search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rocky film series"

    • கார்ல் வெதர்ஸ் ஒரு தொழில்முறை கால்பந்து வீரராக திகழ்ந்தவர்
    • ஸ்டாலோன் மற்றும் ஸ்வார்ஸ்னேக்கர் ஆகியோருடன் இணையாக நடித்தவர்

    1976ல் ஹாலிவுட்டின் ஹீரோ சில்வெஸ்டர் ஸ்டாலோன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம், ராக்கி (Rocky).

    ஸ்டாலோனை புகழேணியின் உச்சாணிக் கொம்பில் நிறுத்திய இத்திரைப்படத்தில், அப்போல்லோ க்ரீட் எனும் பிரபல ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரரை, ராக்கி பல்போவா எனும் உள்ளூர் வீரர் போட்டியிட்டு வெல்வார். இதில் ராக்கி பல்போவா கதாபாத்திரத்தில் சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்திருந்தார்.

    அப்போல்லோ க்ரீட் கதாபாத்திரத்தில் கார்ல் வெதர்ஸ் (Carl Weathers) எனும் அமெரிக்க தொழில்முறை கால்பந்து வீரர் சிறப்பாக நடித்திருந்தார்.

    ராக்கி திரைப்பட நடிகர்களுக்கான தேர்வின் போது (audition), கார்ல் வெதர்ஸ், அங்கு உடன் நடித்த ஸ்டாலோனின் நடிப்பில் உள்ள குறைகளை வெளிப்படையாகவும், துணிச்சலாகவும் விமர்சித்தார்.

    கார்ல் வெதர்ஸின் விமர்சனங்களை நேர்மறையாக எடுத்து கொண்ட சில்வெஸ்டர் ஸ்டாலோன், கார்ல் வெதர்ஸ்தான் "அப்போல்லோ க்ரீட்" கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என அவரை தேர்ந்தெடுத்தார். அப்படத்தில் இருவருக்குமான குத்து சண்டை காட்சிகளில் சில இடங்களில், ஒருவரையொருவர் நிஜமாக தாக்கி கொள்ள நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.


    இதை தொடர்ந்து ராக்கி-2, ராக்கி-3 மற்றும் ராக்கி-4 என 4 பாகங்களிலும் கார்ல் வெதர்ஸ், ஸ்டாலோனுடன் நடித்து புகழ் பெற்றார்.

    மேலும், 1987ல் வெளியான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் கதாநாயகனாக நடித்த ப்ரிடேட்டர் (Predator) திரைப்படத்தில் அர்னால்டுக்கு இணையான கதாபாத்திரத்திலும் நடித்து புகழ் பெற்றார்.


    கார்ல் வெதர்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில், தனது 76-வது வயதில் பிப்ரவரி 1 அன்று கார்ல் வெதர்ஸ் காலமானார்.

    "பிப்ரவரி 1 அன்று உறக்கத்திலேயே கார்ல் வெதர்ஸின் உயிர் பிரிந்தது. அவர் ஒரு நல்ல குடும்ப தலைவனாக வாழ்ந்தார். விளையாட்டிலும், கலைத்துறையிலும் தனி முத்திரையை பதித்ததை தாண்டி ஒரு மிகச் சிறந்த மனிதராக திகழ்ந்தார்" என கார்ல் வெதர்ஸின் குடும்பம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்டாலோன் உட்பட பல ஹாலிவுட் பிரபலங்கள் கார்ல் வெதர்ஸ் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்து சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ×