search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓ.பன்னீர்செல்வம்"

    • ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்தே தேர்தலை சந்திப்போம் என டி.டி.வி.தினகரன் கூறினார்.
    • இனி வரும் காலங்களில் அனைத்து நிகழ்வுகளிலும் சேர்ந்துதான் பயணிப்போம் என்றார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சாமிதரிசனம் செய்தார். அவருக்கு ஆண்டாள் கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு ஆண்டாள் கிளி, மாலை, பிரசாதம் வழங்கப்பட்டது. அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது பற்றி நீங்கள்தான் தெரிவிக்க வேண்டும். அவர் ஒரு கட்சியின் தலைவர். அதனால் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.

    தி.மு.க.வின் 2-வது ஊழல் பட்டியல் வெளியிட்டது குறித்து இன்னும் முழுமையான விவரம் கிடைக்கவில்லை.

    வரும் பாராளுமன்ற தேர்தலை ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்துதான் சந்திப்போம். இனி வரும் காலங்களில் அனைத்து நிகழ்வுகளிலும் சேர்ந்துதான் பயணிப்போம்.

    என்னை பா.ஜ.க. மாநில தலைவர் நடைபயணத்திற்கு அழைக்காதது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வின் நிலைப்பாடு குறித்து டிசம்பர் மாதத்தில் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.

    • ஊராட்சி செயலாளர்கள் பணிவிதிகள் தொடர்பான அரசாணை வெளியிடப்பட வேண்டும்.
    • காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளில் நியாயம் உள்ளதாகவே நான் கருதுகிறேன்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டால், ஏழை, எளிய திறமையான இளைஞர்கள் அரசு வேலைக்கு வரும் வாய்ப்பு உருவாகும் என்றும், சமூக நீதி நிலை நாட்டப்படும் என்றும், இதன்மூலம் கட்சி வித்தியாசமின்றி ஊராட்சி செயலாளர்கள் செயல்படக்கூடிய நிலைமை உருவாகும் என்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை, பனகல் மாளிகை முன்பாக ஆயிரக்கணக்கான ஊராட்சி செயலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை மேற் கொண்டு வருகின்றனர். ஊராட்சி செயலாளர்கள் பணிவிதிகள் தொடர்பான அரசாணை வெளியிடப்பட வேண்டும்.

    காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளில் நியாயம் உள்ளதாகவே நான் கருதுகிறேன்.

    ஊராட்சி செயலாளர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களுடைய பணிவிதிகள் குறித்த அரசாணையை உடனடியாக வெளியிடவும், காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பவும், தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அ.தி.மு.க.வை வழிநடத்த பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்று இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் இன்று அதேபோல் உற்சாக மனநிலைக்கு வந்திருக்கிறார்.
    • கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்திருப்பதால் அவர் மீதான பா.ஜ.க. தலைவர்களின் அணுகு முறையிலும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

    அன்பே வா திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். புதிய வானம் புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ண பூ மழை பொழிகிறது என்று பாடிக் கொண்டே உற்சாகத்தில் ஆடுவார்.

    அவர் தொடங்கிய அ.தி.மு.க.வை வழிநடத்த பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்று இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் இன்று அதேபோல் உற்சாக மனநிலைக்கு வந்திருக்கிறார். சட்டப் போராட்டங்களில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக தொடர் வெற்றி பெற்ற அவர் தற்போது தேர்வாணையத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் அனுப்பிய கட்சி சட்டத் திருத்தங்கள், புதிய சேர்க்கைகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தலைமை தேர்தல் ஆணையம் அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதோடு அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் அவற்றை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

    இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமை உறுதி படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்திருப்பதால் அவர் மீதான பா.ஜ.க. தலைவர்களின் அணுகு முறையிலும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமியிடம் இனி மென்மையாகத் தான் செல்ல வேண்டும் என்ற நிலை பா.ஜ.க. தலைவர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார்.

    இந்த மகிழ்ச்சியை தக்க வைத்துக்கொள்ள அடுத்த அதிரடி நடவடிக்கைகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஓசையின்றி தயாராகி வருகிறார். விரைவில் அ.தி.மு.க.வின் நிர்வாக அமைப்புகளில் மாற்றம் வரப்படலாம் என்கிறார்கள். தமிழகத்தின் அனைத்து பகுதி தலைவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பதவிகளை பிரித்து வழங்க எடப்பாடி பழனிசாமி ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்.

    • 11 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், அவர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வினை எழுதுவது என்று சொல்வது இயற்கை நியதிக்கு மாறான செயல்.
    • பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி 454 கால்நடை மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள அறவழி போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், கால்நடை மருத்துவர்களின் அவசர மற்றும் அவசியத் தேவையைக் கருத்தில் கொண்டு, கால்நடை பராமரிப்புத் துறையில் ஏற்கெனவே காலியாக உள்ள 258 இடங்கள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகங்களுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட 585 கால்நடை உதவி மருத்துவப் பணியிடங்கள் என 843 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தின்மூலம் நிரப்பப்பட்டன.

    11 ஆண்டுகளுக்கு முன்பு 843 பேர் கால்நடை உதவி மருத்துவர்களாக தற்போது 454 கால்நடை உதவி மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

    11 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், அவர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வினை எழுதுவது என்று சொல்வது இயற்கை நியதிக்கு மாறான செயல். கடும் போட்டிகள் நிரம்பியுள்ள தற்போதைய சூழ்நிலையில், நாற்பது வயதை கடந்துள்ள சூழ்நிலையில், தற்போதுள்ள பாடத் திட்டங்கள் மாறியுள்ள நிலையில், அவர்களால் இளம் கால்நடை பட்டதாரிகளுடன் போட்டிப் போடுவது என்பது இயலாத காரியம். தற்போது, தங்களை பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி 454 கால்நடை மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள அறவழி போராட்டத்தை நடத்தியுள்ளனர். ஏற்கெனவே உள்ள முன்னுதாரணத்தை பின்பற்றி, 454 கால்நடை உதவி மருத்துவர்களின் பணியை உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டு மென்று முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எட்டு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியும், மேற்படி 13,000 செவிலியர்களில் கிட்டத்தட்ட 10,000 செவிலியர்களின் பணி இன்னமும் நிரந்தரம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
    • அனைத்து செவிலியர்களையும் உடனடியாக முன் தேதியிட்டு பணி நிரந்தரம் செய்து, அவர்களது வாழ்வில் ஒளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலக செவிலியர்கள் தினத்தன்று தங்களுடைய ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்கள் தி.மு.க. அரசு செவிலியர்களுடைய வாழ்வில் ஒளியேற்றவில்லை. மாறாக வலியேற்றிக் கொண்டிருக்கிறது.

    எட்டு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியும், மேற்படி 13,000 செவிலியர்களில் கிட்டத்தட்ட 10,000 செவிலியர்களின் பணி இன்னமும் நிரந்தரம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    செவிலியர்களின் கோரிக்கை என்பது தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி மட்டுமல்ல, அரசு சார்பில் கொடுக்கப்பட்ட உத்தரவாதம் என்பதைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து செவிலியர்களையும் உடனடியாக முன் தேதியிட்டு பணி நிரந்தரம் செய்து, அவர்களது வாழ்வில் ஒளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க. ஆளுங்கட்சியாக மாறிய பிறகு, புதியக் கல்விக் கொள்கையில் அதன் நிலைப்பாடு மாறிவிட்டது.
    • தி.மு.க.வின் இரட்டை வேடத்தை நிரூபிக்கும் வண்ணம் மாநிலக் கல்விக் கொள்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்ததற்குப் பின்பு ஒரு நிலைப்பாடு என அனைத்திலும் இரட்டை வேடத்தை கடைபிடித்து வரும் தி.மு.க. அரசு, கல்வி கொள்கையிலும் இரட்டை வேடம் போடுகிறது என்பது தற்போது நிரூபிக்கப்பட்டு உள்ளது.

    மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தேசியக் கல்விக் கொள்கை நடைமுறைப் படுத்தப்படுவதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டுமென்று பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

    தி.மு.க. ஆளுங்கட்சியாக மாறிய பிறகு, புதியக் கல்விக் கொள்கையில் அதன் நிலைப்பாடு மாறிவிட்டது. 2021 அக்டோபர் மாதத்தில், மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்க வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    தி.மு.க.வின் இரட்டை வேடத்தை நிரூபிக்கும் வண்ணம் மாநிலக் கல்விக் கொள்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மாநில அரசின் தேசியக் கல்விக் கொள்கை என்பது தேசிய கல்விக் கொள்கையின் மறு வடிவமாகவே உருவாகிறது என்று தி.மு.க.வால் நியமனம் செய்யப்பட்ட குழு ஒருங்கிணைப்பாளர் கூறியிருக்கிறார்.

    இதன்மூலம் தேசியக் கல்விக் கொள்கையில் தி.மு.க.விற்கு உடன்பாடு இருக்கிறது என்பதும், தேர்தலில் வெற்றி பெற வேண்டுமே என்பதற்காக தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பது போல் நாடகமாடியது என்பதும் தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தான் தி.மு.க.வின் உண்மையான சுயரூபம்.

    இந்தச் சூழ்நிலையில், மாநில கல்விக் கொள்கைக்கான உயர்மட்டக் குழுவில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தும், மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படுமா அல்லது தேசியக் கல்விக் கொள்கை பின் பற்றப்படுமா என்பது குறித்தும், இது எப்பொழுது நடைமுறைக்கு வரும் என்பது குறித்தும் முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கட்சியில் உள்ள பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் இருந்து வருவதால் ஓ.பன்னீர்செல்வம் ஓரம் கட்டப்பட்டார்.
    • அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே உள்ள பிரச்சினையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நீடித்து வந்த அதிகார மோதலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஆரம்பத்தில் இருந்தே ஓங்கிகாணப்பட்டது.

    கட்சியில் உள்ள பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் இருந்து வருவதால் ஓ.பன்னீர்செல்வம் ஓரம் கட்டப்பட்டார்.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்படவே நாங்கள் விரும்புகிறோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களோ மீண்டும் கட்சியில் அவரை சேர்க்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இதையடுத்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மாநாடு நடத்தி தங்கள் பலத்தை காட்ட திட்டமிட்டனர். இதன்படி திருச்சியில் மாநாடு ஒன்றையும் ஓ.பி.எஸ் நடத்தினார்.

    ஆனால் அந்த மாநாடு அவருக்கு எந்த விதத்திலும் நன்மை பயத்தது போன்று தெரியவில்லை. இதையடுத்து ஓ.பி.எஸ்.சின் திருச்சி மாநாடு எடுபடாமல் போய் விட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    இதனைதொடர்ந்து அ.தி.மு.க.வில் எப்படியாவது மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ்.சும் அவரது ஆதரவாளர்களும் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டனர். இதற்காக அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் மூலமாக எடப்பாடி பழனிசாமிக்கு அவர்கள் தூது விட்டனர். இந்த விவகாரத்தில் பா.ஜனதா மேலிடம் தங்களை நிச்சயம் கைவிடாது என்றே ஓ.பி.எஸ். நம்பினார். ஆனால் அவர்கள் தற்போது ஓ.பி.எஸ்.ஐ கண்டு கொள்ளவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்து எப்படியாவது தங்களை சேர்த்துக்கொள்ள பா.ஜனதா டெல்லி மேலிடம் கவனம் செலுத்தும் என்றே ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களது எண்ணம் நிறைவேறவில்லை. ஓ.பி.எஸ்.-ஐ எந்த சூழலிலும் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களும் உறுதியாகவே இருந்தனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்று பா.ஜனதா மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான அமித் ஷாவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் பற்றி பேசப்பட்டதாகவும், ஓ.பி.எஸ்.-ஐ இணைத்துக் கொண்டு ஒன்றுபட்ட அ.தி.மு.க.வாக மீண்டும் நீங்கள் இணைந்து செயல்படுவதையே பா.ஜனதா கட்சி விரும்புகிறது என எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா வலியுறுத்தி இருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியானது.

    இதனால் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளப்படுவார்களா? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

    ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய மந்திரியும் பா.ஜனதா மூத்த தலைவருமான அமித்ஷா கருத்து தெரிவித்து உள்ளார்.

    அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜனதா தலையிட விரும்பவில்லை எனவும் அது அவர்களது உள்கட்சி விவகாரம் எனவும் அவர் கூறி உள்ளார். இது தொடர்பாக கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது அமித்ஷா அளித்து உள்ள பேட்டி வருமாறு:-

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே உள்ள பிரச்சினையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஓ.பி.எஸ்.சை சேர்க்க நாங்கள் வலியுறுத்த மாட்டோம்.

    அது அக்கட்சியின் விவகாரம் ஆகும். அவர்கள் இருவருமே தங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும்.

    ஒரு கட்சியின் விவகாரத்தில் மூக்கை நுழைப்பதை பாரதிய ஜனதா கட்சி எப்போதுமே விரும்பியது இல்லை. அதனை தரக்குறைவான செயலாகவே கருதுகிறோம். அந்த வகையில் ஓ.பி.எஸ். விவகாரத்தில் அ.தி.மு.க.வினர்தான் பேசி முடிவெடுக்க வேண்டும். நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

    இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

    இதன் மூலம் அ.தி.மு.க.வில் மீண்டும் சேரும் விவகாரத்தில் ஓ.பி.எஸ்.ஐ பா.ஜனதா கைவிட்டு விட்டது உறுதியாகி இருக்கிறது. இதன் காரணமாக ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது பற்றி அவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இது தொடர்பாக ஓ.பி.எஸ். விரைவில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அமித்ஷாவின் பேட்டி எடப்பாடி ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும் வக்கீலுமான சேலம் மணிகண்டன் கூறும்போது,

    ஆரம்பத்தில் இருந்தே நான் இந்த கருத்தைதான் தொடர்ந்து கூறி வந்தேன். பா.ஜனதா தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி மீது பெரிய நம்பிக்கை வைத்து உள்ளனர். ஓ.பி.எஸ்.ஐ சேர்க்காமலேயே நம்மால் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை அ.தி.மு.க. தலைவர்கள் எடுத்து கூறி இருக்கிறார்கள். தற்போது எடப்பாடி பழனிசாமி வசம் அ.தி.மு.க. முழுமையாக வந்துள்ளது. தேர்தல் நேரத்தில் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றி பேசப்படும் என்றார்.

    இதை தொடர்ந்து ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களின் அரசியல் எதிர்காலம் என்ன? என்பதும் மிகப்பெரிய கேள்வியாகி இருக்கிறது என அரசியல் நோக்கர்கள் கூறி வருகிறார்கள்.

    • மாநாட்டு பிளக்ஸ் பேனர்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக முப்பெரும் விழா என குறிப்பிடப்பட்டுள்ளது.
    • மாநாடு ஓ.பி.எஸ்.க்கு கண்டிப்பாக திருப்புமுனையை ஏற்படுத்தும். கட்சியை தொண்டர்கள் வசம் ஆக்குவோம் என்றனர்.

    திருச்சி:

    தேர்தல் ஆணையமும் நீதிமன்ற தீர்ப்புகளும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்த நிலையில் அரசியல் களத்தில் தனது பலத்தை நிரூபிக்க திருச்சியில் ஒரு மாநாட்டை நடத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்தார்.

    இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள். இது பன்னீர்செல்வத்துக்கு திருப்புமுனை மாநாடாக அமையும் என அவரது ஆதரவாளர்கள் அழுத்தம், திருத்தமாக கூறி வந்தனர். இதற்கிடையே தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அங்கீகரித்து, இரட்டை இலை சின்னத்தையும் கொடுத்து விட்டது. இது ஓ.பி.எஸ். தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    இருந்தபோதிலும் திட்டமிட்டபடி திருச்சி பொன்மலை ஜி. கார்னர் மைதானத்தில் நாளை (திங்கட்கிழமை) எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பிறந்த தின விழா, கட்சியின் 51-வது ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா மாநாட்டினை பிரமாண்டமாக நடத்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. அ.தி.மு.க. கொடி, சின்னம் போன்றவற்றையும் பயன்படுத்தி வருகின்றனர். கொடியில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

    வழக்கமாக அ.தி.மு.க. கொடியில் அண்ணா உருவப்படம் மட்டுமே இடம்பெற்றிருக்கும். தற்போது ஓ.பி.எஸ். அணியினர் உருவாக்கி உள்ள புதிய கொடியில் அண்ணா கை நீட்டும் இடத்தில் அவரது விரல்களில் இரட்டை இலை சின்னம் வட்டமிடப்பட்டு உள்ளது. சட்ட சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக இவ்வாறு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

    மேலும் மாநாட்டு பிளக்ஸ் பேனர்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக முப்பெரும் விழா என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதனை அறிந்த அ.தி.மு.க.வினர், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதால் ஓ.பி.எஸ். தரப்பினர் அ.தி.மு.க. பெயர், கொடி சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். அது மட்டும் அல்லாமல் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் நேற்று எழுத்து பூர்வமாக புகார் அளித்தனர்.

    ஒருபுறம் சட்ட சிக்கல்கள் மறுபுறம் மாநாட்டு ஆயத்தப் பணிகள் மேற்கொள்வதில் குறைந்த நாட்கள் என ஓ.பி.எஸ். அணி நெருக்கடியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த ஆர்.வைத்திலிங்கம் திட்டவட்டமாக மறுத்தார். ரெயில்வே நிர்வாக தரப்பு மைதானத்தை எங்களுக்கு 5 நாட்களுக்குத்தான் அனுமதி வழங்கியுள்ளனர்.

    ஏப்ரல் 20-ந்தேதி முதல் 25-ந்தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர். குறுகிய நாட்களாக இருந்தாலும் திட்டமிட்டபடி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறும். நீதிமன்றத்தில் இன்னமும் வழக்குகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் சொந்தமாக வில்லை.

    நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க., ஆகவே மாநாட்டு மேடையில் அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

    இதற்கிடையே இன்று காலை 80 சதவீத மாநாட்டு முன்னேற்பாட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக ஓ.பி.எஸ். அணியினர் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறும்போது, இன்று இரவுக்குள் மாநாடு ஒத்திகை நடத்தும் அளவுக்கு பணிகள் நிறைவு பெறும்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு திருச்சி வருகை தருகிறார். பின்னர் மாநாட்டு பந்தலை பார்வையிடுகிறார்.

    நாளை மாலை 5 மணிக்கு லட்சுமன் ஸ்ருதி ஆர்கெஸ்ட்ராவுடன் மாநாடு தொடங்குகிறது. சரியாக மாலை 6 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் மாநாட்டு பந்தலுக்கு வருகை தருகிறார். தொண்டர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் இருந்து தொண்டர்களின் கரகோஷத்துடன் நடந்து சென்று மேடை ஏறுகிறார்.

    இதில் ஓ.பி.எஸ். அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டியார், வைத்திலிங்கம் எம்.எல்.ஏ., கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர், மாநில அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இதில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமர்வதற்கு வசதியாக 50,000 இருக்கைகள் போடப்பட உள்ளன. மேலும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வசதியாக கூடுதல் நாற்காலிகள் வரவழைக்கப்பட்டுள்ளது. தொண்டர்களுக்கு சப்பாத்தி ரோல், குடிநீர் பாட்டில்கள் அந்தந்த இருக்கை வரிசையில் கடைசியில் பாக்சுகளில் பொருத்தி அதில் வைக்கப்படும். 3 லட்சம் தண்ணீர் பாட்டில்கள், 2 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மாநாடு ஓ.பி.எஸ்.க்கு கண்டிப்பாக திருப்புமுனையை ஏற்படுத்தும். கட்சியை தொண்டர்கள் வசம் ஆக்குவோம் என்றனர்.

    இதற்கிடையே கொடி, சின்னம் பயன்படுத்துவதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள காரணத்தால் மாநாட்டு பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுப்பிரமணியபுரம் புதுக்கோட்டை சாலையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • பொதுக்குழு விவகாரத்தில் கோர்ட்டிலும், தேர்தல் ஆணையத்திலும் பன்னீர்செல்வம் தவறான தகவல்களை அளித்து வருகிறார்.
    • ஜனநாயக அடிப்படையில் பலம் பொருந்திய கட்சியை செயல்படவிடாமல் தடுப்பதை ஏற்க முடியாது.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க .பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல் முறையீடு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

    இதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தங்களது வாதங்களை முன்வைத்தனர். தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதாடி வருகிறது.

    இந்த நிலையில் இன்று 5-வது நாளாக விசாரணை நடந்தது. அப்போது அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பில் வாதிடும்போது, பொதுக்குழு விவகாரத்தில் கோர்ட்டிலும், தேர்தல் ஆணையத்திலும் பன்னீர்செல்வம் தவறான தகவல்களை அளித்து வருகிறார்.

    ஜனநாயக அடிப்படையில் பலம் பொருந்திய கட்சியை செயல்படவிடாமல் தடுப்பதை ஏற்க முடியாது. கட்சியில் எந்த ஆதரவும் இல்லாத ஒருவர் பொதுக்குழு கூட்டத்தையும் முடிவையும் எதிர்ப்பது அடிப்படையற்றது என்று தெரிவித்தனர்.

    அப்போது நீதிபதிகள் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவது என்பது பொதுக் குழு நிகழ்ச்சி நிரலில் இல்லாதபோது அவரை எப்படி கட்சியில் இருந்து நீக்கினீர்கள்? என்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கேள்வி எழுப்பினர்.

    அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி வாதிடும்போது, இரட்டை தலைமையில் முடிவுகள் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் ஒற்றை தலைமை கொண்டு வரப்பட்டது. உரிய முறையில் பொதுக்குழு கூட்டி ஒற்றை தலைமை பற்றி தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்று கூறினார்.

    அவைத் தலைவர் தரப்பில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் விசாரணை 2 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    • தொண்டர்களுக்காகவே கட்சியில் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்ததாக ஓபிஎஸ் தெரிவித்தார்.
    • ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலக என்னை கட்டாயப்படுத்த முடியாது.

    சென்னை:

    அதிமுகவின் ஒற்றைத் தலைமை கோஷம் மற்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே ஏற்பட்ட சலசலப்புக்கு மத்தியில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கட்சிக்கு ஒற்றை தலைமை தேவையில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். அவர் பேசியதாவது:-

    பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு இருவரின் ஒப்புதலும் தேவை. அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை தேவையில்லை. கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவையா, இல்லையா என்பதை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும். 14 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவின் முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி உடன்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமியுடன் எப்போதும் அமர்ந்து பேச தயாராக உள்ளேன்.

    ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலக என்னை கட்டாயப்படுத்த முடியாது. என்னை தொண்டர்களிடம் இருந்து பிரிக்க முடியாது. நானும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்தபோது எந்தப் பதவியையும் நான் கேட்டதில்லை. தொண்டர்களுக்காகவே கட்சியில் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தேன். தொண்டர்களின் மனதில் குழப்பத்தை உருவாக்கக் கூடாது என்பது எனது நோக்கம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், இந்த விவகாரத்தில் தலைமை நிர்வாகிகளே முடிவு செய்வார்கள் என்றார்.

    • அரசை காப்பாற்றவே எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்ததாக ஓபிஎஸ் பேட்டி
    • ஒற்றை தலைமை என்ற அதிகாரம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே என பொதுக்குழுவில் முடிவு

    சென்னை:

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் வலுப்பெற்றுள்ள நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காக கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனைகளை வழங்கினர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அதிமுகவில் தொண்டர்களால் தேர்தல் மூலமாகவே பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்பது விதி. தனிப்பட்ட முறையில் நிர்வாகிகளால் பொதுச்செயலாளரை உருவாக்க முடியாது என்றார் கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர்.  ஜெயலலிதாவுக்கு பிறகு பொதுச்செயலாளர் என்ற பதவி தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது.

    டிடிவி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது, அரசை காப்பாற்றவே எடப்பாடி பழனிசாமியும் நானும் இணைந்தோம்.

    தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பதற்காகவே நாங்கள் இருவரும் இணைந்து செயல்பட்டோம். எனக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. அது அதிகாரமற்ற பதவி. இருந்தபோதும் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த பதவியை ஏற்றுக்கொண்டேன்.

    இப்போது ஒற்றைத் தலைமை பேச்சு ஏன் எழுந்தது என்று எனக்கே தெரியவில்லை. 6 ஆண்டு காலம் நன்றாக கட்சியை வழிநடத்திச் சென்ற நேரத்தில் இந்த பிரச்சனை எழுந்தது சரியல்ல. எதிர்க்கட்சியாக நாம் இருக்கும் இந்த நேரத்தில் இந்த பிரச்சனை தேவையில்லை. நானோ, எடப்பாடி பழனிசாமியோ இதுபற்றி பேசியது இல்லை.

    ஒற்றை தலைமை என்ற அதிகாரம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே என பொதுக்குழுவில் முடிவு செய்திருந்தோம். பொதுச்செயலாளர் என ஜெயலலிதாவுக்கு கொடுத்த பதவியில் யாரும் வரக்கூடாது. மீண்டும் ஒற்றைத் தலைமை என்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜூன் 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூட உள்ளது
    • அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டன

    சென்னை:

    அதிமுகவில் மீண்டும் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ள நிலையில், இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    ஜூன் 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூட உள்ள நிலையில், ஒற்றை தலைமை விவகாரம் கட்சியில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கள் ஆதரவு கருத்துக்களை பகிரங்கமாக கூறி வருகின்றனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என ஓபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும் என இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இத்தகைய போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. போஸ்டர்களை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். 

    ×