என் மலர்
உள்ளூர் செய்திகள்

மழை வெள்ளத்தை பார்வையிட்டபோது மோதல்: தி.மு.க. வட்ட செயலாளர் மீது, விடுதலை சிறுத்தைகள் பெண் கவுன்சிலர் புகார்
- தி.மு.க. வட்ட செயலாளர் செல்வகுமார் ‘மழை பெய்தபோது இங்கு வராமல் இப்போது மட்டும் எதற்கு வந்தீர்கள்’ என்று யாழினியிடம் கேட்டார்.
- இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
போரூர்:
சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி சாந்தி என்கிற யாழினி. விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர் அசோக் நகர் 135- வார்டு மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார்.
இவர் கடந்த 2-ந்தேதி அசோக் நகர் 3-வது அவின்யூவில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய சென்றார்.
அப்போது அங்கு வந்த தி.மு.க. வட்ட செயலாளர் செல்வகுமார் 'மழை பெய்தபோது இங்கு வராமல் இப்போது மட்டும் எதற்கு வந்தீர்கள்' என்று யாழினியிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி யாழினி கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
கடந்த மாநகராட்சி தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத ஆத்திரத்தில் இருந்து வந்த தி.மு.க வட்ட செயலாளர் செல்வகுமார் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய சென்ற என்னை மக்கள் பணி செய்ய விடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தார்.
அவருக்கு உடந்தையாக முன்னாள் தி.மு.க கவுன்சிலர் கோ.சு.மணியும் என்னிடம் தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டார். ஆகவே இருவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதேபோல் தி.மு.க வட்டச் செயலாளர் செல்வகுமாரும் கே.கே.நகர் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மோட்டார் பம்பு மூலம் நீரை வெளியேற்றும் பணியில் கட்சி நிர்வாகிகளுடன் ஈடுபட்டு வந்தேன். மழையின் போது இந்த பக்கமே வராத கவுன்சிலர் யாழினி சம்பவத்தன்று வந்து ஆட்களை வைத்து ஆய்வு செய்வது போல செல்போனில் படம் பிடித்தார்.
இதுபற்றி கேட்ட போது, 'நீ யார்' என்று கேட்டு என்னையும் உடன் இருந்த நிர்வாகிகளையும் தகாத வார்த்தைகளால் பேசிய கவுன்சிலர் யாழினி, அவரது கணவர் பாஸ்கர் இருவரும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். ஆகவே யாழினி, அவரது கணவர் பாஸ்கர் இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இரு தரப்பினர் கொடுத்த புகார் மீதும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






