search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UK"

    • இந்த கட்டிடம், மிகவும் சிதிலமடைந்து கல்நார் படிந்துள்ளதால் இப்போது ஆபத்தில் உள்ளது
    • சீரமைப்பு பணிகளை மேலும் தாமதம் செய்தால் செலவு அதிகமாகும்.

    லண்டன்:

    பிரிட்டன் பாராளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் மறுசீரமைப்புத் திட்டம் தாமதமானால், 147 ஆண்டுகள் பழமையான அந்த வளாகம் இடிந்து விழுந்து பேரழிவு ஏற்படலாம் என்று அந்நாட்டின் பாராளுமன்ற குழு எச்சரித்துள்ளது.

    கட்டிடக் கலையில் சிறந்த படைப்பாக கருதப்படும் இந்த வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையானது, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக விளங்குகிறது. பாராளுமன்றம் செயல்படக்கூடிய இந்த கட்டிடம், மிகவும் சிதிலமடைந்து கல்நார் படிந்துள்ளதால் இப்போது ஆபத்தில் உள்ளதாகவும், கட்டிடத்தில் பல ஆபத்துகள் இருப்பதாகவும் பாராளுமன்ற குழு கூறி உள்ளது.

    இதுபற்றி பிரிட்டன் பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையைச் சரிசெய்து மீட்டெடுக்க வேண்டும் என்று ஒருமித்த கருத்து நிலவினாலும், பல்வேறு காரணங்களால் சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்றுவரை, கட்டிடத்தைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களைவிட பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதே கவனம் செலுத்தப்படுகிறது.

    பாராளுமன்றம் இருக்கும் அரண்மனையைச் சீரமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து 5 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னும் என்னென்ன சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டும் என்று கூட முடிவெடுக்கவில்லை. பணிகளை முடிப்பதற்கான காலக்கெடு மற்றும் செலவும் முடிவு செய்யப்படவில்லை. சீரமைப்பு பணிகளை மேலும் தாமதம் செய்தால் செலவு அதிகமாகும். அது வரி செலுத்துவோருக்கே கூடுதல் சுமையாகும்.

    அரண்மனையில் சிறிய அளவிலான சீரமைப்பு பணிகளுக்காக பிரிட்டன் பாராளுமன்றம் ஒரு வாரத்திற்கு 2 மில்லியன் பவுண்டுகள் (ரூ. 20,56,92,200) செலவு செய்கிறது. ஆனாலும், சுகாதாரம், பாதுகாப்பு பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. எனவே இந்த பிரச்சினையில் நாம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கட்டிடத்தை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • 2018 செப்டம்பர் மாதம் 71 வயதான ஜான் வெயின்ரைட் என்ற முதியவர் உயிரிழந்தார்.
    • வெயின்ரைட்-இன் வங்கி கணக்கை பயன்படுத்தி அவரது பென்ஷன் தொகையை கொண்டு ஜாலியாக வசித்து வந்துள்ளார்.

    பிரிட்டன் சேர்ந்த நபர் இறந்து போன முதியவரின் உடலை இரண்டு ஆண்டுகள் மறைத்து வைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இவர் ஏன் இவ்வாறு செய்தார் என்ற காரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, எப்படி இந்த மாதிரி எல்லாம் செய்ய முடியும் என்று விழிபிதுங்க வைத்துள்ளது.

    2018 செப்டம்பர் மாதம் 71 வயதான ஜான் வெயின்ரைட் என்ற முதியவர் உயிரிழந்தார். இவரது உடல் உறைய வைக்கும் கருவியில் (ஃபிரீசர்) மறைத்து வைக்கப்பட்டு இருந்ததால், இவரது உடல் ஆகஸ்ட் 22, 2020 அன்று தான் கிடைத்தது. ஜான் வெயின்ரைட் உடலை 52 வயதான டேமியன் ஜான்சன் என்பவர் மறைத்து வைத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

    முதியவரின் உடலை மறைத்து வைத்துக் கொண்டதோடு டேமியன் ஜான்சன் உயிரிழந்த ஜான் வெயின்ரைட்-இன் வங்கி கணக்குகளை பயன்படுத்தி அவரது பென்ஷன் தொகையை கொண்டு ஷாப்பிங் செய்வது, ரொக்கத்தை எடுத்து செலவிடுவது என்று ஜாலியாக வசித்து வந்துள்ளார்.

    வெயின்ரைட்-இன் வங்கி கார்டு கொண்டு பணம் எடுத்துக் கொள்வது, பொருட்களை வாங்குவது மற்றும் தனது சொந்த வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புவது போன்ற செயல்களில் செப்டம்பர் 23, 2018 முதல் மே 7, 2020 வரை டேமியன் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட டேமியன் ஜாமின் பெற்று வெளியில் சுதந்திரமாக சுற்றி வருகிறார்.

    • பொது சுகாதார சேவையில் நிலவும் பின்னடைவைக் குறைக்க பிரதமர் உறுதியளித்தார்.
    • பிரிட்டனில் கடந்த நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 10.7 சதவீதமாக இருந்தது.

    லண்டன்:

    பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியால் பிரதமர் லிஸ் டிரஸ் பதவியை ராஜினாமா செய்த நிலையில், ரிஷி சுனக் கடந்த அக்டோபர் மாதம் பிரதமராக பொறுப்பேற்றார்.

    பிரிட்டனின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் பேசிய பிரதமர் ரிஷி சுனக், நாட்டின் அனைத்து பிரச்சனைகளும் 2023ல் தீர்ந்துவிடாது என கூறினார். அதேசமயம் 2023ம் ஆண்டு புதிய வாய்ப்புகளை வழங்கி, மீண்டும் பிரிட்டன் பொருளாதாரம் சிறப்பாக உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்த ஆண்டிற்கான அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்து பிரதமர் ரிஷி சுனக் உரையாற்றினார். அப்போது, நாட்டில் பணவீக்கத்தை பாதியாக குறைக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    தேசிய கடனைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்த அவர், சிறிய படகுகளில் வந்து பிரிட்டன் கரையில் குடியேறுபவர்களை தடுக்க புதிய சட்டங்களை இயற்ற உள்ளதாகவும், பிரிட்டனின் பொது சுகாதார சேவையில் நிலவும் பின்னடைவைக் குறைக்கவும் அவர் உறுதியளித்தார்.

    பிரிட்டனில் கடந்த நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 10.7 சதவீதமாக இருந்தது. இது அக்டோபர் மாதத்தை விட சற்று குறைவு. ஆனால் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகமாகவே உள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் போரின் எதிரொலியாக, பிரிட்டனில் எரிபொருள் மற்றும் உணவுக்கான செலவு அதிகரித்துள்ளது. இதனால் பல லட்சம் மக்களின் வாழ்க்கைத் தரம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • 10க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    லண்டன்:

    பிரான்ஸ் அருகே ஜெர்சி தீவின் தலைநகரான செயின்ட் ஹீலியரில் இன்று மூன்று தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென குண்டுவெடித்தது போன்று பலத்த சத்தம் எழுந்தது. சத்தம் வந்த சில வினாடிகளில் கட்டிடம் இடிந்து விழுந்தது.

    இதில் கட்டிடம் முழுமையாக சிதைந்து தரைமட்டமானது. அதில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொணடனர். அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடமும் சேதமடைந்தது.

    விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆம்புலன்ஸ்களும் வரவழைக்கப்பட்டன. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

    இந்த விபத்தில் உயிரிழந்தவாக்ளுக்கு ஜெர்சி முதல்வர் கிறிஸ்டினா மூர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் குண்டுவெடிப்பால் இடம்பெயர்ந்தவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.

    • எங்கள் மாணவர்கள் இந்தியாவுக்குச் சென்று கற்றுக் கொள்வது எளிதானது.
    • இந்தியாவிலிருந்து கற்றுக் கொள்ளக் கூடியது பெரிய அளவு உள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், வடக்கு லண்டனில் கன்சர்வேடிவ் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பிரச்சார நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

    ஆப் சப் மேரே பரிவார் ஹோ (நீங்கள் அனைவரும் என் குடும்பம்) என்று அவர் இந்தி மொழியில் உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியாவில் வணிகத்திற்கான இங்கிலாந்தின் வாய்ப்பைப் பற்றி நாங்கள் அனைவரும் நன்கு அறிந்திருக்கிறோம், ஆனால் உண்மையில் நாம் அந்த உறவை வித்தியாசமாகப் பார்க்க வேண்டும், ஏனென்றால் இங்கிலாந்தில் உள்ள நாம் இந்தியாவிலிருந்து கற்றுக் கொள்ளக்கூடியது பெரிய அளவு உள்ளது.

    எங்கள் மாணவர்களும் இந்தியாவுக்குச் சென்று கற்றுக் கொள்வது எளிதானது என்பதையும், எங்கள் நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களும் ஒன்றாகச் செயல்படுவதும் எளிதானது என்பதையும் நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன். ஏனெனில் இது ஒரு வழி உறவு மட்டுமல்ல, இது இரு வழி உறவு. அந்த உறவில் நான் கொண்டு வர விரும்பும் மாற்றமும் அதுதான்.

    சீனாவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் நமது பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன. சந்தேகமே வேண்டாம், உங்கள் பிரதமராக நான் உங்களையும், உங்கள் குடும்பங்களையும், நமது நாட்டையும் பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான அனைத்தையும் செய்வேன், ஏனெனில் அது ஒரு பிரதமரின் முதல் கடமை. இவ்வாறு ரிஷி சுனக் குறிப்பிட்டார்.

    • இருநாடுகளில் உள்ள இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப்படிப்புகள் சமமாகக் கருதப்படும்.
    • சுகாதாரப் பணி கட்டமைப்பு தொடர்பாக இருநாடுகளுக்கிடையே ஒப்பந்தம்.

    இந்தியா-இங்கிலாந்து இடையே கடல்சார் கல்வி உள்ளிட்ட கல்வி தகுதிகளை இருநாடுகளும் அங்கீகரித்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைநகர் டெல்லியில் நேற்று கையெழுத்தாகி உள்ளது. இங்கிலாந்து வர்த்தகத் துறையின் செயலாளர் ஜேம்ஸ் பவுலர் மற்றும் மத்திய உயர்கல்வி அமைச்சகத்தின் செயலாளர் கே.சஞ்சய் மூர்த்தி ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர்.

    இதன்படி, மேல்நிலை பள்ளிக் கல்வி மற்றும் பல்கலைக்கழக படிப்பிற்கு முந்தைய கல்வி சான்றிதழ்கள் இங்கிலாந்தில் உயர்கல்வி படிப்பதற்கு தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும். இருநாடுகளில் உள்ள இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப்படிப்புகள் சமமாகக் கருதப்படும்.

    மேலும் சுகாதாரப் பணி கட்டமைப்பு ஆகியவற்றில் இருநாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வர்த்தகத்துறை செயலாளர் பி ஆர் சுப்பிரமணியம், இந்தியா-இங்கிலாந்து இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

    இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் நிறைவடையும் என்றும், இரண்டு நாடுகளும் ஒப்புதல் அளித்த பிறகு, ஒப்பந்தத்தில் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

    குரங்கு அம்மை நோய் பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பல்வேறு நாடுகள் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன.
    லண்டன்:

    கொரோனாவைத் தொடர்ந்து இப்போது குரங்கு அம்மை நோய் மக்களை மிரட்டி  வருகிறது. குறிப்பாக பிரிட்டனில் இந்நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. பிரிட்டனில் நேற்று புதிதாக 71 பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுவரை 179 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவத்துள்ளது. உலக அளவில் 555 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது. 

    கொரோனா போன்று குரங்கு அம்மையும், பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தும்போது மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது. எனவே, குரங்கு அம்மை நோய் பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து அந்தந்த நாடுகள் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன.

    அவ்வகையில், பிரிட்டன் சுகாதாரத்துறை புதிய வழிநாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களும், பாதிப்பு அறிகுறி கொண்டவர்களும் உடலுறவு கொள்வதை தவிர்க்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

    குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புண்கள் குணமாகும் வரையிலோ அல்லது, உடலில் ஏற்பட்ட சிரங்குகள் காயும்வரையிலோ மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவேண்டும் என வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இங்கிலாந்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சுகாதார அமைப்பு அளித்த அங்கீகாரத்தை ஏற்று, கோவேக்சின், சினோவாக், சினோபார்ம் பீஜிங் ஆகிய தடுப்பூசிகள் 22-ந் தேதி (நேற்று) முதல் அங்கீகரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
    லண்டன் :

    முற்றிலும் இந்திய தயாரிப்பான ‘கோவேக்சின்’ கொரோனா தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு தனது அவசர பயன்பாட்டு பட்டியலில் சமீபத்தில் சேர்த்தது.

    இந்தநிலையில், இங்கிலாந்து தனது நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பட்டியலில் கோவேக்சினை சேர்த்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சுகாதார அமைப்பு அளித்த அங்கீகாரத்தை ஏற்று, கோவேக்சின், சினோவாக், சினோபார்ம் பீஜிங் ஆகிய தடுப்பூசிகள் 22-ந் தேதி (நேற்று) முதல் அங்கீகரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

    இதனால், இங்கிலாந்து செல்ல திட்டமிட்டுள்ள 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ள இந்தியர்கள் பலனடைவார்கள். அவர்கள் இங்கிலாந்து செல்வதற்கு முன்பு பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை செய்யவோ, இங்கிலாந்தில் தங்கும் இடத்தில் தனிமைப்படுத்திக் கொள்ளவோ தேவையில்லை.
    இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 40 ஆயிரத்து 941 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை அங்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 866 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
    லண்டன் :

    ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் இங்கிலாந்தில் 40 ஆயிரத்து 941 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98 லட்சத்து 6 ஆயிரத்து 34 ஆகும்.

    தொற்றால் நேற்று ஒரு நாளில் 150 பேர் இறந்தனர். இதுவரை அங்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 866 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 8,079 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனாவில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெறுகிறார்கள்.

    இதுபற்றி அவசர காலத்துக்கான அறிவியல் ஆலோசனை குழு உறுப்பினர் ஜான் எட்மண்ட்ஸ் கருத்து தெரிவிக்கையில், “ஐரோப்பாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது, நிலைமை எவ்வளவு விரைவாக மோசமாகி விடும் என்பதை காட்டுகிறது” என தெரிவித்தார். மேலும் அந்த நாட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தொற்று பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார பாதுகாப்பு முகமை கூறுகிறது.

    இதற்கிடையே அங்கு 12 வயதுக்கு மேற்பட்ட 88 சதவீத மக்கள் முதல் டோஸ் தடுப்பூசியையும், 80 சதவீதத்தினர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டு விட்டனர், 25 சதவீதத்தினர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியையும் செலுத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பல வளர்ந்த நாடுகளிலேயே கொரோனாவின் வீரியம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் இங்கிலாந்து முக்கிய இடம் பெற்று இருக்கிறது.
    லண்டன் :

    இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. வேகமாக நடைபெறும் தடுப்பூசி பணிகள் மற்றும் கொரோனாவுக்கு எதிரான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பாதிப்பு நிலைமை மேம்பட்டு வருகிறது. அதேநேரம் பல வளர்ந்த நாடுகளிலேயே கொரோனாவின் வீரியம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் இங்கிலாந்து முக்கிய இடம் பெற்று இருக்கிறது.

    அங்கு நேற்று முன்தினமும் 46,807 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 97 லட்சத்து 21 ஆயிரத்து 916 ஆக உயர்ந்திருக்கிறது. இதைப்போல கொரோனாவால் மேலும் 199 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இது மொத்த கொரோனா பலி எண்ணிக்கையை 1,43,559 ஆக உயர்த்தி இருக்கிறது.இங்கிலாந்தில் 5 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளிடம் அதிக அளவில் தொற்று காணப்படுவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. குறிப்பாக 1 லட்சம் குழந்தைகளில் 700 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டு இருக்கிறது.இந்த சூழலில் நாடு முழுவதும் தொடர்ந்து கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
    பிரிட்டன் பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து 2019 மார்ச் இறுதிக்குள் வெளியேற  பிரிட்டன் அரசு முடிவு செய்தது. 

    ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன்  பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால்  பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை பெருவாரியான ஓட்டுவித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    ஆளும் பழமைவாத  கட்சி உறுப்பினர்களே தெரசா மே ஏற்படுத்திய ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை ஆதரிக்காத நிலையில் முன்னர் சில மந்திரிகள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
     
    இதனால் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டுவந்துள்ள தெரசா மே, அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி நான்காவது முறையாக அந்த ஒப்பந்தத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளார். இந்த ஓட்டெடுப்பும் தோல்வியில் முடிந்தால், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து ஒப்பந்தம் இன்றி வெளியேற வேண்டிய நெருக்கடி நிலைக்கு இங்கிலாந்து தள்ளப்படும்.



    இந்த நிலையில், பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தெரசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சியை சேர்ந்த மூத்த பெண் மந்திரி ஆண்ட்ரியா லீட்ஸம் தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். பிரதமர் பதவி மற்றும் ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து தெரசா மே விலக வேண்டும் என்ற எதிர்ப்பு குரல் தற்போது அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், பழமைவாத (கனசர்வேட்டிவ்) கட்சி தலைவர் பதவியை ஜூன் மாதம் 7-ம் தேதி ராஜினாமா செய்வதாக தெரசா மே அறிவித்துள்ளார்.

    லண்டன் நகரில் டவுனிங் தெருவில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ‘பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருமுறை பணியாற்ற கிடைத்த வாய்ப்பை எனது வாழ்நாளின் கவுரவமாக கருதுகிறேன். எவ்வித கவலையும் இல்லாமல் நன்றியுணர்வோடு விடைபெற விரும்புகிறேன்’ என கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.

    கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.
    இங்கிலாந்தில் இந்திய பெண்ணை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஹீத்தர் நார்டன் தீர்ப்பு வழங்கினார்.
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டில் உள்ள டெர்க்‌ஷயர் ஷின்பீல்டு பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் டிராண்ட் (வயது 47). இவரது மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்த ஏஞ்ஜெலா மிட்டல் (41). 2010-ம் ஆண்டு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த லாரன்ஸ் தனது மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தார்.

    அவரது உடலில் 59 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இந்த கொலை வழக்கு லண்டன் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி ஹீத்தர் நார்டன் தீர்ப்பு வழங்கினார். அதில், லாரன்ஸ் வீட்டின் படுக்கை அறையில் மனைவியை ஒரு கத்தியால் சரமாரியாக குத்தியபோது கத்தி உடைந்துள்ளது. உடனே அவர் சமையலறைக்கு சென்று வேறொரு கத்தியை எடுத்து வந்து மீண்டும் தொடர்ந்து குத்தி கொலை செய்துள்ளார். இது மிகவும் கொடூரமானது. அவருக்கு குறைந்தபட்சம் 16 வருடங்கள் 8 மாதத்துடன் ஆயுள் தண்டனை விதிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
    ×