search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pollachi issue"

    பொள்ளாச்சியில் நடந்த பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளை விசாரிக்க தனி கோர்ட்டு அமைக்க வேண்டும் என்று கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார். #pollachiissue #kanimozhi

    தூத்துக்குடி:

    தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொள்ளாச்சியில் நடந்த பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள், வன்முறை சம்பவத்தை அரசும், போலீசும் மூடி மறைக்க பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. அது பெரிய அச்சத்தை உருவாக்கி வருகிறது. இது போன்ற சம்பவங்களால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படும்போது அவர்களின் பெயர்களை வெளியிடக்கூடாது என்று தெளிவாக உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.

    ஆனால் அரசாணையில் கூட பாதிக்கப்பட்டவர்களின் பெயரை அரசு வெளியிட்டுள்ளது. போலீசும் தொடர்ந்து பெயரை வெளியிட்டு வருகிறது. இது இனிமேல் யாரும் புகார் கொடுக்க கூடாது என்பதற்காக, அவர்களை அச்சுறுத்தவே செய்யக் கூடியதாக தோன்றுகிறது.

    7 ஆண்டுகளாக பலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற சூழலில் 4 பேர் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் எந்த பெண் அதிகாரியும் ஈடுபடுத்தப்படவில்லை. இது பல கேள்விகளை எழுப்பக்கூடியதாக உள்ளது. தற்போது வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு உள்ளது.

    இதுவரை விசாரணையில் தாமதம் செய்து போலீசும், அரசும் யாரை காப்பாற்ற நாடகம் நடத்திக் கொண்டு இருந்தார்கள் என்பது முக்கியமான கேள்வி. இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை தாண்டி, பாதிக்கப்பட்ட பெண்கள் வந்து புகார் தெரிவிக்கும் வகையில் தனியாக கோர்ட்டு ஏற்படுத்த வேண்டும்.

    அ.தி.மு.க., பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து இருப்பதால் அவர்கள் பிரதமரை ‘டாடி’ என்று அழைக்கக்கூடிய நிலைக்கு சென்று உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கடம்பூர் அருகே ஓணமாக்குளத்தில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசிய தாவது:-

    தோல்வி பயத்தால் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலம் கடத்தி வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். தமிழகத்தின் எந்த உரிமைகளை இழந்தாலும், ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு செயல்படும் அ.தி.மு.க. அரசு, தமிழ் விரோதிகளான பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

    ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்து விட்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., பின்னர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக தேசிய ஊரக தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்காமல் பா.ஜ.க. அரசு அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்குகிறது.

    அந்த கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை நடத்தும் தொழில் அதிபர்களை விட்டு விட்டு, சில ஆயிரம் ரூபாய் கல்விக்கடன் வாங்கிய மாணவர்களை கடனை திருப்பி செலுத்துமாறு பா.ஜ.க. அரசு மிரட்டுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்று மத்தியில் தி.மு.க. அங்கம்பெறும் ஆட்சியும் அமையும். அப்போது மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார். #pollachiissue #kanimozhi

    பொள்ளாச்சியில் நிகழ்ந்த பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்பாக தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். #KamalHassan #tngovt #edappadipalanisamy
    சென்னை:

    பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான எனது கேள்விகள்? என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் , “தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி ஆகியவற்றை போலீசார் மிக அலட்சியமாக வெளியிட்டனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற அடிப்படை தெரியாமல் போலீசார் செயல்பட்டுள்ளனர்.

    இதனை அடுத்து, வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றிய அரசாணையிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், படிக்கும் கல்லூரி, முகவரி என்று முழு விபரமும் அப்பட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.

    அம்மா வழியில் ஆட்சி செய்யும் அரசு பொள்ளாச்சி விவகாரத்தில் எப்படி மெத்தனமாக இருக்க முடியும்?, வீடியோக்களை குற்றவாளிகள் அழித்துவிட்டதாக கூறும் நிலையில் எப்படி வெளியானது?. பெண்ணைப் பெற்ற எல்லோருக்கும் பதறுகிறதே, உங்களுக்கு பதறவில்லையா?, மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். குற்றவாளிகள் மட்டுமின்றி காப்பாற்ற துடிப்போருக்கும் தண்டனை உண்டு. இந்த விவகாரத்தில் அரசாங்கம் அமைதி காக்கிறது.

    குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், கட்சிக்கும் தொடர்பு இல்லை எனக் கூறுவதில் உள்ள மும்முரம், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனையை அரசு உறுதி செய்யும் எனக் கூறுவதில் இல்லையே ஏன்?” என கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். #KamalHassan #tngovt #edappadipalanisamy
    பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்முறை செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி திருவாரூரில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவாரூர்:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி உள்பட பல பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 பேர் கைது செய்யப்பட்டனர். பெண்களுக்கு எதிராக நடந்த இந்த பாலியல் கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க நிர்வாகி பிரகாஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டணை வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
    ×