search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sand quarry"

    மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை அரசு மணல் குவாரியில் நவீன கேமரா மூலம் கண்காணிப்பதால் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அரசு மணல் குவாரி செயல்படாததால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து அரசு உத்தரவுப்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வைகை ஆற்றில் குவாரி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி மானாமதுரை பகுதியில் வாகுடி, செய்களத்தூர், தெ.புதுக்கோட்டை ஆகிய 3 இடங்களில் வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக தெ.புதுக்கோட்டையில் கடந்த 13-ந்தேதி தாசில்தார் சுந்தரராஜன் தலைமையில் குவாரி தொடங்கப்பட்டது. அப்போது 13 லாரிகளில் மணல் அள்ளி பொதுப்பணித்துறை குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் குவாரியில் மின் இணைப்பு, கண்காணிப்பு கேமரா பொருத்துவது போன்ற பணிகள் நடந்து வந்தன.

    இந்தநிலையில் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது குவாரியில் மணல் அள்ளி லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கூறியதாவது:-

    பொதுப்பணித்துறை சார்பில் குவாரி செயல்பட தொடங்கியுள்ளது. இதில் லாரிகள் உள்ளே வரும் பாதை, வெளியே செல்லும் பாதை, குவாரி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறையில் பதிவு செய்யப்பட்ட லாரிகளில் மட்டும் மணல் ஏற்றப்படும். மணல் ஏற்றப்பட்ட லாரி ஜி.பி.எஸ். கருவி மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். பொதுப்பணித்துறை குடோனில் இருந்து மணல் ஏற்றுவதற்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இதுவரை 4 ஆயிரத்து 700 லாரிகளை பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு சிவகங்கை அருகே காயாங்குளம் பொதுப்பணித்துறை குடோன் மூலம் மணல் விற்பனை செய்யப்பட உள்ளது.

    குவாரி அலுவலகத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. குவாரியில் இருந்து வெளியே செல்லும் லாரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து கண்காணிக்க முடியும். குவாரியில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராவை சென்னையில் இருந்து இயக்கி கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் முறைகேடுகள் எதுவும் நடக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். 
    மானாமதுரை பகுதியில் அமைக்கப்படும் மணல் குவாரியால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
    மானாமதுரை:

    மானாமதுரை பகுதி வைகை ஆற்றுப்படுகையில் வாகுடி, செய்களத்தூர், தெ.புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பொதுப்பணித்துறை சார்பில் அரசு மணல் குவாரி அமைக்க முடிவு செய்து, பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இப்பகுதி வைகை ஆற்றில் இருந்து விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு 72 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும் திருப்புவனம், மானாமதுரை ஆகிய 2 தாலுகாக்களிலும் வைகை ஆற்றை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. அரசு மணல் குவாரி அமைத்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே இப்பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்கக்கூடாது என்றும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி தலைமையில் நேற்று மானாமதுரை பழைய பஸ் நிலையம் எதிரே தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தின்போது, மணல் குவாரி அமைப்பதை அரசு மறுபரிசீலனை செய்யாவிடில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து கட்சியினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது உண்ணாவிரதத்தில் அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் உமாதேவன், குருமுருகானந்தம், விஜயகுமார், சுரேஷ்பாபு, நகர வர்த்தகர் சங்க தலைவர் பாலகுருசாமி, தி.மு.க. சார்பில் அண்ணாத்துரை, ராஜாமணி, பொன்னுச்சாமி, இந்திய கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் முத்தையா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தங்கமணி, குணசேகரன், ம.தி.மு.க. சார்பில் கண்ணன், மருது, தே.மு.தி.க. தர்மாராமு, த.மா.கா. முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பாலசுப்பிரமணியன், பா.ஜ.க. சார்பில் கண்ணன், சங்கரசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்த போராட்டத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.ஆர். பாண்டியன் பங்கேற்று பேசினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணலை விற்று மக்களை அழித்து ஆட்சி நடத்த வேண்டிய அவசியமில்லை. மக்களை அழிப்பதற்கு என்றே தமிழக அரசு செயல்படுவதை ஏற்க மாட்டோம். மணல் குவாரியால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே மணல் குவாரி அமைக்கும் நடவடிக்கை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றார். 
    ஏரியில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் லாரிகளை சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைபோர் ஏரியில் சவுடி மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது. இங்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த 27-ந் தேதி மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் லாரிகளை சிறை பிடித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று காலை கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் தீர்வு ஏற்படவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை ஏரியில் மணல் அள்ளுவதற்காக 50-க்கும் மேற்பட்ட லாரிகள் அணி வகுத்து வந்தன. இதனை அறிந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஏரியில் திரண்டனர்.

    அவர்கள் லாரிகளை சிறைபிடித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. டி.எஸ்.பி. சந்திரதாசன், தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மணல் குவாரி தொடர்பாக மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுக்க கிராம மக்களிடம் அறிவுறுத்தினர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். அவர்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து மணல் குவாரிக்கு எதிராக மனு கொடுக்க முடிவு செய்து உள்ளனர். #Tamilnews

    மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாகுடி, செய்களத்தூர், தெ.புதுக்கோட்டை, வழியாக செல்லும் வைகை ஆற்றில் 3 ஊர்களில் மணல் குவாரி அமைக்க அரசு ஒப்பந்த புள்ளி வெளியிட்டுள்ளதை கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் கூட்டம் நடைபெற்றது.

    மானாமதுரை வைகை ஆற்றில் 30 குடிநீர் திட்டங்கள் மூலம் ஒரு நாளைக்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீர் எடுத்து குடிதண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்த திட்டத்தில் கடலாடி, அருப்புக்கோட்டை, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் குடிநீர் திட்டம், விவசாயமும் பெரிய அளவில் பாதிக்கப்படும். எனவே வைகையில் மணல் அள்ள அனுமதித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் ஏ.ஆர்.பி. முருகேசன், தி.மு.க. நகர் செயலாளர் பொன்னுச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    திருவாலங்காடு கொசஸ்தலை ஆற்றில் மணல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டம் 2-வது நாளாக தொடர்ந்து வருகிறது.
    திருத்தணி:

    திருவாலங்காடு அருகே உள்ள லட்சுமி விலாசபுரம், கொசஸ்தலை ஆற்றில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கடந்த 1-ந் தேதி முதல் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.

    மணல் குவாரியை தடை செய்யக் கோரி, கடந்த 2-ந் தேதி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். எனினும், கொசஸ்தலை ஆற்றில் மணல் குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    இதனால் லட்சுமி விலாசபுரம் உள்ளிட்ட 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 4-ம் தேதி காலை கொசஸ்தலை ஆற்றில் இறங்கி குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து மணல் குவாரி தொடர்பாக, கடந்த 5-ம் தேதி திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் போலீஸ் பாதுகாப்புடன் மணல் குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் மணல் குவாரியை மூடக்கோரி லட்சுமிவிலாசபுரம் கிராமத்தில் நேற்று முதல் கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

    தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்து வருகிறது. இதில் லட்சுமி விலாசபுரம், பொன்னாங்குளம், பாக சாலை உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
    மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொசஸ்தலை ஆற்றில் இறங்கி பெண்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவள்ளூர்:

    திருவாலங்காடு அருகே உள்ள லட்சுமி விலாசபுரம் கொசஸ்தலை ஆற்றில் குவாரி மூலம் மணல் எடுக்க அரசு அனுமதி அளித்து உள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பே இதனை தடை செய்ய வேண்டும் என்று பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இதையடுத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்த குவாரியில் தற்போது மணல் அள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க கோரி மாவட்ட கலெக்டரிடம் தி.மு.க. எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

    குவாரியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் மணல் எடுத்தால் லட்சுமி விலாசபுரம், பொன்னாங்குளம் மற்றும் பாகசாலை, குப்பம் கண்டிகை, மணவூர் போன்ற பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றி குடிநீர் பிரச்சினை ஏற்படும் என்றும் புகாரில் தெரிவித்திருந்தனர்.

    எனினும் மணல் அள்ளுவதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கொசஸ்தலை ஆற்றில் இறங்கி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கிருந்து ஜே.சி.பி. எந்திரத்தை சிறை பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் திருத்தணி வட்டாட்சியர் நரசிம்மன் மற்றும் திருவாலங்காடு போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தொடர்ந்து அங்கு பதட்டமான நிலை நீடிக்கிறது. இதனால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பொதுமக்கள், விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் கரைகளில் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் ஆழ்துளை கிணறுகளை அமைத்து குடிநீர் வினியோகித்து வருகிறது.

    அனந்தேரி, போந்தவாக்கம், பேரிவிட்டிவாக்கம், மாம்பாகம், வேலகாபுரம், நந்திமங்கலம் உட்டபட 15 ஊராட்சிகளை ஆரணி ஆற்றங்கரையில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வினியோகித்து வருகின்றன.

    இந்த நிலையில் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு முடிவு செய்து ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி உள்ளது.

    இதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மணல் குவாரி அமைக்க கூடாது என்று கோரி ஊத்துக்கோட்டை பொது மக்கள் கடந்த வாரம் ஊத்துக்கோட்டை தாசில்தார் ரவிசந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதேபோல் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் மணல் குவாரி தொடங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இதற்கிடையே மணல் குவாரி தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊத்துக்கோட்டையில் இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மேலும் பொது மக்கள், விவசாயிகள் கிராம நிர்வாக அவுலகம் எதிரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் அரசு மணல் குவாரியை எதிர்த்து தி.மு.க.வினர் ஊத்துக் கோட்டை கிராம நிர்வாக அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.#DMK
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் அரசு மணல் குவாரியை எதிர்த்து தி.மு.க.வினர் ஊத்துக் கோட்டை கிராம நிர்வாக அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட வடக்கு செயலாளர் கி.வேணு தலைமைதாங்கி னார். அவைத்தலைவர் பகலவன், முன்னாள் அமைச்சர் சுந்தரம், முன்னாள் எம்பி கிருஷ்ணசாமி, தீர்மானக்குழு உறுப்பினர் சி.ஹெச்.சேகர், செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் அபிராமி குமரவேல், குணசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    இதில் இளைஞர் அணி அமைப்பாளர் லோக்கேஷ், நகர செயலாளர் அப்துல் ரஷீத், நிர்வாகிகள் மோகன், சம்சுதீன், அப்துல்ரகீம், சிராஜூதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்துக்கு பின்னர் தி.மு.க.வினர் தாலூக்கா அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து தாசில்தார் ரவிச்சந்திரனிடம் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்தனர்.#DMK
    ×