search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Training course"

    • அனைத்துத்துறை மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு கலெக்டர் தலைைமையில் நடைபெற்றது
    • இப்பயிற்சியில் கலந்து கொண்டுள்ள அலுவலர்கள் எடுத்துரைக்கப்படும் கருத்துக்களை நன்குணர்ந்து நுகர்வோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    தேனி:

    இந்திய தர நிலைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார்.

    இந்த பயிற்சி வகுப்பில், தரமான பொருட்களை தயாரிப்பதில்‌ இந்திய தர நிர்ணய பணியகத்தின் ‌பங்கு மற்றும்‌ பொறுப்பு, இந்திய தர நிர்ணய நிறுவனம் மார்க்‌ ரூ ஹால்மார்க்‌ (தங்க நகைகள்‌), மாநில அரசு துறைகளின்‌ கொள்முதல்‌ ஒப்பந்தப்புள்ளியில் இந்திய தரநிலைகளின்‌ முக்கியத்துவம்‌, இந்திய தர நிர்ணயத்தால் குறியிடப்பட்ட பொருட்களை வாங்குவதன் முக்கியத்துவம்,

    தரமான பொருட்களின் தரம் குறித்து எளிதில் அறிந்து கொள்ளும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்திய தர நிர்ணய பணியகம் செயலியின் சிறப்பம்சங்கள், தயாரிப்புகளை தவறாகப்‌ பயன்படுத்தினால்‌ பி.ஐ.எஸ்‌ சட்டத்தின்‌ தண்டனை மற்றும் விதிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

    மேலும் உலக அளவில்‌ சந்தை விரிவாக்கத்தில்‌ இந்திய தர நிர்ணய பணியகம் மற்றும் இந்திய தர நிர்ணய நிறுவனம் ஆகிய தரநிலைகள்‌ முக்கிய பங்காற்றி வருகின்றன.

    இந்திய தர நிர்ணய பணியகத்தின் செயலி நுகர்வோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே, இப்பயிற்சியில் கலந்து கொண்டுள்ள அலுவலர்கள் எடுத்துரைக்கப்படும் கருத்துக்களை நன்குணர்ந்து நுகர்வோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    • தன்னார்வலர்களுக்கு மழை, வெள்ளம் ஏற்படும்போது பாதிக்கப்படும் மக்களை மீட்பது, கால்நடைகளை பாதுகாப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
    • ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பேரிடர் மீட்பு தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அந்த பயிற்சி வகுப்பை முடித்தவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நெல்லையில் பேரிடர் ஏற்படும் இடங்களில் உடனடியாக விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்து பயிற்சி வகுப்புகள் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ தலமையில் நெல்லை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

    இதில் ஏராளமான பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மழை, வெள்ளம் ஏற்படும்போது பாதிக்கப்படும் மக்களை மீட்பது, கால்நடைகளை பாதுகாப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பேரிடர் மீட்பு தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அந்த பயிற்சி வகுப்பை முடித்தவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வன், பாளை தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் டி.என்.பி.எஸ்.சி இலவச பயிற்சி வகுப்பு நடந்தது.
    • நண்பர்கள் ரோட்டரி சங்கம், டால்பின் அகடாமி, முகில் இன்ஸ்டியூஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தியது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் நண்பர்கள் ரோட்டரி சங்கம், டால்பின் அகடாமி, முகில் இன்ஸ்டியூஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தினர்.

    சங்கத்தின் தலைவர் அங்குராஜ் தொடங்கி வைத்து பேசினார். அகடாமி நிறுவனர் முருகதாசன் வரவேற்றார். டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வில் 10 ஆண்டுகளுக்கு மேலான பணி அனுபவம் பெற்றுள்ள விரிவுரையாளர்களான முகில், வீரையா, செல்வி ஆகியோர் பயிற்சி வகுப்பினை நடத்தினர்.

    சுமார் 45 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் சமுத்திரவேல், ரோட்டரி நிர்வாகிகள் முருகானந்தம், வினோத்குமார், ஸ்டார் ஹெல்த் வெங்கடேஷ், பத்திர எழுத்தர் ராஜாமணி, விக்ரம் முருகன், கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் செயலாளர் பால்சாமி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை திட்ட இயக்குனர்கள் கந்தசாமி, அமுதா ஹரிஹரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    நாமக்கல் பாராளுமன்ற தேர்தல் சட்டமன்ற தொகுதிக்கான மண்டல அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பை கலெக்டர் பார்வையிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், சங்ககிரி ஆகிய சட்டமன்ற தொகுதிக்கான மண்டல அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

    இந்த பயிற்சி வகுப்பினை கலெக்டர் ஆசியாமரியம் நேரில் பார்வையிட்டார். பின்னர் கூட்டத்தில் அவர் பேசுகையில் தெரிவித்ததாவது:-

    தேர்தல் பணிகளில் மண்டல அலுவலர்களுக்கான பணிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 10 முதல் 12 வரை வாக்கு சாவடிகள் ஒரு மண்டல அலுவலரின் கட்டுப்பாட்டு வரம்பில் இருக்கும். மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு சாவடிகள் குறித்த விபரங்களையும் அதற்கான வழித்தடங்களையும் அறிந்து இருக்க வேண்டும். வாக்கு சாவடிகளில் உட்கட்டமைப்பு வசதிகள், இருக்கைகள், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட வசதிகளில் குறைபாடுகள் இருந்தால் மண்டல அலுவலர்கள் சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.

    மண்டல அலுவலர்கள் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மாறுதல் செய்யப்பட்டுள்ள வாக்கு சாவடிகள் குறித்து அறிந்திருக்க வேண்டும்.

    மேலும் வாக்குசாவடிகளில் கைபேசி மற்றும் தொலைபேசி இணைப்பு இருப்பதை உறுதி செய்திட வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக அனுமதி இல்லாத ஊர்வலங்கள், வாகனங்கள், சுவர் விளம்பரங்கள், கொடிகம்பங்கள் ஆகியவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு சாவடிகளுக்கு அருகில் உள்ள தேர்தல் தொடர்பான அலுவலர்களின் தொலைபேசி எண் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    சம்பந்தப்பட்ட வாக்கு சாவடிக்கு மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் தொடர்பான இதர படிவங்கள் வந்து சேர்ந்துவிட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்கு சாவடிகளில் காவல் துறை துணை நிலை படையினர் வரப்பெற்றதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் ஏதேனும் தொழில் நுட்ப கோளாறு ஏற்படும் பட்சத்தில் மாற்று மின்னணு வாக்கு பதிவு எந்திரம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின்னணு வாக்கு பதிவு எந்திரம் சரியான முறையில் சீல் இடப்பட்டதை உறுதிப்படுத்த வேண்டும். இறுதியாக காவல் துறை பாதுகாப்புடன் வாக்குபதிவு எந்திரங்களை சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் முறையாக ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். #tamilnews

    திருவண்ணாமலையில் 5 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சி வகுப்பு நடந்தது. இந்த பயிற்சி வகுப்புக்கு அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் முன்னிலை வகித்து பேசினார். கலெக்டர் கந்தசாமி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவியில் இருந்தபோது பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார். பள்ளி மாணவர்களுக்கு 14 பொருட்களை வழங்கினார். பல கோடிகள் ஒதுக்கி நலத்திட்டங்களை கொண்டு வந்தார். தற்போதைய அரசும், இந்த ஆண்டு ரூ.27 கோடியே 25 லட்சத்து 88 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது 4-ல் ஒரு பகுதி ஒதுக்கிய நிதியாகும்.

    இந்த அரசின் நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 68 கல்வி மாவட்டங்கள் 120 கல்வி மாவட்டங்களாக மாற்றப்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரங்கள் பல வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் நீங்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது, சிறிய தவறு ஏற்பட்டால் அதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கக்கூடாது. முதலில் நீங்கள் அறிவுரை வழங்க வேண்டும்.

    ஏன் என்றால் தவறு செய்யாதவர்கள் யாரும் இல்லை. சிறிய தண்டனைக்காக நல்ல அதிகாரியை நாம் இழந்து விடக்கூடாது. மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வட்டார கல்வி அலுவலர்களுக்கும் வாகனங்கள் வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது.

    வட்டார கல்வி அலுவலர்களுக்கு பணிபுரியும் இடத்தில் அலுவலகங்கள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

    நீங்கள், கட்டிடங்கள் இருக்கிறதா? கழிப்பிடம் உள்ளதா? மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்களா? என்பதை ஆய்வு செய்து அரசுக்கு கடிதம் அனுப்ப வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்கம் சரியாக செயல்படவில்லை என்றால் எங்களது கவனத்துக்கு கொண்டு வாருங்கள். அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    3 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வரும் திட்டத்தை அறிவித்திருக்கிறோம். அடுத்தவாரம் இந்த பணிகள் தொடங்க உள்ளது. இதற்கான ஒப்பந்த வேலைகள் நடைபெற்று வருகிறது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை கணினிமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர்கள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் செப்டம்பர் மாதத்திற்குள் பள்ளியில் மாணவர்கள் அதிகமாக சேர்ந்தால் மீண்டும் அவர்கள் அதேபள்ளியில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 848 பள்ளிகளில் 10 பேருக்கும் குறைவாக உள்ளனர். வட்டார கல்விஅலுவலர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று பணியாற்றலாம். அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. நீங்கள் விரும்பும் பகுதிக்கு உங்களை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்.

    கல்வியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் ஆசிரியர்களுக்கு இதுபோன்ற பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இந்த மாத இறுதிக்குள் 5 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படும்.

    பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பெரிய பிரச்சினை கழிவறைகளை சுத்தம் செய்வது. இதை போக்க, ஜெர்மனி நாட்டில் இருந்து ஆயிரம் வாகனங்களை ரோட்டரி சங்கத்தோடு இணைந்து இறக்குமதி செய்ய உள்ளோம். இந்த வாகனங்கள் 20 ஆயிரம் பள்ளிகளை சுத்தம் செய்யும். இதுகுறித்து உடனடியாக கல்வித்துறைக்கு தகவல் அனுப்பும் வசதியும் முதல்- அமைச்சர் ஒப்புதலோடு செயல்படுத்தப்படும்.

    மாணவர்கள் சேர்க்கைக்கு பிறகு வருகை குறித்து பெற்றோருக்கு குறுந்தகவல் அனுப்பும் திட்டம் கொண்டு வரப்படும். புதிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் உருவாக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ் பேசினார்.

    இதையடுத்து 21 ஆசிரியர்களுக்கு ‘கனவு ஆசிரியர்’ விருதுகளையும், 13 பள்ளிகளுக்கு புதுமை பள்ளி விருதும் அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் பெருமாள்நகர் கே.ராஜன், எம்.பி.க்கள் வனரோஜா, சேவல் வெ.ஏழுமலை, எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், தூசி கே.மோகன் மற்றும் 5 மாவட்ட கல்வி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 
    ×