search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானலில் பலத்த மழை காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் பலி
    X

    கொடைக்கானலில் பலத்த மழை காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் பலி

    கொடைக்கானல் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் பலியாகினர்.

    பெருமாள்மலை:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. 20 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் கன மழையால் நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பண்ணைக்காடு பகுதியிலும் நேற்று பெய்த கன மழையால் மூலையாற்றில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

    பண்ணைக்காட்டைச் சேர்ந்த ஜெயலெட்சுமி (வயது 55), திவ்யா (20), பாண்டிச்செல்வி (14), விஜயராகவன் (28), சரவணன் (40), முருகவேல் (45). ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் தாழோடை பகுதியில் தோட்ட வேலைக்கு சென்றனர்.

    மாலை நேரம் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது காட்டாற்று வெள்ளத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இருந்த போதும் எப்படியாவது வீடு திரும்பி விட வேண்டும் என்பதற்காக 6 பேரும் ஆற்றை கடக்க முயன்றனர். அப்போது தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

    வெள்ளத்தில் சிக்கிய 6 பேரும் அபயகுரல் எழுப்பினர். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த தொழிலாளர்கள் ஒன்று கூடினர். இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். அவர்களும் ஆற்றில் இறங்கினர். இதன் விளைவாக விஜயராகவன், பாண்டிச் செல்வி, சரவணன், முருகவேல் ஆகிய 4 பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

    மேலும் ஜெயலெட்சுமி, திவ்யா ஆகியோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை மீட்க முடியாததால் வனத் துறையினர் மற்றும் கொடைக்கானல் போலீசார், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் 500 மீட்டர் தூரத்தில் ஜெயலெட்சுமி பிணமாக மீட்கப்பட்டார். இன்னும் 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டிருந்தால் மலையில் இருந்து கீழே விழுந்து உடல் சிதையும் நிலை ஏற்பட்டிருக்கும். மேலும் உடலும் கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட திவ்யா உயிரிழந்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அவரது உடலை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    தொடர் மழை காரணமாக நேற்று இரவு தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இன்று காலை மீண்டும் சம்பவ இடத்துக்கு சென்று திவ்யாவை தேடும் வேட்டையில் வனத்துறை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×