search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மதுரைக்கு வந்த கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர்சேவை: கையில் சர்க்கரை தீபம் ஏந்தியபடி வரவேற்ற பெண்கள்
    X

    மதுரை கே.புதூரில் கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர்சேவை அளித்து வரவேற்ற காட்சி.

    மதுரைக்கு வந்த கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர்சேவை: கையில் சர்க்கரை தீபம் ஏந்தியபடி வரவேற்ற பெண்கள்

    • 6-ந்தேதி சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் அழகர் காட்சி தருகிறார்.
    • 8-ந் தேதி மதுரையில் இருந்து கள்ளழகர் மலைக்கு திரும்புகிறார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் 108 வைணவ தலங்களில் ஒன்றான அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா உலக புகழ் பெற்றதாகும்.

    மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், தேரோட்டம் நேற்றும் நடைபெற்றது.

    தீர்த்த திருவிழா, தேவேந்திர பூஜை, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்மன் எழுந்தருளல், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி-பவளக்கனிவாய் பெருமாள் 16 கால் மண்டபத்தில் விடைபெறும் நிகழ்வு உள்ளிட்டவைகளுடன் சித்திரை திருவிழா இன்று முடிகிறது.

    மதுரை அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி எழுந்தருளலுடன் தொடங்கியது. அங்கு 2 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் 3-ம் நாளான நேற்று காலை திருவீதி உலா நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நாளை (5-ந் தேதி) நடைபெறுகிறது. இதற்காக சுந்தரராஜ பெருமாள் தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் 18-ம் படி கருப்பண சுவாமி உத்தரவு பெற்று நேற்று மாலை அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார்.

    முன்னதாக மாலை 6 மணியளவில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு நூபுர கங்கை தீர்த்த அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்பு கண்டாங்கி பட்டு உடுத்தி, நெற்றிப்பட்டை, கரங்களில் வளைத்தடி, நேரிக்கம்பு, பரிவாரத்துடன் மேளதாளங்கள் முழங்க கள்ளழகர் தங்கை பல்லக்கில் மதுரையை நோக்கி புறப்பட்டார்.

    விரதம் இருந்து வரும் பக்தர்கள் ஆடியபடி அழகருடன் வந்தனர். வழிநெடுகிலும் உள்ள பல்வேறு மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொய்கை கரைப்பட்டி, கள்ளந்திரி,அப்பன் திருப்பதி, ஜமீன்தார் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் கள்ளழகர் எழுந்தருளினார்.

    சுந்தர்ராஜன் பட்டி மறவர் மண்டபத்தில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு எழுந்தருளிய கள்ளழகர் 2.30 மணி வரை பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பின்பு கடச்சனேந்தல் சென்ற கள்ளழகர் அங்கு அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அங்கிருந்து புறப்பட்டு மூன்று மாவடிக்கு இன்று காலை 6 மணியளவில் வந்து சேர்ந்தார். அங்கு கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கானோர் மூன்று மாவடியில் திரண்டிருந்தனர்.

    அவர்கள் கண்டாங்கி பட்டு உடுத்தி தங்கப் பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகருக்கு எதிர்சேவை அளித்தனர். வேடமணிந்த பக்தர்கள் ஆடிப்பாடியும், பெண்கள் கையில் சர்க்கரை தீபம் ஏந்தியபடியும் கள்ளழகரை வரவேற்றார்கள். அப்போது கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டு பக்தர்கள் வழிபட்டனர்.

    பின்பு அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் காலை 9 மணியளவில் கே.புதூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தார். அங்கும் திரளான பக்தர்கள் திரண்டு நின்று கள்ளழகருக்கு எதிர்சேவை அளித்தனர். இதைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவிலுக்கு கள்ளழகர் சென்றடைந்தார்.

    அங்கிருந்து புறப்படும் கள்ளழகர் மாலை 5 மணியளவில் அவுட்போஸ்ட் மாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். மாலை 5.20 மணி முதல் 6 மணி வரை அம்பலக்காரர் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் கள்ளழகர் அங்கிருந்து புறப்பட்டு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு செல்கிறார்.

    அங்கு அவருக்கு இரவு 9 மணி முதல் 12 மணி வரை திருமஞ்சனம் நடக்கிறது. நள்ளிரவில் அங்கு தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதன்பிறகு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்படும் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை கள்ளழகருக்கு அணிவிக்கப்படுகிறது.

    அதனை ஏற்று ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி கள்ளழகர் காட்சியளிக்கிறார். அதனை தொடர்ந்து தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் இருந்து தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு அதிகாலை 5 மணியளவில் மதுரை வைகை ஆற்றுக்கு வருகிறார்.

    அங்கு அதிகாலை 5.45 மணிக்கு கள்ளழகர் தங்ககுதிரை வாகனத்தில் வீற்றிருந்து வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள்.

    கள்ளழகர் இறங்கும் வைபவத்திற்காக மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மேலும் மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபத்தை தொடர்ந்து ராமராயர் மண்டகபடியில் கள்ளழகரை குளிர்விக்கும் தீர்த்தவாரி நடக்கிறது. 6-ந் தேதி காலையில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் அழகர் காட்சி தருகிறார்.

    தொடர்ந்து அன்று மாலையில் கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூகமுனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து இரவு முதல் மறுநாள் காலை வரை விடிய விடிய தசாவதார காட்சி நடைபெறும்.

    7-ந் தேதி மதியம் ராஜாங்க திருக்கோலத்தில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்று இரவு பூப்பல்லக்கு விழா நடைபெறும். 8-ந் தேதி மதுரையில் இருந்து கள்ளழகர் மலைக்கு திரும்புகிறார். 10-ந் தேதி உற்சவ சாற்று முறையுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

    Next Story
    ×