search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்"

    • உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி இரண்டும் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்
    • யோகாவினால் மன அழுத்தம் பெருமளவு குறைகிறது என்றார் அர்னால்ட்

    உலகெங்கும் மக்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று, நீரிழிவு (Diabetes).

    வழக்கத்தில் "சர்க்கரை நோய்" என அழைக்கப்படும் நீரிழிவு நோயினால் தாக்கப்படுபவர்களுக்கு மருந்து, ஊசி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றுடன் உடற்பயிற்சியும் பரிந்துரைக்கப்படுகிறது.

    இந்நிலையில், ஹாலிவுட் ஹீரோவும், உடற்பயிற்சி ஆர்வலருமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (Arnold Schwarzenegger) நீரிழிவு நோயிலிருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    யோகா, நீரிழிவிலிருந்து தற்காத்து கொள்ள ஒரு நல்ல வழிமுறை.

    நீரிழிவு நோயின் மீது யோகா ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து கொள்ள 16 ஆய்வுகள் நடத்தப்பட்டன. அவற்றில் யோகா சிறப்பான பலனை வெளிப்படுத்தின.

    யோகா பயிற்சியில் தசைகளுக்கும், உடல் இயக்கங்களுக்கும் சவாலோடு கூடிய பயிற்சி கிடைக்கிறது.

    மேலும், யோகா பயில்பவர்களின் மனம் அமைதியடைகிறது. இதன் மூலம் மன அழுத்தம் பெருமளவு குறைகிறது.

    யோகா மட்டுமின்றி நடைபயிற்சி கூட பயனுள்ள வழிமுறைதான்.

    இரண்டு வழிமுறைகளையும் உள்ளடக்கிய ஒரு திட்டத்தை ஏற்படுத்தி கொண்டு அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

    இவ்வாறு அர்னால்ட் கூறினார்.


    76-வயதிலும் ஆரோக்கியமாக வாழும் அர்னால்ட் பரிந்துரைத்திருக்கும் வழிமுறைகள் கடைபிடிக்க எளிதானவை என சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    2018 ஆகஸ்ட் மாத அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தில் (National Library of Medicine) பதிவான ஒரு ஆய்வறிக்கையில் தவறாமல் யோகா பயிற்சி செய்து வருபவர்களுக்கு உணவு உண்ணும் முறைகளிலும் ஒரு கட்டுப்பாடு வருவதாகவும், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் பெருமளவு குறைவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    • கார்ல் வெதர்ஸ் ஒரு தொழில்முறை கால்பந்து வீரராக திகழ்ந்தவர்
    • ஸ்டாலோன் மற்றும் ஸ்வார்ஸ்னேக்கர் ஆகியோருடன் இணையாக நடித்தவர்

    1976ல் ஹாலிவுட்டின் ஹீரோ சில்வெஸ்டர் ஸ்டாலோன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம், ராக்கி (Rocky).

    ஸ்டாலோனை புகழேணியின் உச்சாணிக் கொம்பில் நிறுத்திய இத்திரைப்படத்தில், அப்போல்லோ க்ரீட் எனும் பிரபல ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரரை, ராக்கி பல்போவா எனும் உள்ளூர் வீரர் போட்டியிட்டு வெல்வார். இதில் ராக்கி பல்போவா கதாபாத்திரத்தில் சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்திருந்தார்.

    அப்போல்லோ க்ரீட் கதாபாத்திரத்தில் கார்ல் வெதர்ஸ் (Carl Weathers) எனும் அமெரிக்க தொழில்முறை கால்பந்து வீரர் சிறப்பாக நடித்திருந்தார்.

    ராக்கி திரைப்பட நடிகர்களுக்கான தேர்வின் போது (audition), கார்ல் வெதர்ஸ், அங்கு உடன் நடித்த ஸ்டாலோனின் நடிப்பில் உள்ள குறைகளை வெளிப்படையாகவும், துணிச்சலாகவும் விமர்சித்தார்.

    கார்ல் வெதர்ஸின் விமர்சனங்களை நேர்மறையாக எடுத்து கொண்ட சில்வெஸ்டர் ஸ்டாலோன், கார்ல் வெதர்ஸ்தான் "அப்போல்லோ க்ரீட்" கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என அவரை தேர்ந்தெடுத்தார். அப்படத்தில் இருவருக்குமான குத்து சண்டை காட்சிகளில் சில இடங்களில், ஒருவரையொருவர் நிஜமாக தாக்கி கொள்ள நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.


    இதை தொடர்ந்து ராக்கி-2, ராக்கி-3 மற்றும் ராக்கி-4 என 4 பாகங்களிலும் கார்ல் வெதர்ஸ், ஸ்டாலோனுடன் நடித்து புகழ் பெற்றார்.

    மேலும், 1987ல் வெளியான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் கதாநாயகனாக நடித்த ப்ரிடேட்டர் (Predator) திரைப்படத்தில் அர்னால்டுக்கு இணையான கதாபாத்திரத்திலும் நடித்து புகழ் பெற்றார்.


    கார்ல் வெதர்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில், தனது 76-வது வயதில் பிப்ரவரி 1 அன்று கார்ல் வெதர்ஸ் காலமானார்.

    "பிப்ரவரி 1 அன்று உறக்கத்திலேயே கார்ல் வெதர்ஸின் உயிர் பிரிந்தது. அவர் ஒரு நல்ல குடும்ப தலைவனாக வாழ்ந்தார். விளையாட்டிலும், கலைத்துறையிலும் தனி முத்திரையை பதித்ததை தாண்டி ஒரு மிகச் சிறந்த மனிதராக திகழ்ந்தார்" என கார்ல் வெதர்ஸின் குடும்பம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்டாலோன் உட்பட பல ஹாலிவுட் பிரபலங்கள் கார்ல் வெதர்ஸ் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்து சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • மியூனிச் சுங்க துறை அர்னால்டிற்கு அபராதம் விதித்தது
    • ஆஸ்திரியாவின் ஸ்டான்கில்வர்ட் ரிசார்ட்டில் ஏலம் நடைபெற்றது

    இந்தியா உட்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஹாலிவுட்டின் முன்னாள் ஹீரோ, 76 வயதான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (Arnold Schwarzenegger). கலிபோர்னியா மாநில கவர்னராகவும் இருந்தவர் அர்னால்ட்.

    ஆஸ்திரியாவில், சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தான் பயன்படுத்திய பொருட்களை ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் தொகையை மாசுபாடுக்கு எதிரான முயற்சிகளுக்கு நன்கொடையாக அளிக்க சென்றார், அர்னால்ட்.

    பயணத்தின் போது, தென் கிழக்கு ஜெர்மனியின் மியூனிச் (Munich) நகர விமான நிலையத்தில் அவரது உடைமைகளில், உடைமை பட்டியலில் குறிப்பிடாத விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்று இருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    ஆடிமார்ஸ் பிக்கெட் (Audemars Piguet) எனும் சுவிட்சர்லாந்து நாட்டின் உயர்ரக கைக்கடிகார நிறுவனத்தால் அர்னால்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அந்த கைக்கடிகாரம், சுமார் ரூ.23 லட்சம் (26,000 யூரோ) மதிப்புடையது.

    ஏலத்திற்கு கொண்டு செல்வதாக அர்னால்ட் கூறிய விளக்கங்களை ஏற்று கொள்ள மறுத்த சுங்க அதிகாரிகள், அவருக்கு 35,000 யூரோ அபராதம் விதித்தனர்.

    அபராதத்தை செலுத்திய பிறகு அர்னால்ட் பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டார்.

    தொடர்ந்து, ஆஸ்திரியாவில் ஸ்டான்கில்வர்ட் ரிசார்ட் (Stanglwirt Resort) எனும் புகழ் பெற்ற தங்கும் விடுதியில் ஏலம் நடைபெற்றது.

    அர்னால்டின் கைக்கடிகாரம் சுமார் ரூ.2 கோடி 45 லட்சம் (2,70,000 யூரோ) தொகைக்கு ஏலம் போனது.

    அங்கு நடந்த இரவு விருந்தில் கலந்து கொண்டு பேசிய அர்னால்ட், "உலகளவில் மாசுபாடு குறித்து நடைபெறும் போராட்டங்களால் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை நான் பார்க்கிறேன். நாம் இந்த விஷயத்தில் நீண்ட தூரம் வந்து விட்டோம். தற்போது இப்பிரச்சனைக்கு தீர்வு காண பலர் முன் வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மாசுபாட்டிற்கு எதிரான் என் போராட்டத்தில் இணைந்த அனைவருக்கும் என் நன்றி" என தெரிவித்தார்.

    இந்த ஏல நிகழ்ச்சியில் மொத்தம் 1.31 மில்லியன் யூரோ வசூலானது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொழில்முறை பாடிபில்டரான அர்னால்ட் திரைத்துறையில் நுழைந்தார்
    • பாதி தொகையை கரன்சியில் செலுத்த, அர்னால்ட் வங்கிக்கு சென்று வந்தார்

    இந்தியா உட்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஹாலிவுட்டின் முன்னாள் கதாநாயகன், 76 வயதான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (Arnold Schwarzenegger).

    ஆஸ்திரியா (Austria) நாட்டில் பிறந்து அமெரிக்காவில் வாழும் அர்னால்ட், கலிபோர்னியா மாநில கவர்னராகவும் பணியாற்றியவர். இவரது பல திரைப்படங்கள் உலகெங்கும் வசூலை வாரி குவித்தன.

    தனது 15 வயது முதல் தொழில்முறை பாடிபில்டராக விளங்க விருப்பம் கொண்ட அர்னால்ட், பல கடுமையான உடற்பயிற்சிகளை செய்து காட்டி இளைஞர்களை ஈர்த்தவர்.

    ஆஸ்திரியாவில் நடைபெற உள்ள ஒரு சுற்றுச்சூழல் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் பயன்படுத்திய பொருட்களை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் தொகையை சுற்றுச்சூழல் மற்றும் பருவகால சிக்கல்களை எதிர்கொள்ள நன்கொடையாக அளிக்க சென்றார், அர்னால்ட்.

    நேற்று, பயண திட்டப்படி லாஸ் ஏஞ்சலஸ் நகரிலிருந்து ஜெர்மனியின் மியூனிச் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கினார்.

    தென் கிழக்கு ஜெர்மனியில் உள்ள முக்கிய நகரம் மியூனிச் (Munich).

    அர்னால்டின் உடைமைகளை பரிசோதித்த சுங்க இலாகா அதிகாரிகள், உடைமைகள் குறித்த பட்டியலில் இல்லாத கைக்கடிகாரம் ஒன்று அவரிடம் இருந்ததை கண்டுபிடித்தனர்.


    ஆடிமார்ஸ் பிக்கெட் (Audemars Piguet) எனும் சுவிட்சர்லாந்து நாட்டின் உயர்ரக கைக்கடிகார நிறுவனத்தால் அர்னால்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அந்த கைக்கடிகாரம் சுமார் ரூ.23 லட்சம் (26,000 யூரோ) மதிப்புடையது.

    "ஐரோப்பாவிற்கு உள்ளே கொண்டு வரப்படும் எந்த வெளிநாட்டு பொருள் குறித்தும் பயணிகள் முதலிலேயே கூற வேண்டும் என்பது விதிமுறை. யாராக இருந்தாலும் இந்த விதிமுறையில் மாற்றம் இல்லை" என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


    ஏலத்திற்கு கொண்டு செல்வதாக அர்னால்ட் கூறிய விளக்கங்களை ஏற்று கொள்ள மறுத்த சுங்கத்துறை அதிகாரிகள், அவருக்கு 35,000 யூரோ அபராதம் விதித்தனர். கிரெடிட் கார்டு மூலம் செலுத்த முன்வந்த அர்னால்டிடம் பாதி தொகையை கட்டாயமாக கரன்சியில் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியதால் அர்னால்ட், வங்கிக்கு சென்று பணம் எடுத்து வந்தார்.

    சுங்க விதிப்படி, வங்கி அதிகாரிகளும் அவருடன் சென்று வந்தனர்.

    அபராதத்தை செலுத்திய பிறகு அர்னால்ட் பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டார்.

    இதனால் மியூனிச் விமான நிலையத்தில் சுமார் 4 மணி நேரம் அவர் பயணம் தடைபட்டது.

    • ஜிம் நண்பர்கள் அர்னால்டை தங்கள் கொண்டாட்டங்களில் இணைத்து கொள்வார்கள்
    • என்னை போல் பலரும் பிறருக்கு உதவிட வேண்டும் என விரும்புகிறேன் என்றார் அர்னால்ட்

    1965ல் ஜோ கோல்ட் (Joe Gold) எனும் தொழில்முறை உடற்பயிற்சியாளர் தொடங்கிய கோல்ட்'ஸ் ஜிம் (Gold's Gym) தொடர் உடற்பயிற்சி கூடம் அமெரிக்கா முழுவதும் பிரபலமானது.

    இங்கு உடற்பயிற்சி பயின்றவர்களில் முன்னாள் கலிபோர்னியா கவர்னரும், ஹாலிவுட் முன்னணி ஹீரோவுமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (Arnold Schwarzenegger) ஒருவர்.

    ஆஸ்திரியா நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த அர்னால்ட், ஹீரோவாக பிரபலமடையும் முன்பு போதுமான வருவாய் இல்லாமல் இருந்த போது கோல்ட்'ஸ் ஜிம் நண்பர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது தங்களின் கொண்டாட்டத்தில் அர்னால்டையும் இணைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.

    இதை மறக்காத அர்னால்ட் கடந்த 30 வருடங்களாக அமெரிக்காவின் கலிபோர்னியா (California) மாநிலத்தில் லாஸ் ஏஞ்சலஸ் (Los Angeles) நகருக்கு அருகே உள்ள பாயில் ஹைட்ஸ் (Boyle Heights) பகுதியில் ஹாலென்பெக் யூத் சென்டர் (Hollenbeck Youth Center) எனும் சமூக நல கூடத்தில் ஆண்டுதோறும் ஏழை எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


    தனது செயல் குறித்து அவர் தெரிவித்ததாவது:

    நான் அமெரிக்கா வந்த போது ஜிம் நண்பர்கள் என்னிடம் கனிவுடன் நடந்து கொண்டனர். எனக்கு பல பரிசுகளை அளித்தார்கள். அயல்நாட்டை சேர்ந்தவனாக கருதாமல் என்னையும் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நடத்தினர். அழகான கிறிஸ்துமஸ் மரம் செய்து வைத்திருப்பார்கள். அந்த நினைவுகள் மிக இனிமையானவை. அந்த மகிழ்ச்சியை நான் பலருக்கும் மீண்டும் வழங்க நினைக்கிறேன். அதனால்தான் 30 வருடங்களுக்கும் மேலாக இந்த செயலை தவறாமல் கடைபிடிக்கிறேன். எனக்கு இது மிகுந்த மனநிறைவை தருகிறது. இதன் மூலம் பலரும் இதே போன்று பிறருக்கு உதவிட வேண்டும் என விரும்புகிறேன்.

    இவ்வாறு அர்னால்ட் கூறினார்.

    பணம், புகழ், பதவி மற்றும் உலகெங்கும் ரசிகர்கள் என அனைத்தையும் பெற முடிந்த நிலையிலும் தான் கடந்து வந்த பாதையை மறக்காமல் 30 வருடங்களுக்கும் மேலாக ஒரு நற்செயலை தொடர்ந்து செய்து வரும் அர்னால்டின் உதவும் மனப்பான்மை சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டப்படுகிறது.

    • தனக்கென ஒரு பாணியை வகுத்து முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக ப்ரூஸ் திகழ்ந்தார்
    • ஒவ்வொரு நொடியையும் அவருடன் செலவிடுகிறோம் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

    1990களில் முன்னணி ஹாலிவுட் கதாநாயகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ப்ரூஸ் வில்லிஸ் (Bruce Willis).

    வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, அவற்றில் தனி முத்திரையுடன் நடித்து, பிற முன்னணி ஹாலிவுட் கதாநாயகர்களான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், சில்வெஸ்டர் ஸ்டாலோன், ஜாக்கி சான் உள்ளிட்ட நடிகர்களின் திரைப்படங்களுக்கு இணையாக தனது திரைப்படங்களையும் வசூலை குவிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப்படங்களாக அமைத்து கொண்டார்.

    தற்போது 68 வயதாகும் ப்ரூஸ் வில்லிஸிற்கு எம்மா ஹெமிங் எனும் மனைவியும் மேபல் மற்றும் எவ்லின் என இரு மகள்களும் உள்ளனர்.

    துரதிர்ஷ்டவசமாக, கடந்த பிப்ரவரி மாதம் "ஃப்ரன்டோ டெம்போரல் டிமென்சியா" (FTD) எனப்படும் மருத்துவ தீர்வு இல்லாத மூளை நோயினால் ப்ரூஸ் பாதிக்கப்பட்டார் என அவரது குடும்ப உறுப்பினர்கள் அறிவித்தனர்.

    இத்தகவல், உலகெங்கும் உள்ள ப்ரூஸ் வில்லிஸின் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    "சில வருடங்களாகவே ப்ரூஸ் வாழ்வில் நல்ல நாட்களும், கெட்ட நாட்களும் அதிகம் இருந்தாலும், 2 மாதங்களாக அவருக்கு கெட்ட நாட்களையே அதிகம் அனுபவிக்கும்படி உள்ளது. இது எங்கள் மொத்த குடும்பத்தையும் ஒன்றாக இணைத்துள்ளது. அவர் வாழ்வில் இன்னும் எத்தனை நாட்கள் மீதமுள்ளது என தெரியவில்லை. எனவே, கிடைக்கும் ஒவ்வொரு நொடியையும் அவருடன் இருந்து முழுவதுமாக உணர்ந்து செலவிடுகிறோம்" என ப்ரூஸின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


    மூளை திசுக்களை தாக்கும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் அன்பு, ஆதரவு, அரவணைப்பு மிக முக்கியம் என்றும் அது நோயின் தீவிரத்தன்மையை கட்டுக்குள் கொண்டு வரும் என்றும் நரம்பியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதற்கிடையே, "ஜான் மெக்லேன்" எனும் நியூயார்க் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் ப்ரூஸ் வில்லிஸ் கதாநாயகனாக நடித்து 1988ல் வெளிவந்த டை ஹார்டு (Die Hard) திரைப்படம் 45 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அமெரிக்காவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை அள்ளி குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • அர்னால்ட் தினசரி உடற்பயிற்சி செய்வதில் சமரசம் செய்து கொள்ளாதவர்
    • ஓய்வு எடுக்க தொடங்கினால் துரு பிடித்து விடுவோம் என்றார் அர்னால்ட்

    இந்தியா உட்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஹாலிவுட் முன்னாள் கதாநாயகன், 76 வயதான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (Arnold Schwarzenegger).

    ஆஸ்திரியா (Austria) நாட்டில் பிறந்து அமெரிக்காவில் வாழும் அர்னால்ட், கலிபோர்னியா மாநில கவர்னராகவும் பணியாற்றியவர். இவரது பல திரைப்படங்கள் உலகெங்கும் வசூலை வாரி குவித்தன. இன்றும் அவரை பல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    தனது 15 வயது முதல் தொழில்முறை பாடிபில்டராக விளங்க விருப்பம் கொண்ட அர்னால்ட், பல கடுமையான உடற்பயிற்சிகளை செய்து காட்டி இளைஞர்களை ஈர்த்தவர். இன்றளவும் பல நட்சத்திர பாடிபில்டர்களுக்கு கனவு நாயகனாக திகழும் அர்னால்ட், உடற்பயிற்சி குறித்த பல ஆர்வலர்களின் சந்தேகங்களுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் எடை பயிற்சியில் மிக முக்கியமான 3 பயிற்சிகளாக கருதப்படும் ஸ்க்வாட் (squat), டெட் லிஃப்ட் (dead lift) மற்றும் பெஞ்ச் பிரஸ் (bench press) ஆகியவற்றில் தனது எடை சாதனைகளை குறித்து தெரிவித்தார்.






    "பெஞ்ச் பிரஸ் பயிற்சியில் எனது அதிகபட்ச எடை 238 கிலோகிராம். எனது சிறப்பான டெட் வெய்ட் 322 கிலோகிராம்களை எட்டியது. எனது அதிகபட்ச ஸ்க்வாட் எடை 276 கிலோகிராம்கள். என்னுடைய காலகட்டத்தில் இவை ஒரு சாதனையாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் இவை வழக்கமாக உலகம் முழுவதும் பலரால் பயிற்சி செய்யக்கூடிய எடையாக மாறி விட்டது. அது ஒரு காலம். ஆனாலும், தினசரி ஜிம்முக்கு செல்வதை நான் நிறுத்தியதில்லை; அதில் எந்த சமரசமும் செய்து கொண்டதில்லை. ஓய்வு எடுக்க தொடங்கினால், துரு பிடித்து விடுவோம்" என ஏழு முறை மிஸ்டர் ஒலிம்பியா (Mr. Olympia) போட்டிகளை வென்றவரான அர்னால்ட் கூறினார்.

    தவறாத கட்டுப்பாட்டின் காரணமாக அர்னால்ட் மேற்கொண்ட ஒழுங்குமுறையான உடற்பயிற்சிகளால் கட்டுக்கோப்பான உடலமைப்பை கொண்டுள்ளதால் இன்றளவும் பாடிபில்டர்களின் முன்மாதிரியாக விளங்கி வருகிறார்.

    ×