search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "paal kudam"

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் 1,008 பால்குட அபிஷேக விழா கடந்த 2 நாட்கள் நடந்தது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் 1,008 பால்குட அபிஷேக விழா கடந்த 2 நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் காலையில் 108 சங்காபிஷேகம், 108 கலசாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் அரசடி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, யாகசாலை பூஜை, இரவில் அலங்கார தீபாராதனை, வில்லிசை, கற்பூர ஜோதி வழிபாடு நடந்தது.

    நேற்று காலையில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜை நடந்தது. சிதம்பரேசுவரருக்கு தீபாராதனையை தொடர்ந்து, சிதம்பரேசுவரர் கோவிலில் இருந்து முத்தாரம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வரப்பட்டது. பின்னர் சந்தனகுடம் பவனி நடந்தது.

    தொடர்ந்து அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு தீபாராதனையை தொடர்ந்து, அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் 1,008 பால்குடம் எடுத்து ஊர்வலமாக முத்தாரம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பின்னர் 108 சுமங்கலி பெண்கள் கும்மி வழிபாடு, மாலையில் 1,008 அகல்தீப வழிபாடு, இரவில் புஷ்ப சகஸ்ரநாமாவளி அர்ச்சனை, பைரவருக்கு வடைமாலை அணிவித்து சிறப்பு பூஜை, அம்பாள் தேர் பவனி நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    காளியம்மன் கோவிலில் மார்கழி திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ராஜ வீதிகளின் வழியாக சென்று காளியம்மன் கோவிலை அடைந்தனர்.
    மணப்பாறையில், திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மார்கழி திருவிழா நேற்று முன்தினம் இரவு கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று காலை பால்குட விழா நடைபெற்றது.

    நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ராஜ வீதிகளின் வழியாக சென்று காளியம்மன் கோவிலை அடைந்தனர். பின்னர், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இன்று(திங்கட்கிழமை) காலை அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுவதல், மாவிளக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    அதைத்தொடர்ந்து அன்னதானமும், மாலை பெண்கள் நடத்தும் கோலாட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை கரகம் களைதல் நிகழ்ச்சியும், அதன் பின்னர் சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகளும் நடைபெறுகின்றன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, கோவில் செயல் அலுவலர் பிரபாகர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர். 
    நாகாத்தம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டுபெண்கள், சிறுவர், சிறுமிகள் உள்பட 1,008 பக்தர்கள் தலையில் பால் குடம் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
    திருவொற்றியூர் கார்கில் நகரில் 60 அடி உயர பிரித்தியங்கிரா தேவி சிலை அமைந்துள்ள நாகாத்தம்மன் கோவில் ஆடி திருவிழா நேற்று தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் விழாவின் முதல் நாளான நேற்று திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் இருந்து பெண்கள், சிறுவர், சிறுமிகள் உள்பட 1,008 பக்தர்கள் தலையில் பால் குடம் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பால்குட ஊர்வலத்தை முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் தொடங்கி வைத்தார்.

    அப்போது பக்தர் ஒருவர் உடலில் அலகு குத்தி பறவை காவடியில் தொங்கியபடியும், பறவை காவடி அமைந்துள்ள வேனை 2 பக்தர்கள் தங்கள் முதுகில் அலகு குத்தி இழுத்தபடியும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேலும் சில பக்தர்கள் முனிவர், அம்மன் உள்ளிட்ட மாறுவேடங்கள் அணிந்தும், உடலில் ஊசியால் எலுமிச்சை பழங்கள் மற்றும் தென்னங்குலையை அலகு குத்தி இழுத்தபடியும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று நேர்த்தி கடன் செலுத்தினார்கள். விழாவில் தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம் நடைபெறுகிறது. 
    மணப்பாறையை அடுத்த ஆண்டவர் கோவிலில் உள்ள மான்பூண்டி நல்லாண்டவர் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
    மணப்பாறையை அடுத்த ஆண்டவர் கோவிலில் மான்பூண்டி நல்லாண்டவர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் நாளன்று பால்குட விழாவும், அதைத்தொடர்ந்து ஆடி மாதம் முழுவதும் பல்வேறு சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும். ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு வந்து செல்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான பால்குட விழா கடந்த 6-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஆடி முதல் நாளான நேற்று காலை பால்குட விழா நடைபெற்றது. இதையொட்டி திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் ஆண்டவர் கோவில் அருகே உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    பின்னர் கோவிலின் பரம்பரை அறங்காவலரும், பொய்கைப்பட்டி, குமாரவாடி ஜமீன்தாருமான கே.ஆர்.கே.முத்து வீரலெக்கைய நாயக்கர் தாரை, தப்பட்டையுடன் முன்செல்ல அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அகத்தீஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம் நல்லாண்டவர் கோவிலை வந்தடைந்ததும், அங்கு அனைத்து பால்குடங்களும் இறக்கி வைக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து நல்லாண்டவருக்கு முத்துகண்ணன் சிவாச்சாரியார் தலைமையிலான குருக்கள் தேன், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக, ஆராதனை செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் எடுத்து வந்த பாலால் நல்லாண்டவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பிரபாகர், கோவிலின் பரம்பரை அறங்காவலரும், ஜமீன்தாருமான கே.ஆர்.கே.முத்துவீரலெக்கைய நாயக்கர், மணியம் சண்முகம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களின் ஊர் நாட்டாண்மைகள் செய்திருந்தனர். நிகழ்ச்சியை டாக்டர் கரு.ராசகோபாலன் தொகுத்து வழங்கினார். 
    தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் ஆனித்திருமஞ்சன திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனித்திருமஞ்சன திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 84-வது ஆண்டாக ஆனித்திருமஞ்சன திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை பக்தர்கள் தொட்டியம் காவிரி ஆற்றிக்கு சென்று நீராடி பால்குடம், தீர்த்தக்குடம், சந்தனக்குடம், அக்னிசட்டி எடுத்தும், அலகு குத்தினர்.

    பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக தொட்டியம் மெயின் ரோடு, வளையல்காரத் தெரு, காந்தி ரோடு, வடக்கு ரதவீதி வழியாக கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். அதைத்தொடர்ந்து மதுரை காளியம்மனுக்கு தீர்த்தம், பால், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி திருநெல்வேலி அருகே உள்ள வீரவநல்லூர் மதுரைகாளியம்மன் வழிபாட்டு குழுவின் சார்பில் மதுரைகாளியம்மன் பற்றிய வில்லுப்பாட்டு சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை தொட்டியம் ஆனித்திருமஞ்சன விழாக்குழுவினர் செய்திருந்தனர். 
    தஞ்சை காமராஜர் மார்க்கெட் வியாபாரிகள் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு ஊர்வலமாக பால்குடம் எடுத்துச்சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
    தஞ்சை காமராஜர் மார்க்கெட் காய்கனி வர்த்தக சங்கம் சார்பில் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு 43-வது ஆண்டு பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்துக்கு தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோவிந்தராஜ், அன்வர், கலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊர்வலம் தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள சிவகங்கை பூங்காவில் இருந்து புறப்பட்டு மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி வழியாக சென்று புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலை அடைந்தது. இதில் 100 பால்குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. ஊர்வலத்துக்கு முன்னதாக வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் எடுத்துச்செல்லப்பட்டது.

    ஊர்வலம் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலை அடைந்ததும் அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோவில் அருகே உள்ள மண்டபத்தில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன. இதில் வியாபாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா நாட்களில் சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், பக்தி இன்னிசை கச்சேரி, வாகன பவனி போன்றவை நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு கிளி வாகனத்தில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று காலையில் கன்னியாகுமரி செந்திலாண்டவர் பாத யாத்திரை குழு சார்பில் பால்குட ஊர்வலம் நடத்தப்பட்டது. முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விசுவரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7 மணிக்கு கன்னியாகுமரி சுப்பிரமணியசாமி கோவிலில் பால் குடம் நிரப்பும் நிகழ்ச்சி நடந்தது. மேல்சாந்திகள் மணிகண்டன், ராதாகிருஷ்ணன், விட்டல் ஆகியோர் பால்குடத்தை நிரப்பினர்.

    காலை 9.30 மணிக்கு சிங்காரி மேளத்துடன் 251 பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.

    அங்கு அம்மனுக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், குங்குமம், களபம், சந்தனம் போன்ற வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பகல் 11 மணிக்கு வைர கிரீடம் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 11.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், மாலையில் தீபாராதனை, ஆன்மிக சொற்பொழிவும் நடைபெற்றன. பால்குட ஊர்வலத்தில் கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன், கோவில் தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன், செந்திலாண்டவர் பாதயாத்திரை குழு தலைவர் நாகேஸ்வரி சந்திரன், நிர்வாகி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு நடத்தினர். இன்று வேடபரி நிகழ்ச்சி நடக்கிறது.
    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி இரவு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடவிழா நேற்று காலை நடைபெற்றது.

    இதையொட்டி அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் பால்குடத்துடன் வரதராஜபெருமாள் கோவிலில் குவியத் தொடங்கினர். 6 மணிக்கு வழக்கமான கொடியேற்றம் நடைபெற்றதை தொடர்ந்து வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து காலை 7 மணிக்கு நாட்டாமை வீராசாமி குடும்பத்தினர் பால்குடம் ஏந்தி முதலில் வர கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, செயல் அலுவலர் பிரபாகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செல்ல அவர்களை தொடர்ந்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். ஒரு சில பக்தர்கள் கரும்பில் தொட்டில் கட்டி அதில் குழந்தைகளை வைத்து சுமந்து வந்தனர்.

    பால்குட ஊர்வலம் வந்த ராஜ வீதிகளின் இரு ஓரங்களிலும் பொதுமக்கள் நின்று பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் மீது குடம், குடமாக தண்ணீரை ஊற்றி வணங்கினர்.


    கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து வந்தவர்களை படத்தில் காணலாம்.

    பால்குட ஊர்வலம் ராஜவீதிகளின் வழியாக வேப்பிலை மாரியம்மன் கோவிலை வந்தடைந்த பின், காலை 8.15 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து காலை 11 மணி வரை பால்குடமேந்தி பக்தர்கள் சாரை, சாரையாக வந்தனர். விழாவையொட்டி மணப்பாறை தரகு வர்த்தக சங்கம், பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா காய்கனி மார்க்கெட் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அதேபோல பல்வேறு இடங்களில் நீர்மோர், பானகம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை மணப்பாறை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகரன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் செய்திருந்தனர். மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆசைத்தம்பி தலைமையில் போலீசார் மற்றும் ஊர் காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பொங்கல் விழா, அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல் நிகழ்ச்சியும், மாலை அம்மன் குதிரை வாகனத்தில் செல்லும் வேடபரி நிகழ்ச்சியும், முளைப்பாரியும் நடைபெறுகிறது. 
    மணப்பாறை நகரின் மையப்பகுதியில் உள்ள வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா நாளை நடக்கிறது.
    மணப்பாறை நகரின் மையப்பகுதியில் உள்ள வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு வழிபாடு, மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்ற பின் காலை 6 மணிக்கு பால்குட விழா கொடியேற்றம் நடைபெறுகிறது. பின்னர் வேப்பிலை மாரியம்மன் கோவில் பின்புறமுள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் ஏராளமான பக்தர்கள் பால்குடத்துடன் கூடுவார்கள்.

    காலை 7 மணிக்கு வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து வேப்பிலை மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் மறைந்த நாட்டாண்மை வீராச்சாமி குடும்பத்தினர் மேளதாளம் முழங்க பால்குடம் எடுத்து முன்னே வர பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, கோவில் செயல் அலுவலர் வே.பிரபாகர் மற்றும் முக்கிய பிரமுகர்களை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடம் எடுத்து வருவார்கள்.

    மேலும் பலர் வேண்டுதலை நிறைவேற்ற கரும்பு தொட்டிலில் குழந்தைகளை கொண்டு வருவார்கள். பால்குடம் வேப்பிலை மாரியம்மன் கோவிலை வந்தடைந்ததும் அம்மனுக்கு காலை 8.15 மணிக்கு பாலாபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு முத்துப்பலக்கில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பால்குட விழாவை சிறப்பாக நடத்திட வேப்பிலை மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, செயல் அலுவலர் வே.பிரபாகர் தலைமையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதேபோல் பக்தர்கள் வசதிக்காக குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பணிகளை மணப்பாறை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகரன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர். பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆசைத்தம்பி தலைமையிலான போலீசார் செய்து வருகின்றனர். 
    ×