search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "property dispute"

    சொத்து தகராறு காரணமாக கொல்லிமலை அருகே தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள சோளக்காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 67), விவசாயி. இவரது மகன் ரவிச்சந்திரன் (38). லாரி டிரைவர்.

    கடந்த 28-ந் தேதி இரவு தந்தை, மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ரவிச்சந்திரன் தனக்கு சொத்தில் பங்கு பிரித்து தரும்படி தந்தை ராமசாமியிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். ஆனால் அதற்கு சொத்தில் தற்போது எந்தவித பங்கும் தர முடியாது என்று ராமசாமி கூறியதாக தெரிகிறது.

    இதில் ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து தந்தையின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் மண்டை உடைந்து ராமசாமிக்கு ரத்தம் கொட்டியது. வலியால் அலறி துடித்த அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ராமசாமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து வாழவந்திநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குபதிவு செய்து தந்தையை கொன்ற ரவிச்சந்திரனை கைது செய்தார்.

    பின்னர் அவர் நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். மகனே தந்தையை அடித்து கொன்ற சம்பவம் வாழவந்திநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கிருமாம்பாக்கம் அருகே சொத்து தகராறில் தாய்- மகனை தாக்கிய உறவினர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பாகூர்:

    கிருமாம்பாக்கம் அருகே மணப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவரது தம்பிகள் ரவிச்சந்திரன், கிருஷ்ணராஜ். இவர்கள் 3 பேருக்கும் ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் 3 பேருக்கும் பொதுவான இடத்தில் இருந்த வாழை மரங்கள் புயல் காற்றினால் சாய்ந்து போனது. இதனை நாகராஜனின் மகன் ராஜேந்திரன் (வயது 24) அப்புறப்படுத்தினார்.

    அப்போது அங்கு வந்த ரவிச்சந்திரன், கிருஷ்ணராஜ் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 3 பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    இதில், ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரனும், கிருஷ்ணராஜும் சேர்ந்து ராஜேந்திரனை கையாலும், கல்லாலும் தாக்கினர். மேலும் ராஜேந்திரனின் வலது கையை கடித்து காயப்படுத்தினர்.

    இதில் காயம் அடைந்த ராஜேந்திரன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று இதுபற்றி கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

    பின்னர் அவர் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது போலீசில் புகார் கொடுத்த ஆத்திரத்தில் ரவிச் சந்திரனும், கிருஷ்ணராஜும், ராஜேந்திரனின் தாய் கமலத்தை தாக்கி அங்கிருந்த குடிநீர் குழாயை உடைத்து சேதப்படுத்தினர்.

    இதுபற்றி ராஜேந்திரன் கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, ஏட்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ரவிச்சந்திரன், மற்றும் கிருஷ்ணராஜ் ஆகிய இருவரையும் தேடி வருகிறார்கள்.

    முசாபர் நகர் அருகே சொத்துப் பிரச்சனை தீராததால் கோவிலுக்குள் புகுந்த வாலிபர் சிவலிங்கத்தை பெயர்த்து எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    முசாபர் நகர்:

    உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் அருகில் உள்ள பிடஹெடி கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக் யாதவ். இவரது குடும்பத்தில் அவருக்கும் மற்றவர்களுக்கும் இடையே சொத்துப் பிரச்சனை இருந்து வந்தது.

    சிவ பக்தரான தீபக் யாதவ் சொத்துப் பிரச்சனை சுமூகமாக தீர வேண்டி வழிபாடு நடத்தி வந்தார். அவருக்கு சொத்துப் பிரச்சனை தீரவில்லை.

    இந்த நிலையில் மனவேதனை அடைந்த தீபக் யாதவ் தான் வழக்கமாக செல்லும் சிவன் கோவிலுக்கு சென்றார். அங்கு திடீர் என்று ஆவேசம் அடைந்த அவர் சிவலிங்கத்தை கடப்பாரையால் பெயர்த்து எடுத்தார். சிலையை தூக்கிச் சென்று சேதப்படுத்தினார்.

    முன்னதாக அவர் ஆவேசமாக சத்தம் போட்டு குரல் எழுப்பினார். இதைப் பார்த்து பூசாரியும் அங்கு இருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று தீபக் யாதவை கைது செய்தனர். சிவலிங்கத்தை போலீசார் கைபற்றி கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. கோவில் முன் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    கம்பைநல்லூர் அருகே பள்ளி மாணவனை அரிவாளால் வெட்டி கொன்ற மர்ம கும்பல் தாயையும் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி கலா.இவர்களது மகன் வெற்றிவேல் (வயது 16). இவர் அதேபகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று இரவு வீட்டில் கலாவும், வெற்றிவேலும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் வந்து கதவை தட்டினர். யாரோ கதவை தட்டுகின்றனர் என்று கதவை திறந்த வெற்றிவேல் அதிர்ச்சி அடைந்தார். அப்போது வீட்டில் வெளியில் மர்ம நபர்கள் அரிவாளுடன் நின்று கொண்டிருந்தனர். உடனே கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் வெற்றிவேலை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

    இதனால் வலியால் வெற்றிவேல் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கலாவையும் அவர்கள் சரமாரியாக வெட்டினர்.

    இவர்களது அலறல் சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில் வெற்றிவேல் ரத்த வெள்ளத்தில் அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து வெற்றிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த கலாவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    சொத்து தகராறு காரணமாக கலாவையும் அவரது மகனையும் மர்ம நபர்கள் வெட்டினார்களா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    கும்பகோணம் அருகே சொத்து தகராறில் தந்தை மற்றும் அண்ணனை தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.
    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே கொத்தன்குடி ரெங்கநாதன் கீழத்தெருவை சேர்ந்தவர் சந்திரகாசன்(வயது 53). இவரது தம்பி ராஜாங்கம். இவரது தந்தை ரெங்கநாதன்.

    ராஜாங்கம் தனது தந்தை ரெங்கநாதனிடம் அடிக்கடி சொத்தை பிரித்து கேட்டு தகராறு செய்வாராம். இந்நிலையில் இது குறித்த தகராறில் தனது தந்தையை ராஜாங்கம் தாக்கி உள்ளார். இதை கண்டு தடுக்க வந்த அவரது அண்ணன் சந்திரகாசனையும் ராஜாங்கம் தாக்கினாராம். இதில் காயம் அடைந்த சந்திரகாசன் ரெங்கநாதன் ஆகிய இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இச்சம்பவம் பற்றி சுவாமிமலை போலீசாரிடம் சந்திரகாசன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரேகாராணி வழக்குப்பதிவு செய்து ராஜாங்கம், கும்பகோணம் மேலத்தெரு ராமலிங்கம் மகன் சிவா, அரியலூர் மாவட்டம் உடையார் தாலுக்கா கம்பிகுளம் பகுதி கோவிந்த சாமி மகன் ராமலிங்கம் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதில் ராஜாங்கத்தை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர். #Tamilnews
    அரியலூர் அருகே சொத்து பிரச்சனை காரணமாக மகனே தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 80). இவருக்கு பரமசிவம் (55) என்ற மகனும், வளர்மதி (52) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்தி அவருக்கு சொந்தமான சொத்துக்களை வளர்மதிக்கு எழுதி வைத்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கும் பரமசிவத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்றிரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பரமசிவம் , கிருஷ்ணமூர்த்தியை தாக்கி காலால் மிதித்தார். இதில் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பரமசிவத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    சங்ககிரி அருகே சொத்து தகராறில் தந்தையை மகன் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள காளிப்பட்டி பிரிவு ரோடு பகுதியை சேர்ந்தவர் சின்ன சாமி (வயது 70). டி.வி. மெக்கானிக்.

    இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் 33 சென்ட் நிலம் உள்ளது. அதனை பிரித்து கொடுக்குமாறு சின்னசாமியின் மூத்த மகன் சந்திரசேகர் (வயது31) கடந்த சில ஆண்டுகளாக தந்தையிடம் வற்புறுத்தி வந்தார்.

    ஆனால் சின்னசாமி நிலத்தை பிரித்து கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்றும் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த சந்திரசேகர் தந்தை என்றும் பாராமல் அவரது கழுத்தை பிடித்து நெரித்தார். இதில் மூச்சு திணறி சின்னசாமி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதை பார்த்த சந்திரசேகர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    கொலை செய்யப்பட்ட சின்னசாமியின் இளைய மகன் ரமேஷ் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்றிரவு அவர் வேலை முடிந்து இரவு 11 மணியளவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது தந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    பின்னர் சம்பவம் குறித்து சங்ககிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரச ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் தலைமறைவான சந்திரசேகரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். சொத்து தகராறில் தந்தையை, மகன் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கொலை செய்யப்பட்ட சின்னசாமியின் மனைவி குழந்தையம்மாள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதனால் சின்னசாமி தனியாக வசித்து வந்தார்.

    அவரது வீட்டின் அருகில் சந்திரசேகர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சந்திரசேகருக்கு சந்தியா (25) என்ற மனைவியும், சஞ்சனா (3) என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
    ×