search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை சேர்க்க வலியுறுத்த மாட்டோம்-அமித் ஷா அறிவிப்பு
    X

    அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை சேர்க்க வலியுறுத்த மாட்டோம்-அமித் ஷா அறிவிப்பு

    • கட்சியில் உள்ள பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் இருந்து வருவதால் ஓ.பன்னீர்செல்வம் ஓரம் கட்டப்பட்டார்.
    • அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே உள்ள பிரச்சினையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நீடித்து வந்த அதிகார மோதலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஆரம்பத்தில் இருந்தே ஓங்கிகாணப்பட்டது.

    கட்சியில் உள்ள பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் இருந்து வருவதால் ஓ.பன்னீர்செல்வம் ஓரம் கட்டப்பட்டார்.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்படவே நாங்கள் விரும்புகிறோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களோ மீண்டும் கட்சியில் அவரை சேர்க்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இதையடுத்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மாநாடு நடத்தி தங்கள் பலத்தை காட்ட திட்டமிட்டனர். இதன்படி திருச்சியில் மாநாடு ஒன்றையும் ஓ.பி.எஸ் நடத்தினார்.

    ஆனால் அந்த மாநாடு அவருக்கு எந்த விதத்திலும் நன்மை பயத்தது போன்று தெரியவில்லை. இதையடுத்து ஓ.பி.எஸ்.சின் திருச்சி மாநாடு எடுபடாமல் போய் விட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    இதனைதொடர்ந்து அ.தி.மு.க.வில் எப்படியாவது மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ்.சும் அவரது ஆதரவாளர்களும் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டனர். இதற்காக அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் மூலமாக எடப்பாடி பழனிசாமிக்கு அவர்கள் தூது விட்டனர். இந்த விவகாரத்தில் பா.ஜனதா மேலிடம் தங்களை நிச்சயம் கைவிடாது என்றே ஓ.பி.எஸ். நம்பினார். ஆனால் அவர்கள் தற்போது ஓ.பி.எஸ்.ஐ கண்டு கொள்ளவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்து எப்படியாவது தங்களை சேர்த்துக்கொள்ள பா.ஜனதா டெல்லி மேலிடம் கவனம் செலுத்தும் என்றே ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களது எண்ணம் நிறைவேறவில்லை. ஓ.பி.எஸ்.-ஐ எந்த சூழலிலும் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களும் உறுதியாகவே இருந்தனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்று பா.ஜனதா மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான அமித் ஷாவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் பற்றி பேசப்பட்டதாகவும், ஓ.பி.எஸ்.-ஐ இணைத்துக் கொண்டு ஒன்றுபட்ட அ.தி.மு.க.வாக மீண்டும் நீங்கள் இணைந்து செயல்படுவதையே பா.ஜனதா கட்சி விரும்புகிறது என எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா வலியுறுத்தி இருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியானது.

    இதனால் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளப்படுவார்களா? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

    ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய மந்திரியும் பா.ஜனதா மூத்த தலைவருமான அமித்ஷா கருத்து தெரிவித்து உள்ளார்.

    அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜனதா தலையிட விரும்பவில்லை எனவும் அது அவர்களது உள்கட்சி விவகாரம் எனவும் அவர் கூறி உள்ளார். இது தொடர்பாக கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது அமித்ஷா அளித்து உள்ள பேட்டி வருமாறு:-

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே உள்ள பிரச்சினையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஓ.பி.எஸ்.சை சேர்க்க நாங்கள் வலியுறுத்த மாட்டோம்.

    அது அக்கட்சியின் விவகாரம் ஆகும். அவர்கள் இருவருமே தங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும்.

    ஒரு கட்சியின் விவகாரத்தில் மூக்கை நுழைப்பதை பாரதிய ஜனதா கட்சி எப்போதுமே விரும்பியது இல்லை. அதனை தரக்குறைவான செயலாகவே கருதுகிறோம். அந்த வகையில் ஓ.பி.எஸ். விவகாரத்தில் அ.தி.மு.க.வினர்தான் பேசி முடிவெடுக்க வேண்டும். நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

    இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

    இதன் மூலம் அ.தி.மு.க.வில் மீண்டும் சேரும் விவகாரத்தில் ஓ.பி.எஸ்.ஐ பா.ஜனதா கைவிட்டு விட்டது உறுதியாகி இருக்கிறது. இதன் காரணமாக ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது பற்றி அவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இது தொடர்பாக ஓ.பி.எஸ். விரைவில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அமித்ஷாவின் பேட்டி எடப்பாடி ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும் வக்கீலுமான சேலம் மணிகண்டன் கூறும்போது,

    ஆரம்பத்தில் இருந்தே நான் இந்த கருத்தைதான் தொடர்ந்து கூறி வந்தேன். பா.ஜனதா தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி மீது பெரிய நம்பிக்கை வைத்து உள்ளனர். ஓ.பி.எஸ்.ஐ சேர்க்காமலேயே நம்மால் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை அ.தி.மு.க. தலைவர்கள் எடுத்து கூறி இருக்கிறார்கள். தற்போது எடப்பாடி பழனிசாமி வசம் அ.தி.மு.க. முழுமையாக வந்துள்ளது. தேர்தல் நேரத்தில் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றி பேசப்படும் என்றார்.

    இதை தொடர்ந்து ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களின் அரசியல் எதிர்காலம் என்ன? என்பதும் மிகப்பெரிய கேள்வியாகி இருக்கிறது என அரசியல் நோக்கர்கள் கூறி வருகிறார்கள்.

    Next Story
    ×