு கள்ளழகர் தங்க குதிரையில் எழுந்தருளி வைகை ஆறு நோக்கி புறப்பட்டார். அப்போது கருப்பணசாமி வேடமணிந்த பக்தர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஆடிப்பாடியும் கள்ளழகரை வரவேற்றனர். ஆழ்வார்புரம் வைகை ஆற்று பகுதிக்குள் கள்ளழகர் தங்க குதிரையில் வந்த போது, வெள்ளிக்குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி கள்ளழகரை வரவேற்றார்.

    பின்பு அதிகாலை 5.51 மணியளவில் கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் எழுந்தருளினார். அதனை பாலத்தின் மேல் நின்றும், ஆற்றுக்குள் நின்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அழகர் ஆற்றில் இறங்கிய போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

    மேலும் ஆற்று தண்ணீரை வாரி இரைத்தனர். 'கோவிந்தா... கோவிந்தா...' என்று கோஷம் எழுப்பினா்ாகள். பலர் பக்தி பரவசத்தில் நடனமாடினர். அதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வீரராகவ பெருமாள் கோவில் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மண்டகபடிகளில் கள்ளழகர் மற்றும் வீரராக பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    இதையடுத்து ராமராயர் மண்டகபடிக்கு கள்ளழகர் புறப்பட்டு சென்றார். ராமராயர் மண்டகப்படியில் இன்று பகல் 12 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, நீண்ட தூரம் பயணம் செய்த களைப்பை போக்கும் வகையில் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர்.

    பின்னர் வழிநெடுக பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளும் கள்ளழகர், இரவு வண்டியூர் பெருமாள் கோவிலை சென்றடைகிறார்.

    கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய நிகழ்ச்சியில் மதுரை மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை மக்கள் வெள்ளத்தால் நிரம்பி காணப்பட்டது. இதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.

    அழகர் ஆற்றில் இறங்குவதை காண லட்சணக்கானோர் திரண்டதால் மதுரை மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். நகரின் பல இடங்களில் ஆங்காங்கே மருத்துவ குழுவினரும், ஆம்புலன்சு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன.

    • அழகருக்கான ஆடைகள், அலங்காரப்பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும்.
    • அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரை வாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது.

    அழகர் ஆற்றில் ஏன் இறங்குகிறார் என்று பார்ப்போமா?

    சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக் காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' (தவளையாக போகக் கடவாய்!) என சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக் கொண்டிரு. சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்' என சொல்லி யிருக்கிறார் துர்வாசர். அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக்கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் விவரிக்கின்றன.

    சித்ரா பவுர்ணமிக்கு நான்கு நாள் முன்னதாகச் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடுகிறது. முதல் இரண்டு நாட்கள் கோவிலில் இருப்பார் அழகர். மூன்றாம் நாள் மாலை மதுரையை நோக்கிப் புறப்படுகிறார். ஆரம்ப காலத்தில் கோவிலைவிட்டு கிளம்பும் அழகர், அலங்காநல்லூர் போய்ச் சேருவார். அங்கு அழகரை குதிரை வாகனத்தில் தூக்கி வைத்து (ஆற்றில் இறங்குவதற்காக) அலங்காரம் செய்வார்கள். அழகருக்கு அலங்காரம் செய்யும் ஊர் என்பதால், அலங்கார நல்லூராக இருந்து, பின்பு அலங்காநல்லூராக மாறிப் போனதாகச் சொல்கிறார் கள். அலங்காநல்லூரில் இருந்து தேனூருக்கு வந்து வைகை ஆற்றில் இறங்கும் அழகர், அதன் பிறகு வண்டியூருக்கு வந்து மண்டூக முனிவருக்கு (சுதபஸ்) சாபவிமோசனம் கொடுப்பார். இதனால் மண்டூர் என அழைக்கப்பட்டு அதுவே மண்டி யூராகிப் பிறகு வண்டியூராகிப் போனதாம்.

    கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (பூமராங்), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கி அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டுவரும் அவர், வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந் நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப் படிகளில் ஆசி வழங்கிவிட்டு, நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்து சேருகிறார். அதற்கு முன்னதாக மதுரை எல்லையான மூன்று மாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர் சேவை நிகழ்ச்சி களை கட்டுகிறது.

    நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கள்ளழகருக்கு அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்துக்கும் நூபுரகங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம். இதிலும்கூட ஒரு நம்பிக்கை. அழகருக்கான ஆடைகள், அலங்காரப்பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும்.

    இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா...என பல வண்ணங் களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோவிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கை விட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும்.

    சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும்.

    வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் 'ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?' எனப்பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஐந்தாம் நாள் பவுர்ணமியன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். இதற்கு தல்லாகுளத்தை விட்டு கள்ளழகர் கிளம்பியதுமே தண்ணீர் பீய்ச்சும் வைபவம் தொடங்குகிறது.

    அந்தக் காலத்தில் அழகர் வருவதற்குப் புதிதாகப் பாதை அமைத்ததால் தூசி கிளம்பாமல் இருப்பதற்காகவும், வெப்பத்தைத் தணிப்பதற்காகவும் தண்ணீர் பீய்ச்சும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். காலப் போக்கில் தண்ணீர் பீய்ச்சுவது ஒரு முக்கிய வைபவமாக மாறிப்போனது. அழகர் ஆற்றில் இறங்கி வண்டியூர் போய்ச் சேரும் வரை இந்த வைபவம் கலகலப்பாக நடக்கிறது. ஆற்றிலிறங்கும் அழகரை மதுரையில் உள்ள வீரராகவப்பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார். ஆற்றுக்குள் இருவரும் மாலை மாற்றி மரியாதை பண்ணிக் கொள்வார்கள்.

    அதன்பிறகு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு ஐந்தாம் நாள் இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர். ஆறாம் நாள் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை. பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள் கோவிலை வலம் வருவார். அதன்பிறகு சர்ப்பவானகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் (இந்த மண்டபம் வைகை ஆற்றுக்குள் திருமலைநாயக்கரால் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே தேனூரில் நடந்து கொண்டிருந்த வைபவங்கள் இப்போது இந்த மண்டபத்தில் நடக்கிறது) வந்து சேருகிறார் அழகர்.

    தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார். பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு ஆறாம்நாள் இரவு வந்து சேருகிறார். அன்றிரவு அங்கு தங்குகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், ஏழாம் நாள் காலையில் அங்கிருந்து அனந்த ராயர் பல்லக்கில் (திருமலை நாயக்கரின் திவானால் செய்து கொடுக்கப்பட்ட இது முழுக்கத் தந்தத்தால் இழைக்கப்பட்டது) தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். அன்றிரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும்.

    எட்டாம்நாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலை நோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக் கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர் கோவிலைச் சென்றடைவார். பத்தாம் நாள் பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கிறது. அத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் சுபமாக நிறைவுற்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது மதுரை. இதே போல ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.
    • 500 கன அடி நீர் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காகவும் திறக்கப்படுகிறது.

    மதுரை சித்திரை திருவிழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருக்கல்யாணம், தேரோட்டம் முடிந்த நிலையில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை (5ந் தேதி) நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 30ந் தேதி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து 750 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படிப்படியாக நீர்வரத்து குறைக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் மதுரையை சென்றடைந்துள்ளது. இந்த நிலையில் வைகை அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 172 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 572 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதில் 72 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காகவும், 500 கன அடி நீர் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காகவும் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 52.92 அடியாக உள்ளது. 272 கன அடி நீர் வருகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 117.10 அடியாக உள்ளது. 204 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39.70 அடியாக உள்ளது. 71 கன அடி நீர் வருகிறது. நீர் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 84.30 அடியாக உள்ளது. 26 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 1, தேக்கடி 2, கூடலூர் 1.4, சண்முகாநதி அணை 1.2, உத்தமபாளையம் 1, போடி 3.2, வைகை அணை 13, சோத்துப்பாறை 9, மஞ்சளாறு 3, பெரியகுளம் 2.4, வீரபாண்டி 13, அரண்மனைபுதூர் 2.6, ஆண்டிபட்டி 4.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    நாளை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்போது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் வைபவம் ராமராயர் மண்டபத்தில் நடக்க உள்ளது. அந்த நிகழ்ச்சிக்காக பக்தர்கள் விரதம் இருந்து தோல் பையில் தண்ணீர் சுமந்து சிறிய குழாய் மூலம் சுவாமியின் மீது தண்ணீர் பீய்ச்சி நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.

    கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் தோல் பையில் விரத ஐதீகத்தை மீறி, செயற்கையான மற்றும் அதிக விசையான குழாயை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிப்பொருட்களை கலந்து பீய்ச்சுவதால் சுவாமி, குதிரை வாகனம் மற்றும் ஆபரணங்களும், பக்தர்கள், பட்டர்கள், பணியாளர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

    மேலும் சிலர், தண்ணீர் பாக்கெட்டுகளை பற்களால் கடித்து அந்த பாக்கெட் தண்ணீரை சுவாமியின் மீது பீய்ச்சுகின்றனர். இந்த ஆண்டு சித்திரைத்திருவிழாவின்போது பக்தர்கள் அதிக விசை உடைய குழாயை தோல் பையில் பொருத்தி தண்ணீர் பீய்ச்ச வேண்டாம். விரத ஐதீகத்தின்படி தோல் பையில் சிறிய பைப் பொருத்தி திரவியங்கள், வேதிப்பொருட்கள் கலக்காமல் சுத்தமான தண்ணீர் மட்டும் பீய்ச்சும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    • நாளை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • கள்ளழகருக்கு அணிவிக்கும் மாலையை ஆண்டாள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    வைணவ திருத்தலங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முக்கியமானது. வருடந்தோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவத்தின் போது கருட சேவை நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அணிந்து கொடுக்கும் மாலை திருப்பதி ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும்.

    அதன் பிறகு கருட சேவை நிகழ்ச்சி திருப்பதியில் நடைபெறும். அதேபோல சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமி அன்று மதுரை வைகை ஆற்றில் இறங்கும்போதும் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து கொண்டு கள்ளழகர் ஆற்றில் இறங்குவார்.

    அந்த வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) சித்ரா பவுர்ணமியன்று வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி, கள்ளழகருக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை மதுரைக்கு கொண்டு செல்லும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று நடைபெற்றது.

    இதற்காக நேற்று மதியம் 2 மணிக்கு ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதன் பிறகு பூஜைகள் நடைபெற்றன. கள்ளழகருக்கு அணிவிக்கும் மாலையை ஆண்டாள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த பூஜையில் விருதுநகர் மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் கலந்து கொண்டர். அதன் பிறகு கோவில் பட்டர்கள், ஸ்தானியர்கள் ஊர்வலமாக யானை முன் செல்ல மாட வீதிகள் வழியாக மாலையை எடுத்து வந்தனர். பின்பு அந்த மாலையை மதுரைக்கு கொண்டு சென்றனர். இந்நிகழ்ச்சியில் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • 6-ந்தேதி சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் அழகர் காட்சி தருகிறார்.
    • 8-ந் தேதி மதுரையில் இருந்து கள்ளழகர் மலைக்கு திரும்புகிறார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் 108 வைணவ தலங்களில் ஒன்றான அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா உலக புகழ் பெற்றதாகும்.

    மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், தேரோட்டம் நேற்றும் நடைபெற்றது.

    தீர்த்த திருவிழா, தேவேந்திர பூஜை, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்மன் எழுந்தருளல், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி-பவளக்கனிவாய் பெருமாள் 16 கால் மண்டபத்தில் விடைபெறும் நிகழ்வு உள்ளிட்டவைகளுடன் சித்திரை திருவிழா இன்று முடிகிறது.

    மதுரை அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி எழுந்தருளலுடன் தொடங்கியது. அங்கு 2 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் 3-ம் நாளான நேற்று காலை திருவீதி உலா நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நாளை (5-ந் தேதி) நடைபெறுகிறது. இதற்காக சுந்தரராஜ பெருமாள் தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் 18-ம் படி கருப்பண சுவாமி உத்தரவு பெற்று நேற்று மாலை அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார்.

    முன்னதாக மாலை 6 மணியளவில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு நூபுர கங்கை தீர்த்த அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்பு கண்டாங்கி பட்டு உடுத்தி, நெற்றிப்பட்டை, கரங்களில் வளைத்தடி, நேரிக்கம்பு, பரிவாரத்துடன் மேளதாளங்கள் முழங்க கள்ளழகர் தங்கை பல்லக்கில் மதுரையை நோக்கி புறப்பட்டார்.

    விரதம் இருந்து வரும் பக்தர்கள் ஆடியபடி அழகருடன் வந்தனர். வழிநெடுகிலும் உள்ள பல்வேறு மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொய்கை கரைப்பட்டி, கள்ளந்திரி,அப்பன் திருப்பதி, ஜமீன்தார் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் கள்ளழகர் எழுந்தருளினார்.

    சுந்தர்ராஜன் பட்டி மறவர் மண்டபத்தில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு எழுந்தருளிய கள்ளழகர் 2.30 மணி வரை பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பின்பு கடச்சனேந்தல் சென்ற கள்ளழகர் அங்கு அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அங்கிருந்து புறப்பட்டு மூன்று மாவடிக்கு இன்று காலை 6 மணியளவில் வந்து சேர்ந்தார். அங்கு கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கானோர் மூன்று மாவடியில் திரண்டிருந்தனர்.

    அவர்கள் கண்டாங்கி பட்டு உடுத்தி தங்கப் பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகருக்கு எதிர்சேவை அளித்தனர். வேடமணிந்த பக்தர்கள் ஆடிப்பாடியும், பெண்கள் கையில் சர்க்கரை தீபம் ஏந்தியபடியும் கள்ளழகரை வரவேற்றார்கள். அப்போது கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டு பக்தர்கள் வழிபட்டனர்.

    பின்பு அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் காலை 9 மணியளவில் கே.புதூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தார். அங்கும் திரளான பக்தர்கள் திரண்டு நின்று கள்ளழகருக்கு எதிர்சேவை அளித்தனர். இதைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவிலுக்கு கள்ளழகர் சென்றடைந்தார்.

    அங்கிருந்து புறப்படும் கள்ளழகர் மாலை 5 மணியளவில் அவுட்போஸ்ட் மாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். மாலை 5.20 மணி முதல் 6 மணி வரை அம்பலக்காரர் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் கள்ளழகர் அங்கிருந்து புறப்பட்டு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு செல்கிறார்.

    அங்கு அவருக்கு இரவு 9 மணி முதல் 12 மணி வரை திருமஞ்சனம் நடக்கிறது. நள்ளிரவில் அங்கு தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதன்பிறகு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்படும் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை கள்ளழகருக்கு அணிவிக்கப்படுகிறது.

    அதனை ஏற்று ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி கள்ளழகர் காட்சியளிக்கிறார். அதனை தொடர்ந்து தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் இருந்து தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு அதிகாலை 5 மணியளவில் மதுரை வைகை ஆற்றுக்கு வருகிறார்.

    அங்கு அதிகாலை 5.45 மணிக்கு கள்ளழகர் தங்ககுதிரை வாகனத்தில் வீற்றிருந்து வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள்.

    கள்ளழகர் இறங்கும் வைபவத்திற்காக மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மேலும் மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபத்தை தொடர்ந்து ராமராயர் மண்டகபடியில் கள்ளழகரை குளிர்விக்கும் தீர்த்தவாரி நடக்கிறது. 6-ந் தேதி காலையில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் அழகர் காட்சி தருகிறார்.

    தொடர்ந்து அன்று மாலையில் கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூகமுனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து இரவு முதல் மறுநாள் காலை வரை விடிய விடிய தசாவதார காட்சி நடைபெறும்.

    7-ந் தேதி மதியம் ராஜாங்க திருக்கோலத்தில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்று இரவு பூப்பல்லக்கு விழா நடைபெறும். 8-ந் தேதி மதுரையில் இருந்து கள்ளழகர் மலைக்கு திரும்புகிறார். 10-ந் தேதி உற்சவ சாற்று முறையுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

    • 18-ம் படி கருப்பணசாமியிடம் உத்தரவு பெற்று இன்று இரவு கள்ளழகர் மதுரை புறப்படுகிறார்.
    • நாளை காலை மூன்று மாவடியில் எதிர்சேவை நடக்கிறது.

    மதுரை

    சித்திரை மாதத்தில் முத்திரை பதிக்கும் உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த ஒரு வாரகாலமாக நடந்து வருகிறது. விழாவின் முத்தாய்ப்பாக நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நாளையுடன் முடிவடையும் நிலையில் அதன் தொடர்ச்சியாக கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா களை கட்ட தொடங்கும்.

    அதன்படி நேற்று முன்தினம் அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு சுந்தர்ராஜ பெருமாளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று தோளுக்கி னியான் பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி வீதிஉலா வந்தார்.

    சித்திரை திருவிழாவில் இன்று இரவு முக்கிய நிகழ்ச்சியாக கள்ளழகர் மதுரைக்கு புறப்படும் வைபவம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை கள்ளழகர் கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன தொடர்ந்து காலையில் பல்லக்கில் பெருமாள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இன்று இரவு 7மணியளவில் தோளுக்கினியான் என்று அழைக்கப்படும் சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகராக வேடம் தரித்து மதுரை நோக்கி புறப்படுகிறார்.

    முன்னதாக கள்ளழகர் கோவில் காவல் தெய்வமாக கருதப்படும் பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். சன்னதி முன்பு தங்க பல்லக்கில் எழுந்தருளும் கள்ளழகர் கருப்பண்ணசாமிடம் உத்தரவு பெற்று மதுரையை நோக்கி புறப்பாடாகிறார்.

    இதில் மதுரை மட்டுமன்றி சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    கள்ளழகர் மதுரைக்கு புறப்படுவதை முன்னிட்டு அழகர் கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவில் கோபுரங்கள், மண்டபங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    இரவு மதுரைக்கு புறப்படும் கள்ளழகர் வழிநெடுகிலும் உள்ள கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் உள்ளிட்ட பகுதியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்த ருளி அருள் பாலிக்கிறார். இரவு முழுவதும் சுவாமி புறப்பாடு நடைபெறுவதால் அழகர் கோவில் இருந்து மதுரை வரை உள்ள கிராமங்களில் சித்திரை திருவிழா களை கட்ட தொடங்கியுள்ளது.

    நாளை எதிர் சேவை

    கள்ளழகர் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 6மணிக்கு மூன்று மாவடிக்கு தங்கப் பல்லக்கில் வருகிறார். கள்ளழகர் மதுரைக்கு வருவதை வரவேற்கும் வகையில் அங்கு அவரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    நாளை இரவு 9 மணிக்கு கள்ளழகர் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் திருமஞ்சனமாகி குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

    நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 5. 45மணி முதல் 6. 12மணிக்குள் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்ந விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள்.

    அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு வந்து மீண்டும் இருப்பிடம் சேரும் வரை வழிநெடுகிலும் உள்ள 480மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி பாதுகாப்பு பணிக்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • டிரோன்-சி.சி.டி.வி காமிரா மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரையில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நகர் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்தாவது:-

    மதுரை சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 10 நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    வருகிற 5-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் முக்கிய நிகழ்ச்சியில் பொதுமக்கள் கள்ளழ கரை வைகை ஆற்றுக்குள் இறங்கி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இந்த வருடம் புதியதாக தேனி ஆனந்தம் சில்க்ஸ் பின் வாயில் எதிரில் தனிவழியும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்திற்கு கிழக்கே 50 மீட்டர் தொலைவில் தற்காலிக படிக்கட்டுகளும், ஓபுளா படித்துறை பாலத்தின் வடக்கு பகுதியின் அருகில் சாய்வுதளமும் அமைக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட வழிகளின் மூலமும் ஏற்கனவே வைகை ஆற்றின் தென்பகுதியில் ஓபுளாபடித்துறை அருகில் உள்ள படிக்கட்டுகள் மூலமும் பொதுமக்கள் மேற்படி வழிகளை பயன்படுத்தி ஆற்றுக்குள் இறங்கி தரிசனம் செய்யு மாறு முன்னேற் பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சாமி தரிசனம் செய்ய வரும் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கி சாமி தரிசனம் செய்ய வேண்டி மாநகராட்சி அலுவலகம், தமுக்கம் மைதானம். எக்கோ பார்க். காந்தி மியூஷியம், ராஜாஜி பூங்கா, பொது பணித்துறை அலு வலகம் மற்றும் மீனாட்சி கல்லூரி ஆகியவைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    ஆகவே, பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சாலை யோரங்களில் அமர்வதையும், உறங்குவதையும் தவிர்த்து மேற்கண்ட இடங்களில் தங்கி சாமி தரிசனம் செய்ய வேண்டு மாறு கேட்டுக் கொள்ளப்படு கிறது.

    மேலும் ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்ப தற்காக அனைத்து நிகழ்வுகளையும் பொதுமக்கள் காணும் வகையில் தமுக்கம் நேரு சிலை, ஜி - டெக்ஸ் டெய்லர் கடை அருகிலுள்ள பெங்குவின் ஜெராக்ஸ் கடை, தமுக்கம் கருப்பசாமி கோவில், தமுக்கம் ரேமண்ட் ஷோரூம், அமெரிக்கன் கல்லூரி, ஆழ்வார்புரம் மூங்கில் கடை இறக்கத்திலுள்ள தேனி ஆனந்தம் சில்க்ஸ் நுழைவு வாயில், வைகை ஆற்றின் வட கரையில் உள்ள ஓபுளா படித்துறை பாலம், குமரன் சாலை, பந்தல்குடி அம்பேத்கர் சிலை ஆகிய 9 இடங்களிலும் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு உள்ளது. கள்ளழகரை மேற்படி எல்.இ.டி. திரைகள் மூலம் பார்த்து தரிசனம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    சித்திரை திருவிழா மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வின்போது பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளை கண்டறிய தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநகரங்களில் இருந்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் வரவழைக்கப்பட்டு மொத்தம் சுமார் 5 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

    மதுரை மாநகரில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகும் நபர்களின் முகங்களை ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள குற்றவாளிகளின், சந்தேக நபர்களின் புகைப்படத்து டன் ஒப்பீடு செய்து குற்ற வாளிகளை கண்டறியக் கூடிய தொழில்நுட்பத்தின் படி, குற்ற வாளிகள் மதுரை மாநகருக்குள் உள்ளே நுழைந்தாலே கண்டறிய முடியும்.

    மேலும் பீப்பிள் கவுண்ட் என்ற ஆப் மூலம் திருவிழா விற்கு வந்துள்ள பொது மக்களின் எண்ணிக்கை யை கணக்கிட்டு உடனுக்குடன் அந்த இடங்களில் பாது காப்பு பலப்படுத்துவதுடன் மாற்று ஏற்பாடுகள் செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை மாநகரில் கள்ளழகர் வரும் வழித்தடங்களில் மட்டும் 350 சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு. சி.சி.டி.வி. காமிரா பதிவுகள் 2 கட்டுப்பாட்டு அறைகளின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும் டிரோன் காமிராவில் படம்பிடிப்பது மட்டுமின்றி, ஒலிப்பெருக்கி வசதி செய்யப்பட்டு பொது மக்களுக்கு அறிவிப்புகள் வழங்கவும் முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்கப்பிரிவு காவல் ஆளினர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தங்கப் பல்லக்கில் கள்ளழகர் நாளை மாலை மதுரை புறப்படுகிறார்.
    • வழி நெடுகிலும் 450-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளு கிறார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாவில் பிரசித்தி பெற்றது சித்திரை திருவிழாவாகும். இந்த திருவிழா நேற்று மாலை தொடங்கியது.

    கள்ளழகருக்கு மங்கள இசை முழங்க, வேத மந்தி ரங்களுடன் காப்பு கட்டுதல் நடந்தது. அதன் பின்னர் பல்லக்கில் கள்ள ழகர் புறப்பாடாகி கோவில் வெளி பிரகாரத்தில் வலம் வந்தார். கோவிலின் கல்யாண சுந்தரவல்லி யானை முன்னே செல்ல, வர்ணக் குடை, சகல பரிவாரங்களுடன் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அப்போது விசேஷ பூஜைகள், நூபுர கங்கை தீர்த்தத்தினால் சர விளக்கு, தீபாராதனை நடந்தது. கள்ளழகர் மனோரஞ்சிதப்பூ மலர்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் அதே பரிவாரத்துடன் சுவாமி புறப்பாடாகி கோவிலுக்குள் இருப்பிடம் சேர்ந்தார்.

    இன்று மாலையிலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. நாளை (3-ந் தேதி) மாலையில் கள்ளழகர் மதுரைக்கு தங்கப் பல்லக்கில் புறப்படு கிறார். வழி நெடுகிலும் 450-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளு கிறார். 4-ந் தேதி மதுரை மூன்று மாவடியில் எதிர் சேவை நடக்கிறது.

    5-ந் தேதி (வெள்ளிக் கிழமை) அதிகாலையில் 5.45 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். 6-ந் தேதி காலையில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் காட்சி அளிக்கிறார்.

    அன்று மதியம் கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தரும் நிகழ்வு நடைபெறுகிறது. அன்று இரவு மதிச்சியம் ராமராயர் மண்டகப்படியில் விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி கள் நடக்கிறது.

    7-ந் தேதி இரவு பூப்பல்லக்கு விழா நடக்கிறது. 8-ந் தேதி காலை அதே பரிவாரங்களுடன் கள்ளழகர் அழகர் கோவி லுக்கு புறப்பாடாகிறார். அன்றிரவு அப்பன் திருப்பதியில் திருவிழா நடைபெறும்.

    9-ந் தேதி காலையில் கள்ளந்தரி வழியாக கள்ளழகர் கோவிலுக்கு சென்று இருப்பிடம் சேருகிறார். 10-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறு கிறது.

    மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 39 தள்ளுவண்டி உண்டியல்கள் அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு சென்று திரும்புகின்றன.

    இதற்கான ஏற்பாடுகளை அழகர்கோவில் தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கோவில் பணி யாளர்கள் செய்துள்ளனர்.

    • 5-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நடக்கிறது.
    • 6-ந்தேதி தேனூர் மண்டபத்தில் காட்சி தருகிறார்.

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை பெருந்திருவிழா நேற்று மாலை தொடங்கியது. இதில் கள்ளழகர் பெருமாளுக்கு மங்கள இசை முழங்க, வேதமந்திரங்களுடன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது,

    அதன் பின்னர் பல்லக்கில் கள்ளழகர் பெருமாள் புறப்பாடாகி கோவில் வெளி பிரகாரத்தில் வலம் வந்தார். சகல பரிவாரங்களுடன் சென்று திருக்கல்யாண மண்டபத்திற்கு சென்று எழுந்தருளினார்.

    அப்போது விசேஷ பூஜைகள், சர விளக்குகள், தீபாராதனைகள் நடந்தன.

    சித்திரை திருவிழாவையொட்டி நாளை(புதன்கிழமை) மாலையில் மதுரைக்கு தங்கப் பல்லக்கில் கள்ளழகர் புறப்படுகிறார். நாளை மறுநாள் மூன்று மாவடியில் எதிர் சேவையும் 5-ந் தேதி கள்ளழகர் அதிகாலையில் 5.45 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளலும் நடக்கிறது. 6-ந் தேதி காலையில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் காட்சி தருகிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • 3-ந் தேதி மதுரைக்கு தங்கப்பல்லக்கில் கள்ளழகர் புறப்படுகிறார்.
    • 5-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது.

    மதுரை சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இதில் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏற்கனவே நடந்துவரும் நிலையில், கள்ளழகர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) விழா தொடங்குகிறது.

    நாளை மறுநாள் (3-ந் தேதி) மாலையில் மதுரைக்கு தங்கப்பல்லக்கில் கள்ளழகர் புறப்படுகிறார். 4-ந் தேதி மூன்று மாவடியில் எதிர் சேவையும், 5-ந் தேதி கள்ளழகர் அதிகாலையில் 5.45 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் நடக்கிறது.

    6-ந் தேதி காலையில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் காட்சி தருகிறார். இதை தொடர்ந்து மாலையில் கருட வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருகிறார். அன்று இரவு தசாவதார காட்சி நடைபெறும். 7-ந் தேதி மதியம் ராஜாங்க திருக்கோலமும், அன்று இரவு பூப்பல்லக்கு விழாவும் நடக்கிறது. 8-ந் தேதி காலையில் கள்ளர் திருக்கோலத்துடன், அழகர்மலைக்கு திரும்புகிறார். அன்றிரவு அப்பன்திருப்பதியில் திருவிழா நடைபெறும். 9-ந் தேதி காலையில் கள்ளந்தரி வழியாக இருப்பிடம் சேருகிறார். 10-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    அழகர்கோவில் சித்திரை திருவிழாவின் முன்னோட்ட நிகழ்வாக நேற்று காலையில், கள்ளழகர் கோவிலில் இருந்து அழகரின் வாகனங்கள் லாரியில் ஏற்றப்பட்டு மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு குதிரை வாகனமும், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலு்க்கு சேஷ வாகனமும், வைகை ஆறு தேனூர் ராயர் மண்டபத்தில் கருட வாகனமும் வந்து சேர்ந்துள்ளன.

    ×