search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "veppilai mariamman"

    மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு நடத்தினர். இன்று வேடபரி நிகழ்ச்சி நடக்கிறது.
    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி இரவு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடவிழா நேற்று காலை நடைபெற்றது.

    இதையொட்டி அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் பால்குடத்துடன் வரதராஜபெருமாள் கோவிலில் குவியத் தொடங்கினர். 6 மணிக்கு வழக்கமான கொடியேற்றம் நடைபெற்றதை தொடர்ந்து வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து காலை 7 மணிக்கு நாட்டாமை வீராசாமி குடும்பத்தினர் பால்குடம் ஏந்தி முதலில் வர கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, செயல் அலுவலர் பிரபாகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செல்ல அவர்களை தொடர்ந்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். ஒரு சில பக்தர்கள் கரும்பில் தொட்டில் கட்டி அதில் குழந்தைகளை வைத்து சுமந்து வந்தனர்.

    பால்குட ஊர்வலம் வந்த ராஜ வீதிகளின் இரு ஓரங்களிலும் பொதுமக்கள் நின்று பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் மீது குடம், குடமாக தண்ணீரை ஊற்றி வணங்கினர்.


    கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து வந்தவர்களை படத்தில் காணலாம்.

    பால்குட ஊர்வலம் ராஜவீதிகளின் வழியாக வேப்பிலை மாரியம்மன் கோவிலை வந்தடைந்த பின், காலை 8.15 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து காலை 11 மணி வரை பால்குடமேந்தி பக்தர்கள் சாரை, சாரையாக வந்தனர். விழாவையொட்டி மணப்பாறை தரகு வர்த்தக சங்கம், பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா காய்கனி மார்க்கெட் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அதேபோல பல்வேறு இடங்களில் நீர்மோர், பானகம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை மணப்பாறை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகரன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் செய்திருந்தனர். மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆசைத்தம்பி தலைமையில் போலீசார் மற்றும் ஊர் காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பொங்கல் விழா, அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல் நிகழ்ச்சியும், மாலை அம்மன் குதிரை வாகனத்தில் செல்லும் வேடபரி நிகழ்ச்சியும், முளைப்பாரியும் நடைபெறுகிறது. 
    ×