search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "womens entitlement amount"

    • கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொகையை பயனாளிகளிடம் இருந்து வங்கிகள் பிடித்தம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
    • முதலமைச்சரின் உதவி மைய தொலைபேசி எண் 1100-ஐ அழைத்து புகார் அளிக்கலாம்.

    சென்னை:

    தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை ரூ.1000 வீதம் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொகையை பயனாளிகளிடம் இருந்து வங்கிகள் பிடித்தம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

    இந்த தொகையை பிடித்தம் செய்யக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தியும், அதனை சில வங்கிகள் பின்பற்றாதது ஏற்கத்தக்கது அல்ல.

    இதுகுறித்து முதலமைச்சரின் உதவி மைய தொலைபேசி எண் 1100-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இப்புகார்கள் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கடனை திருப்பி கேட்டு வங்கி அலுவலர்கள் அலுத்துப் போய் இருந்தார்கள்.
    • வருடம் ரூ.12 ஆயிரம் கிடைத்து விடும். வராக்கடனில் ஓரளவு வசூலாகி விடும் என்று மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை ரூ.1000 வீதம் வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தால் பெண்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்களோ அதைவிட அதிகமாக வங்கிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

    சிறு சிறு கடன்கள் வாங்கியது, நகை கடன்களுக்கு வட்டி கட்டாமல் இருப்பது, விவசாய கடன், கல்வி கடன், வாகன கடன் என்று பல வகையான கடன் பெற்றிருப்பார்கள். அவர்களில் பலர் கடன்களை திருப்பி செலுத்தாமல் இருக்கிறார்கள்.

    கடனை திருப்பி கேட்டு வங்கி அலுவலர்கள் அலுத்துப் போய் இருந்தார்கள்.

    இப்போது அந்த மாதிரி பட்டவர்களின் வங்கி கணக்கில் மாதம் ரூ.1000 வந்து விழுவதை அறிந்ததும் வங்கி மேலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

    நிலுவை வைத்திருப்பவர்களின் கடன்களில் பிடித்தம் செய்யும்படி கூறி இருக்கிறார்கள். வருடம் ரூ.12 ஆயிரம் கிடைத்து விடும். வராக்கடனில் ஓரளவு வசூலாகி விடும் என்று மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

    அதே போல் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாமல் இருந்த கணக்குகளிலும் பிடித்து கொள்கிறார்கள். இதனால் பலர் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று ஏமாந்து போனார்கள்.

    கடன் நிலுவை இருந்தால் கண்டிப்பாக அதில்தான் கழிப்போம் என்று வங்கி அதிகாரிகள் உறுதியாக கூறிவிட்டனர்.

    • கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து பணம் கிடைக்காத தகுதி உடையவர்களுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
    • விண்ணப்பம் நிராகரிப்பு குறித்த எஸ்.எம்.எஸ். வந்தவுடன் தங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையத்திற்கு சென்று மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பெண்கள் முதல் கட்டமாக பயன் அடைந்துள்ளனர்.

    இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்த சிறிது நேரத்தில் அவரவர் வங்கி கணக்கிற்கு பணம் சென்றதால் குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அதே நேரத்தில் 55 லட்சம் பெண்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. என்ன காரணத்திற்காக அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. தகுதி இருந்தும் சிலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருப்பின் அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் வருகிற 19-ந்தேதி இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்து உள்ளது.

    இது குறித்து இத்திட்டத்தின் செயலாக்க அதிகாரி இளம்பகவத் கூறியதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து பணம் கிடைக்காத தகுதி உடையவர்களுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. விண்ணப்பம் நிராகரிப்பு குறித்த எஸ்.எம்.எஸ். வந்தவுடன் தங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையத்திற்கு சென்று மீண்டும் விண்ணப்பிக்கலாம். அதனை அதிகாரிகள் கள ஆய்வு செய்து இத்திட்டத்தில் சேர்ப்பார்கள்.

    இது தவிர தகுதி இருந்தும் முகாம்களில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிப்பது குறித்து அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும். மேலும் மகளிர் உரிமை தொகை பயனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும். அனைவருக்கும் படிப்படியாக இவை வழங்கப்படும். ஏற்கனவே வங்கி ஏ.டி.எம். கார்டு வைத்திருப்பவர்களுக்கும் கூடுதலாக இந்த கார்டு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன்.
    • அனைத்து அரசுத்துறை அலுவலர்களையும் இத்திட்ட நிகழ்வின் வெற்றியில் பாராட்டி மகிழ்கிறேன்!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன்.

    இத்திட்டத்தில் களப்பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், நியாய விலைக்கடைப் பணியாளர்கள், நகராட்சி-மாநகராட்சிப் பணியாளர்கள், பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்களையும் இத்திட்ட நிகழ்வின் வெற்றியில் பாராட்டி மகிழ்கிறேன்!

    களப்பணியாளர்களை வழிநடத்திய மாவட்ட ஆட்சியர்கள், அரசு செயலாளர்கள், தலைமைச் செயலாளர்கள் வரை உள்ள அனைத்து உயர் அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • மகளிர் யாருமே ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கேட்கவில்லை.
    • கலைஞர் உரிமை திட்டம் என்கிறீர்களே? இது என்ன கலைஞர் பணமா?

    சென்னை:

    சென்னை அயனாவரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்திற்கு பிறகு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்தை சாதனையான திட்டம் என்றோ? மக்களுக்கான சேவை என்றோ? கூற முடியாது. ½ நூற்றாண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி 2 திராவிட கட்சிகளும் தான் ஆட்சி செய்கிறது. மிகவும் அற்பமான, சொற்பத்தொகையான ஆயிரம் ரூபாய்க்கு கூட மக்களை கையேந்தும் வகையில்தான் இந்த ஆட்சியாளர்கள் வைத்திருக்கிறார்கள்.

    ரூ.10 ஆயிரம் கோடி, ரூ.12 ஆயிரம் கோடி எதற்காக செலவு செய்கிறார்கள்? மகளிர் யாருமே ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கேட்கவில்லை. சாலையை சரியாக கொடுங்கள். தூய குடிநீரை கொடுங்கள் என்றுதான் கேட்கிறார்கள். இதுதான் வளர்ச்சியா? ஆயிரம் ரூபாய்க்கு கையேந்தும் மக்கள் நாளை 5 ஆயிரம் ரூபாய்க்கு கையேந்துவார்களா? என் மக்களை இத்தனை ஆண்டுகளாக இலவசத்துக்கு கையேந்துபவர்களாக, பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கிறீர்களே தவிர வளர்ச்சி அடைய வைக்கவில்லை.

    இந்த ஆயிரம் ரூபாயை பெறுகிற பெண்கள் என்ன வளர்ச்சியை கண்டுவிடுவார்கள். மின்கட்டணம் என்ன விலைக்கு உயர்ந்துள்ளது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை என்ன? அரிசி, பருப்பு, பால், நெய் விலை எவ்வளவு? இந்த ஆயிரம் ரூபாய் திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி செலவாகிறது என்றால் இந்த பணம் யாரிடமிருந்து எடுத்தீர்கள்? கலைஞர் உரிமை திட்டம் என்கிறீர்களே? இது என்ன கலைஞர் பணமா? இதற்கு முதலமைச்சர் பதில் சொல்வாரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பணம் கிடைத்த மகிழ்ச்சியில் பெண்கள் குதூகலம் அடைந்தனர்.
    • தி.மு.க.வினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வீடு வீடாக துண்டு பிரசுரம் வினியோகித்தனர்.

    சென்னை:

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னபடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் இன்று செயல்படுத்தப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் சென்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை துவக்கி வைக்கும்போது 1 கோடியே 6½ லட்சம் குடும்பத்தலைவிகள் வங்கிக்கணக்கிலும் ரூ.1000 பணம் வரவு வைக்கும் விதமாக நேற்றே அவரவர் கணக்கிற்கு பணம் சென்றடைந்தது.

    இதனால் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் பெண்கள் குதூகலம் அடைந்தனர். பல வீடுகளில் இன்று காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கோலம் போட்டிருந்தனர்.

    தி.மு.க.வினர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வீடு வீடாக துண்டு பிரசுரம் வினியோகித்தனர். அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    சென்னையில் வீதிக்கு வீதி நின்று அனைவருக்கும் லட்டு வழங்கினார்கள். பஸ் பயணிகள் ஆட்டோ பயணிகளுக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.

    • பெண்களை அடிமையாக நினைக்கின்ற நடத்துகின்ற காலம் ஒன்று இருந்தது. கீழ் வகுப்பைச் சேர்ந்தவர்களும், பெண்களும் இழிவானவர்கள்”
    • 8 வயதில், 10 வயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இவையெல்லாம் இன்றைக்கு மாறி இருக்கிறது.

    காஞ்சிபுரம்:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரம் விழாவில் பேசியதாவது:

    சமீபத்தில் ஒரு வீடியோவை பார்த்தேன். அதில் ஒரு நிருபர், மக்களிடம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1000 ரூபாய் கொடுக்கப்பட்ட பிறகு என்ன செய்வீர்கள், என்று கேட்கிறார்.

    "காசு இல்லாததால் மருந்து மாத்திரை சாப்பிடுறதில்ல.. இனி மாத்திரை வாங்குவேன்" என்று ஒரு பாட்டி சொல்கிறார்கள்.

    இன்னொரு பெண்மணி சொன்னார்கள், என்ன சொன்னார்கள் என்றால், "தினமும் ஒருவேளைதான் சாப்பிடுகிறேன்.. இந்த ஆயிரம் ரூபாய் கிடைச்சா... காலையில ரெண்டு இட்லி சாப்பிடுவேன்" என்று சொன்னார்கள்.

    இந்த இரண்டு பதிலும் எனக்கு நெகிழ்ச்சியை தந்தாலும், காலத்திற்கும் எண்ணி நான் பெருமைப்படுகிற மாதிரியான ஒரு பதிலை, நாம் எந்த நோக்கத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோமோ அதை ஒரு வரியில் சொல்கின்ற மாதிரி இன்னொரு பெண்மணி ஒன்று சொன்னார்…

    "சுருக்கு பையில் பணம் இருந்தது என்றால் நிமிர்ந்து நடந்து போவேன்" என்று அவர் சொன்னார். அதாவது, "சுருக்கு பையில் பணம் இருந்தது என்றால் நிமிர்ந்து நடப்பேன்" என்று அவர் சொன்னார். இதைவிட இந்தத் திட்டத்திற்கும், எனக்கும் வேறு என்ன பெருமை வேண்டும்?

    இந்த ஆயிரம் ரூபாய் உங்கள் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கப் போகின்றது. நாள்தோறும் உதிக்கும் உதயசூரியன் போல உங்களுடைய இந்த உதயசூரியன் ஆட்சியும் உங்களுக்கு புத்துணர்ச்சியை வழங்க இந்த ஆயிரம் ரூபாய் பயன்படப்போகின்றது. இது தி.மு.க.வுடைய தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதி! மிகவும் முக்கியமான வாக்குறுதி!

    "இது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி, பொய்யான வாக்குறுதியை கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டார்கள். இவர்களால் தர முடியாது" என்று பொய் பரப்புரையை தங்களுடைய உயிர் மூச்சாக வைத்து வாழுகின்ற சிலர் சொன்னார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்திருப்போம். ஆனால் நிதி நிலைமை சரியாக இல்லை. அதுனால்தான், நிதி நிலைமையை ஓரளவுக்கு சரி செய்துவிட்டு இப்போது கொடுக்கின்றோம். இதையும் சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! பொய்களையும், வதந்திகளையும் கிளப்பி இந்த திட்டத்தை முடக்க நினைத்தார்கள். அறிவித்துவிட்டால், எதையும் நிறைவேற்றிக் காட்டுவான் இந்த ஸ்டாலின் என்று தமிழ்நாட்டு மக்களான உங்களுக்கு நன்றாக தெரியும். சொன்னதைச் செய்வான் கலைஞரின் மகன் என்பதற்கு இதுதான் சாட்சி. இந்த விழா காஞ்சிபுரத்தில் மட்டுமல்ல-தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய மாவட்டங்களில், நகரங்களில் நடந்துகொண்டு இருக்கிறது.

    நான் போட்ட ஒரு கையெழுத்து, பலரது வாழ்க்கையை மாற்ற போகிறது என்ற அந்த உரிமையை எனக்குக் கொடுத்தவர்களே நீங்கள்தான்!

    மக்கள் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்துகிறேன். மக்களுக்காகதான் பயன்படுத்துவேன். இந்த இரண்டு திட்டங்கள், நான் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இந்தத் திட்டம், இரண்டு நோக்கங்களைக் கொண்ட திட்டம். ஒன்று, பலனை எதிர்பாராமல் வாழ்நாளெல்லாம் உழைக்கக்கூடிய பெண்களுடைய உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம்!

    இரண்டாவது நோக்கம், ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை கிடைக்கப் போகின்றது. இது பெண்களுடைய வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் பெண்கள் வாழ உறுதுணையாக இருக்கும்.

    உழவுக் கருவிகளை கண்டுபிடித்து, வேளாண் சமூகமாக மாறினால்கூட பெண்களுடைய உழைப்பு ஆண்களுக்கு நிகராகவே இருந்தது. ஆனால் காலப்போக்கில், மதத்தின் பெயராலும், பழமையான மரபுகளின் பெயராலும், பல்வேறு ஆதிக்க வர்க்கங்களாலும், பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டார்கள்.

    பெண்களுக்கு கல்வியறிவு மறுக்கப்பட்டது. பெண்குலத்தினுடைய உழைப்பு நிராகரிக்கப்பட்டது. பெண்களை அடிமையாக நினைக்கின்ற நடத்துகின்ற காலம் ஒன்று இருந்தது. கீழ் வகுப்பைச் சேர்ந்தவர்களும், பெண்களும் இழிவானவர்கள்" என்றெல்லாம்கூட எழுதி வைத்திருந்தார்கள்.

    இன்றைக்கு மானமும், அறிவும் உள்ள யாரும் அந்த மாதிரி பேசுவதில்லை. பெண் உடல்ரீதியாக எதிர்கொள்ளுகின்ற இயற்கை சுழற்சியைகூட தீட்டு என்று சொல்லி வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்தார்கள். ஓரமாக ஒதுக்கி வைத்தார்கள். படிக்கக் கூடாது-வேலைக்கு போகக்கூடாது-வீட்டுப்படியை தாண்டக்கூடாது அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு? என்று பழமைவாத சிந்தனைகளை வைத்து பெரும்பான்மை பெண்ணினத்தை முடக்கி வைத்தார்கள். இது அடித்தட்டு வகுப்பைச் சேர்ந்த பெண்கள் மட்டுமில்லை, உயர் வகுப்பைச் சேர்ந்த பெண்களும் அனுபவித்த துன்பம்!

    8 வயதில், 10 வயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இவையெல்லாம் இன்றைக்கு மாறி இருக்கிறது. ஆனாலும், குழந்தைத் திருமணங்களை ஆதரித்து பேசுகின்ற பிற்போக்குவாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு திராவிட இயக்கத்தின் மேல் வெறுப்பு, தீராத கோபம்... ஏனென்றால்..? சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது. அப்படி செய்தால், அது சட்டபடி குற்றம். கைம்பெண் விரும்பினால் மறுமணம் செய்து கொள்ளலாம். மறுமணம் செய்து கொள்ளக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது.

    பெண் குழந்தைகள் அனைவரும் படிக்க பள்ளி-கல்லூரிக்கு வந்து விட்டார்கள். இனி, உனக்கு படிப்பு எதுக்கு என்று சொல்ல முடியாது. நீ வேலைக்கு போகக்கூடாது என்று யாரும் தடுக்க முடியாது. இந்தச் சமூக சீர்திருத்த காலத்தை உருவாக்கியதுதான் திராவிட இயக்கம்!

    இன்றைக்கு பள்ளிகளில், கல்லூரிகளில் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாக படிக்கிறார்கள். அதுவும் நன்றாக படிக்கிறார்கள். அனைத்து வேலைகளுக்கும் பெண்கள் வந்துவிட்டார்கள். இந்த பாலினச் சமத்துவத்தை கொண்டு வந்து பெண்ணும், ஆணும் சரிநிகர் என்று உயர்த்தியதுதான் நம்முடைய திராவிட மாடல்!

    இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தந்தை பெரியார் சொன்ன மாதிரி, ஆணை விடவும் உயர்ந்தவர்களாக பெண்களை உயர்த்துவதுதான் திராவிட மாடல்!

    "எங்கள் அம்மா இல்லை என்றால் நான் இல்லை" என்று எத்தனையோ சாதனை மாணவிகள் பேட்டி தருவதை பார்த்திருக்கின்றோம்.

    ஒரு ஆணினுடைய வெற்றிக்காகவும், தங்கள் குழந்தைகளுடைய கல்வி, உடல்நலம் காக்கவும், ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் பெண்கள் உழைத்திருப்பார்கள்? அதற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டு கொடுத்தால் எவ்வளவு கொடுப்பது? ஆனால் 'ஹவுஸ் ஒய்ஃப்' என்று சிலர் சாதாரணமாக சொல்லிவிடுவார்கள்.

    'உங்கள் மனைவி வேலைக்கு போகிறார்களா?' என்று கேட்டால், "இல்லை" என்று மட்டும் சொல்லாமல் "வீட்டில் சும்மாதான் இருக்கிறார்கள்" என்று சிலர் சொல்வார்கள். வீட்டில் சும்மாவா நீங்கள் இருக்கிறீர்கள்? வீட்டில் பெண்களால் சும்மா இருக்க முடியுமா? வீட்டில் பார்க்கின்ற வேலைகளை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் மகளிருக்கான உரிமையை கொடுக்கவேண்டும், அவர்கள் உழைப்பை அங்கீகரிக்க வேண்டும் என்று உருவாக்கிய திட்டம்தான் இந்தக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.

    தாயின் கருணை! மனைவியின் உறுதுணை! மகளின் பேரன்பு! இவையெல்லாம் ஒருவருக்கு கிடைத்துவிட்டால், அதைவிட வேறு செல்வம் தேவையில்லை! உண்மையில், உலகை வழி நடத்துவது தாய்மையும், பெண்மையும் தான்! என்னுடைய தாய் தயாளு அம்மையார், கருணையே வடிவானவர்கள். சிறிய வயதில் நான் ஏதாவது நிகழ்ச்சி நடத்தினால் அன்னைக்கு மழை வரக் கூடாது என்று வேண்டிக் கொள்வார்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.
    • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தேர்வான அனைத்து மகளிருக்கும் ரூ.1000 சென்றடைந்தது.

    சென்னை :

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அண்ணா பிறந்தநாளான இன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்கள்.

    தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளின் வங்கிக்கணக்குகளுக்கு ஏற்கனவே ரூ.1 அனுப்பி சோதனை செய்யப்பட்ட நிலையில், நேற்று முதலே பலரது வங்கிக்கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது.

    இந்நிலையில், இனிமேல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் 15-ந்தேதி வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தேர்வான அனைத்து மகளிருக்கும் ரூ.1000 சென்றடைந்தது. வங்கிகளில் 1-ந்தேதி சம்பளம் உள்ளிட்ட பரிவர்த்தனை நடப்பதால் தொழில்நுட்ப சிக்கல் ஏற்படாத வண்ணம் 15-ந்தேதி வரவு வைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

    • தாய் தமிழ்நாட்டுக்கு 'தமிழ்நாடு' எனறு பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா இனி இந்த பெயரை யாராலும் நீக்க முடியாது.
    • எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் உரிமைத் தொகை பெறுகிறார்களோ, அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள்.

    காஞ்சிபுரம்:

    கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    என்னுடைய அரசியல் பயணத்துக்கு எத்தனையோ உந்துசக்திகள் இருக்கலாம் எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்த மாதிரி இருந்தது. இந்த காஞ்சி மாநகர் ரொம்ப சின்ன வயதில், கோபாலபுரம் வீதியிலே, இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் மூலமாக பொது வாழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.

    அப்போது பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது என்னுடைய வழக்கம். 1971-ம் ஆண்டு அண்ணாவின் கல்லறையிலே மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி அண்ணா சதுக்கத்தில் இருந்து அண்ணா சுடரை கையில் ஏந்தி தொடர் ஓட்டமாக நானும் நண்பர்களும் புறப்பட்டு காஞ்சீபுரம் வந்து கழக மாநாட்டு மேடையில் தலைவர் கலைஞர் கையில் அண்ணா சுடரை நான் ஒப்படைத்தேன்.

    இன்றைக்கு தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் எடுத்து வந்த சுயமரியாதை, சமத்துவம், சமூகநீதி, மாநில சுயாட்சி உள்ளிட்ட தமிழ் சமுதாயத்தை காக்க கூடிய திராவிட சுடரை ஏந்தி வந்துள்ளேன்.

    அவரது கொள்கைகளை ஏற்று வாழ்வதால்தான் தமிழ் சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போகிறேன். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை தொடங்கி வைக்க இங்கு வந்துள்ளேன். இந்த திட்டத்தை நான் தொடங்கி வைப்பது என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பேராக நான் கருதுகிறேன்.

    தாய் தமிழ்நாட்டுக்கு 'தமிழ்நாடு' எனறு பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா இனி இந்த பெயரை யாராலும் நீக்க முடியாது. இந்த பெயர் நீடிக்கும் காலமெல்லாம் இந்த நாட்டை அண்ணா துரை தான் ஆள்கிறான் என்றார்.

    அதே போல் இன்றைக்கு மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்கிறேன். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் உரிமைத் தொகை பெறுகிறார்களோ, அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள்.

    இந்த 2½ ஆண்டில், எத்தனை திட்டங்கள், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி பெற விடியல் பயணத் திட்டம், பசியோடு பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், உயர்கல்வி கற்க வரும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்குகிற புதுமைப் பெண் திட்டம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நான் முதல்வன் திட்டம், இந்த திட்டங்களை தொடங்கிய நாட்களில் எப்படிப்பட்ட மகிழ்ச்சியை நான் அடைந்தேனோ, அதைவிட அதிகமான மகிழ்ச்சியில் இப்போது இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் நேற்றைய தினமே பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு ரூ.1000 வந்து சேர்ந்துள்ளது.
    • கலைஞர் மகளிர் உரிமை தொகை நெருக்கடியான நேரங்களில் உதவியாக இருக்கும்.

    கரூர்:

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

    அதன்படி 2023-24 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அந்த திட்டத்திற்கு ரூ. 7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் சிறப்பு முகாம்கள் நட த்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் பின்னர் தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன.

    தற்போது இந்த திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    அண்ணா பிறந்தநாளான இன்று காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதா னத்தில் உரிமை தொகையை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதாக முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று அந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் நேற்றைய தினமே பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு ரூ.1000 வந்து சேர்ந்துள்ளது.

    திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் பயனாளிகளின் வங்கி கணக்குக்கு நேற்றைய தினமே ரூ.1000 வந்துள்ளது.

    கரூர் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவி மகேஸ்வரி கூறும்போது;-

    எனது கணவர் டீக்கடை மாஸ்டராக உள்ளார். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாய் உள்ளத்துடன் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார்.

    பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    சின்ன சின்ன தேவைகளுக்கு கூட கணவரை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலை இருந்தது. எனது சிறிய தேவைகளை கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை கொண்டு பூர்த்தி செய்வேன். முதலமைச்சருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கரூர் ஆத்தூர் பிரிவு பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசி சுசீலா கூறுகையில், எனது கணவர் சலூன் கடை வைத்துள்ளார்.

    நாங்கள் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். சொந்த வீடு கிடையாது. இரண்டு குழந்தைகள் பள்ளியில் படித்து வருகின்றனர். சில நேரங்களில் வாடகை கொடுப்பதற்கும் பள்ளி செலவினங்களுக்கும் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.

    இனிமேல் கலைஞர் மகளிர் உரிமை தொகை நெருக்கடியான நேரங்களில் உதவியாக இருக்கும். நேற்றைய தினமே எனது வங்கி கணக்கில் பணம் வந்து சேர்ந்து விட்டது. முதலமைச்சருக்கு என்றும் நன்றி கடன் பட்டவர்களாக இருப்போம்.

    திருச்சி தாராநல்லூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தலைவி விஜயலட்சுமி கூறும்போது,

    எனது கணவர் மரக்கடையில் மாதம் ரூ.10,000 சம்பளத்துக்கு வேலை செய்கிறார். வாடகை வீட்டில் இருக்கிறோம். மாத வாடகையாக ரூ. 3000 கொடுக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு மகன் பத்தாம் வகுப்பு, இன்னொரு மகன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள். நான் எந்த வேலைக்கும் செல்லாமல் குழந்தைகளை பராமரித்து வருகிறேன்.

    சில நேரங்களில் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் வாங்குவதற்கு கூட கையில் பணம் இருக்காது.

    கலைஞர் உரிமைத்தொகை என்னை போன்று வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு வரப் பிரசாதமாக இருக்கும்.

    சொந்த காலில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. முதலமைச்சருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

    திருச்சி முத்தரசநல்லூர் கூடலூர் பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசி நதியா கூறுகையில்,

    நேற்று பிற்பகல் 2:30 மணிக்கு எனது வங்கி கணக்குக்கு ரூ. 1000 வந்தது. அதை பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது.

    எனது கணவர் நகைக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். எனக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர்.

    எனது கணவரின் வருமானத்தில் சேமிப்பு என்பது இதுவரை இல்லை. வீட்டு வாடகைக்கும், சாப்பாட்டுக்குமே சரியாக இருக்கும்.

    எனது மகளின் எதிர்கால தேவைக்கு இனிமேல் இந்த கலைஞர் உரிமைத்தொகையை சேமிக்கலாம் என இருக்கிறேன். முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி.

    குளித்தலை தெற்கு மயிலாடி புவனேஸ்வரி கூறும்போது, எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். தினமும் வேலை இருக்காது.

    ஆகவே குடும்ப செலவுகளுக்கு திணறும் விலை ஏற்படும்.

    இந்தநிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு நானும் விண்ணப்பித்திருந்தேன். எனது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் எனது வங்கி கணக்குக்கு ரூபாய் ஆயிரம் அனுப்பியுள்ளார்.

    இது மகிழ்ச்சி அளிக்கிறது பெண்களுக்கு உரிமை தொகை வழங்கிய முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகள்.

    ஏற்கனவே மகளிருக்கு இலவச பேருந்து கட்டணம் வழங்கி வருகிறார். இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் பொருளாதார விடுதலையை பெறுவார்கள்.

    முதலமைச்சருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி உள்ளவர்களாக இருப்போம் என்றார்.

    • பெண்களுக்கான கடன் திட்டங்கள், பயிற்சித் திட்டங்கள், தொழில் முனைவோர் திட்டங்களும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    • பணத்தை எதற்காக சேமிக்கணும்? பணத்தை எங்கே சேமிக்கணும், பணத்தை எப்படி சேமிக்க வேண்டும் என்ற விவரங்களும் அதில் உள்ளது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.1000 வாங்கும் பெண்களுக்கு 70 பக்க கையேடு ஒன்றும் இன்று வழங்கப்பட்டது.

    அதில் தமிழக அரசின் மகளிர் நலத்திட்டங்கள், அரசின் சுழல்நிதி வழங்கும் விவரம், மகளிருக்கான வங்கி கடன், சிறு தொழில் தொடங்கும் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அதில் இடம்பெற்று உள்ளன.

    அதுமட்டுமின்றி இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், விதவை ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதிய திட்டம், முதிர்கன்னி ஓய்வூதிய திட்டம், இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம், வேலையில்லாதவர்களுக்கு வேலை உருவாக்கும் திட்டம், கல்வி உதவித்தொகை திட்டம், திருமண உதவித்திட்டம் உள்ளிட்ட அரசு திட்டங்கள் பற்றிய முழு விவரங்கள் அனைத்தும் அதில் இடம்பெற்றுள்ளன.

    மாணவ-மாணவிகள் உதவித்தொகை, அரசு தரும் உதவித்தொகைகள் உள்ளவைகளும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டங்களும் அதில் விரிவாக இடம் பெற்றுள்ளது.

    பெண்களுக்கான கடன் திட்டங்கள், பயிற்சித் திட்டங்கள், தொழில் முனைவோர் திட்டங்களும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மாதவிடாய் சுகாதார திட்டம், தடுப்பூசி திட்டம், மருத்துவ சேவை திட்டம், நோய்கிருமி தொற்றில் இருந்து பாதுகாத்தல் ஆகிய விவரங்களும் அதில் உள்ளது.

    விடியல் பயணத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், பெண்கள் முன்னேற்றத்துக்கான பயிற்சி திட்டம், நான் முதல்வன் திட்டம் ஆகியவையும் அதில் இடம்பெற்று உள்ளன.

    பணத்தை எதற்காக சேமிக்கணும்? பணத்தை எங்கே சேமிக்கணும், பணத்தை எப்படி சேமிக்க வேண்டும் என்ற விவரங்களும் அதில் உள்ளது.

    வங்கிகள், அஞ்சலகங்களில் என்னென்ன சேமிப்பு திட்டங்கள் உள்ளது ஆகியவையும் அதில் உள்ளது.

    ஏ.டி.எம். அட்டையில் செய்யக்கூடாத விசயங்கள் என குறிப்பிட்டு பின் நம்பர், ஓ.டி.பி. எண்ணை யாருடனும் பகிர வேண்டாம், ஏ.டி.எம்.மில் அன்னியர் உதவியை நாட வேண்டாம், தொலைபேசி அழைப்புகளில் வங்கி விவரங்களை தெரிவிக்க வேண்டாம்.

    கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு போலியான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம் ஆகிய விவரங்களும் அதில் இடம் பெற்று உள்ளது.

    அது மட்டுமின்றி ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் தொலைபேசி எண்கள், மாவட்ட வருவாய் அதிகாரி, ஊரக வளர்ச்சி அதிகாரி, மகளிர் திட்ட இயக்குனர் ஆகியோரின் தொலைபேசி எண்களும் அதில் இடம் பெற்றுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாரத தேசம் முழுவதும் சுமார் 50 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
    • முண்டியடித்துக்கொண்டு வரிசையில் நின்று அரசு மானியங்களை பெற்றதும், கமிஷன் கொடுத்ததும் மறைந்து போனது.

    சென்னை:

    தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் அனைத்து மகளிர்க்கும் எல்லா உரிமையும் கிடைத்தால் மகிழ்ச்சியே....

    தமிழகத்தில் உரிமைத்தொகை பெறும் சகோதரிகள் மகிழ்ச்சி அடைய ஒரு சகோதரனாக தொலை நோக்குப் பார்வையுடன் அன்றே ஜன் தன் வங்கி கணக்கை தொடங்கிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த உரிமைத்தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துவதற்கு முதல் காரணமாக இருந்தவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தான்.

    முதன் முதலில் அனைத்து பெண்களுக்கும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று ஜன் தன் வங்கி கணக்கை தொடங்கி வைத்து அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார்கள்.

    ஜன்தன் வங்கிக்கணக்குகளின் மூலம் ஏழை, எளிய மக்களின் வங்கி கணக்குகளில் மத்திய, மாநில அரசின் மானியங்கள் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படுகிறது. பாரதப் பிரதமருக்கு நம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வோம்.

    பாரத தேசம் முழுவதும் சுமார் 50 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 56 சதவீத பெண்கள் ஜன் தன் வங்கி கணக்குகளை தொடங்கி உள்ளனர்.

    கொரானா தொற்று காலத்தில் ஜன் தன் வங்கி கணக்கு வைத்திருந்த அனைத்து பெண்களுக்கும் மூன்று மாதம் மத்திய அரசு 500 ரூபாய் உதவித்தொகை அளித்தது.

    முண்டியடித்துக்கொண்டு வரிசையில் நின்று அரசு மானியங்களை பெற்றதும், கமிஷன் கொடுத்ததும் மறைந்து போனது. இப்போது எந்தவித சிக்கல்களும் இல்லாமல் நேரடியாக வங்கி கணக்குகளில் பெறுகிறோம். இதுவே டிஜிட்டல் இந்தியா.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    ×