search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "palm seeds"

    • ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கடையம் அணைக்கட்டு சாலையோரப் பகுதியில் நூற்றுக்கணக்கான பனை விதைகள் நடுகை செய்யப்பட்டது.
    • தென்பத்து குட்டிகுளக்கரைகளில் இயற்கையான சூழலில் வளர்ந்து வரும் பனங்கன்றுகளை பார்த்துக்கொண்டே நடந்தனர்.

    கடையம்:

    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கடையம் அணைக்கட்டு சாலையை பயன்மிக்க பனைமரச்சாலையாக்கும் பணியில் ஜம்பு ஆறு பாலத்திலிருந்து தென்பத்து குளம் வரையிலான சாலையோரப் பகுதியில் நூற்றுக்கணக்கான பனை விதைகள் நடுகை செய்யப்பட்டது. அத்தோடு கடந்த ஆண்டுகளில் பனை விதைகள் நடுகை செய்யப்பட்ட தென்பத்து குட்டிகுளக்கரைகளில் இயற்கையான சூழலில் வளர்ந்து வரும் பனங்கன்றுகளை பார்த்துக்கொண்டே நடந்தனர்.

    பள்ளி மாணவர்கள் ஜெப்வின், விஷ்ணு,கவின், மெர்வின், செர்வின் மற்றும் பல கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை பனையாண்மை மற்றும் சூழலியல் ஆய்வாளர் பேராசிரியர் பாமோ ஒருங்கிணைத்திருந்தார்.

    • உடன்குடி வணிகர்கள் சங்கத்தின் 5 ஆண்டு விழாவையொட்டி 100-க்கும் மேற்பட்ட பனை மர விதைகளை விதைத்தனர்
    • சங்கத்தின் தலைவர் அம்புரோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    உடன்குடி:

    உடன்குடி வணிகர்கள் சங்கத்தின் 5 ஆண்டு விழாவையொட்டி குலசேகரன்பட்டினம், தருவைகுளத்தில் 100-க்கும் மேற்பட்ட பனை மர விதைகளை விதைத்தனர்.சங்கத்தின் தலைவர் அம்புரோஸ், சங்கச செயலாளர் சதீஷ், இணைச்செயலாளர் ஜெயபால், சங்கதுணைத் தலைவரும் உடன்குடி பேரூராட்சி மன்ற கவுன்சிலருமான பிரதீப் கண்ணன்,பொருளாளர் மனோ. கவுரவ ஆலோசகர் கணேசன், தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்க தலைவர் முகைதீன், கிறிஸ்தியாநகரம் கவாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அடி முதல் நுனி வரை பலன் அளிக்கக்கூடிய பனை மரங்கள் தமிழ்நாட்டில் 5 கோடி அளவில் உள்ளன.
    • 3 வாரங்களில் முளைக்க தொடங்கி விடும். 6 வாரங்களில் முளைப்பு முடிந்து விடும்.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் வட்டாரத்தில் பனை மேம்பாட்டு இயக்கம் மூலம் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் மாநில மரம் மட்டுமல்லாமல் தமிழர்களின் வாழ்வோடு இணைந்துள்ள பனைமரம் நிலத்தடி நீரை அதிகரிக்கும், மண் அரிப்பை தடுக்கும், மண்ணை உறுதிப்படுத்துவதுடன் வளப்படுத்தியும் மண்ணுக்கு ஏற்ற மரமாக விளங்குகிறது. அடி முதல் நுனி வரை பலன் அளிக்கக்கூடிய பனை மரங்கள் தமிழ்நாட்டில் 5 கோடி அளவில் உள்ளன.

    நுங்கு அறுவடை, பதநீர் இறக்குதல், பாய் முடைதல், கூடை பின்னுதல் என பனை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வந்த பனைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது, பனை மரங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பனை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஆண்டு வேளாண் நிதி நிலை அறிக்கையில் பனை மேம்பாட்டு இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்த திட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலமாக விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வழங்கப்படுகிறது.

    பனை விதைகளை சேகரிக்க தேவைப்படும் தாய் பனைகள் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இன்றி அதிக விளைச்சல் கொண்டதாகவும், முறையாக காய்க்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். தாய்ப்பனையில் இருந்து சேகரிக்கப்பட்ட பழுத்த பழங்களை 4 வாரங்களுக்கு நிழலில் குவித்து வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் விரைவில் முளைப்புத் திறன் ஏற்படும். விதைப்பதற்கு முன்பு பனங்கொட்டைகளை 3 மணி நேரம் நீரில் ஊற வைத்தால் 100 சதவீத முளைப்புத்திறனை பெறலாம். பனை மரங்கள் எல்லா வகையான மண்ணிலும் வளரும் தன்மை கொண்டவை. இவற்றை ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம் என்றாலும் கார்த்திகை மாதத்தில் நடவு செய்வதன் மூலம் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

    பனங்கொட்டைகளை நேரடியாக விதைத்தும், நாற்று விட்ட பனங்கிழங்கு எடுத்து நட்டும் பனையை வளர்க்கலாம். நீர் பாய்ச்சுதல் விதைகளை நடவு செய்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். முதல் ஒரு வருடத்திற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 2 முதல் 3 வருடம் வரை மாதம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின் பருவமழை சீராக பெய்தால் நீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இருக்காது. தொழு உரம் மற்றும் மணல் கலந்த கலவையை பாதி குழி வரை நிரப்ப வேண்டும். 3 வாரங்களில் முளைக்க தொடங்கி விடும். 6 வாரங்களில் முளைப்பு முடிந்து விடும்.

    ஒவ்வொரு குழியிலும் ஒரு ஆரோக்கியமான செடியினை விட்டு மற்றவற்றை பிடுங்கி விட வேண்டும். பனைமரம் வளர்ச்சி மெதுவாக இருக்கும். விதைத்து 5 மாதங்கள் கழித்து தான் முதல் குருத்தோலை தோன்றும். 13 முதல் 15 வருடம் கழித்து பதநீர் கொடுக்கும். சராசரியாக ஒரு மரம் வருடத்திற்கு 125 முதல் 150 லிட்டர் பதநீர் கொடுக்கும். ‌ஒரு லிட்டர் பதநீர் காய்ச்சினால் 180 முதல் 250 கிராம் பனைவெல்லம் கிடைக்கும். ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 24 கிலோ பனைவெல்லம் உற்பத்தி செய்ய முடியும். தற்போது மடத்துக்குளம் வட்டாரத்திற்கு தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் வழங்குவதற்காக 1900 பனை விதைகள் இருப்பில் உள்ளது. ‌ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 பனை விதைகள் வழங்கப்பட உள்ளது. குறைவான எண்ணிக்கையில் இருப்பு உள்ளதால் முன்னுரிமை அடிப்படையில் வரும் விவசாயிகளுக்கு பனை விதைகள் வழங்கப்படும். சிட்டா, ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3 ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகினால் உடனடியாக பனை விதைகளை பெற்று நடவு செய்யலாம். ‌விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் வேலிப்பயிராக பனை மரங்களை நடவு செய்வதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

    • வைப்பாற்று ஆற்றுப்படு கையில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நிறைவு விழா மற்றும் 25 லட்சம் பனை விதைகள் நடவும் பணி தொடக்க விழா
    • 3 பேரூராட்சி 139 கிராம ஊராட்சி பகுதிகளுக்கு தலா 2000 பனை விதைகள் வழங்கப்பட்டன.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வைப்பாற்று ஆற்றுப்படு கையில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நிறைவு விழா மற்றும் 25 லட்சம் பனை விதைகள் நடவும் பணி தொடக்க விழா மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது.

    விழாவில் கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பனை விதைகளை நடவு செய்து பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், கூடுதல் கலெக்டர் தாக்ரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, ராதாகிருஷ்ணன், செல்வராஜ், நவநீத கண்ணன், காசி விஸ்வநாதன், அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ் மரங்கள் மக்கள் இயக்கநிர்வாக அதிகாரி ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    3 பேரூராட்சி 139 கிராம ஊராட்சி பகுதிகளுக்கு தலா 2000 பனை விதைகள் வழங்கப்பட்டன. அப்போது விழாவில், கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    பிரம்மனை ஆக்கக்கூடிய கடவுள் என்றும், விஷ்ணுவை காக்கக்கூடிய கடவுள் என்றும், சிவனை அளிக்கக்கூடிய கடவுள் என்றும் கூறுவார்கள்.

    ஆக்குவதை விட பாதுகாக்கக் கூடிய கடவுள் விஷ்ணுவுக்கு தான் மரியாதை அதிகம் என மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. குறிப்பிட்டுச் சொன்னார்.

    தமிழ்நாட்டை பொறுத்த வரை இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் அரியும் சிவனும் ஒன்று என நம்பக் கூடியவர்கள். அந்த அடிப்படையில் அழிக்கக் கூடியவர்களையும் நாம் அழித்துவிட கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் மரங்கள்‍, சுற்றுப்புற சூழலை அழிப்பதற்கு ஏராள மானோர் உள்ளனர்.


    மத நல்லிணக்கத்தை மக்களின் ஒற்றுமையை அழிப்பதற்கு நிறைய பேர் உள்ளனர். அழிக்கக்கூடிய சக்திகளை எல்லாம் நாம் விட்டு விடக்கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    சாதி மதங்களைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கும், மக்களை ஒற்றுமைப்படுத்தக்கூடிய மரக்கன்று நடுதல் போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும்.

    தமிழ் கற்றுக் கொள்வது கஷ்டம் அல்ல. இந்தியாவில் உள்ள அனைவரும் கற்றுக்கொள்ள கூடிய மொழியாக உள்ளது. அதனால் முதலில் அவர்கள் தமிழ் பேசட்டும். நாம் அதுக்கு அப்புறம் யோசிக்க லாம். தமிழ் அழகான மொழி,

    இவ்வாறு அவர் பேசினார்.

    • செக்காரக்குடி பஞ்சாயத்து பகுதிக்கு உட்பட்ட கிளிகவுண்டர்குளம், செக்காரக்குடி மேலக்குளம் ஆகிய குளங்களில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் சுமார் 1000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகள் மூலமாக பனை விதை நடும் பணி நடந்தது.

    செய்துங்கநல்லூர்:

    கருங்குளம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட வல்லநாடு அருகே உள்ள செக்காரக்குடி பஞ்சாயத்து பகுதிக்கு உட்பட்ட கிளிகவுண்டர்குளம், செக்காரக்குடி மேலக்குளம் ஆகிய குளங்களில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் சுமார் 1000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு செக்காரக்குடி பஞ்சாயத்து தலைவர் ராமலெட்சுமி தலைமை தரங்கினார். ஸ்டாமின் குடுமியான்மலை இயக்குநர் சங்கரலிங்கம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகள் மூலமாக பனை விதை நடும் பணி நடந்தது.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் ஜெயசெல்வின் இன்பராஜ், வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டம் பழனிவேலாயுதம், கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன், துணை வேளாண்மை அலுவலர் பரமசிவம் ஆகியோர் உடனிருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் நூர்தீன் செய்திருந்தார்.

    • காரைக்கால் கீழவாஞ்சூர் கிராமத்தில் பனைமர விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கிராம இளைஞர்கள் சதீஷ்குமார், திருமுருகன், பூவராகவன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பாஸ்கர் தலைமை தாங்கி னார். கிராம முக்கியஸ்தர்கள் செல்வராஜ், சசிகுமார், முத்துகிருஷ்ணன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, இயக்கத்தின் தலைவர் ஆனந்தகுமார் அந்த கிராமத்தில் உள்ள புற்று மாரியம்மன் கோவில் எதிரே உள்ள பள்ளிக் குளத்தின் கரையில், அழிந்துவரும் பனை மரத்தினை காத்திடும் வகையில், பனை விதைகள் நட்டார். அவரைத்தொடர்ந்து, நூற்றுக்கு மேற்பட்ட பனை விதை களை, கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் நட்டனர். கிராம இளைஞர்கள் சதீஷ்குமார், திருமுருகன், பூவராகவன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இறுதியில் ரோஹன்குமார் நன்றி கூறினார்.

    வான்தீவு பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு பனைமர விதைகளை நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டது.
    தூத்துக்குடி :

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

    மன்னார் வளைகுடா பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இதில் 2 தீவுகள் ஏற்கனவே கடலில் மூழ்கிவிட்டன. மேலும் தூத்துக்குடி பகுதியில் உள்ள வான்தீவு கடலில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டது. இதனை பாதுகாக்க வான்தீவு பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு பனைமர விதைகளை நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டது. வான் தீவு மற்றும் குருசடை தீவு பகுதியில் இந்த விதைகள் முளைத்து தற்போது ஒரு அடி முதல் 2 அடி வரை வளர்ந்து உள்ளன.

    இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் குருசடை உள்பட 10 தீவுகளில் பனைமர விதைகளை நடவு செய்யும் பணி விரிவுபடுத்தப்பட்டது. சீசன் காலத்தில் பனைமர விதைகளை சேகரித்து படகுகள் மூலம் தீவு பகுதிகளுக்கு கொண்டு சென்று நடவு செய்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் 10 தீவுகளிலும் சுமார் 25 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. இதன்மூலம் கடல் அரிப்பை தடுத்து தீவுகள் மூழ்குவதை தடுக்க முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகமும், வனம் தன்னார்வ அமைப்பும் இணைந்து கும்பகோணம் கோட்டத்தில் 1 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி தொடங்கியது.
    கும்பகோணம்:

    தமிழக பாரம்பரிய மரமான பனை மரத்தினை அழிவில் இருந்து மீட்டெடுக்கவும், காவிரி டெல்டாவை வனம் மிகுந்த பகுதியாக மாற்றவும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பனை மரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் கும்பகோணம் கோட்டத்தில் 20 இடங்களில் 1 லட்சம் பனை விதைகள் விதைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி பனை விதை விதைக்கும் தொடக்க விழா கும்பகோணம் அருகே சாக்கோட்டை பைபாஸ் சாலையில் நடைபெற்றது.

    விழாவில் கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகமும், வனம் தன்னார்வ அமைப்பும் இணைந்து கும்பகோணம் கோட்டத்தில் 1 லட்சம் பனை விதைகள் விதைக்க திட்டமிட்டுள்ளது. சாக்கோட்டை செட்டிமண்டபம் பைபாஸ் சாலையில் இந்த விழா தொடங்குகிறது. சாலையில் இருபுறமும் பனை விதைகள் விதைக்கப்பட உள்ளது.

    மேலும் கும்பகோணம் கோட்டத்தில் உள்ள குளம், ஏரி, அகலப்படுத்தப்பட்ட சாலை என 20 இடங்களில் பனை விதைகள் விதைக்கப்பட உள்ளது. இதன் தொடக்கமாக தற்போது 2 ஆயிரம் விதைகள் விதைக்கப்படுகிறது. தொடர்ந்து ஒரு மாத காலத்துக்குள் மீதமுள்ள இலக்கை எட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×