search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: கோவிந்தா... கோவிந்தா... கோஷம் எழுப்பிய பக்தர்கள்
    X

    பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: 'கோவிந்தா... கோவிந்தா...' கோஷம் எழுப்பிய பக்தர்கள்

    • இன்று பகல் 12 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
    • தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை மக்கள் வெள்ளத்தால் நிரம்பி காணப்பட்டது.

    உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதியும், அழகர் கோவில் கள்ளழகர் கோவிலில் கடந்த 1-ந் தேதியும் தொடங்கியது.

    மீனாட்சி அம்மன் கோவிலில் 2-ந் தேதி திருக்கல்யாணமும், 3-ந் தேதி தேரோட்டமும் நடந்த நிலையில் 12 நாள் சித்திரை திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. அழகர் கோவில் கள்ளழகர் கோவிலில் திருவிழா தொடங்கிய கடந்த 1-ந் தேதி மாலை 6 மணிக்கு அழகர் தோளுக்கினியானாக திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அங்கு பக்தர்களுக்கு 2 நாட்கள் காட்சி கொடுத்தார். அதன் பிறகு 3-ந் தேதி சுந்தர்ராஜ பெருமான் உள்பிரகார அலங்கார மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

    வைகை ஆற்றில் இறங்குவதற்காக மதுரைக்கு புறப்பட்ட அவருக்கு கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி, இடுப்பில் ஜமதாடு உள்ளிட்ட வித விதமான ஆயுதங்கள் செறிந்த கள்ளழகர் திருக்கோலம் அணிவிக்கப்பட்டது. அடுத்தபடியாக கண்டாங்கி புடவை கட்டி தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார்.

    முன்னதாக காவல் தெய்வம் பதினெட்டாம்படி கருப்பணசாமியிடம் உத்தரவு பெறும் சடங்கு நடத்தப்பட்டது. அதன் பிறகு கள்ளழகர் சர்வ அலங்காரம், படை பரிவாரங்களுடன் தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.

    இதனைத் தொடர்ந்து கொண்டப்ப நாயக்கன் மண்டபம், பொய்கை கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி ஜமீன்தார் மண்டபம், சுந்தர்ராஜன் பட்டி மறவர் மண்டபம், கடச்சனேந்தல் வழியாக தங்க பல்லக்கு சென்றது. இதனைத் தொடர்ந்து மதுரை மூன்று மாவடியில் நேற்று கள்ளழகர் எதிர்சேவை நடந்தது.

    அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு அழகருக்கு எதிர்சேவை அளித்து வரவேற்றனர். சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி பெண்கள் அழகருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

    அதன் பிறகு கே.புதூர் மாரியம்மன் கோவில், ரிசர்வ் லைன் மாரியப்பன் கோவில், அவுட் போஸ்ட் மாரியம்மன் கோவில், அம்பலக்காரர் மண்டபம் ஆகியவற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த கள்ளழகர், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு இரவு 9 மணிக்கு வந்தார்.

    அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடத்தப்பட்டது. கள்ளழகருக்கு திருமஞ்சனம் செய்வதற்காக ஏற்கனவே அழகர் கோவில் நூபுர கங்கையில் இருந்து தீர்த்தம், தலைச்சுமையாக தல்லாகுளத்துக்கு எடுத்து வரப்பட்டு இருந்தது.

    இதன் மூலம் கள்ளழகருக்கு இரவு 12 மணி வரை திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன் பிறகு அபிஷேகம் ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து அழகருக்கு அலங்காரம் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக அழகரின் அலங்கார பொருட்கள் அடங்கிய பெட்டி கொண்டுவரப்பட்டது.

    அந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருந்தன. கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கை விட்டு ஏதாவது ஒரு புடவையை எடுப்பார்.

    தலைமை பட்டரின் கையில் பச்சை புடவை வந்தது. இதையடுத்து பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வெட்டிவேர் சத்திரத்தில் எழுந்தருளினார். அப்போது அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டது.


    இதனைத் தொடர்ந்து கள்ளழகர், கருப்பணசாமி கோவில் எதிரே உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். 100 ஆண்டுகளுக்கு பிறகு அழகர் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளியதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.

    அதன் பிறகு கள்ளழகர் தங்க குதிரையில் எழுந்தருளி வைகை ஆறு நோக்கி புறப்பட்டார். அப்போது கருப்பணசாமி வேடமணிந்த பக்தர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஆடிப்பாடியும் கள்ளழகரை வரவேற்றனர். ஆழ்வார்புரம் வைகை ஆற்று பகுதிக்குள் கள்ளழகர் தங்க குதிரையில் வந்த போது, வெள்ளிக்குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி கள்ளழகரை வரவேற்றார்.

    பின்பு அதிகாலை 5.51 மணியளவில் கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் எழுந்தருளினார். அதனை பாலத்தின் மேல் நின்றும், ஆற்றுக்குள் நின்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அழகர் ஆற்றில் இறங்கிய போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

    மேலும் ஆற்று தண்ணீரை வாரி இரைத்தனர். 'கோவிந்தா... கோவிந்தா...' என்று கோஷம் எழுப்பினா்ாகள். பலர் பக்தி பரவசத்தில் நடனமாடினர். அதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வீரராகவ பெருமாள் கோவில் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மண்டகபடிகளில் கள்ளழகர் மற்றும் வீரராக பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    இதையடுத்து ராமராயர் மண்டகபடிக்கு கள்ளழகர் புறப்பட்டு சென்றார். ராமராயர் மண்டகப்படியில் இன்று பகல் 12 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, நீண்ட தூரம் பயணம் செய்த களைப்பை போக்கும் வகையில் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர்.

    பின்னர் வழிநெடுக பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளும் கள்ளழகர், இரவு வண்டியூர் பெருமாள் கோவிலை சென்றடைகிறார்.

    கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய நிகழ்ச்சியில் மதுரை மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை மக்கள் வெள்ளத்தால் நிரம்பி காணப்பட்டது. இதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.

    அழகர் ஆற்றில் இறங்குவதை காண லட்சணக்கானோர் திரண்டதால் மதுரை மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். நகரின் பல இடங்களில் ஆங்காங்கே மருத்துவ குழுவினரும், ஆம்புலன்சு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன.

    Next Story
    ×