search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaikasi thiruvizha"

    • கருட வாகனத்தில் நவத்திருப்பதி பெருமாள்கள் வீதி உலா வரும் காட்சி நடைபெற்றது.
    • 1-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி அவதார திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடக்கிறது. விழா நாட்களில் தினமும் நம்மாழ்வார் இரவு, காலை நேரங்களில் வீதி உலா வந்து அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    5-ம் திருநாளான நேற்று நவத்திருப்பதி கோவில்களில் உள்ள பெருமாள்கள், ஆழ்வார்திருநகரிக்கு வந்து அருள் பாலித்தனர். இதில் ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர் ஆகிய கோவில்களில் உள்ள உற்சவ பெருமாள்கள் ஆழ்வார் திருநகரி வந்து சேர்ந்தனர். இதையொட்டி காலை 10 மணி அளவில் பெருமாள்களுக்கு நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 9 மணிக்கு கருட வாகனத்தில் நவத்திருப்பதி பெருமாள்கள் வீதி உலா வரும் காட்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிதண்ணீர் வசதி செய்யப்பட்டு இருந்தது. பதநீர், இளநீர், நுங்கு போன்ற குளிர்பான கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    விழாவின் சிகர நாளான 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. விழாவில் திருக்குறுங்குடி ஜீயர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், ஸ்ரீவைகுண்டம் கோவில் தலத்தார் வெங்கடாச்சாரி உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அஜித் மற்றும் திருவிழா உபயதாரர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வசந்த ராஜ் (திருச்செந்தூர்), மாயவன் (ஸ்ரீவைகுண்டம்) மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

    • 31-ந்தேதி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.
    • 2-ந்தேதி தீர்த்தவாரியும், பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் நடக்கிறது.

    பாபநாசம் அருகே உள்ள திருக்கருகாவூர் முல்லைவனநாதர் உடனுறை கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் தினசரி சுவாமி- அம்பாள் காலை மற்றும் இரவு பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது. .

    விழாவில் கடந்த 24-ந்தேதி கொடியேற்றமும், ஆன்மீக சொற்பொழிவும், தொடர்ந்து சுவாமி- அம்பாள் வெள்ளி பல்லக்கில் வீதியுலாவும் நடந்தது. 25-ந்்தேதி காலை வெள்ளி பல்லக்கும், இரவு சூரிய பிரபையில் சுவாமி-அம்பாள் வீதியுலா காட்சியும் நடந்தது.

    நேற்று காலை வெள்ளி பல்லக்கும், இரவு பூத வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதியுலாவும், இரவு மாணவிகள் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. 27-ந்தேதி சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், 28-ந்தேதி ஓலை சப்பரத்தில் சுவாமி வீதியுலாவும், 31-ந்தேதி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், அடுத்தமாதம்(ஜூன்) 1-ந்தேதி கட்டுத்தேர் தேரோட்டமும், 2-ந்தேதி தீர்த்தவாரியும், பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் ஆசைத்தம்பி மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    • 1-ந்தேதி முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 2-ந்தேதி மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இவ்வருடத்திற்கான திருவிழா இன்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு விநாயகர் பூஜை, புண்ணியாகவாஜனம், கொடிப்பட பூஜை நடைபெற்றது.

    இதனைதொடர்ந்து கோவில் கொடிமரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி முருகனை வழிபட்டனர். திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் காலையில் தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருவுலாவும், இரவில் வெள்ளிகாமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி, மயில் மற்றும் தங்கமயில், தங்ககுதிரை, புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. 6-ம் நாள் விழாவாக வருகிற ஜூன் 1-ந்தேதி இரவு 7.15 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும் , அதனைதொடர்ந்து வெள்ளிமயில் வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது.

    7-ம் நாள் விழாவாக ஜூன் 2-ந்தேதி வைகாசி விசாகத்தன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி தோளுக்கிணியாள் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனைதொடர்ந்து காலை 9 மணிக்கு திருத்தேரேற்றமும், மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது. பின்னர் இரவில் பெரியதந்தப்பல்லக்கில் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி தினமும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு சமயசொற்பொழிவு, இன்னிசை, நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் நடராஜன், துணைஆணையர் பிரகாஷ் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • 2-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
    • 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.

    திருவரங்கம் மேலை வீடு எனவும், திருவேங்கடம் வடக்கு வீடு எனவும், திருமாலிருஞ்சோலை தெற்கு வீடு எனவும், திருக்கண்ணபுரம் கீழை வீடு எனவும் போற்றப்படுகிறது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி வருகிற 29-ந் தேதி தங்க கருடசேவையும், 2-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 3-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், கோவில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • தேரோட்டம் 2-ந் தேதி நடக்கிறது.
    • 5-ந் தேதி பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகாசி பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதும், காலை 8.30 மணியளவில் வைகாசி பெருவிழா கொடி ஏற்றப்பட்டது.

    இதையடுத்து இந்திர விமானத்தில் சாமி எழுந்தருளியதும், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சாமி வீதிஉலா நடைபெற்றது.

    தொடர்ந்து கோவிலில் தினசரி சிம்ம வாகனம், பூத வாகனம், நாக வாகனங்களில் சாமி வீதிஉலா நடக்கிறது. வருகிற 29-ந் தேதி தெருவடைச்சான் உற்சவமும், 30-ந் தேதி வெள்ளி ரதம் மற்றும் இந்திர விமானத்தில் வீதிஉலாவும், 31-ந் தேதி பரிவேட்டையும் நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தொடர்ந்து 5-ந் தேதி திருஞானசம்பந்தர் திருக்கல்யாணமும், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.

    • 5-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
    • திருவிழா நாட்களில் 3 வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த வருட வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் கொடியேற்று நிகழ்ச்சியான இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், அதனைத்தொடர்ந்து கொடிபட்டத்துடன் அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவசிவ அரகரா அரகரா என்ற கோஷத்துடன் தலைமைப்பதியை சுற்றிலும் வலம் வந்து 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    திருக்கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைத்தார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜ வேல், பையன் கிருஷ்ணராஜ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள் ஜனா.யுகேந்த், கிருஷ்ண நாமமணி ஆனந்த், ஜனா.வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்திருந்தனர். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்ன தர்மம் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    2-ம் நாள் இரவு அய்யா வைகுண்ட சுவாமி பரங்கி நாற்காலியில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 3-ம் நாள் விழாவில் அய்யா அன்னவாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் அய்யா வலம் வரும் நிகழ்ச்சியும், 5-ம் நாள் பச்சை சாத்தி சப்பர வாகனத்தில் பவனியும், 6-ம் நாள் கற்பக வாகன பவனியும், 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் வாகன பவனியும் நடைபெறுகிறது.

    வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி மாலை 8-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்ட சுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சியும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. 9-ம் திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் இந்திர வாகனத்திலும், அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அடுத்த மாதம் 5-ந்தேதி 11-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், இரவு வாகன பவனியும், அன்னதானமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    திருவிழா நாட்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமைபதி வளாகத்தில் காலை, மதியம் இரவு என 3 வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    • திருவிழா இன்று தொடங்கி ஜூன் 8-ந் தேதி வரை நடக்கிறது.
    • 3-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ளது கூடலழகர் பெருமாள் கோவில். இது வைணவ திவ்ய தேச தலங்களில் 47-வது தலமாக திகழ்கிறது. இவ்வளவு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் வைகாசி பெருந்திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 8-ந் தேதி வரை நடக்கிறது.

    இதையொட்டி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கடக லக்கனத்தில் கொடியேற்றப்படுகிறது. அங்கு ஸ்ரீதேவி, பூதேவி வியூக சுந்தரராஜ பெருமாள் அங்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுவார். கொடியேற்றத்திற்கு பிறகு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

    விழாவையொட்டி பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 3-ந் தேதி நடக்கிறது. அதைதொடர்ந்து 5-ந் தேதி தசாவதாரம் நடக்கிறது. அதற்காக சுவாமி மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு இரவு தசாவதாரத்தில் காட்சி அளிப்பார்.

    6-ந் தேதி காலையில் கருட வாகனத்திலும், மாலையில் குதிரை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் செல்வி தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    • 31-ந் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 1-ந் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

    மேலூர் அருகே மாணிக்கவாசகர் அவதரித்த ஸ்தலமான திருவாதவூரில் உள்ள பிரசித்தி பெற்ற திருமறைநாதர் - வேதநாயகி அம்பாள் கோவிலில் வைகாசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி மூலவரான திருமறைநாதர் - வேதநாயகி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    கோவில் கொடிமரத்திற்கு, மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மங்கல வாத்தியங்களுடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கொடிமரத்தில் விழாவிற்கான நந்தி உருவம் பதித்த திருக்கொடி ஏற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து, வருகிற 28-ந் தேதி அன்று பஞ்சமூர்த்திகளுடன், திருமறைநாதர் - வேதநாயகி அம்பாள் மேலூருக்கு எழுந்தருளும் மாங்கனி திருவிழா நடைபெறும். இது குறித்த கதை வருமாறு:-

    மேலூரில் தற்போது சிவன் கோவில் உள்ள இடத்தில் முன்னொரு காலத்தில் மரங்கள் அதிகமாக இருந்துள்ளது. அங்கு வயதான சிவாச்சாரியார் ஒருவர் தங்கியிருந்து அருளாசி புரிந்து வந்துள்ளார். அவர் தினமும் 8 மைல் தூரம் நடந்து சென்று திருவாதவூர் திருமறைநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு மேலூருக்கு வந்து உணவு உட்கொள்வது வழக்கம். அப்போது மேலூரில் பணிபுரிந்த தாசில்தார் ஒருவர் அந்த சிவாச்சாரியாரின் தீவிர பக்தராக இருந்துள்ளார். மதுரையில் புதுமண்டபம் பகுதியில் லிங்கம் ஒன்று உள்ளதாகவும் அதனை பிரதிஷ்டை செய்து வழிபட தான் விரும்புவதாக சிவாச்சாரியார் அவரது பக்தரான மேலூர் தாசில்தாரிடம் கூறியுள்ளார்.

    அதனை தொடர்ந்து அப்போதைய மதுரை ஆங்கிலேய கலெக்டரிடம் அனுமதி வாங்கி மேலூரில் சிவாச்சாரியார் விருப்பம் படி லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. வயது முதிர்ச்்சியடைந்த அந்த சிவாச்சாரியாரால் திருவாதவூருக்கு நடக்கமுடியாத நிலை ஏற்பட்டு உணவு அருந்தாமல் உடல் நிலை பாதிப்படைந்து சிவனை வழிபட முடியவில்லையே என மன வருத்தமடைந்தார். இந்த நிலையில் ஒரு நாள் சிவாச்சாரியாரின் கனவில் தோன்றிய சிவன் பக்தரின் பக்தியை கண்டு தானே ஆண்டுக்கு ஒரு முறை நேரில் வந்து அருள்புரிவதாக கூறியுள்ளார். அன்று முதல் திருவாதவூர் கோவிலில் இருந்து திருமறைநாதர், வேதநாயகி அம்மன் மற்றும் பஞ்ச மூர்த்திகளுடன் பல நூற்றாண்டுகளாக விழா நடைபெற்று வருகிறது.

    28-ந் தேதி அன்று திருவாதவூர் கோவிலில் அதிகாலை திருமறைநாதர்-வேதநாயகி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் பல்லக்கில் எழுந்தருளி மேலூருக்கு புறப்படுகிறார். வழி நெடுகிழும் பல்வேறு கிராமங்களில் மண்டகப்படிகளில் ஏராளமான பக்தர்கள் திருமறைநாதர்-வேதநாயகி அம்மனை வரவேற்று தரிசிப்பார்கள். அதனை தொடர்ந்து மேலூர் நகரின் நுழைவு வாயிலில் தாசில்தார் மண்டகப்படியில் திருமறை நாதர்-வேதநாயகி அம்மன் எழுந்தருவார். அப்போது சிவனடியாருக்கு சிவலிங்கம் பெற்று தந்த தாசில்தாருக்கு முதல் மரியாதை செய்யும் பாரம்பரிய நிகழ்ச்சியாக இப்போதைய தாசில்தாருக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்படும். மேலூருக்கு சாமி வரும் போது விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த மாங்கனிகளை பக்தர்கள் கூட்டத்தில் வீசி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

    விழாவின் தொடர்ச்சியாக 31-ந் தேதி திருக்கல்யாணமும், ஜூன் 1-ந் தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டப்பட்டது.
    • சிவாச்சாரியார்கள் யாகவேள்வி மற்றும் சிறப்பு பூஜை செய்தனர்.

    குன்றக்குடி தேவஸ்தானத்தை சேர்ந்த திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை 6 மணியளவில் கலச அபிஷேக பூஜையும், யாகவேள்வியும் நடைபெற்றது. இதை தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

    பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் காட்டப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. பின்பு சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில், பாஸ்கர குருக்கள், ரமேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் யாகவேள்வி மற்றும் சிறப்பு பூஜை செய்தனர்.

    தொடர்ந்து முதல்நாள் விழாவாக திருப்பத்தூர் நாயுடு மகாசன சங்கம் சார்பில் மண்டகப்படியில் இரவு சூரியபிறை சந்திரபிறை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக 9-ம் நாள் தேரோட்டமும், 10-ம் நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளது.

    • இத்திருவிழா 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • 2-ந்தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி வசந்த திருவிழா நேற்று தொடங்கியது. இத்திருவிழா வருகிற 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் வசந்த மண்டத்திற்கு எழுந்தருளினார்.

    அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகியது. பின்னர் சுவாமி வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தில் 11 முறை சுற்றி வலம் வந்தார் வந்தார். பின்னர் சுவாமிக்கு அம்பாள்களுக்கும் மகா தீபாராதனை நடந்தது. இரவு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். வசந்த திருவிழா நிறைவு நாளான 10-ம் நாள் ஜூன் 2-ந் தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது.

    • 28-ந்தேதி 9 கருட சேவை நடக்கிறது.
    • 1-ந் தேதி தேரோட்டம் நடைபெறும்.

    108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், நவதிருப்பதிகளில் 9-வதும், குருவுக்கு அதிபதியாகவும் விளங்கும் ஆதிநாதா்ஆழ்வாா் கோவில் ஆழ்வாா்திருநகரியில் அமைந்துள்ளது. இங்குதான் சுவாமி நம்மாழ்வாா் வைகாசி விசாகம் அன்று அவதரித்தார். ஆண்டுதோறும் வைகாசி நட்சத்திர அவதார திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமி நம்மாழ்வாா், கொடிமரத்திற்கு முன்பாக பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நகா்வலம் வந்த கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கொடிமரத்திற்கு நவகலச திருமஞ்சனம் நடைபெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. அதன் பின்னா் கொடிமரத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டது.

    விழாவில் செயல் அலுவலர் அஜித், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை, மாலை சுவாமி நம்மாழ்வாா் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறுகின்றது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக 5-ம் திருநாளான 28-ந் தேதி காலையில் நவதிருப்பதி பெருமாளுக்கு மங்களாசாசனமும், இரவில் 9 கருட சேவையும் நடைபெறுகின்றது. சிகர நிகழ்ச்சியாக 9-ம் திருநாளான வருகிற 1-ந் தேதி தேரோட்டம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிா்வாகத்தினா் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனா்.

    • திருவிழா தொடர்ந்து 3-ந்தேதி வரை நடக்கிறது.
    • 3-ந்தேதி மொட்டையரசு உற்சவம் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 10 நாட்கள் விசாக திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதில் 8 நாட்கள் வசந்த உற்சவமாகவும், ஒருநாள் விசாக விழாவும், மற்றொரு நாள் மொட்டையரசு உற்சவமாகவும் கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டிற்கான விசாகத்திருவிழாவின் தொடக்கமாக நேற்று வசந்த உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து 3-ந்தேதி வரை நடக்கிறது.

    திருவிழாவின் முதல் நாளான நேற்று மாலை 6 மணி அளவில் உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி புறப்பட்டு வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தொட்டியில் தண்ணீர் நிரப்பபட்டு தயாராக இருந்த மேடையில் சுப்பிரமணியசுவாமி அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதனையடுத்து அம்பாளுடன் சுவாமிக்கு அபிஷேகமும், மகா தீப தூபஆராதனையும் நடந்தது.

    வருகிற 1-ந்தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு வசந்த மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி வசந்த நிகழ்ச்சி நடக்கிறது.

    2-ந்தேதி விசாக திருவிழா நடக்கிறது அன்று அதிகாலை 5 மணிக்கு சண்முகர் சன்னதியில் இருந்து கம்பத்தடி மண்டப வளாகத்தில் உள்ள விசாகொறடு மண்டபத்திற்கு வள்ளி, தெய்வானை சமேத சண்முகப் பெருமான் எழுந்தருளுகிறார்.இதனையடுத்து சண்முகப்பெருமானுக்கும் வள்ளி, தெய்வானைக்கும் குடம், குடமாக பாலாபிஷேகம் நடக்கிறது.

    இதுதவிர இளநீர் காவடி, பன்னீர்காவடி, புஷ்ப காவடி, பறவை காவடி உள்ளிட்ட விதவிதமான காவடிகள் எடுத்து வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 3-ந்தேதி மொட்டையரசு உற்சவம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் தலைமையில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    ×