search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rain Flood"

    • மழைவெள்ளம் ஆற்றுபடுகையில் செல்லும் வகையில் ஷட்டர்கள் திறப்பு
    • பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூர் அருகே செய்யாறு அணைக்கட்டு ஆற்று கால்வாய் பாச னம் பெறும் 147 ஏரிகள் நிரம்பியதால் உபரி நீர் ஆற்றுப்படுகையில் வெளி யேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணிதுறையினர் தெரிவித்தனர்.

    பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் பகுதி வழியே செல்லும் செய்யாற்றுப்படுகை யில் நூற்றாண்டு கண்ட அணைக்கட்டு அமைக் கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் பக்க கால்வாய் அமைக்கப் பட்டு மழைக்காலங்க ளில் ஆற்றுப்படுகையில் வரும் வெள்ள நீர் இந்த கால்வாய் வழியே திரும்பி அனுப்பப்பட்டு சுமார் 147 ஏரிகள் நிரம்பும் வகை யில் அமைக்கப்பட்டுள் ளது.

    இந்நிலையில், கடந்த வாரம் மாண்டஸ் புயல் தாக்கத்தால் திருவண்ணா மலை மாவட்டத்தில் கன மழை கொட்டியது. இத னால் ஆற்றுப்படுகையில் வெள்ளம் கரைபுரண்டு சென்றது. இதனை தொடர்ந்து அணைக்கட்டு பகுதியில் : ஆற்று கால்வாய் வழியே தண்ணீர் திருப்பி விடப் பட்டது. இதன் மூலம் ஆற்று கால்வாய் பாச னம் பெறும் சுமார் 147ஏரிகளும் நிரம்பி வழிந்தது.

    இதுகுறித்து பொதுப்பணிதுறையினர் கூறுகை யில், 'ஆற்றுக்கால்வாய் வழியே பயன் பெறும் ஏரி கள் அனைத்தும் நிரம்பி வழிந்து வருகிறது.இதனால் கடந்த 2 நாட்களுக்கு மேலாக அணைக்கட்டில் உள்ள பக்க கால்வாய் ஷட்டர் கள் அனைத்தும் மூடப் பட்டு மழைவெள்ள நீர் ஆற்றுப் படுகையில் செல் லும் வகையில் ஷெட் டர்கள் திறக்கப்பட்டுள் ளது.

    மேலும் ஆற்றுக்கால் வாய் வழியே செல்லும் பாசன நீர் அனைத்து ஏரி களும் நிரம்பி இறுதியில் மதுராந்தகம் ஏரி நிரம்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.

    • தி.மு.க. வட்ட செயலாளர் செல்வகுமார் ‘மழை பெய்தபோது இங்கு வராமல் இப்போது மட்டும் எதற்கு வந்தீர்கள்’ என்று யாழினியிடம் கேட்டார்.
    • இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    போரூர்:

    சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி சாந்தி என்கிற யாழினி. விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர் அசோக் நகர் 135- வார்டு மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார்.

    இவர் கடந்த 2-ந்தேதி அசோக் நகர் 3-வது அவின்யூவில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய சென்றார்.

    அப்போது அங்கு வந்த தி.மு.க. வட்ட செயலாளர் செல்வகுமார் 'மழை பெய்தபோது இங்கு வராமல் இப்போது மட்டும் எதற்கு வந்தீர்கள்' என்று யாழினியிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி யாழினி கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    கடந்த மாநகராட்சி தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத ஆத்திரத்தில் இருந்து வந்த தி.மு.க வட்ட செயலாளர் செல்வகுமார் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய சென்ற என்னை மக்கள் பணி செய்ய விடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தார்.

    அவருக்கு உடந்தையாக முன்னாள் தி.மு.க கவுன்சிலர் கோ.சு.மணியும் என்னிடம் தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டார். ஆகவே இருவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதேபோல் தி.மு.க வட்டச் செயலாளர் செல்வகுமாரும் கே.கே.நகர் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மோட்டார் பம்பு மூலம் நீரை வெளியேற்றும் பணியில் கட்சி நிர்வாகிகளுடன் ஈடுபட்டு வந்தேன். மழையின் போது இந்த பக்கமே வராத கவுன்சிலர் யாழினி சம்பவத்தன்று வந்து ஆட்களை வைத்து ஆய்வு செய்வது போல செல்போனில் படம் பிடித்தார்.

    இதுபற்றி கேட்ட போது, 'நீ யார்' என்று கேட்டு என்னையும் உடன் இருந்த நிர்வாகிகளையும் தகாத வார்த்தைகளால் பேசிய கவுன்சிலர் யாழினி, அவரது கணவர் பாஸ்கர் இருவரும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். ஆகவே யாழினி, அவரது கணவர் பாஸ்கர் இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இரு தரப்பினர் கொடுத்த புகார் மீதும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறப்பு
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. மழை காலத்தில் ஏற்படும் பாதிப்பு களை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளாக 23 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் போது அவர்களை தங்க வைக்க 26 நிவாரண மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக 24 பெண்கள் உட்பட மொத்தம் 239 முதல்நிலை பொறுப்பாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    வருவாய்த் துறையின் மூலம் வேலூர் மாவட்டத்தில் வட்ட அளவில் பல்துறை அடங்கிய 6 குழுக்களும், உள்வட்ட அளவில் 20 குழுக்களும் அலுவலர்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. இந்த குழுக்களில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட 11 துறைகளின் அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் மழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை அவர்களது துறை தலைமைக்கு தெரியப்படுத்தி உடனுக்குடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.

    மழை வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண். "1077" மற்றும் 0416-2258016 ஆகிய தொலைபேசி எண்களில் மழை வெள்ள பாதிப்புகளை தெரிவிக்கலாம்.

    இந்த மழை வெள்ள பாதிப்புகளை உடனடியாக சீரமைக்கவும், அவற்றின் நிலை குறித்து கண்காணிக்கவும் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் சார்புத் துறை அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். மேலும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய வகையில்

    கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேலூர் வட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்.0416-2220519.

    காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம்- 0416-2297647,

    அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகம்-9445461811. கே.வி.குப்பம் வட்டாட்சியர்

    அலுவலகம்- 9629472352, குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் 04171-221177 மற்றும் பேரணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் 04171-292748 பொதுமக்கள் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து இந்த தொலைபேசி எண்களிலும் தெரிவிக்கலாம்.

    இவை அந்தந்த தலைமையிடத்து துணை வட்டாட்சியர் நிலையில் கண்காணிக்கப்படும்.

    மழை வெள்ளம் செல்லும் சாலைகள் மற்றும் பாலங்களில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும், மழை காலங்களில் மின்சாதன பொருட்களை பாதுகாப்பான முறையில் உபயோகப்படுத்த வேண்டும்.

    தேவையான அளவிற்கு மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டிகளை இருப்பில் வைத்திருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை குளம், குட்டை மற்றும் ஏரி ஆகிய நீர்தேங்கியுள்ள பகுதிகளில் விளையாடவோ, செல்பி புகைப்படம் எடுக்கவோ அனுமதிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • பெங்களூரு இந்திராநகர் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் அப்பகுதியில் உள்ள 100 அடி சாலையில் 6 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
    • பெங்களூரு மத்திகெரே பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கனமழை பெங்களூர் நகர மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. ஏராளமான இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

    வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். சர்ஜாப்புரா ரோட்டில் சாலையில் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ரெயின்போ லே-அவுட் அருகே உள்ள ஒரு கிரானைட் கற்கள் விற்பனை கடையில் வெள்ளம் புகுந்ததால் அந்த கடை முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அதுபோல பஸ் நிறுத்தமும் தண்ணீரில் மிதக்கிறது. சர்ஜாப்புரா ரோட்டில் உள்ள விப்ரோ தகவல் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தை தண்ணீர் சூழ்ந்து உள்ளது.

    விப்ரோ நிறுவனத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அந்த நிறுவனத்தின் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்தும் இடத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் 50 கார்கள் தண்ணீரில் மூழ்கின. இதுபோல சர்ஜாப்புரா ரோட்டில் உள்ள கன்ட்ரிசைட் என்ற அடுக்குமாடி குடியிருப்பை சுற்றியும் 6 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளது.

    இதனால் அந்த குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட கார்கள், இருசக்கர வாகனங்கள் மூழ்கியுள்ளன. சர்ஜாப்புரா ரோட்டில் தேங்கி இருந்த மழைநீரில் ஒரு சொகுசு கார் சிக்கி கொண்டது. இதனால் அந்த காரில் வந்தவர்கள் காரை சாலையில் விட்டுவிட்டு சென்று விட்டனர். பெங்களூருவை பொறுத்தவரை கோடீஸ்வரர்களின் உலகம் எனலாம். 150-க்கும் மேற்பட்ட முக்கிய நிறுவனங்களை சேர்ந்த தொழில் அதிபர்கள், கோடீஸ்வரர்கள் ஏராளமானோர் இங்கு உள்ளனர். இந்த பெரும் பணக்காரர்களையும் கன மழை வெள்ளம் அவர்களை சாதாரண மக்களை போல தத்தளிக்கும் நிலைக்கு ஏற்படுத்திவிட்டது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால், தண்ணீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்த தொழில் அதிபர்கள் பெரும்பாலோர் படகுகளில் மீட்கப்பட்டனர்.

    அருகிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இவர்கள் அறை எடுத்து குடும்பத்தோடு தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் முக்கிய ஓட்டல்கள் 10 முதல் 15 நாட்களுக்கு முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓட்டல்களில் அறைக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. ஒரு தொழிலதிபர் ஒரு ஹோட்டலில் நான்கு பேருக்கு ஒரு இரவுக்கு ரூ.42ஆயிரம் கொடுத்து தங்கினார்.

    மழை வெள்ளம் அதிகமாகி உள்ளதால் மாநிலப் பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்களின் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 5 ஆயிரம் பேரை இவர்கள் மீட்டனர்.

    பெங்களூரு இந்திராநகர் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் அப்பகுதியில் உள்ள 100 அடி சாலையில் 6 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் உண்டானது. பெங்களூரு மத்திகெரே பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது.

    இதில் மரத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 கார்கள் சேதம் அடைந்தன. பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளியில் பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. கனமழை பெய்து வருவதால் பெங்களூரு மகாதேவபுரா பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. அப்பகுதியில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சேதம் அடைந்தன. இதனால் கடந்த 3 நாட்களாக மகாதேவபுராவில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு அருகே அமைந்துள்ளது நந்தி பெட்டா மலைப்பகுதி. இந்த பகுதி சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்டது. இந்த மலையில் கனமழையால் 2 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

    துமகூரு மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் சேலூரில் 11 வீடுகள், சி.எஸ்.புராவில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. மதுகிரி தாலுகாவில் 170 கிராமங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. ஷிரா தாலுகா கல்லம்பெல்லாவிலும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

    கொப்பல் மாவட்டம் எலபுர்கா தாலுகா தொண்டேஹல்லா கிராமத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 2 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் பெயர்கள் மகேஷ், நிங்கப்பா ஆகும். இவர்கள் 2 பேரும் கதக் மாவட்டம் முண்டரகி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தனர்.

    எலபுர்காவில் நடந்த விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணிக்கு வந்துவிட்டு திரும்பிய போது அவர்கள் உயிரிழந்து உள்ளனர். பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளியில் பெய்த கனமழைக்கு கோழி பண்ணையில் தண்ணீர் புகுந்ததால் 12 ஆயிரம் கோழிகள் செத்தன.

    அதுபோல கே.ஆர்.புரத்தில் பெய்து வரும் கனமழைக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. விதான சவுதாவின் தரைதளத்திற்கு கீழ் உணவகத்தில் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. அதேபோல் விதான சவுதா வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரி மற்றும் போலீஸ் நிலைய கட்டிடங்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்து தேங்கி நின்றது.

    இதனால் அங்கு இருந்த மருந்து-மாத்திரைகள் மற்றும் பொருட்கள் நீரில் கலந்து சேதம் அடைந்தன.

    ராமகொண்டனஹள்ளி பகுதியில் உள்ள ஷிலவந்தகெரே, வர்த்தூர் ஆகிய ஏரிகள் உடைந்தன. இதனால் ஏரிகளில் இருந்து வெள்ளம் சீறிப்பாய்ந்த தண்ணீர் டி-சைட் அடுக்குமாடி குடியிருப்பை சூழ்ந்தது. இதனால் தரைமட்டத்தில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதுபற்றி அறிந்ததும் பேரிடர் மீட்பு குழுவினர் ரப்பர் படகுகளில் சென்று அந்த குடியிருப்பில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். பரிசல்கள், பொக்லைன் எந்திரங்களும் மீட்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டன. அந்த வாகனங்கள் மூலமும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்கள் மீட்கப்பட்டனர். சில இடங்களில் டிராக்டர்கள் மூலம் மக்கள் மீட்கப்பட்டனர்.

    ஏரிகள் உடைப்பு காரணமாக பெல்லந்தூர், காடுகோடி, சர்ஜாப்புரா ரோடு, ராமகொண்டனஹள்ளி பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. இதனால் அந்த குடியிருப்புகள் தீவு போல் காட்சி அளிக்கிறது. அந்த குடியிருப்புகளில் உள்ள சுமார் 4 ஆயிரம் வீடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுபோல உரமாவு பகுதியில் சாய் லே-அவுட்டில் 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. பெங்களூரு-சென்னை சாலையில் உள்ள ஏராளமான சுரங்கப்பாதைகளில் தண்ணீர் 2 அடிக்கு மேல் தேங்கி நிற்கிறது.

    கர்நாடகத்தில் மழை வெள்ள சேதங்கள் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 15 மாவட்ட கலெக்டர்களுடன் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் இருந்தபடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். உத்தர கர்நாடகா, தக்சின் கர்நாடகாவிற்கு இன்று தீவிர கனமழைக்கான ரெட் அலர்ட். பெங்களூருக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    • நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக மழைநீர் குடியிருப்புகளில் புகுந்தது.
    • மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண்.15 அய்யனார் தோட்டம், கோட்டம் எண்.16 கோவிந்தக்கவுண்டர் தோட்டம், டி.வி.எஸ் ஓடை, சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண்.26 சாமிநாதபுரம் ஓடை, டாக்டர் இரத்தினம் தெரு, அத்வைத்த ஆசிரமம் ரோடு, தோப்புக்காடு ஆகிய பகுதிகளில் மழைநீர் குடியிருப்புகளில் புகுந்தது. மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.

    பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் வீதி வீதியாகச் சென்று பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகள் குறைகளையும் கேட்டறிந்த தோடு குடியிருப்புகளை சுற்றியுள்ள ஓடைகளில் உடனடியாக தூர்வாரி இனி வரும் காலங்களில் மழை பெய்யதாலும் மழைநீர் குடியிருப்பு பகுதிக்குள் புகாதவாரு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினர்.

    வெள்ள நிவாரண பணியில் 6 ஜே.சி.பி எந்திரங்கள், 3 டிப்பர்கள், 20 நீர் இரைக்கும் மோட்டார்கள், 3 காம்பேக்ட் லாரிகள், 1 இட்டாச்சி, 3 டிரேக்டர்கள் போன்ற வாகனங்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தெருக்களில் உள்ள சகதிகளை அகற்றிட 200க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் ஈடுப்படுத்தப் பட்டுள்ளார்கள்.

    இந்த ஆய்வின் போது மண்டல குழுத்தலைவர்கள் கலையமுதன், உமாராணி, மாநகர நல அலுவலர் யோகானந், உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், செல்வராஜ், சுகாதார அலுவலர்கள் பாலு, மணிகண்டன், சுகாதார ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

    • கோவிலில் கணபதி ஹோமம், நான்கு கால பூஜைகள் நடந்தது.
    • மாலை அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் பள்ளாங்குட்டை யில் உள்ள பொன்னியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலில் கணபதி ஹோமம், நான்கு கால பூஜை கள் நடந்தது.

    யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் பொன்னியம்மன் கோவில் விமான கோபுரத்தில் உள்ள கலசத்தில் ஊற்றி மகா கும்பா பிஷேகத்தை நடத்தினர் . மாலை அம்மனுக்கு திருக்கல் யாணம் நடந்தது.

    அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நகர வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீதி உலாவுக்கு முன் னால் செண்டை மேளம் இசைக்கப்பட்டது. வாண வேடிக்கைகள் நடந்தது.

    விழாவை பொன்னியம் மன் ஆலய அறக்கட்டளை குழுவினர் செங்குந்தர் மரபினர், ஊர் பொதுமக்கள் முன் னின்று நடத்தினர்.

    • கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • அரக்கோணத்தில் 67 மி.மீ. மழை பதிவானது

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், சோளிங்கர், காவேரிப்பாக்கம் பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    இந்த பகுதிகளில் நீண்ட நேரம் மழை பெய்ததால் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிகபட்சமாக அரக்கோணத்தில் 67 மில்லி மீட்டர், சோளிங்கரில் 52 மீட்டர் மழையும் பதிவானது.

    ஆற்காடு, வாலாஜா பகுதிகளிலும் கனமழை பெய்தது. நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மழைநீர் கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஆற்காடு 22.2, காவேரிபாக்கம் 30, அம்மூர் 19, கலவை 25.2, அரக்கோணம் 67, சோளிங்கர் 52,

    மழை வெள்ளம்-நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடகில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. #Karnatakarains #Kodaguflood
    குடகு:

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொட்டி தீர்த்த கனமழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழை, நிலச்சரிவால் உறவுகளையும், உடைமைகளையும் இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் பரிதவித்து வருகிறார்கள். குடகு மாவட்டத்தில் உள்ள 51 நிவாரண முகாம்களில் சுமார் 4 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மண்ணில் புதைந்த 10-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சிலரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.



    இதற்கிடையே, குடகு மாவட்டத்தில் மேலும் 10 பேர் மாயமாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்துக்கு முதல்-மந்திரி குமாரசாமி, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் குடகில் தொடர்ந்து முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பில், ஹெலி கேமராக்கள் மூலம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். குடகில் மழை நின்றுள்ளதால், மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மறுசீரமைப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    மடிகேரி டவுனில் உள்ள வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால், அங்குள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். இந்த நிலையில் தற்போது மழை நின்றதால், வெள்ளம் வடிந்து வருகிறது. இதனால், நிவாரண முகாம் களில் இருந்த மக்கள், தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகிறார்கள். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாநில அரசு சார்பில் அறிவித்த ஒரு குடும்பத்துக்கு ரூ.3,800-ம், சமையல் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு அலுமினிய கொட்டகை அமைக்கும் பணியும் தீவிரமாக நடக்கிறது.

    மடிகேரி அருகே அட்டிஒலே பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீட்கப்பட்ட பிரான்சிஸ் என்பவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பிரான்சிசின் உடலை நேற்று அவருடைய உறவினர்கள் அடக்கம் செய்தனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரான்சிசின் குடும்பத்தினருக்கு ரூ.5.38 லட்சம் நிவாரண தொகைக் கான காசோலை வழங்கப்பட்டது. இந்த காசோலையை பா.ஜனதா எம்.எல்.ஏ. அப்பச்சு ரஞ்சன், அவருடைய குடும்பத்தினரிடம் வழங்கினார்.

    மேலும், கரடூர், ஆலேறி உள்ளிட்ட கிராமங்களில் கிராம பஞ்சாயத்து சார்பில் அரிசி, உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. குடகில் மழை நின்றாலும், ஏராளமான மக்கள் நிவாரண முகாம்களில் பரிதவித்து வருகிறார்கள். அவர்களுக்கு மாநிலம் முழுவதும் நிவாரண பொருட்கள் குவிந்து வருகிறது. ஆனால், தங்களுக்கு வேண்டிய நிவாரண பொருட்கள் கிடைப்பதில்லை என்றும், தங்களுக்கு உடனடியாக நிரந்தர வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மடிகேரி டவுன் சாமுண்டீஸ்வரி நகர் பகுதியில் சுமார் 200 வீடுகள் உள்ளன. அங்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். குடகில் ஏற்பட்ட மழை வெள்ளம், நிலச்சரிவால் அந்தப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிலையில், தற்போது அந்தப்பகுதியில் நிலத்தில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதன்காரணமாக அங்கு வசித்து வரும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    மேலும், இந்த விரிசல், நிலச்சரிவுக்கான அறிகுறி என்றும் கருதப்படுகிறது. இதனால் அங்கும் நிலச்சரிவு ஏற்படும் என்று பீதியில் உள்ள மக்கள் வேறு பகுதிக்கு சென்று வருகிறார்கள்.  #Karnatakarains #Kodaguflood

    செங்கோட்டை பகுதியில் மழை வெள்ளத்தால் சாகுபடி செய்துள்ள 150 எக்டேர் பரப்பில் விவசாயிகளுக்கு 50 சதவீதத்துக்கும் மேலாக மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    செங்கோட்டை:

    செங்கோட்டை வட்டாரத்தில் புளியரை, தெற்குமேடு, பகவதிபுரம், கற்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாகுபடி செய்துள்ள கார் பருவ நெல் பயிர்களில் அண்மையில் பெய்த அதிகப்படியான மழை மற்றும் அதிவேக காற்றினால் ஏற்பட்ட சீதோஷ்ணநிலை மாற்றம் காரணமாக நெற்கதிர்கள் வெளிவரும் தருவாயில் மகரந்த சேர்க்கை இல்லாமல் நெல் மணிகள் பதராகி மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து நெல்லை வேளாண்மை இணை இயக்குநர் செந்திவேல் முருகன் வழிகாட்டுதலின்படி, அம்பை நெல் ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் ஆறுமுகச்சாமி, மண்ணியல் பேராசிரியர் ஜோதிமணி, உழவியல் உதவி பேராசிரியர் ஸ்ரீரெங்கசாமி, நோயியல் உதவி பேராசிரியர் ராம்ஜெகதீஷ், நெல்லை மாவட்ட துணை வேளாண்மை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) பாலசுப்பிரமணியம், வேளாண்மை உதவி இயக்குநர் நல்லமுத்துராசா, துணை வேளாண்மை அலுலவர் ஷேக்முகைதீன், உதவி வேளாண்மை அலுவலர் ஜானகிராமன் ஆகியோர் கொண்ட குழு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வில் நெல் பயிர்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு அண்மையில் தொடர்ந்து பெய்த அதிகப்படியான மழை, அதிக வேகமான காற்றினால் நெற் கதிர்கள் வெளிவந்து பால் பிடிக்கும் தருவாயில் மகரந்த சேர்க்கை ஏற்படாமல் மணிகள் அனைத்தும் பதராகி காய்ந்து உள்ளது. இதனால் இப்பகுதியில் சாகுபடி செய்துள்ள 150 எக்டேர் பரப்பில் விவசாயிகளுக்கு 50 சதவீதத்துக்கும் மேலாக மகசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து இப்பகுதியில் நெல் சாகுபடி செய்து நெற் கதிர்கள் பதராகி பாதிப்புக்குள்ளான அனைத்து விவசாயிகள் விவரம் சேகரித்து கணக்கிடப்பட்டு அரசுக்கு அனுப்பி உரிய நிவாரண தொகை பெற்று தர வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அதற்கான நடவடிக்கை உடனே மேற்கொள்ளப்படும் என்று வேளாண்மைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கொடைக்கானல் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் பலியாகினர்.

    பெருமாள்மலை:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. 20 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் கன மழையால் நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பண்ணைக்காடு பகுதியிலும் நேற்று பெய்த கன மழையால் மூலையாற்றில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

    பண்ணைக்காட்டைச் சேர்ந்த ஜெயலெட்சுமி (வயது 55), திவ்யா (20), பாண்டிச்செல்வி (14), விஜயராகவன் (28), சரவணன் (40), முருகவேல் (45). ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் தாழோடை பகுதியில் தோட்ட வேலைக்கு சென்றனர்.

    மாலை நேரம் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது காட்டாற்று வெள்ளத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இருந்த போதும் எப்படியாவது வீடு திரும்பி விட வேண்டும் என்பதற்காக 6 பேரும் ஆற்றை கடக்க முயன்றனர். அப்போது தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

    வெள்ளத்தில் சிக்கிய 6 பேரும் அபயகுரல் எழுப்பினர். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த தொழிலாளர்கள் ஒன்று கூடினர். இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். அவர்களும் ஆற்றில் இறங்கினர். இதன் விளைவாக விஜயராகவன், பாண்டிச் செல்வி, சரவணன், முருகவேல் ஆகிய 4 பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

    மேலும் ஜெயலெட்சுமி, திவ்யா ஆகியோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை மீட்க முடியாததால் வனத் துறையினர் மற்றும் கொடைக்கானல் போலீசார், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் 500 மீட்டர் தூரத்தில் ஜெயலெட்சுமி பிணமாக மீட்கப்பட்டார். இன்னும் 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டிருந்தால் மலையில் இருந்து கீழே விழுந்து உடல் சிதையும் நிலை ஏற்பட்டிருக்கும். மேலும் உடலும் கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட திவ்யா உயிரிழந்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அவரது உடலை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    தொடர் மழை காரணமாக நேற்று இரவு தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இன்று காலை மீண்டும் சம்பவ இடத்துக்கு சென்று திவ்யாவை தேடும் வேட்டையில் வனத்துறை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    ×