search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் விளையாட்டு"

    • மன உளைச்சளில் இருந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி, சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் வசித்து வரும் ஒடிசாவை சேர்ந்த பந்தனமாஜி என்கிற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

    இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.70 ஆயிரம் இழந்ததாகவும், மன உளைச்சளில் இருந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வலைதளப் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கு பல மென்பொருள்கள் உள்ளன.
    • சிறுவர், சிறுமிகள் இணையத்தை கவனமாக பயன்படுத்துவார்கள்.

    வெளிவிளையாட்டுகளைவிட இணையதள விளையாட்டுகள், மொபைல்போன் விளையாட்டுகள் போன்றவை குழந்தைகள், வளர்இளம் பருவத்தினரை அதிகமாக ஈர்க்கின்றன. தனிநபர் ஆதிக்கம் செலுத்துவதற்கு உள்ள சாத்தியம், தனிமை மற்றும் மனச்சோர்வின்போது அதைத் தணியச்செய்வது போன்ற காரணங்களால், அதற்கு அடிமையாகும் அளவுக்குப் பலரும் மாறிவிடுகின்றனர். அது மட்டுமல்லாமல் துப்பாக்கியால் சுடுவது போன்ற ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் விளையாட்டுகள் நிஜ வாழ்க்கையிலும் அவர்களுடைய நடவடிக்கைகளில் மூர்க்கக் குணத்தை உண்டாக்கும். பெரும்பாலான நேரம் இத்தகைய விளையாட்டுகளிலேயே மூழ்கிவிடுவதால் மனச் சோர்வும் தூக்கமின்மையும் ஏற்படுகின்றன.

    மேலும் தனக்கு பிடிக்காதவர்களை பற்றி தவறான தகவல்களை பரப்புவது, ஆபாச படங்களை வெளியிடுவது, பிறரை புண்படுத்தும் வகையில் கேலியான அல்லது மிரட்டும் வகையில் பதிவுகளை அனுப்புவது போன்ற பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் மிகச் சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதைத்தான் 'சைபர் புல்லியிங்' என்கிறார்கள்.

    நமக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆனால், மேற்கத்திய நாடுகளில் 40 சதவீத இளைஞர்களை பாதிக்கும் முக்கியப் பிரச்சினையாக இது கருதப்படுகிறது. அதேபோல, வளர்இளம் பருவத்தில் ஏற்படும் பாலியல் நாட்டம் மற்றும் அந்தரங்க ஆசைகளை நிறைவேற்றும் ஒரு வடிகாலாக வலைதளம் பயன்படுத்தப்படுவது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    ஆபாச வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்திப் பரிமாற்றங்களில் ஈடுபடும் வளர்இளம் பருவத்தினரை அவர்களுடைய நடவடிக்கை மாற்றங்கள் காட்டிக்கொடுத்துவிடும். இரவில் வெகுநேரம் அல்லது அதிகாலைவரை இணையத்தைப் பயன்படுத்துவது, கணினி, மடிகணினி பயன்படுத்தும்போது அதிகம் தனிமையை நாடுவது, யாராவது குறுக்கிட்டால் எரிச்சல்படுவது, மொபைல்போன் பயன்பாடுகளுக்குப் பாஸ்வேர்ட் வைத்துக்கொள்வது, குடும்ப நபர்களிடம் கலந்துரையாடும் நேரம் குறைவது, வலைதள வரலாற்றை முற்றிலும் அழித்துவிடுவது உள்பட பல மாற்றங்கள் ஒருவரிடம் காணப்படும்.

    'முள்ளை முள்ளால் எடுப்பது' போல வளர்இளம் பருவத்தினரின் வலைதளப் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கு பல மென்பொருள்கள் உள்ளன. அவற்றைக் கணினியிலோ, ஸ்மார்ட் போனிலோ பதிவேற்றிவிட்டால் குறிப்பிட்ட ஆபாச, விளையாட்டு வலைதளங்களை பயன்படுத்தும்பட்சத்தில் வலைதளம் தானாகவே தடுத்துவிடும். தடை செய்யப்பட்ட வலைதளத்தை ஒருவர் அணுகினால், அது குறித்த விவரம் பெற்றோரின் மின்னஞ்சலுக்கு வந்துசேரும் வகையில் மென்பொருள்கள் உள்ளன. தாங்கள் இந்த விஷயத்தில் கண்காணிக்கப்படுகிறோம் என்று ஆரம்பத்தில் தெரிந்துவிட்டாலே, சிறுவர், சிறுமிகள் இணையத்தை கவனமாக பயன்படுத்துவார்கள்.

    • எந்த நோக்கத்திற்காக ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அதை தமிழக அரசு இன்று முதலே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
    • சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனரின் ஒப்புதலை விரைந்து பெற வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆன்லைன் சூதாட்டம் மிகப்பெரிய சமூகக்கேடு என்பதை அரசே ஒப்புக்கொண்டு விட்ட நிலையில், அது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் 3 முறை விவாதிக்கப்பட்டு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதை தமிழக அரசு இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது நியாயமானதல்ல.

    எந்த நோக்கத்திற்காக ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அதை தமிழக அரசு இன்று முதலே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

    அதுமட்டுமின்றி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனரின் ஒப்புதலை விரைந்து பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாகராஜ் கடந்த பல மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதன் மூலம் அவர் பணத்தை இழந்துள்ளார்.
    • 3 நம்பர் லாட்டரி சீட்டு வாங்கி, அதன் மூலமும் ரூ.30 லட்சத்தை இழந்துள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தலைமை அர்ச்சகராக நாகராஜ் என்பவர் இருந்தார். இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கோவில் அருகில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பக்தர்கள், அர்ச்சகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. போலீசார் தொடர் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:

    நாகராஜ் கடந்த பல மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதன் மூலம் அவர் பணத்தை இழந்துள்ளார். மேலும் 3 நம்பர் லாட்டரி சீட்டு வாங்கி, அதன் மூலமும் ரூ.30 லட்சத்தை இழந்துள்ளார். இதனால் ஏற்பட்ட கடனால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்தனர்.

    • கல்லூரி கட்டணத்திற்காக தனது தந்தை கொடுத்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சரத்குமார் திவாதி இழந்துள்ளார்.
    • நேற்று மாலை முதல் சரத்குமார் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு விடுதிக்கும் வராமல் மாயமாகி விட்டார். அவர் எங்கு சென்றார்? என தெரியவில்லை.

    சென்னை:

    சென்னை ராமாபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருபவர் சரத்குமார் திவாரி. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர் விடுதியில் தங்கி இருந்து படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கல்லூரி கட்டணத்திற்காக தனது தந்தை கொடுத்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சரத்குமார் திவாதி இழந்துள்ளார். பின்னர் மீண்டும் தந்தையிடம் பணம் கேட்டு இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை மாணவனை திட்டியுள்ளார்.

    இதனை தொடர்ந்து நேற்று மாலை முதல் சரத்குமார் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு விடுதிக்கும் வராமல் மாயமாகி விட்டார். அவர் எங்கு சென்றார்? என தெரியவில்லை. இது தொடர்பாக மாணவனின் தந்தை போன் மூலம் ராயலா நகர் போலீசாருக்கு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வருகிறார்கள்.

    • ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பரிமாறப்படும் பணத்தை எந்தவொரு வங்கியும் பரிமாற்றம் செய்யக்கூடாது.
    • எந்தவொரு ஆன்லைன் விளையாட்டு அளிப்பவர்களுக்கான பதிவுச் சான்று 3 ஆண்டுகளுக்கு செல்லும்.

    சென்னை:

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மூலம் அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளும் தடை செய்யப்படுகிறது.

    மேலும், பணம் (அல்லது வெகுமதிகள்) வெல்லக்கூடிய வாய்ப்புள்ள விளையாட்டாக கருதப்படும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளும் (ரம்மி, போக்கர்) தடை செய்யப்படுவதாக சட்டத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எந்தவொரு ஆன்லைன் விளையாட்டை வழங்குபவரும், சூதாட்டத்தை புகுத்தக் கூடாது. அந்த விளையாட்டை விளையாட எவரையும் அனுமதிக்கக்கூடாது. பணம் தொடர்புடைய ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பரிமாறப்படும் பணத்தை எந்தவொரு வங்கியும் பரிமாற்றம் செய்யக்கூடாது. எந்தவொரு ஆன்லைன் விளையாட்டு அளிப்பவர்களுக்கான பதிவுச் சான்று 3 ஆண்டுகளுக்கு செல்லும். ஒழுங்குமுறைகளை மீறினால், விளக்கம் கேட்டு அந்தப் பதிவு ரத்து செய்யப்படும்.

    இதற்கு 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். இதற்கான மேல்முறையீட்டு குழுவை, ஒரு தலைவர் (ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி) மற்றும் 2 உறுப்பினர்களைக் கொண்டு அரசு அமைக்கும்.

    சூதாட்டம் அல்லாத இதர ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

    அதில் ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்கு முறை ஆணையம் விரைவில் செயல்பட உள்ளது. இந்த ஆணையத்தில் ஐ.டி.வல்லுனர்கள், உளவியல் நிபுணர், ஆன்லைன் விளையாட்டு வல்லுனர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

    இவர்கள் எந்தெந்த ஆன்லைன் விளையாட்டுக்கு அனுமதி வழங்குவது, தொடர்ந்து கண்காணிப்பது, தரவுகளை சேகரிப்பது, குறைகளுக்கு தீர்வு காண்பது, விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பது உள்ளிட்ட பணிகளை ஆணையம் மேற்கொள்ளும்.

    உள்ளூரில் இல்லாத ஆன்லைன் விளையாட்டு வழங்குபவர் எவரும், எந்தவொரு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையோ, பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்பு உள்ள விளையாட்டாக கருத்தப்படும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையோ, ஒழுங்குமுறைக்கு மாறான விளையாட்டுகளையோ வழங்கக் கூடாது. அப்படி வழங்கினால், அந்த விளையாட்டு வழங்குபவரை தடை செய்வதற்கு மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொள்ள வேண்டும்.

    • கடந்த 16-ந்தேதி நடேசனின் வீட்டில் இருந்து 10 பவுன் நகை திருட்டு போனது.
    • தனது வீட்டிற்கு கணவரின் நண்பரான அமல்தேவ் அடிக்கடி வந்து சென்றதால் அவர் மீது சந்தேகம் இருப்பதாக நடேசனின் மனைவி போலீசில் கூறினார்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்தவர் அமல்தேவ் கே.சதீசன் (வயது 35). இவர் எர்ணாகுளம் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

    இதற்காக அவர் எர்ணாகுளம் வைபின் ஞாறக்கல் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவரும், அமல்தேவும் நண்பர்கள் ஆவர்.

    இந்த நிலையில், கடந்த 16-ந்தேதி நடேசனின் வீட்டில் இருந்து 10 பவுன் நகை திருட்டு போனது. இதையடுத்து ஞாறக்கல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், துப்பு எதுவும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில், தனது வீட்டிற்கு கணவரின் நண்பரான அமல்தேவ் அடிக்கடி வந்து சென்றதால் அவர் மீது சந்தேகம் இருப்பதாக நடேசனின் மனைவி போலீசில் கூறினார். இதையடுத்து அமல்தேவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது, நண்பர் வீட்டில் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதன் விவரம் வருமாறு:-

    போலீஸ்காரராக பணியாற்றி வந்த அமல்தேவுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த விளையாட்டுக்கு அடிமையான அமல்தேவ் இதில் ரூ.30 லட்சத்தை இழந்து கடனாளியானார். மேலும், தனக்கு கிடைக்கும் பணம் முழுவதையும் இந்த விளையாட்டிலேயே இழந்துள்ளார். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் அவரை நெருக்கத் தொடங்கினர்.

    இந்தநிலையில் கடனை அடைக்க தனது நண்பர் வீட்டில் திருட திட்டமிட்டார். அதன்படி சம்பவத்தன்று வழக்கம்போல் நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு யாரும் அவரை கவனிக்காத நேரத்தில் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. திருடிய நகைகளில் சிலவற்றை அப்பகுதியில் அடகு வைத்ததும், மீதி இருந்த நகைகளை விற்றதும் தெரியவந்தது.

    இதைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நகைகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட கடனை அடைக்க போலீஸ்காரர் அமல்தேவ் தனது நண்பர் வீட்டில் திருடிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இணைய சூதாட்டம் மக்களின் மனநலத்தை கணிசமாக பாதிக்கிறது. மற்றும் பல குடும்பங்களை நிதி நெருக்கடியில் ஆழ்த்தி உள்ளது.
    • மாநில மற்றும் அதன் மக்கள் தொகையில் நீண்ட கால வாய்ப்புகளை பாதிக்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்றப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த முறை சட்டசபையில் அறிவித்தார். இதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது.

    இக்குழு கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதி தனது அறிக்கையை முதல்-அமைச்சரிடம் சமர்ப்பித்தது. அதன்பின், ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, செப். 26-ந்தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த அவசர சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கடந்த 7-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதன்படி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டமாக இயற்றப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்ட மசோதாவை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சட்ட அமைச்சர் ரகுபதி இன்று தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    குடிமக்களின் மனநலத்தை பாதுகாக்கும் பொறுப்பும், பந்தயம் கட்டுதல் உள்பட எந்த வடிவத்திலும் சூதாட்டத்தின் தீய விளைவுகளில் இருந்து பாதுகாக்கும் பொறுப்பும் அரசிற்கு உள்ளது.

    இதன் காரணத்தால் 1930-ம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச் சட்டம் மற்றும் 1888-ம் ஆண்டு சென்னை மாநகர காவல் சட்டம் ஆகியவற்றில் பிரதிபலிக்கும் வகையில் தனிநபர் சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டுதல் ஆகியவற்றை தடை செய்யும் நீண்டகாலக் கொள்கையை அரசு பேணி வருகிறது.

    இணையவழி விளையாட்டின் பரவல், குறிப்பாக அடிமையாக்கும் இணைய வழி விளையாட்டுகள் மற்றும் இணையம் வழியாக விளையாடப்படும் சூதாட்ட விளையாட்டுகள் அரசின் முயற்சிகளை முறியடிக்க அச்சுறுத்துகிறது. முதலாவதாக மின்னணு தகவல் தொடர்பு மூலம் சூதாட்டமானது எல்லா நேரங்களிலும், எல்லா இடத்திலும் தொலை தொடர்பு திறன் கொண்ட சாதனத்தை அணுகக் கூடிய நபர் எவருக்கும் கிடைக்கிறது. இரண்டாவதாக இணைய வழி சூதாட்டம் மனிதர்கள் அல்லாத கணினி பங்கேற்பாளர்களுடன் போட்டியிடும் வீரர்களை உள்ளடக்கியது. அவை பல்வேறு கணினி நெறிமுறைகளாக கட்டுப்படுத்தப்படுகின்றன.

    அத்தகைய தொலைதூர விளைாட்டுகளில் ஈடுபடும் வாய்ப்பு அல்லது திறமையின் படிநிலை தொடர்புடைய கணினிநெறிமுறை அல்லது நிரலாக்கத்தை தனியாக மதிப்பீடு செய்ய முடியாது. இறுதியாக தொலை நிலையான சூதாட்டம் பெரும்பாலும் மாநிலங்களின் நிதிக் கண்காணிப்பை தவிர்த்து இணைய பணப்பரிமாற்றங்கள் மற்றும் டோக்கன் மூலம் நடைபெறுகிறது.

    இவ்வாறு இணைய சூதாட்டம் மக்களின் மனநலத்தை கணிசமாக பாதிக்கிறது. மற்றும் பல குடும்பங்களை நிதி நெருக்கடியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் மாநில மற்றும் அதன் மக்கள் தொகையில் நீண்ட கால வாய்ப்புகளை பாதிக்கிறது.

    இதே போல் சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டுதல் போன்ற தொடர்பில்லாத பிற இணைய வழி விளையாட்டுகளும் தனிப்பட்ட குடும்ப, சமூக, கல்வி, தொழில் அல்லது பொதுமக்களின் செயல்பாட்டின் பிற முக்கியப் பகுதிகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த விளையாட்டுகளினால் பள்ளி மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதன் விளைவாக நுண்ணறிவு பலம், எழுதும் திறன் மற்றும் படைப்பாற்றல் ஆகியன குறைகின்றன.

    இதனால் இணைய வழி சூதாட்டம் மற்றும் இணைய வழி விளையாட்டுகள் இயற்கையில் அடிமையாக்கும் தன்மை கொண்டவை மற்றும் தகுதி வாய்ந்த ஒழுங்குமுறை விதிகளை வடிவமைப்பதில் சிரமங்களை ஏற்படுத்தும் போது அது பொது ஒழுங்கிற்கான அச்சுறுத்தலை பன்மடங்கு அதிகரிக்கிறது.

    இணைய வழி விளையாட்டுகளின் மீது புதிய சட்டத்தை இயற்றுவதற்கு, அரசுக்கு அறிவுரை வழங்குவதற்கு ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.சந்துருவின் தலைமையில் உருவாக்கப்பட்ட குழுவானது அதன் அறிக்கையில், விளையாட்டு எதனின் இணைய வழி பதிபானது சீரற்ற வெளியீட்டு உருவாக்கி எதிலும் ஈடுபடாத வார்த்தை விளையாட்டுகள் அல்லது பலகை விளையாட்டுகளின் நேர்வுகளைத் தவிர அந்த விளையாட்டின் இணைய வழியல்லாத பதிப்புடன் ஒப்பிட முடியாது மற்றும் சீரற்ற உருவாக்கியை உள்ளடக்கிய இணைய வழி வாய்ப்பு விளையாட்டுகளை உருவாக்குபவர்களுக்கு தெரியும் என்பதால் அவை போலியான சீரற்ற உருவாக்கிகள் ஆகும்.

    அத்தகைய விளையாட்டுகள் எந்திரத்துடன் விளையாடக்கூடியவை. அத்தகைய விளையாட்டு முறைகளை மேற்பார்வையிட இயங்கமைவு ஏதுமில்லை மற்றும் அந்த விளையாட்டுகளை கையாளவும் தொடர் ஈடுபாட்டிற்கு விளையாட்டாளர்களை கவர்ந்திழுக்கவும், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படலாம் என்பது போன்ற பல்வேறு வரைக்கூறுகளைக் கண்டறிந்துள்ளது.

    மேற்கூறப்பட்ட குழுவின் அறிக்கை, அரசுப் பள்ளி மாணவர்களின் மீது இணைய வழி விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி ஆசிரியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள், இதுகுறித்து ஆராய்ச்சி ஆய்வுகள் மற்றும் பங்கேற்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் பல்வேறு சட்டங்களை ஆய்வு செய்த பின்னர், அதன்படி உள்ள முடிவுகள் ஆகியவற்றை கவனமாக பரிசீலனை செய்த பின்னர் அரசானது, இணைய வழி சூதாட்டங்களை தடை செய்வது எனவும், இணைய வழி விளையாட்டுகளை ஒழுங்கு முறைப்படுத்துவது எனவும் முடிவு செய்தது.

    அப்போது சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறாமல் இருந்த காரணத்தினால், அரசின் மேற்சொன்ன முடிவிற்குச் செயல் வடிவம் கொடுப்பதற்காக, அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிப்பது தேவையானதாயிற்று. அதற்கிணங்கிய வகையில் 2022-ம் ஆண்டு தமிழ்நாடு இணைய வழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணைய வழி விளையாட்டுகளை ஒழுங்கு முறைப்படுத்துதல் அவசர சட்டமானது (தமிழ்நாடு அவசரச் சட்டம் 4/2022) 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் நாள் அன்று கவர்னரால் பிரகடனம் செய்யப்பட்டு 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதியிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழில் வெளியிடப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

    இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்தால், ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும்.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

    இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும்.

    • தொழில்நுட்ப வளர்ச்சியால் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் வெளி வருகின்றன.
    • ப்ரீ பயர் விளையாட்டில் வரும் வன்முறை காட்சி குழந்தைகள் மனதை பாதிக்கிறது.

    நாகர்கோவிலை சேர்ந்த அயரின் அமுதா என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். தனது மகள் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார் என்றும், கடந்த 6-ந் தேதி முதல் அவளை காணவில்லை என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வந்த தமது மகளை, அந்த விளையாட்டு மூலம் பழக்கமான ஒருவர் அழைத்து சென்றுள்ளார், அவளை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் தமது மனுவில் அமுதா கூறியிருந்தார்.

    இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், ப்ரீ பயர் போன்ற ஆன்லைன் விளையாட்டில் வரும் வன்முறை காட்சிகள் குழந்தைகள் மனதை பெரிதும் பாதிக்கும் வகையில் உள்ளன என்றும், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் தொழில்நுட்ப வளர்ச்சியால் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் அவை வெளிவந்து கொண்டே இருக்கின்றன எனவும் தெரிவித்தனர்.

    இதனால் இந்த விளையாட்டுகளை முழுவதுமாக தடை செய்வது என்பது இயலாத காரியமாக உள்ளது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்நிலையில் மனுதாரர் தரப்பு மகளை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் தனது பெற்றோருடன் செல்வதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

    • தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் 2-வது வாரம் அல்லது 3-வது வாரத்தில் நடைபெற இருக்கிறது.
    • புதிய சட்ட மசோதாக்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்ததாக தெரிகிறது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அனைத்து துறையை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    சட்டசபை கூட்டம் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி சில முக்கிய முடிவுகள் எடுப்பது சம்பந்தமாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து முடித்து விசாரணை அறிக்கையை ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்து இருந்தது.

    இந்த அறிக்கையை வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்வது குறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதேபோல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையையும் ஏற்கனவே அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையையும் சட்டசபையில் தாக்கல் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதுதவிர ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மசோதா கொண்டுவருவது குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் தமிழகத்தில் புதிதாக தொழில்கள் தொடங்குவதற்கு அனுமதி கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு கொள்கை முடிவுகள் சம்பந்தமாகவும் இந்த அவசர கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதுதவிர தமிழகத்தின் நலன், பல முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் 2-வது வாரம் அல்லது 3-வது வாரத்தில் நடைபெற இருக்கிறது. எனவே சட்டசபை கூட்டத்தில் என்னென்ன சட்ட மசோதாக்களை கொண்டுவந்து நிறைவேற்றலாம் என்பது குறித்தும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்ததாக தெரிகிறது.

    இதனால் அடுத்த மாதம் தொடங்க உள்ள சட்டசபை கூட்டம் மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் எதுவும் உடனடியாக அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை.

    • ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்.
    • அச்சட்டம் எந்த நீதிமன்றத்திலும் ரத்து செய்யப்படாத வகையில் வலுவானதாக கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    சென்னை:

    5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், மாணவர் சேர்க்கைக்கான ஆணையினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல் 12 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கான சேர்க்கை ஆணையை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

    தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் மொத்தம் 1,731 இடங்கள் உள்ள நிலையில் முதல் சுற்று கலந்தாய்வின் முடிவில் சுமார் 1,300 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதம் இருக்கும் இடங்கள் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படும்.

    பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

    ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். அச்சட்டம் எந்த நீதிமன்றத்திலும் ரத்து செய்யப்படாத வகையில் வலுவானதாக கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா குறித்து கவர்னர் கேட்ட விளக்கங்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சட்டத்துறையால் வழங்கப்பட்டுள்ளது. நீட் விலக்கு மசோதாவிற்கு நல்ல முடிவு வரும்.

    துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவிற்கு கவர்னர் மாளிகையிலிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கப்பெறவில்லை

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான ஏடு கொண்டலு தனது வருவாய் அனைத்தையும் இழந்தார்.
    • மேலும் தனக்கு தெரிந்தவர்களிடம் கடனை வாங்கி ஆன்லைன் விளையாட்டில் இழந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பாமினி பகுதியை சேர்ந்தவர் ஏடு கொண்டலு. (வயது 45). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் இந்தி ஆசிரியராக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த இவரது மைத்துனர் அப்பண்ணா. இவரும் அரசு பள்ளியில் கைவினை கலை ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

    ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான ஏடு கொண்டலு தனது வருவாய் அனைத்தையும் இழந்தார். மேலும் தனக்கு தெரிந்தவர்களிடம் கடனை வாங்கி ஆன்லைன் விளையாட்டில் இழந்தார்.

    இந்த நிலையில் அப்பண்ணாவின் மகனுக்கு கடந்த ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடந்தது. மணமகள் தனது வீட்டிலிருந்து சீதனமாக கொண்டு வந்த நகை, பணம் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அன்பளிப்பாக அளித்த நகை, பணம் அனைத்தையும் அப்பண்ணா வீட்டின் பீரோவில் வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி அப்பண்ணா தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 5 கிலோ தங்க நகைகள், ரூ 21.5 லட்சம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. இதுகுறித்து அப்பண்ணா கோட்டூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் எந்த துப்பும் கிடைக்காததால் வழக்கை கிடப்பில் போட்டனர்.

    கடந்த வாரம் ஸ்ரீகாக்குளம் போலீஸ் சூப்பிரண்டு ராதிகா குறை தீர்வு கூட்டம் நடத்தினார். அப்போது அப்பண்ணா ராதிகாவிடம் தனது வீட்டில் நடந்த கொள்ளை சம்பந்தமாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்தார்.

    இதைடுத்து போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் மணமகன் மற்றும் மணமகள், வாடகைதாரர்கள் மீது சந்தேகப்பட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது அப்பண்ணா தன்னுடைய வீட்டில் எவ்வளவு நகை, பணம் உள்ளது என தனது மைத்துனர் ஏடு கொண்டலுவுக்கு தெரியும் எனவும் வெளியூர் செல்லும்போது வீட்டு சாவியை அவரிடம் கொடுத்துவிட்டு செல்வதாகவும் கூறினார்.

    இதையடுத்து ஏடு கொண்டலு மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் தனது விவசாய நிலத்தை ரூ.30 லட்சத்திற்கு விற்று கடன் கொடுத்ததாகவும், மேலும் கடன் இருந்ததால் மைத்துனர் வீட்டில் இருந்து நகை, பணத்தை கொள்ளையடித்ததாகவும் தெரிவித்தார்.

    போலீசார் ஏடு கொண்டலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். 9 மாதத்திற்கு பின் கொள்ளை சம்பவத்தில் துப்பு துலங்கியுள்ளது.

    ×